SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடலும் உள்ளமும் நலம்தானா?

2018-08-21@ 14:54:35

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘தகவல் தொழில்நுட்பம் என்கிற Information Technology உலகம் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. அதிக சம்பளம், கவர்ச்சிகரமான வாழ்க்கைமுறை என்பதால் பலரும் சற்று பொறாமையுடனும், ஆசையுடனும் பார்க்கிற துறையாகவும் ஐ.டி இருக்கிறது. ஆடம்பர வாழ்க்கை, வெளி உலகை பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் நவீன நாகரிகம், வேடிக்கை மற்றும் கேளிக்கைகள் என தங்களுக்கென்ற ஒரு தனி பாதையில் ஐ.டி உலகம்பயணித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், இவையெல்லாமே வெளிப்படையாக நமக்குத் தெரிகிற விஷயங்கள்.

உண்மையில் ஐ.டி உலகின் இன்னொரு பக்கம் மிகவும் கவலையளிக்கும் விதத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது. அதிக மன அழுத்தம், தவறான வாழ்க்கைமுறை, மோசமான உணவுப்பழக்கம், தூக்கமின்மை, தகவல் தொழில்நுட்ப கருவிகளின் ஆதிக்கம் என்ற அவர்களது அன்றாட வாழ்க்கையினால் உடலளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். வயது மேலாண்மை மற்றும் வாழ்வியல் நிபுணரான கௌசல்யா நாதன், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மிக முக்கிய ஆலோசனைகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

‘‘இன்று பெரும்பாலான அலுவலகங்கள் கார்ப்பரேட் என்ற அமைப்புக்குள்ளேயே வந்துவிட்டது. ஐ.டி ஊழியர்கள் என்று மட்டுமல்லாது எல்லோருமே கணிப்பொறி சார்ந்த பணிகளையே செய்து வருகிறோம். அதனால், இதனை எல்லோருக்குமான ஆலோசனையாகவும் எடுத்துக் கொள்ளலாம்’’ என்ற சின்னத் திருத்தத்துடன் ஆரம்பிக்கிறார் கௌசல்யா நாதன். கார்ப்பரேட் ஊழியர்களை பணிச்சுமை மற்றும் வேலை நெருக்கடி இவர்களை என்ன செய்கிறது?

‘‘எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கப்படலாம் என்பதுதான் இவர்களுக்கு ஏற்படும் முதல் நெருக்கடி. சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்று பேர் செய்யும் வேலைகள் ஒரே நபர் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் பணிச்சுமை அதிகமாகி 8 மணி நேரம் என்பதை தாண்டி 10 மணி நேரம், 15 மணி நேரம் கூட வேலை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதில் சிலருக்கு வீட்டுக்கு வந்தும் கூட அலுவலக வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது.

ஏனெனில், 2 மாதங்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குகள் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் குறித்த நேரத்தில் இலக்கை முடிக்காவிட்டால் வேலை பறிபோய்விடுமோ என்ற மன அச்சத்தால் பலர் இலக்கை முடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மணிக்கணக்காக ‘வேலை... வேலை’ என கணினியைப் பார்த்துக்கொண்டு இருப்பதால் இவர்களின் ஆரோக்கியத்தையும் குடும்பத்தையும் சரியாக கவனித்துக் கொள்ள முடிவதில்லை. இது பெண்கள் மற்றும் ஆண்களை வெவ்வேறு வழிகளிலும் பாதிக்கிறது.’’எப்படி?

‘‘பெண்களுக்கு மன அழுத்தம், தலைவலி, பாதுகாப்பு இல்லாமை, குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்படுதல், அதிக கோபம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதன் எதிரொலியாக சக ஊழியர்களுடன் சண்டை ஏற்படுதல், வேலையில் கவனம் செலுத்த முடியாமை, வேறு இடங்களுக்கு மாறுபடுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆண்களுக்கு மன அழுத்தம், தலைவலி அதிகம் வேலை நெருக்கடி, வேலைச்சுமை, அதிக நேர வேலை செய்தல், மேல் அதிகாரிகளுக்காக, வேலை வேறு இடங்களுக்கு மாறுபடுதல், அதிக வேலை ஆனால் குறைந்த சம்பளம் போன்ற நெருக்கடிகள் வருகின்றன.

’’உணவுப் பழக்கங்களில் ஏற்படும் தவறுகள்...

‘‘கார்ப்போரேட் ஊழியர்கள் 80% பேர் சரியான உணவுப்பழக்கங்களை கையாள்வதில்லை என்று ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. ஏனெனில் அவர்கள் நிறுவன வேலையை செய்வதிலே அதிக நேரம் செலவழிக்கின்றனர். பின்பு அவர்கள் சொந்த வேலையை செய்வதில் மீதி நேரம் போய்விடுகிறது. உணவு விஷயத்தில் அவர்கள் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. கிடைத்ததை சுவையாக இருந்தால் மட்டுமே போதும் என்று உண்கின்றனர்.

பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக ஐடி துறையினர் உள்ளனர். ஏனெனில் அதுபோன்ற உணவுகள் அவர்களுக்கு மிக எளிதாகக் கிடைத்துவிடுகிறது. நாகரிகம் என்ற போர்வையும் அதில் அடங்கியுள்ளது. அதனால் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல்  தவறான உணவுமுறையைப் பின்பற்றுகிறார்கள். இதனால் பொதுவாக அதிக உடல் எடை ஏற்றம், அல்லது குறைவு என சீரற்ற நிலையிலே காணப்படுகின்றனர்.’’

இரவு நேர வேலைகளால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன?

‘‘ஆரோக்கியமான வாழ்க்கையில் உணவுக்கு அடுத்து முக்கியமான இடத்தை பிடிப்பது தூக்கம் மட்டுமே. பறவைகள், விலங்குகள் என எல்லா உயிரினங்களுக்குமே தூக்கம் என்பது அவசியமாக இருக்கிறது. ஆனால், மனிதன் மட்டும்தான் அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கவலைப்படுவதுமில்லை. இதனாலேயே பல நோய்களும் விரைவிலேயே வந்து சேர்ந்துவிடுகிறது.

இரவுப் பணியால் தூக்கமின்மை அதனால் மாறுபடும் உணவுப்பழக்கம் என ஒரு சீரற்ற உடல் அமைப்பு உண்டாகிறது. இதனால்  உடல் பலகீனம், எளிதில் கோபம் அடைதல், எரிச்சல்  எளிதிலேயே கண்களில் குறைபாடு என பல பிரச்னைகள் உண்டாகிறது. இத்துடன் தனிப்பட்ட விருப்பங்களுக்காக சினிமா, இன்டர்நெட், மொபைல் பயன்பாடு என்று இரவு நேரத் தூக்கம் தொலைகிறது. இந்நிலையை மாற்றி தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.’’

மற்ற எல்லா துறைகளையும் விட ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் ஏன் இந்த அதிக மன அழுத்தம்? ‘‘பெரும்பாலும் டார்கெட் நிர்ணயிக்கப்படுகிறது. தினமும் நாம் செய்த வேலைகளைக் குறித்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். இது மாதத்துக்கு ஒரு ரிப்போர்ட் என்ற நிலை மாறி, தினமும் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி பல இடங்களில் உண்டாகிறது. இமெயில், மெஸஞ்சரில் பதில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

மேலும் இந்த வேலையின் வருமானத்தை நம்பித்தான் ஒவ்வொருவரின் குடும்பமும் இருக்கிறது. இதன் வருமானத்தை நம்பித்தான் பெரும்பாலான பேர் கடன்களும் வாங்கியிருப்பார்கள். இதனால் மற்ற துறை ஊழியர்களை விட அதிக மன நெருக்கடியிலேயே இவர்களது வாழ்க்கையானது  ஓடிக்கொண்டிருக்கிறது.

’’ஐடி துறையில் அதிக தற்கொலைகள் நடக்க காரணம்?‘‘

இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர்களில் கிட்டத்தட்ட 14 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பலரும் ஒருவித மன நெருக்கடியில்தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். இலக்குகளை நோக்கி நேரம், காலமில்லாமல் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகமாகி, தாங்க முடியாத நிலைக்கு வரும்போது தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் பணியாளர்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதே இல்லை.’’

ஐடியில் ஆண்களைவிட பெண்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்ற கருத்து சரியா?

‘‘ஐடி துறையில் பெண்கள் இன்னும் அதிக மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது உண்மைதான். ஏனெனில் அவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாகவே இப்போது 95% பெண்கள் வேலைகளுக்குச் செல்கிறார்கள். அதிலும் ஐடி போன்ற நிறுவனங்களுக்கு பெரும்பாலான பெண்கள் வேலைக்கு வந்துள்ளனர். பெண்களுக்கு திருமணம் ஆகிவிட்டாலோ அல்லது குழந்தை பெற்றுவிட்டாலோ சரியான ப்ராஜெக்ட் கொடுக்க மாட்டார்கள்.

அவர்களின் உழைப்புக்கேற்ப பதவி உயர்வையும் அளிக்க மாட்டார்கள். இதனாலேயே பல பெண்கள் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் அவலநிலைக்கு ஆளாக்கப்படுவதால், மிகுந்த மன வேதனை அடைகின்றனர். அதேபோன்று பெண் பணியாளர்களின் டீம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். அதனால் யாருடனும் தொடர்ச்சியாக நட்பாக இருக்க முடியாது. குழுவில் புதியவர்களாக இருப்பதால் யாரிடமும் எளிதில் பழகவும் முடியாது.

மேலும் நிர்வாகம் பணியாளர்களுக்குள்ளே போட்டியை உருவாக்கிவிடுவதால் யாரையும் நம்பி எதையும் பகிர்ந்துகொள்ள முடியாது. குடும்ப சூழல் காரணமாக பல பெண்கள் மன ஒப்புதல் இல்லாமல் இரவு பணிக்கு வருகின்றனர். இந்த நிலையில் செக்யூரிட்டி கூட ஆணாகத்தான் இருப்பார். அந்த நேரங்களில் ஏதாவது பிரச்னை என்றால் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் பெண்கள். எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதுபோன்ற காரணங்களால்தான் அவர்களுக்கு அது மிகுந்த மன அழுத்தத்தைத் தருகிறது.’’

இதற்கான தீர்வுகள் என்ன? வழிமுறைகள் என்ன?

‘‘குறிப்பாக கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சு நமது உடலில் ஊடுருவி நமது சிறுசிறு செல்களை அழித்துவிடுகிறது. இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, இதனைத் தவிர்க்க கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களின் அருகில் Indoor tree என்கிற நிழலில் வளரக்கூடிய சிறு செடிகளை அதன் அருகில் வைப்பதால் அங்கு இருக்கும் கம்ப்யூட்டரிலிருந்து வரக்கூடிய அந்த கதிர்வீச்சை உள்வாங்கிக் கொள்கிறது. கதிர்வீச்சு அபாயத்திலிருந்து நம்மை காக்க சிறு உதவி புரிகிறது.’’

* யோகா, தியானம் செய்துவரும் பழக்கத்தால் மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்கலாம்.

* சக ஊழியர்களுடன் நன்கு பழக வேண்டும். மனம் விட்டுப் பேச வேண்டும். குறிப்பாக, பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் பகிர்ந்துகொள்வதன் மூலம் அதற்கான விடையும், ஆதரவும் கிடைக்கக் கூடும்.

* புகை, மது போன்ற கெட்ட பழக்கங்களை ஒழிக்க வேண்டும். எந்த கோணத்தில் பார்த்தாலும் இவை தீய பழக்கங்களே!

* உடற்பயிற்சிகளை வாய்ப்பு கிடைக்கும்போது மேற்கொள்ள வேண்டும். அலுவலகத்தில் ஜிம் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளத் தவறாதீர்கள்.

* வாரம் ஒருமுறை பிடித்த இடங்களுக்குச் சென்று வரலாம். அது மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் தரும்.

* ஜங்க் உணவுகளை விட்டு நல்ல ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். உணவில் அதிக காய்களையும், கீரைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் வேலைக்குச் செல்லும்போது ஏதாவது ஒரு  பழ வகையினை எடுத்துச் செல்லலாம். சுண்டல், பயிர் போன்ற உணவுகளையும் எடுத்துச் செல்லலாம்.

* தங்களுக்கு பிடித்த விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்.

* எதையும் எளிதில் சமாளிக்கும் மனப்பக்குவத்தை முக்கியமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

- எம்.வசந்தி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்