SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்... பொறுமையாக இருங்கள்!

2018-11-13@ 15:02:22

நன்றி குங்குமம் டாக்டர்

மிஸ்டர் ஆசியா தரும் ஆலோசனை

ஆசிய அளவிலான 52-வது ஆணழகன் போட்டி சமீபத்தில் புனேவில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் டிரெயினரான அரசு, ‘ஆசிய ஆணழகன்’ என்ற பட்டமும் பதக்கமும் வென்றிருக்கிறார். ஆணழகன் போட்டிக்காக அவர் தயாரான விதம் குறித்தும், உடலைக் கட்டமைக்க இளைஞர்களுக்கான ஆலோசனைகள் குறித்தும் அவரிடம் பேசினோம்...

பாடி பில்டர் ஆக வேண்டும் என்பது உங்கள் சிறுவயது கனவா?

‘‘சின்ன வயதிலேயே வீட்டிலிருக்கும் கனமான பொருட்களை தூக்க முயற்சி செய்வேன். அப்படி பல கனமான பொருட்களைத் தூக்கிக் காண்பித்து வீட்டிலுள்ளவர்களையும் ஆச்சரியப்படுத்துவேன். என் அப்பாவும் ஒரு பாடி பில்டர் என்பதால் அந்த ஆசை தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்த ஆர்வம்தான் நாளடைவில் என்னுடைய ‘ஆணழகன்’ ஆக வேண்டுமென்ற லட்சியத்திற்கு வித்திட்டது. லட்சியத்தைத் தீர்மானித்த பிறகு  15 வயதிலிருந்தே எடைப்பயிற்சியை தொடங்கிவிட்டேன். பிறகு, 1988-ம் வருடத்திலிருந்து முறையான பயிற்சிகளை ஆரம்பித்தேன்.’’

ஆணழகன் பட்டத்திற்காக பிரத்யேக பயிற்சிகள் இருக்கின்றனவா?

‘‘ஒவ்வொரு தசைத் தொகுப்பிற்காகவும் தனித்தனியாக வாரம் 3 முறை பயிற்சி மேற்கொள்வேன். வாரத்தின் முதல் நாள் மார்பு, தோள்பட்டை மற்றும் ட்ரைசெப்ஸ்களுக்காகவும், 3-வது நாள், 5-வது நாளில் கால்கள் மற்றும் பின்புற தசைகளுக்காவும், பைசெப்ஸ்காக மட்டும் 2, 4, 6 வது நாட்களில் பயிற்சி செய்வேன்.

மிஸ்டர் ஆசியாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு, ஹேஷியாப்பூரில் நடைபெற்ற தேர்வு முகாமிற்கு சென்றபோது, அங்கு தேசிய அளவில் பிரபலமான பாடி பில்டர்களை சந்தித்தேன். அந்த சந்திப்பு எனக்கு பல விஷயங்களைக் கற்றுத் தந்தது. தேர்வு முகாமில் கலந்துகொண்டு திரும்பிய பிறகு, ஒரு நாளுக்கு 2 முறை, ஒவ்வொரு தசை குழுவிற்கு பயிற்சி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

நிலையான முறை என்று பின்பற்றுவது என்னுடைய வழக்கமில்லை. ஒவ்வொரு போட்டியின் தன்மைக்கு ஏற்றவாறு என் பயிற்சி நடைமுறைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பேன்.’’குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

‘‘சிறுவயது முதலே, ஒவ்வொரு போட்டியில் கலந்து கொள்ளும்போதும், என்னுடைய பெற்றோர்கள் என்னை ரொம்பவே ஊக்கப்படுத்தி வந்தனர். எனக்கு எப்போதும் பயிற்சி, பயிற்சி, பயிற்சிதான்.

குடும்ப விழாக்கள், நண்பர்கள் வீட்டு விழாக்கள் எல்லாவற்றிலும் கலந்து கொள்ள முடியாது. அவற்றைத்தான் மிஸ் செய்கிறேன். ஆனால், குடும்பத்தாரோடு செலவழிக்கும் நேரத்தை எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்வதில்லை.
இதனாலேயே என் மனைவி, குழந்தைகளும் எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்து வருகின்றனர்.’’

ஆணழகனாக விரும்பும் இளைஞர்களுக்கு தாங்கள் சொல்லும் அறிவுரை...

‘‘இந்தத் துறையில் இருக்கும் என்னுடைய மாணவர்–்கள் மற்றும் பின்பற்றுபவர்களுக்கு நான் கூறிக்கொள்ளும் அறிவுரை ஒழுக்கத்தை முதலில் கடைபிடியுங்கள். இதுதான் அடிப்படை. அடுத்ததாக ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டே இருங்கள். உடலைக் கட்டமைக்கும் முயற்சியில் பொறுமை அவசியம். அதற்கென்று ஒரு கால அவகாசம் தேவை. எனவே, குறுக்குவழியில் எதையும் முயற்சி செய்ய வேண்டாம்.

உங்கள் உடலைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி முன்னேற வேண்டும் என்பதையும், ஒரு நிலையான உடற்பயிற்சிமுறை மற்றும் உணவுத்திட்டத்தினால் மட்டுமே பாடிபில்டர் ஆக முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கேற்ற பல்வேறு உடற்பயிற்சி முறைகளை அவ்வப்போது மாற்றி, உணவுமுறைகளையும் மாற்றியமைப்பதால் மட்டுமே சாத்தியம் என்பதையும் வலியுறுத்துகிறேன்’’.

- இந்துமதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-05-2019

  27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்