SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகை அலற வைக்கும் கணையம்

2018-09-06@ 15:01:30

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘மருத்துவ உலகுக்கும், தனி மனிதர்களுக்கும் ஆகப்பெரும் சிம்மசொப்பனமாக இருக்கிறது நீரிழிவு. இந்த நீரிழிவுக்கு அடிப்படை காரணமாக இருப்பது கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோனின் சமநிலையின்மைதான். அதேபோல், நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு அவசியமான பணியைச் செய்வதும் கணையத்தின் முக்கியமான பணியே’’ என்று கணையத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறார் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவரான ராதா. கணையம் பற்றி பல்வேறு முக்கியத் தகவல்கள் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

* பொதுவாக இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் பற்றி பரவலாகப் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், கணையம் பற்றிய செய்திகள் அவ்வளவாக நம் கவனத்துக்கு வருவதில்லை. நம் உடலில் காணப்படுகிற கணையம் ஒரு சிறிய உறுப்பு என்றாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உறுப்பாகும்.

* முதுகு எலும்பை ஒட்டி 2 சிறுநீரகங்களுக்கும் நடுவே அமைந்துள்ளது கணையம். சராசரியாக 10 செ.மீ. நீளமும், 4 செ.மீ. அகலமும் கொண்டது. 15 கிராம் முதல் 20 கிராம் வரை எடை உடையது.

* கணையத்தில் சுரக்கிற Gastrin ஹார்மோன்தான் நாம் சாப்பிடுகிற உணவு செரிப்பதற்கு மிகவும் உதவி செய்கிறது. இதனை, பேச்சு வழக்கில் ‘கணைய நீர்’ எனக் குறிப்பிடுவார்கள்.  

* நாம் சாப்பிடுகிற உணவுப்பண்டங்கள் குடல் வழியாக, மெல்லமெல்ல இரைப்பையை சென்றடையும். அப்போது ஒரு வகையான அமிலம் சுரக்கும். நாம் உட்கொண்ட சாப்பாடு அந்த அமிலத்தோடு ஒன்றாகக் கலந்து, அமிலத்தன்மை கொண்டதாக மாறி சிறு குடலுக்குள் போகும்.

இந்த அமிலத்தன்மையை சமப்படுத்த காரத்தன்மை தேவை. அத்தகைய காரத்தன்மையை ஏற்படுத்துகிற நொதியை(Enzyme) சுரக்க செய்யும் இன்றியமையா பணியை கணையம் தொடர்ந்து செய்கிறது.

* இன்றைய நவீன வாழ்வில் நாம் உட்கொள்கிற அனைத்து உணவுகளிலும் கொழுப்புச்சத்து அளவுக்கதிகமாக காணப்படுகிறது. அதை உணவில் இருந்து தனியாக முதலில் பிரித்தெடுப்பது கணையத்தின் வேலைதான். அதனைத் தொடர்ந்து, அக்கொழுப்பினை செரிமானத்துக்கு உள்ளாக்குகிற Lipase என்ற என்சைமும் இவ்வுறுப்பில் இருந்துதான் சுரக்கிறது.

* அன்றாடம் நாம் சாப்பிடுகிற உணவுப்பொருட்களில் ஏராளமான சத்துக்கள் திடப்பொருட்கள் வடிவில் உள்ளன. இவற்றை எல்லாம் சின்னச்சின்ன மூலக்கூறுகளாக உடைப்பதற்கு, கணையத்தில் இருந்து உற்பத்தியாகிற என்சைம்கள் கண்டிப்பாக தேவை. உதாரணத்திற்கு புரதம் என்ற சத்தினை மூலக்கூறாக உடைப்பதற்கு Pancreas-லிருந்து வெளிவருகிற Amelis எனும் நொதி உதவுகிறது.

* கணையம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக செயல்படுவதற்கு, நம்முடைய உணவுப்பொருட்களில் காணப்படுகிற மூலக்கூறுகள் சிறுசிறு துகள்களாக உடைக்கப்படுதல் அவசியம். இவ்வாறு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு குடல் வழியாக கீழே செல்லும்போது, அதனுடைய சத்துக்கள் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன. இதனால், கணையம் அதனுடைய பணிகளைச் செவ்வனே செய்ய முடிகிறது.

* கணையத்தில் ஏற்படுகிற பிரச்னைகளை மருத்துவர்கள் உடனடியாக வந்த பிரச்னை(Acute Pancreatitis), நீண்டகால பிரச்னை(Chronic pancreatitis) என இரண்டாக வகைப்படுத்துவார்கள். முதல் வகை பிரச்னைக்கு அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் அருந்துவது முதன்மை காரணமாக சொல்லப்படுகிறது. இதனால், கணையம் பாதிக்கப்படுவதோடு கல்லீரலும் கெடும். மேலும் தாங்க முடியாத வயிற்று வலி இருக்கும். இந்த வலி வயிற்றுப் பகுதியில் இருந்து முதுகுக்குப் பரவுவது போன்ற உணர்வு இருக்கும். உடனே, மருத்துவமனைக்குப் போய் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் போல் தோன்றும். பித்தப்பையில் கற்கள் இருந்தாலும், கொழுப்பு அதிகமாக காணப்பட்டாலும் இப்பிரச்னை வரும்.
   
* கணையம் நீண்ட நாட்களாக பிரச்னைக்கு உள்ளாகி இருப்பதற்கு, என்ன காரணம் என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதுதான் நீண்ட கால பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஏனென்றால், கணையம் கொஞ்சம்கொஞ்சமாக சுருங்கத் தொடங்கும். இதற்கு மரபுவழி காரணமாக சொல்லப்படுகிறது.

* கணையம் பாதிப்பு அடையும்போது, அவ்வுறுப்பின் எல்லா செயல்களும் பாதிப்பு அடையும். புரதச்சத்து உடைக்கப்படாமல், திடப்பொருளாக மலத்தில் வெளியேறும். மேலும், உணவுப்பொருட்கள் மூலமாக நமக்குக் கிடைக்கிற கொழுப்புச்சத்தும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என பிரிக்கப்படாமல், அப்படியே வெளியேறும். இந்த சத்துக்கள் திடப்பொருளாக வெளியேற்றப்படும்போது, அந்த அளவிற்குச் சமமான தண்ணீரும் வெளியே செல்லும். இதனால் வயிற்றுப்போக்கு, தளர்ந்த நிலையில் மலம் வெளியேறுதல் முதலான பிரச்னைகள் ஏற்படும்.  

* கணையத்தில் பிரச்னைகள் வருகிறபோது நாம் உட்கொள்கிற எல்லா உணவுகளும், உடலில் தங்காமல் திடப்பொருளாக வெளியேற்றப்படும். எனவே சத்து குறைபாட்டால் உடல் பலவீனம் அடையும்.

* கணையம் செயல் இழக்கும்போது, நமது உடலில் முதலில் புரதச்சத்து குறைபாடு உண்டாகும். இதன் காரணமாக, ரத்தக் குழாய்களில் உள்ள நீர் முழுவதும் வெளியேறிவிடும்.

* கணையம் செயல் இழப்பதால், அல்பமைன் சத்து குறைபாடு வரும். இதனால், உடலில் நீர் தேங்கும். எனவே, உடலில் ஆங்காங்கே வீக்கம் காணப்படும். அதேவேளையில் ரத்தத்தில் கொஞ்சமும் நீர்ச்சத்து இருக்காது. ஏனென்றால், அல்பமைன் சத்துதான் ரத்தத்தில் நீர்ச்சத்து தங்க உதவுகிறது.

* ஒருவருக்கு அல்பமைன் சத்து குறைபாடு உள்ளது என்பதை, கொஞ்சமாக சிறுநீர் வெளியேறுதல், வயிறு, முகம் மற்றும் கால்களில் வீக்கம் தென்படும்.

* கணையம் செயல் இழந்துவிட்டால் வாய் வழியாக எந்தவிதமான மருந்து, மாத்திரைகளை கொடுக்க முடியாது. முதலில், இவ்வுறுப்பு பாதிக்கப்பட்ட நபரை முழுவதும் நன்றாக பரிசோதிக்க வேண்டும். பின்னர், என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய வேண்டும். பாதிப்பு எதுவாக இருந்தாலும், ஊசி வழியாகத்தான் அதற்கான மெடிசனைச் செலுத்த முடியும்.

* கணையம் பாதிப்பு அடையும்போது, உண்டாகிற முக்கியமான பிரச்னை ‘கொழுப்பு சத்து குறைபாடு.’ இக்குறைப்பாட்டினை, தோல் எண்ணெய் பசை இல்லாமல் வறண்டு காணப்படுதல், வெடிப்புடன் சொரிசொரியாக தோல் காணப்படல் போன்ற அறிகுறிகளை வைத்து, இந்தக் குறைபாட்டினைக் அறிய முடியும்.
 
* கணையத்தின் செயல் இழப்பால் ஜீரணக் கோளாறு ஏற்படும். இதன் காரணமாக, சத்து குறைந்து உடல் எடையும் குறையத் தொடங்கும்.

* கணையம் பாதிக்கப்படுதல், ‘பரம்பரை நோய்’ ஆகாது. ஏனென்றால் பெற்றோர்களில், யாராவது ஒருத்தருக்கு இருந்தால், அவர்களுடைய குழந்தைகளுக்கும் வரும் என உறுதியாகச் சொல்ல முடியாது.    

* கணையத்தின் செயல்பாடுகளில், Endocrine Function என்றொரு செயல் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

அதாவது, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் என்ற ஹார்மோன் இந்த உறுப்பில்தான் சுரக்கிறது. இந்த ஹார்மோன் குறைவாகவும், அதிகமாகவும் சுரப்பதற்கு கணையத்தில் உள்ள செல்கள்தான் காரணமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் குறைவாக சுரக்கும்.  

* பித்த நீரும், கணைய நீரும் கற்கள் அல்லது கட்டி காரணமாக வெளியேற முடியாமல் தடைபட்டு தேங்கி நிற்கும்போதுதான் மஞ்சள் காமாலை உண்டாகும். இதற்கு மருந்து, மாத்திரைகள் தேவையில்லை; அடைப்பை சரி செய்தாலே இந்நோய் குணமாகிவிடும்.

* அரிப்பு, சிறுநீர் மஞ்சள் நிறத்துடன் வெளியேறல், மலம் சிவப்பு கலந்த  வெள்ளை நிறத்தில் காணப்படல் போன்ற அறிகுறிகள் பித்த நீர், கணைய நீர் வெளியேறாத காரணத்தால் வருகின்ற மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்.

* கணையம் பாதிப்பு அடைவதை தடுப்பதற்கு நம்முடைய பழக்க வழக்கங்களை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். மது அருந்துவதை அறவே நிறுத்த வேண்டும். மஞ்சள் காமாலை இருந்தால் என்ன வகை என்பதை தெரிந்து, அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக பசி, நீர் ஏராளமாக வெளியேறல், சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டால், கணையத்தில் பிரச்னை உள்ளதா என பரிசோதனை செய்வது அவசியம். உடலில் தென்படும் எந்த அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

தொகுப்பு: விஜயகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thiruvan_5thdaycelb

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

 • rarephots_indiragandhi

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

 • 2018_indiragandibirthdy

  இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

 • america_winterstorm2018

  வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

 • 2018wildfire_trumph

  கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்