SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதங்களை பராமரிப்பதில் கவனம் செலுத்துங்கள்!

2018-08-23@ 10:37:03

நன்றி குங்குமம் டாக்டர்

மாத்தி யோசி

‘‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாதங்களில் கவனம் செலுத்தச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறது ஆயுர்வேத மருத்துவம். 3000 வருடங்களுக்கு முன்பே உடல் உறுப்புகளை இணைக்கும் வர்ம முடிச்சுகள் கால் பாதங்களில் இருப்பதால் வர்ம சிகிச்சையின் மூலம் பாதம் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை சரகர், சிசுகர் போன்ற ஆயுர்வேத மருத்துவ மகான்கள் விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

பாதப் பராமரிப்பு ஆரோக்கியத்தில் அந்த அளவுக்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவரான சிவகுமார்.ஆயுர்வேதத்தில் செய்யப்படும் பாத சிகிச்சைகளைப் பற்றியும், நாம் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகளையும் தொடர்ந்து
விளக்குகிறார்.

மனித உடலில் கை, கால்களே இயக்கத்திற்கான உறுப்புகள். அதிலும் கால்களால்தான் இடத்திற்கிடம் பெயர்ந்து இன்று கம்ப்யூட்டர் யுகம் வரை மனித குலம் பரிணாமம் அடைய முடிந்திருக்கிறது. ‘பாதகாத்திரம்’ அதாவது காலணி அணிவது, கால் அலம்புவது, காலையில் பல்துலக்குவது போல தினசரி காலை எழுந்தவுடன் எண்ணெய் தேய்த்து பாதங்களின் தசைகளை பிடித்துவிடுவது(Oil Massage) போன்றவற்றை ‘தினச்சரியம்’ எனப்படும் தினசரி அனுசரிக்கவேண்டிய சடங்காக சொல்கிறார்கள்.

கால் அலம்புவதின் நோக்கம்...


பாதங்களில் நிறைய வர்மப்புள்ளிகள் இருப்பதால் கால் பராமரிப்பில் முதல் விஷயமாக கால் அலம்புவதைச் சொல்கிறார்கள். காலை அலம்புவதால் நோய்க்கிருமிகள் அண்டுவதை தடுக்க முடியும் என்பது நமக்கு நன்றாக தெரிந்த விஷயம். ஆனால், கால் அலம்புவதால் ‘உடல் அசதி போகும், கண்பார்வை மேம்படும், ஆண்மைக்குறைவு ஏற்படாது மற்றும் மனச்சோர்வைப் போக்கி சந்தோஷம் கொடுக்கும்’ போன்ற நாம் அறியாத பல விஷயங்களையும் ஆயுர்வேதம் கூறுகிறது.

இதை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே, ‘காலை முழுசாக கழுவாவிட்டால் சனி பிடிக்கும்’ என்று நம் முன்னோர்கள் மறைமுகமாக சொல்லி வைத்திருக்கிறார்கள். பாதங்களில் எண்ணெய் தேய்ப்பதன் அவசியம்...தோற்றத்தில் இளமையாக இருந்தாலும் சிலரின் பாதத்தைப் பார்த்தால் தோல் வறண்டுபோய் சுருக்கங்களோடு, பித்தவெடிப்பு, சேற்றுப்புண் போன்றவற்றால் வயதானவர்களின் காலைப் போல் காணப்படும். தினசரி ஆயில் மசாஜ் செய்வதால் பாதத்தில் ஏற்படும் வெடிப்புகள், கொப்புளங்கள் நம்மிடம் வரவே பயப்படும்.

அப்படி வந்தாலும் அவற்றைப் போக்கி அழகான பாதங்களைப் பெறலாம். பாதத்தில் முடியும் ஒவ்வொரு நரம்பும் உடலின் ஒவ்வொரு உறுப்போடு தொடர்புடையவை என்பதால், பாதத்தில் ஆயில் மசாஜ் செய்யும்போது, கால் விரல்களில் உள்ள மூட்டு எலும்புகளில் இருக்கும் பசைத்தன்மையை அதிகரித்து, காலில் ஏற்படும் உணர்வின்மை மற்றும் காலில்

ஏற்படும் மற்ற வலிகளை போக்கலாம். மேலும் கூரிய கண்பார்வை பெற, மூளை சுறுசுறுப்படைய மற்றும் குழந்தையின்மைப் பிரச்னைக்கு தீர்வாகவும் ஆயில் மசாஜ் உதவுகிறது. வாயு, நரம்பு சம்பந்தப்பட்ட வாத நோய்களான முடக்குவாதத்தை தவிர்க்கலாம். முக்கியமாக இரவில் பாதங்களுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால் நீண்டநேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கு காலில் ஏற்படும் அசதியைப் போக்கி, நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

உடலில் ஏதேனும் பிரச்னை இருந்தால் மட்டும் இதைச்செய்யாமல் தினசரி வேலையாகச் செய்வதால் பாதங்கள் மூலம் வரும் எந்தவொரு நோயையும் அண்ட விடாமல் செய்வதோடு, மற்ற பாதசிகிச்சைகளை செய்துகொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படாது.

மனப்பதற்றம், மன அழுத்தம், பெருமூளை வாதம் மற்றும் மைக்ரேன் தலைவலி போன்ற நோய்களுக்கு தீர்வாக பாதங்களில் மசாஜ் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை தற்போது நவீன மருத்துவமும் பரிந்துரைக்கிறது. Diabetic Neuropathy சிகிச்சையில் நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் பாத எரிச்சல், கால்குடைச்சல், வலி போன்றவற்றை குறைக்க ஆயில் மசாஜை பரிந்துரைக்கிறார்கள்.

Trans Dermal Drug Delivery System என்ற ஆய்வில், பாதங்களில் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் உடல் கிரகித்துக்கொள்ளும் எண்ணெயை 48 மணிநேரம் கழித்து சிறுநீரின் மூலம் வெளிவருவதை நிரூபித்திருக்கிறார்கள். வெளியே எண்ணெயைத் தேய்ப்பதால் உடலினுள்ளே மாற்றம் நேருமா என்ற சந்தேகத்தையும் இந்த ஆய்வு உடைத்திருக்கிறது. நம் ஆயுர்வேத ஆயில் மசாஜ் முறைதான் தற்போது பிரபலமாகியுள்ள ரெஃப்லக்ஸாலஜி,
அக்குபங்சர் போன்ற மருத்துவங்களுக்கு முன்னோடி என்பதை நாம் உணர வேண்டும்.

யாரெல்லாம் ஆயில் மசாஜ் செய்யக்கூடாது?

பாதங்களில் கட்டிகள், வீக்கம் இருந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலும் பாதங்களில் எண்ணெய் தேய்த்து நீவக்கூடாது. செரிமானக் கோளாறு உள்ளவர்கள், தொற்று நோய் இருப்பவர்கள் மற்றும் மாதவிலக்கு ஆன பெண்கள் தவிர்த்துவிட வேண்டும். நீண்டநாளுக்கு முன் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் பாதங்களுக்கு எண்ணெய் தடவி நீவி விடலாம். ஆனால், சமீபத்தில் காலில் அடிபட்டவர்கள் நீவக்கூடாது. படை, சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதி உள்ளவர்கள் ஆயில் மசாஜ் செய்தால் மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

வெந்நீர் சிகிச்சை


பாதங்களில் குருத்தெலும்பு நீட்டிக்கொள்வதாலோ, வயதின் காரணமாகவோ மற்றும் அதிக எடையுள்ள, மாதவிடாய் நின்ற (Menopause) பெண்களுக்கும் குதிகாலில் வலி உண்டாகும். இவர்கள் காலையில் எழுந்தவுடன் தரையில் நடக்க மிகவும்
சிரமப்படுவார்கள். ஒரு பக்கெட்டில் மிதமான வெந்நீரில் உப்பு போட்டு பாதங்களை முக்கி எடுப்பதால் வீக்கங்களில் உள்ள நீர் குறைந்து, குதிகால் வலி நீங்கிவிடும்.

குளிர் நீர் சிகிச்சை

மூட்டுவலி, முழங்கால்வலி இருப்பவர்கள் குளிர்ந்த நீரை ஒரு பக்கெட்டிலும், மிதமான வெந்நீரை ஒரு பக்கட்டிலும் வைத்துக் கொண்டு, கால்களை குளிர்நீர், சுடுநீர் என மாறி, மாறி முக்கி எடுக்கலாம். இதனால் மூட்டுகளில் ஏற்பட்டுள்ள அழற்சி நீங்கி வலி குறைந்துவிடும். பாதங்களில் சோர்வு நீங்கி நல்ல தூக்கம் வரும்.

சுடு ஒத்தடம்


சுடுநீரில் டவலை முக்கி பாதத்தில் ஒத்தடம் தரும்போது பாதிக்கப்பட்ட இடத்தில் ரத்தஓட்டம் அதிகரித்து தசைகள் தளர்ச்சி அடைகின்றன. வாத தோஷம் சீரடைகிறது. கால் தசை, நரம்புகளின் இறுக்கம் குறைந்து ரிலாக்ஸாகின்றன. ரத்த ஓட்டம் மேம்படுகிறது.  

குளிர் ஒத்தடம்

குளிர்ச்சியான நீரில் ஒரு டவலை முக்கி எடுத்து பாதத்தில் ஒத்தடம் தருவதால் பாதத்தில் உள்ள வீக்கம், அழற்சி குறையும். தசைகள் மரத்துப் போவது மற்றும் பாதத்தில் ஏற்படும் வலி குறையும். இந்த சிகிச்சைகள் தவிர, குதிகால் வலிகளுக்கென இருக்கும் யோகாசனங்களை முறையாக கற்று செய்வதால் பாதத்தில் ஏற்படும் வலிகளை குறைத்துக் கொள்ள முடியும்.

- இந்துமதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-06-2020

  01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்