SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரைப்பையின் செயல்திறன் குறைந்தால்...

2018-09-05@ 14:16:08

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘ஆரோக்கியமான உடல்நலனுக்கு பல்வேறு உறுப்புகளும் சீராக செயல்பட வேண்டியது அவசியம். குறிப்பாக, இரைப்பையின் இயக்கம் அதில் முக்கியமானது. இரைப்பையின் செயல் திறன் குறையும்போது அல்லது செயல்திறனில் தளர்ச்சி ஏற்படும்போது Gastroperesis என்ற பிரச்னை ஏற்படுகிறது. இதனை உடனடியாகக் கவனிக்க வேண்டும்’’ என்கிற இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் ரவி, அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இரைப்பை செயல்பட அதற்கென உள்ள பிரத்யேக நரம்பு மண்டலம் அதாவது குறிப்பாக வேகஸ் நரம்பு நலமாக இருக்க வேண்டும்.  

கேஸ்ட்ரோபாரெசிஸ் என்பது என்ன?

‘‘இரைப்பை காலியாக இருக்கும்போது பசியை உணரச் செய்தல், தேவையான அளவு உணவை இயல்பாக உள்வாங்கி இரைப்பை நிரம்பிய திருப்தி அளித்தல், உணவை நன்கு பசை போல அரைத்தல், அடுத்த 2 முதல் 3 மணி நேரத்தில் உணவுக்கூழை சிறுசிறு பீய்ச்சல்களாக சிறுகுடலுக்கு செரிமானத்தின் அடுத்த கட்டத்துக்கு அனுப்பி வைத்தல் போன்ற இந்த செயல்களை இரைப்பை மேற்கொள்கிறது. இதுபோன்ற இரைப்பையின் செயல்திறன்கள் குறைந்த நிலையையே கேஸ்ட்ரோபாரெசிஸ் என்று சொல்கிறோம்.’’

நோய்க்கான காரணங்கள்...

‘‘இரைப்பை செயல்பட அதற்கென உள்ள பிரத்யேக நரம்பு மண்டலம் அதாவது குறிப்பாக வேகஸ் நரம்பு நலமாக இருக்க வேண்டும். இரைப்பைக்கான நரம்புகள் மற்றும் அதன் தசைகள் பாதிக்கப்படும்போது அதன் செயல்களும் தளர்கின்றன. நாள்பட்ட சர்க்கரை நோய் உடையவர்கள், வயிறு மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவர்கள், சில வைரஸ் தொற்று நோயுடையவர்கள், பார்க்கின்ஸன், வாதம் போன்ற நரம்பு மண்டல நோய்களை உடையவர்கள், Scleroderma எனும் தோல் - மூட்டு நோய் உடையவர்கள், வலி நிவாரண மருந்துகள் மற்றும் மனநல மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.’’

இதன் அறிகுறிகள் என்னென்ன?

‘‘கொஞ்சம் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிடுதல், மேல் வயிறு உப்பி அசௌகரியமாய் உணர்தல், வாந்தி, குமட்டல், எதுக்களித்தல், நெஞ்செரிச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகளை இந்நோய் பெற்றிருக்கிறது.’’

கேஸ்ட்ரோபாரெசிஸின் பாதிப்புகள் என்ன?

‘‘சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுப்பாடு இழத்தல், இரைப்பை சீராக உணவை செரிமானத்துக்கு அனுப்பாததால் சர்க்கரை அளவுகள் திடீரென அதிகரிப்பது அல்லது குறைவது என்று மாற்றங்கள் ஏற்படுவது, Dehydration என்று சொல்லப்படுகிற உடலில் ஏற்படும் நீரிழப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல் தளர்வு போன்ற உடல்நல பிரச்னைகள் இந்நோயால் ஏற்படுகிறது.’’

இதற்கான சிகிச்சைகள்...

‘‘சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்தல், எளிதில் செரிக்கும் உணவுகளை அளவாக பிரித்து உண்ணுதல் போன்றவற்றோடு மருத்துவ ஆலோசனைப்படி சில மாத்திரைகளால் இரைப்பையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனாலும் சில நரம்பியல் காரணங்களால் பலருக்கு இந்நோய் நாள்பட்ட தொந்தரவாய் நீடிக்கலாம். இந்நோயின் பாதிப்பு அதிகளவில் இருப்பவர்களுக்கு, இரைப்பை செயல்பாட்டைக் கூட்டுவதற்கான பேஸ்மேக்கர் சிகிச்சை மற்றும் உணவை சிறுகுடலுக்கு அனுப்புவதற்காக அறுவை சிகிச்சை செய்வது போன்றவை நல்ல பலனளிக்கும்.’’

- க.கதிரவன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

 • fra

  பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்