SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நல்ல நோயாளியாக இருங்கள்!

2018-08-02@ 14:56:32

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘நலமடைய வேண்டும் என்பதற்காக நல்ல மருத்துவமனையையும், நல்ல மருத்துவர்களையும் தேடிப் போகிறோம். அதேபோல, நாமும் நல்ல நோயாளியாக இருக்க வேண்டும்’’ என்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவரான தீபக் சுப்ரமணியன். அதென்ன நல்ல நோயாளியாக இருப்பது என்று அவரிடம் கேட்டோம்...‘‘மருத்துவர் சொல்வதை கேட்டு நடந்துகொண்டாலே போதும். எந்த நோயாக இருந்தாலும் குணமடையும்.

நாள்பட்ட நோய்கூட குறைந்தபட்சம் கட்டுப்பாட்டுக்குள்ளாவது வரும். அதுதான் ஒரு நல்ல நோயாளிக்கான சரியான இலக்கணம். ஆனால், தற்போது வரும் நோயாளிகள் அப்படி இருப்பதில்லை. சிலர் தனக்கு ஏற்படும் சாதாரண பிரச்னையைக் கூட அதீதமாக கற்பனை செய்துகொள்கிறார்கள். இது அவர்களை மனரீதியாக பலவீனம் அடையச் செய்கிறது.

அதனால் தனக்கு என்ன பிரச்னையாக இருந்தாலும் முதலில் மருத்துவரை நாட வேண்டுமே ஒழிய இன்டர்நெட்டில் தேடுவது கூடாது. அதுபோல இன்னொருவர் நோயோடு, தன்னுடைய சில அறிகுறிகளை ஒப்பிட்டு தனக்கும் அந்த நோய் இருக்கிறதோ என பயப்படுகிறார்கள். அதுவும் கூடாது. இணையதளங்களில் பார்த்துவிட்டு நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் வந்திருக்கிறதா என பரிசோதிக்கச் சொல்லி மருத்துவர்களையும் சிலர் வற்புறுத்துகிறார்கள்.

நல்ல தூக்கம், பசி, சுயநினைவு, நடை உடை பாவனையில் தெளிவு, இயல்பான வாழ்க்கை இருக்கும் ஒருவர் நோயைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பது நல்லது. அவர் ஆரோக்கியமான உணவு உட்கொள்வது பற்றிய தெளிவு இருந்தால் போதும்’’ என்றவரிடம் நோயாளிகளிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்னவென்று கேட்டோம்...

‘‘நோயாளிகள் தங்களுடைய பிரச்னைகளை என்னவென்று தெளிவாக சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவதாக நோயின் தீவிரத்தைப் பொறுத்துதான் பரிசோதனைகளையும் முடிவு செய்ய முடியும். தேவைப்பட்டால் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவார் அல்லது வீட்டிலிருந்தே சிகிச்சைக்காக வந்து போகலாம். இவர்களில் பெரும்பாலான வெளிநோயாளிகள் மருத்துவரின் அறிவுரையைப்
பின்பற்றுவது இல்லை.

உதாரணத்திற்கு ஒருவருக்கு இரைப்பையில் சாதாரண புண் ஏற்பட்டால் அவருக்கு தொடர்ந்து 7 நாட்கள் மாத்திரைகள் தரப்படுகிறது. அதோடு காரமில்லாத உணவு டீ, காபி போன்றவற்றையும் தவிர்க்க சொல்கிறோம். ஆனால், அவர்கள் மாத்திரைகளை 2 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. உடனடியாக தங்களின் வழக்கமான உணவுமுறைக்கும் திரும்பிவிடுகிறார்கள். இந்த அலட்சியம் அவர்களுடைய பிரச்னையை மேலும் தீவிர நிலைக்கே இட்டுச் செல்லும்.

அதன் பின்பு மருத்துவத்தையும், மருந்தையும் குறை சொல்லி ஒரு நன்மையும் இல்லை.அதேபோல சில நோயாளிகள் சிகிச்சையின்போது, ‘மாத்திரைகள் வேண்டாம்; ஊசி போதும்’ என்கிறார்கள். ‘சிலர் ஊசி வேண்டாம்… மாத்திரைகள் போதும்’ என்கிறார்கள். ஊசி, மாத்திரை உள்பட எல்லா சிகிச்சைமுறைகளையும் நோயின் தீவிரத்தைப் பொறுத்தும் அவர் உடலின் தன்மை பொறுத்துமே தீர்மானிக்கிறோம். இதையும் நோயாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.’’நாள்பட்ட நோயாளிகளுக்குத் தங்களின் அறிவுரை என்ன?

‘‘நீரிழிவு, காசநோய், ரத்த அழுத்தம், எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு மாதம், ஆண்டு மற்றும் வாழ்நாள் முழுக்க அவர்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம். இதை அவர்கள் பின்பற்றும்போது பிரச்னை இல்லை. இந்த முக்கிய வழிமுறைகளையும், அறிவுரைகளையும் அவர்கள் பின்பற்றத் தவறும்போது உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடுகிறது.

அதுபோல அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு அவர்களது உடல் நலன் தேறும் நிலையில் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். அவர்கள் வீட்டில் இருந்து நாங்கள் சொன்ன ஆலோசனையை பின்பற்ற வேண்டும். குடும்பத்தினரும் அவர்கள் கேட்கும் உதவிகளைத் தட்டிக் கழிக்காமல் செய்ய வேண்டும். இது பெரும்பாலும் நடப்பதில்லை. இதனால்தான் நோய் குணமாவதில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

அதுபோல நாங்கள் நோயின் தாக்கத்தைப் பொறுத்து சில ஆன்டிபயாடிக் மாத்திரைகள் நோயாளிக்கு வழங்குகிறோம். உதாரணத்திற்கு, ஒருவர் 5 நாள் தொடர்ந்து ஒரு ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார் என்றால் இரண்டு நாட்களில் அவருக்கு பிரச்னை சரியானவுடன் நிறுத்திவிடுகிறார். இதனால் நோய்க்கு காரணமான கிருமி வீரியம் அடைந்து விடுகிறது. இதனாலும் அந்நோய் அந்த நோயாளிக்குத் திரும்பவும் வரும் அபாயம் இருக்கிறது. அவ்வாறு வரும்போது அதை குணப்படுத்துவது சவாலான விஷயமாக இருக்கிறது. இதனால் மருத்துவர் சொல்வதை
கேளுங்கள்’’.

- க.இளஞ்சேரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்