SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்!

2018-12-13@ 11:47:26

நன்றி குங்குமம் டாக்டர்

சர்வதேச எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1

*சர்வதேச அளவிலேயே போலியோ என்கிற நோய் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் போலியோ இல்லை என்று அதிகாரப்பூர்வமாகவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.அதேபோன்றதொரு நிலையை எய்ட்ஸ் ஒழிப்பிலும் நாம் எட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களும், முன்னெடுப்புகளும் தொடர்ந்து நடைபெற வேண்டியிருக்கிறது. எய்ட்ஸ் ஓர் உயிர்க்கொல்லி என்பதால் அதன் தீவிரமும் முக்கியத்துவமும் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.

*எச்.ஐ.வி. கிருமி நமது உடலின் நோய்த் தடுப்பு மண்டலத்தை படிப்படியாக சிதைத்து, அழித்து இறுதியில் எய்ட்ஸ் நோயை உண்டாக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகள் குறையும்போது, பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகரித்து இறுதியில் உயிரைப் பறிக்கும் நிலை ஏற்படுகிறது.

*பெறப்பட்ட நோய் எதிர்ப்பு குறைபாட்டு நோய் (Acquired Immune Deficiency Syndrome AIDS) என்று சொல்லப்படுகிற எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோயானது, மனித நோய்த்தடுப்பு குறைபாட்டு வைரஸால் (Human Immunodeficiency Virus- HIV) உண்டாகிறது.

*2015-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3.5 கோடி பேர், இந்நோய் பாதிப்பால் மரணமடைந்தவர்கள் 11 லட்சம் பேர் என்கிறது உலக சுகாதார  நிறுவனம்.

*காய்ச்சல், நச்சுக்காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, தசை வலி, வாய் அல்லது பிறப்புறுப்புப் புண், மூட்டு வலி, தொடர் களைப்பு, திடீர் எடை இழப்பு, தொற்று எளிதில் பரவுதல், வயிற்றுப்போக்கு, இருமலும் மூச்சடைப்பும், நாக்கு அல்லது வாயில் நீடித்த வெண்புள்ளி அல்லது அசாதாரண புண், நனைக்கும் இரவு வியர்வை, தோல் அரிப்பு, மங்கலான பார்வை போன்றவை இந்நோயின் அறிகுறிகள்.

*எச்.ஐ.வி. தொற்றுள்ள ஒருவருடன் பாலியல் உறவு கொள்ளும்போது விந்து மற்றும் பெண்ணுறுப்புத் திரவத்தின் மூலம்தான் இந்த நோய்க்கிருமி பெரும்பாலும் பரவுகிறது. தொற்றுள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவர் உடலுக்கு ரத்தம் செலுத்தும் போது பரவுகிறது. தொற்றுள்ள ரத்தத்தால் அசுத்தமடைந்த ஊசியையோ, சிரிஞ்சையோ மறுபடியும் பயன்படுத்துவதாலும் பரவுகிறது.

*HIV பாதிப்பு கொண்ட தாயின் ரத்தத்தின் மூலம் கருவிலுள்ள குழந்தைக்கும், தொற்றுள்ள தாயின் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கும் பரவுகிறது. பச்சை அல்லது காது குத்தும்போது எச்.ஐ.வி. பரவும் ஆபத்து உள்ளது. எனவே பச்சைகுத்தல், காதுகுத்தல், அக்குபஞ்சர் மற்றும் பல் மருத்துவத்தின்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

*எச்.ஐ.வி. தொற்றுக்கு கொடுக்கப்படும் Antiretroviral Therapy (ARV) சிகிச்சையின் மூலம் கிருமியைக் கட்டுப்படுத்தி பரவாமல் தடுக்க முடியும். தொற்று உடையவர்களும், தொற்று ஏற்படும் அபாயத்தில் இருப்பவர்களும் ஆரோக்கியமான, பயன் தரும் வாழ்க்கையை வாழ முடியும். அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார நிறுவனங்களில் எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் நோயோடு வாழ்பவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியமான இந்த சிகிச்சை தற்போது இலவசமாகவே கிடைக்கிறது.

*எச்.ஐ.வி. தொற்றுடைய பிறருடன் குழுவாக இணைந்து ஒவ்வொருவரின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு எய்ட்ஸ் நோயை எதிர்த்து வாழ்வதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் உடலுறவு இணையரிடம் எச்.ஐ.வி. தொற்று இருப்பதை தெரியப்படுத்த வேண்டும். மேலும் அந்த தொற்று பரவாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு உறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

*ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசி, சிரிஞ்சுகளை மற்றவர்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் இத்தொற்றைத் தடுக்கலாம்.

*சில காசநோய் மருந்துகள் எச்.ஐ.வி. எதிர்மருந்துகளின் வீரியத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. எச்.ஐ.வி. மருந்து காசநோய் மருந்தின் செயல்பாட்டைப் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த இரண்டு நோய்களும் இருக்கும் நபர்கள் அனுபவமிக்க மருத்துவரின் கண்காணிப்பில் சிகிச்சை பெறுவது நல்லது.

*ரகசியமான மற்றும் உதவிகரமான சூழலில் நோயைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அதை ஏற்றுக் கொண்டு மன அழுத்தமின்றி எச்.ஐ.வி. தொற்றை எதிர்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையத்தை (Integrated Counselling and Testing Centre - ICTC) அணுகுவது உதவியாக இருக்கும்.

*எய்ட்ஸைத் தவிர்க்க ABC என்கிற ஓர் எளிய முறையைப் பின்பற்றலாம். அதாவது A-Abstain (தவிர்த்தல்), B-Be faithful (உண்மையாய் இருத்தல்), C-Condomise (காப்புறை பயன்படுத்துதல்) என்பதுதான் அந்த முறை. இதோடு பின்வரும் ஆலோசனைகளை கவனத்தில் கொள்வது அவசியம்.

*எச்.ஐ.வி. தொற்று அல்லது எய்ட்ஸ் நோய் பற்றிய சரியான புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த நோய் ஆபத்தைக் குறைக்க, உடலுறவில் ஈடுபடும்போது காப்புறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.

*பாலியல் தொழிலாளிகள் மற்றும் அவர்களுடைய இணையர்கள், நரம்பு வழியே போதையேற்றும் பழக்கமுடையவர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள், அகதிகள், கைதிகள் போன்றவர்களுக்கு இத்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற நபர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனை செய்வது நல்லது.

*எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பவர்களோடு இணைந்து பணியாற்றுவது, அவர்களைத் தொடுதல், கைகுலுக்குதல் போன்ற உடல் தொடர்புகளால் எச்.ஐ.வி. பரவுவதில்லை. இந்த வைரஸ் உடலுறவு அல்லது உடல் திரவங்கள் மூலமே பரவுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

*எச்.ஐ.வி. விழிப்புணர்வு மற்றும் ஆதரவின் உலக சின்னமான சிவப்பு ரிப்பனை அணிந்து அதற்கெதிராக நாம் அனைவரும் இணைந்து போராடுவோம். AIDS நோய் குறித்த ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு அரசின் இலவச உதவி எண் - 1097 -ஐ தொலைபேசியில் அழைத்து உரிய உதவியைப் பெறலாம்.

- தொகுப்பு : கௌதம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

 • 17-06-2019

  17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்