SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் மூளை Vs ஆண் மூளை அறிவியல் சொல்லும் ஆச்சரிய உண்மைகள்

2018-11-27@ 16:06:00

நன்றி குங்குமம் டாக்டர்

கவர் ஸ்டோரி

ஆண், பெண் சிந்தனை வேறுபாடுகளைக் கண்டு பல நேரங்களில் நாம் ஆச்சரியப்படுவதுண்டு. தங்கள் அங்க அடையாளங்கள் மற்றும் இனப்பெருக்க செயல்பாடுகளால் மட்டும் ஆண், பெண் வேறுபடுவதில்லை.பிரச்னைகளை புத்திசாலித்தனமாக தீர்ப்பது, நடத்தை  மற்றும் குணாதிசயங்களால் இரு பாலரும் வேறுபடுகிறார்கள் என்பதை அறிவியலும் நிரூபிக்கிறது. ஆண், பெண் மூளையின் இதுபோன்ற அதிசயத்தக்க வித்தியாசங்களை அறிய, நரம்பியல் மருத்துவர் கண்ணனிடம் பேசினோம்…

பொதுவாக விஞ்ஞானிகள் ஆண், பெண் மூளையில் உள்ள வேறுபாட்டை கணிக்க, செயலாக்கம், வேதியியல், கட்டமைப்பு மற்றும் செயல்பாடு என நான்கு முக்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

பருவ வயதுக்கு முன்பும், பின்பும் மற்றும் வளர்ச்சியின் போதும் இரு பாலரிடத்தில் காணப்படும் நடத்தை வேறுபாடுகளைப் பற்றிய பல்வேறு சித்தாந்தங்கள் கடந்த 20 வருடங்களாகவே பேசப்பட்டு வந்தாலும், நடத்தையியல், நரம்பியல் மற்றும் நாளமில்லாச் சுரப்பியல் ரீதியில், சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூளை அமைப்பின் மீது பாலியல் ஹார்மோன்களின் விளைவுகள் ஏற்படுவதை நிரூபிக்கின்றன.

வித்தியாசமாக அமையப் பெற்றிருக்கும் ஆண், பெண் மூளையில் சிறு வயதிலிருந்தே சுற்றுச்சூழல் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது என்பதையும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நரம்பியல் விஞ்ஞானியான டேனியல் ஜி ஏமன் எழுதிய Unleash the power of the female brain என்ற புத்தகத்தில் ஆண், பெண் இருவருக்கும் சமமான அறிவு இருந்தாலும், இரு பாலரும் பிரச்னைகளை தீர்க்கவும், இலக்குகளை அடையவும் தங்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளை பயன்படுத்துகிறார்கள் எனவும், இதனால் அவர்களின் நடத்தையில் ஏற்படும் மாறுபாடுகளைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

ஆண்,பெண் மூளை அடிப்படை மூளைக் கட்டமைப்பிலேயே வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆண்கள், பெரும்பாலும் தன் மூளையின் இடது அரைக்கோளத்தை தகவலை செயலாக்குவதில் பயன்படுத்துகிறார்கள். பெண்கள் இரண்டு அரைக்கோளங்களையும் பயன்படுத்துவதில் கில்லாடிகளாக விளங்குவதால் மிகவும் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.

பெண்கள் மூளையின் Pre-frontal cortex பகுதியில் இருக்கும் செல்கள், தீர்ப்பு, திட்டமிடல் மற்றும் விழிப்புநிலை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பணியைச் செய்கின்றன. இதனால்தான் அவர்கள் பயணத்திற்காக பேக்கிங் செய்வதிலும், ஒருபொருளை தேடும்போது சரியான இடத்தை கண்டுபிடிப்பதிலும்
கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். ஆணுக்கு தன்னுடைய பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியாது. பல நேரங்களில் தன்னுடைய பொருட்களை தொலைத்துவிட்டு தேடுபவர்களாக இருக்கிறார்கள்.

சராசரியாக ஆண்களின் மூளையானது, பெண்களின் மூளையைவிட 10 சதவீதம் பெரியதாக இருக்கிறதாம். இதனால் கணக்குப்பாடத்தில் ஆண்கள் கில்லாடிகளாகவும், தர்க்கரீதியாக சிந்திக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். மொழியில் பெண்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். புத்திசாலித்தனத்தை நிர்வகிக்கும் மூளையின் சிறுபகுதியில் ஆண்கள் அதிக சாம்பல் பொருளை (Grey matter) கொண்டுள்ளதால், மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட தகவலைப்பற்றி மட்டும் செயலாற்ற முடிகிறது.

அவர்கள் ஒரு பணியில் அல்லது வேலையில் ஆழமாக ஈடுபடும்போது, மற்றவர்களின் பேச்சையோ அல்லது சுற்றுப்புறத்தையோ கவனிப்பதில்லை. ஒருநேரத்தில், ஒரு செயலில் மட்டும்தான் அவர்களால் கவனம் செலுத்த முடியும். இதனால்தான் வில்வித்தை, Puzzle solving போன்ற கவனக்குவிப்புத்திறன் தேவைப்படும் விளையாட்டுகள், கணிதம் மற்றும் கடினமான வேலைகளை விரைவில் முடிப்பதில் ஆண்கள் திறமையாக இருக்கிறார்கள். ஆண்கள் எந்த ஒரு விஷயத்தையும் சட்டென்று கிரகித்துக் கொண்டுவிடுவார்கள்.

அதே நேரத்தில், பெண்கள் மூளையின் பகுதியில் அதிக வெள்ளைப் பொருட்கள் (White matter) இருப்பது அவர்களது பன்முகத்தன்மையை அதிகரிக்கிறது. ஒரு விஷயத்தை 360 டிகிரி கோணங்களில் சிந்திக்கவும், ஒரே நேரத்தில் பலவிஷயங்களில் கவனம் செலுத்தவும் பெண்களால் முடிகிறது. ஒரே நேரத்தில் 2, 3 வேலையை முடிக்கச் சொல்லி ஆண்களிடம் கொடுத்தால், எரிச்சலாகி விடுவார்கள்.

பெண்களின் மூளையில், ஆண்களை விட பெரிய ஹிப்போகாம்பஸ் மற்றும் ஆழ்ந்த லிம்பிக் அமைப்புகளைக் கொண்டுள்ள நிலை, அவர்களை உணர்ச்சிகரமான சூழலில் முழு ஆழத்தை உணர அனுமதிக்கிறது. இதனால், மற்றவர்களின் துயரத்தை அனுபவிப்பவர்களாகவும்,  கோபமான நேரத்தில், அந்த கோபத்தை அழுகையாக வெளிப்படுத்துபவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள்.

பெண்களுக்கே தனித்துவமாக இருக்கும் உள்ளுணர்வுக்கு பெண்ணின் மூளை கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டில் இருக்கும் சிறப்பான அம்சமே காரணம். இதனால் பிறர் நினைப்பதை நிமிடத்தில் கணித்து, அதற்கேற்ப விரைவான முடிவுகளை எடுக்க பெண்களால் முடியும்.வலியை  அனுபவிக்கும்போது ஆண்களுக்கு மூளையினுள் வலது Amygdla பகுதியும், பெண்களுக்கு இடது Amygdla பகுதியும் செயல்படுகிறது. இது மூளையின் உட்புற செயல்பாடுகளை மிகவும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருப்பதால், பெண்கள், ஆண்களை விட வலியை மிகவும் வலுவாக அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள்.

ஆண்களுக்கு, பெண்களைக்காட்டிலும் மிக மிருதுவான, மெல்லிய பரப்பு மண்டலம் மூளையில் இருப்பதாலேயே, அவர்களால், பொருட்களை முப்பரிணாம சுழற்சியில் கற்பனை செய்து பார்ப்பது சுலபமாக இருக்கிறது. ஆண்களிடம் உள்ள இந்த தனித்துவமான அமைப்பு, ஒரு இடத்திற்கு செல்லும் வழியை ஆண்கள் எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது.

ஆனால், பெண்கள் வழியை சுலபமாக மறந்துவிடுவார்கள். வழியை மறந்துவிட்டால், ஆண் திசைகள் மற்றும் பயணத்தின் தூர அளவுகளை நினைவில் கொண்டுவந்து கண்டுபிடித்துவிடுவான். பெண் அந்த சாலையில் இருக்கும் கடைகள், மற்றும் பிற அடையாளங்களை நினைவில் வைத்துக் கொள்வாள்.

ஆண்களின் மூளையில் செரட்டோனின் சுரப்பு பெண்களைவிட, அதிவேகமாக சுரக்கிறது. பெண்களுக்கு செரட்டோனின் சுரப்பு மெதுவாக இருப்பதால், எளிதில் மன அழுத்தம் அடைபவர்களாகவும், அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுக்குப் பின்னரான Post traumatic Disorder பிரச்னைக்கு அதிக அளவில் பாதிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

பெண் கருக்கள் 26 வது வார கால கட்டத்திலேயே, மூளையின் பிணைப்புகளான இடது மற்றும் வலது அரைக்கோளங்களை இணைக்கும் தடிமனான கார்பஸ் காலசோமை(Corpus callosum) உருவாக்கம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. ஆண் கருக்களில் மிக தாமதமாகத்தான் இந்த உருவாக்கம் நடைபெறுகிறது. இந்த தாமதமான செயல்பாடு ஆண்கள் இடது அரைக்கோளத்தை மட்டும் உபயோகிக்க காரணமாகிறது.

உணர்ச்சிகளுக்கு காரணமான மூளையின் பகுதி, ஆண்களைவிட பெண்களுக்கு பெரிதாக இருக்கிறது. இதன் காரணமாக சிந்தனையில் இருக்கும் பெண்கள் மூளையின் வலது புறத்தில் மூழ்குவதால், உணர்ச்சிகரமானவர்களாகவும், உடல்மொழி, அடுத்தவர் பேச்சின் தொனி போன்றவற்றை எளிதில் அவர்கள் கிரகித்துக் கொள்வர்களாக இருக்கிறார்கள். மேலும் கோபம், ஆக்ரோஷம் நிறைந்தவர்களாகவும், எதிர்மறையான உணர்ச்சிகளை தக்கவைத்துக் கொள்பவர்களாகவும் இருப்பதாக அறிவியல் கூறுகிறது.

 பெண்கள் மிக ஆக்ரோஷமாக இருக்கும்போது வாய்மொழி தாக்குதல் நடத்துபவர்களாகவும், ஆண்கள்  உடல்ரீதியான தாக்குதல் நடத்துபவர்களாகவும் இருப்பதை இருபாலரின் மூளை ஸ்கேன் ரிப்போர்ட் உறுதிப்படுத்துகிறது!

இன்னும் சில சுவாரஸ்யங்கள்
...

* ஆண், பெண் இருபாலருக்கும் இறுக்கமான நிகழ்வுகளில் ஆக்ஸிடோசின் ஹார்மோன் வெளிப்பட்டாலும், பெண்ணிடம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஆக்ஸிடோசினுடன் இணைந்து, எளிதில் அமைதிப்படுத்தி விடுகிறது. ஆனால், ஆணில் சுரக்கும் டெஸ்டோஸ்டீரோன் ஆணை மேலும் ஆக்ரோஷமடையச் செய்துவிடுகிறது. இதனால் இறுக்கமான சந்தர்ப்பங்களை கையாள்வதில், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் கெட்டிக்
காரர்களாக இருக்கிறார்கள்.

* வன்முறை மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய மூளைப்பகுதி பெண்களுக்கு பெரிதாக இருப்பது அவர்களுக்கு கூடுதல் நன்மை
செய்வதாய் இருக்கிறது. அதுவே, ஆண் சிறு விஷயத்திற்கும் ஆக்ரோஷமடைந்து, எதிரில் இருப்பவர்களை தாக்கிவிடுகிறான். தனக்கு பிடிக்காத விஷயத்தை கேட்டாலோ, பார்த்தாலோ உடனே ஆணுக்கு கோபம் வந்துவிடும். ஆனால், தொடர்ந்து எரிச்சல் உண்டு பண்ணுகிற விதத்தில் பேசினால்
மட்டுமே பெண் கோபமடைகிறாள்.

* உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்னையில் பெண்களைப் பொருத்தவரையில் சின்ன விஷயமும் பெரிதாகத் தெரியும். ஆண்களுக்கோ, பூதாகரமான பிரச்னையாக இருந்தாலும் மிகச்சாதாரணமாகத் தெரியும்.

* பெண்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க மாட்டார்கள். ஆண்கள் இதற்கு நேரெதிர்.

* பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய விலையுயர்ந்த ஆடைகளையோ, நகைகள் மற்ற பிற பொருட்களையோ, தன் உயிர்த்தோழியாக இருந்தாலும் பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். ஆண்களுக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லை.

* தாங்கள் செய்யும் செலவுகளை கணக்கு வைத்துக் கொள்வதிலும், மற்றவர்களுக்குத் தெரியாமல் சேமித்து வைப்பதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள். பெரும்பாலான ஆண்கள் கணக்குப் பார்க்காமல் செலவு செய்பவர்களாகவும், சேமிக்கத் தெரியாமல் கடன் வாங்குபவர்களாகவும்தான் இருப்பார்கள்.

* துயரங்களை மனதில் பூட்டி, வெளியே சிரித்துக் கொண்டு இருப்பவர்கள் பெண்கள். தன்னுடைய தனிப்பட்ட பிரச்னைகளை வெளியே அவ்வளவாக சொல்ல மாட்டார்கள். ஆண்களுக்கு தங்கள் உணர்ச்சிகளை உடனே வெளியே கொட்டிவிட வேண்டும்.

* பெண்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படையாக காட்டுவார்கள். ஆண்களுக்கு பாசத்தை வெளியே காட்டத் தெரியாது.

* மூளையின் இரண்டு கோள்களையும் பயன்படுத்தக்கூடிய பெண்களின் முடிவு உணர்வு சார்ந்ததாக இருக்கும். ஆனால், ஒரு ஆண் எடுக்கும் முடிவு தர்க்கரீதியில் இருக்கும்.

* ஆண்கள் தன்னுடைய இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள மறந்துவிடுவார்கள். திருமணமான ஆண்கள்கூட, மனைவி சொன்னால்தான் வீட்டு வேலைகளை செய்வார்கள். தானாக எந்த வேலையையும் செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு தோன்றாது.

* பெண்களால் எந்த ஒரு தகவலையும் ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி பார்க்க முடியும். ஒவ்வொரு விஷயத்தையுமே பெண்கள் விரிவாக அலசி ஆராய்கிறார்கள். அதனால் பிறந்தவீட்டு பந்தங்கள் மட்டுமல்ல புகுந்தவீட்டு சொந்தங்களின் பிறந்தநாள், மணநாள் போன்ற முக்கிய நாட்களையும், சின்னச்சின்ன நிகழ்வுகளையும் அவர்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது.

* பெண்கள் பெரும்பாலும், ‘அறிமுகம்-விவரம்-முடிவு’ என்ற வடிவத்தில்தான் பேச்சைத் தொடங்குவார்கள். குறிப்பிட்ட தலைப்பைப்பற்றி, பேசுவதற்குமுன் அதற்கான தளத்தை அமைத்துக்கொண்டுதான் பேசவே ஆரம்பிப்பார்கள்.

* தனியாக இருக்கும் பெண்ணை பார்ப்பது அரிது. எப்போதும் தன்னுடன் யாராவது இருக்க வேண்டும். ஆண்களுக்கு கூட்டாளியெல்லாம் தேவையில்லை.

* பெண்ணால் வண்ணங்களை மிகத் துல்லியமாக பிரித்துப் பார்க்க முடியும். அதனால்தான் ஆடை தேர்வு செய்யும்போது, பெண் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாள். ஆண்களுக்கு பொதுவான வண்ணங்கள் மட்டுமே தெரியும்.

* தனியாக இருக்கும் ஒரு ஆணால் ஒரு மணிநேரம் வரைகூட எந்தவித சிந்தனையும் இல்லாமல் அப்படியே அமர்ந்திருக்க முடியும். ஆனால், பெண்ணுக்கோ ஒரு நொடியில் கோடிக்கணக்கான சிந்தனைகள் அவள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

* ஆணுக்கு செக்ஸ் பற்றிய சிந்தனைகள் பெண்ணைவிட அதிகம் இருக்கும். ஒரு வார காலத்தில், ஆண்களின் செக்ஸ் தொடர்பான எண்ணங்களின் எண்ணிக்கை 18.6 ஆக இருந்ததும், பெண்களுக்கு 9.9 என்ற அளவில் இருந்ததும் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

- உஷா நாராயணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-03-2019

  22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • NerthikkadanTriplecane

  பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்