SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்ப்ப கால ரத்த சோகை

2018-08-02@ 15:00:02

நன்றி குங்குமம் டாக்டர்

கர்ப்பம் தரித்தது உண்மையான அந்த நொடியிலிருந்து ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்கிற அறிவுரை ‘ரெண்டு பேருக்கும் சேர்த்து நிறைய சாப்பிடணும்’ என்பது. இருவருக்கும் சேர்த்துச் சாப்பிடுவது என்பது அளவுக்கதிகமான சாப்பாடு என்று அர்த்தமில்லை. கருவைச் சுமக்கும் தாய்க்கும், கருவிலுள்ள குழந்தைக்கும் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்கும்படி கவனமாகப் பார்த்து சாப்பிட வேண்டும் என்பதுதான் உண்மையான அர்த்தம்.கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து என்கிற மகப்பேறு நிபுணர் நிவேதிதா, கர்ப்பகால ரத்த சோகை பற்றிய விளக்கங்களைத் தருகிறார்.

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதனால்தான் கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும் வந்துவிடாமல் தடுக்கப்படும்.

கர்ப்ப கால ரத்த சோகையின் அறிகுறிகள்

* அளவுக்கதிக ஸ்ட்ரெஸ்
* தலைசுற்றல் மற்றும் மயக்கம்
* தலையில் லேசானதும், வித்தியாசமானதுமான உணர்வு
* அதிகக் களைப்பு
* மூச்சு விடுவதில் சிரமம்
* சீரற்ற இதயத்துடிப்பு
* முகம் வெளிறிப் போவது

கர்ப்ப கால ரத்தசோகைக்கு என்ன காரணம்?

மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் இரும்புச்சத்து இருக்கும். ரத்த சிவப்பு அணுக்கள் உருவாகக் காரணமான ஹீமோகுளோபினின் மிக முக்கிய உட்பொருள் இது. ரத்த சிவப்பு அணுக்கள்தான் உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்பவை. வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து உடலைக் காக்கவும் ரத்த சிவப்பு அணுக்கள் அவசியம்.

கர்ப்பமடைகிறபோது பெண்ணின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகக் குறையும். குழந்தையின் வளர்ச்சிக்கான வேலைகளை உடல் பார்ப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உடலில் போதுமான அளவு வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டியது அவசியம். இரும்புச்சத்துக் குறைபாடு என்பது அலட்சியமாக விடப்பட்டால் அது தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் உயிர்களையே பறிக்கலாம்.

குறைபாடு எப்படி ஏற்படுகிறது?

வைட்டமின் சி அளவு குறைவது, ரத்த சோகைக்கான மிக முக்கிய காரணம். உடலில் இரும்புச்சத்து கிரகிக்கப்பட வைட்டமின் சி அவசியம். அதனால்தான் ரத்த சோகை உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளுடன் வைட்டமின் சி சப்ளிமென்ட்டுகளும் சேர்த்தே கொடுக்கப்படும்.கன்னாபின்னாவென டயட் செய்வதும் இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கு வழி வகுக்கும். குறிப்பிட்ட சில உணவுகளை அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்வது இன்னொரு காரணம். உதாரணத்துக்கு காபி, சீஸ், டீ போன்றவற்றை அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்வது.

கர்ப்ப கால ரத்த சோகை ஏன் ஆபத்தானது?

பொதுவாகவே பெண்களிடம் ரத்தசோகை பிரச்னை இருப்பது மிகப் பரவலான ஒன்று என்கின்றன ஆய்வுகள். மாதவிலக்கின்போது வெளியேறும் ரத்தப் போக்கு இதற்கு முக்கியமான காரணம். மாதவிடாயின் 3 முதல் 4 நாட்களில் பெண்கள் ஒவ்வொரு முறையும் 10 முதல் 35 மி.லி. ரத்தத்தை இழக்கிறார்கள். ரத்தத்தில் வெளியேறும் இரும்புச்சத்தை ஈடுகட்ட அவர்கள் போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதில்லை. அதன் விளைவாக அவர்களுக்கு ரத்த சோகை வருகிறது. கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் ரத்த சோகை பிரச்னை இன்னும் அதிகரிக்கிறது.

காரணங்கள்....

கர்ப்பத்தின்போது பெண்ணின் உடலுக்கு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அது உணவு மற்றும் மாத்திரைகளின் மூலம் ஈடுகட்டப்படாதபோது ரத்தசோகை வருகிறது.வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடும் இன்னொரு காரணம். இந்த இரண்டு குறைபாடுகளுமே ரத்த சோகையைத் தீவிரப்படுத்துபவை.

இரண்டில் ஒன்று குறைந்தாலும் அது வெள்ளை அணுக்கள் உற்பத்தியை வெகுவாக பாதிக்கும். இரும்புச்சத்துக்கான சப்ளிமென்ட்டுகளை கால்சியம் சப்ளிமென்ட்டுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதும் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதில் பிரச்னையை ஏற்படுத்தி ரத்த சோகைக்குக் காரணமாகும்.

என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர் சொல்கிற பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அதில் ஹமோகுளோபின் பரிசோதனையை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. பரிசோதனையில் தெரிய வரும் அளவுகளை வைத்து மருத்துவர் கர்ப்பிணிக்கான சப்ளிமென்ட்டுகளைப் பரிந்துரைப்பார். கால்சியம் சப்ளிமென்ட்டும் சேர்த்துப் பரிந்துரைக்கப்படும்போது அது பற்றி மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறலாம்.

கர்ப்ப கால ரத்த சோகையை வெறும் சப்ளிமென்ட்டுகளால் மட்டுமே சரி செய்துவிட முடியாது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி சத்துகள் நிறைந்த உணவுகளைப் போதுமான அளவு உட்கொள்ள வேண்டும். தினசரி உணவில் கீரைகள், நட்ஸ், பருப்புகள் போன்றவை இருக்க வேண்டும்.

கர்ப்ப கால ரத்த சோகை என்ன செய்யும்?

* முதல் கட்டமாகக் குழந்தையின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்.
* குறைப்பிரசவம் நிகழலாம்.
* கர்ப்பத்தில் சிக்கல் வரலாம்.
* குழந்தை எடை குறைவாகப் பிறக்கலாம். பிறந்த பிறகும் அதன் நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாகப் பாதிக்கப்படலாம்.
* பிறந்த குழந்தைக்கும் ரத்தசோகை தாக்கலாம்.

பிரசவத்தின் போதும் பெண்ணுக்குப் பெரிய அளவில் ரத்த இழப்பு ஏற்படும் என்பதால் அதன் பிறகும் ரத்த சோகைக்கு வாய்ப்புகள் அதிகம். அரிதாக பிரசவத்தின்போது தாய் உயிரிழக்கவும் நேரலாம். எனவே, கர்ப்பத்தை எதிர்நோக்கும் நாட்களிலிருந்தே ரத்தசோகை அண்டாமலிருப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

- ராஜி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2020

  20-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்