SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்... செக்ஸ் லைஃப் மாறும்!

2018-07-10@ 14:45:47

நன்றி குங்குமம் டாக்டர்

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...


நம்மில் பலரின் லைஃப் ஸ்டைல் இப்படித்தான் இருக்கிறது... ஆண், பெண் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னரே திருமணம் செய்து கொள்கின்றனர். அதிலும் நன்கு செட்டிலான பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று இன்னும் அதை முடிந்தவரைத் தள்ளிப் போடுகிறார்கள்.

திருமணத்துக்காக எடுக்கும் விடுப்பு, திருமணத்துக்கு முன்னரே காலியாகிவிடும். திருமணத்தை நல்லபடியாக முடிக்க வேண்டுமே என்ற டென்ஷன் இருவருக்கும் அந்த நேரத்தில் அலைக்கழிக்கும். திருமணம் முடிந்தபிறகு முதலிரவு அன்று ‘அப்பாடா’ என்று தளர்வான மனநிலை ஏற்பட்டு நிம்மதியான தூக்கத்தை உடல் விரும்பும்.

அடுத்த சில நாட்களில் வழக்கமான வேலைகள் தொற்றிக் கொள்ள... அலுவலக வேலை, வீட்டு வேலைகள் முடிந்து குளித்து இரவு 11 மணிக்கு படுக்கை அறையின் கதவைத் தாளிடும் போது இருவரையும் அயற்சி அல்லல் படுத்தும். இத்தனை நெருக்கடிகளையும் தாண்டித்தான் காதலும், காமமும் போட்டி போட்டுக் கொண்டு மன்மதக் கொண்டாட்டத்தை நடத்தி வைக்கிறது.

நேரமின்மை, வேலைக்கான அழுத்தங்கள், நிதிச் சிக்கல்கள் என எதுவெல்லாம் காமத்தின் ஊற்றுக்கண்களை உலரச் செய்யும் என்று யோசிக்க முடியாது. அலுவலக அறை வழியே மழை பார்க்கும்போது... இந்த மழைப் பொழுதில் அவன் மார்பில் சாய்ந்து ஒவ்வொரு தூறலாய் எண்ணிட முடியவில்லையே என அவள் ஏங்குவாள். நண்பனுடன் மாலைத் தேநீர் பருகிடும் வேளையில் அந்திப் பொழுதின் மேற்கு வானம் பார்த்து அவள் கூந்தலை விரல்களால் வருடியபடி நிறம் மாறும், உருமாறும் மேகங்கள் பார்த்தப்படி  அவளைச் சீண்டி விளையாட முடியவில்லையே என்று அவன் ஏங்குவான்.

இப்படியான ஏக்கங்கள் ஒரு குறுந்தகவலின் கவிதையில் முற்றுப் பெற்றுவிடும். இப்படி வேலை, குழந்தை, குடும்பப் பொறுப்புகள் எல்லாம் நம்மை கால்ப்பந்தாய் உதைத்து விளையாடும். வகிடெடுக்கும்போது எட்டிப் பார்க்கும் நரை முடி, நமக்கும் வயதாகிறது என்று உணர்த்தும். நம் வாழ்வை நமக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்திருக்கிறோமா என்று கேள்வியெழுப்பும்.

ஆணும் பெண்ணும் திருமணத்தில் இணைவதன் இயற்கைத் தேவை காமம் கொண்டாடுதலும் இனப்பெருக்கமுமே! சொந்த வீடு கட்டுவது, கார் வாங்குவது, பேங்க் பேலன்ஸ் ஏற்றுவது எல்லாம் இரண்டாம் பட்சத் தேவைகளே. ஆனால், இவையெல்லாம் சேர்ந்து காமத்துக்கான மனநிலையைக் கொன்று விடுகிறது என்கிறார் இயற்கை மருத்துவரான நிவேதனா. திருமணமான புதிதில் இருந்து ஆயுளின் அந்திவரை காமம் கொண்டாட ஆரோக்கியமான லைஃப் ஸ்டைலைப் பின்பற்ற ஆலோசனை தருகிறார்.

Sexual Ethics

எந்த ஓர் உறவும் வாழ்க்கை முழுவதும் இனித்திட அதற்கான அடிப்படை நியதிகளைப் பின்பற்ற வேண்டும். நமது வாழ்க்கைத்துணைக்கு அளிக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு தாம்பத்யரீதியாக ஒழுக்கமாக இருப்பதுதான்.

திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்வது பல வழிகளிலும் ஆரோக்கியமானதல்ல. திருமணம் வரை காமத்துக்காகக் காத்திருப்பது கணவன் - மனைவி உறவை மேலும் தித்திக்கவே செய்யும். திருமணத்துக்கு முன்பாக லிவ்விங் டுகெதர் முறையில் செக்ஸ் வைத்துக் கொள்வது கண்டிப்பாக திருமண உறவை பாதிக்கும். வெளியில் யாரிடமும் சொல்லாவிட்டாலும் அது ஒரு குற்ற உணர்வை ஒருவருக்குள் உண்டாக்கும். எனவே, ஆண் - பெண் இருவரும் இது போன்ற உறவைத் தவிர்ப்பது நல்லது.

இன்றைய கணவன், மனைவி திருமணமான புதிதில் தனது நட்பு வட்டங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் திருமணத்துக்குப் பின் அந்த நட்பு வட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, எதிர்பாலினத்தவருடன் நட்பு காரணத்துக்காகக் கூட நெருக்கமாக இருப்பது வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் மன வேறுபாட்டை உண்டாக்கும்.

இதுவே பின்னாளில் கணவன்-மனைவி உறவில் சந்தேகத்துக்கான விதையாக மாறி விஸ்வரூபமெடுக்கும். இதனால் கணவன் மனைவி உறவில் அவரவர் பிரைவஸியை அனுமதிப்பதோடு சந்தேகத்துக்கு இடமின்றியும் நடந்து கொள்ள வேண்டும்.

தவறான பழக்கங்களிலிருந்து வெளிவர வேண்டும்

ஆண் - பெண் இருவருமே திருமணத்துக்கு முன்பாக தங்களுக்கு செக்ஸுவலாக அல்லது வேறு கெட்ட பழக்கங்கள் இருப்பின் கைவிட வேண்டும். குறிப்பாக பெண்கள் புகையிலைப் பழக்கம் இருப்பின் கைவிடுவது அவசியம். ஆண்கள் மது, போதைப் பழக்கங்கள் இருப்பின் திருமணத்துக்குப் பின் இது போன்ற பழக்கங்களைக் கைவிடுவது மிக மிக முக்கியம்.

ஏனென்றால் தாம்பத்ய உறவு, குழந்தைப் பிறப்பு இரண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்கள் ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் கைவிட வேண்டும். சுய மருத்துவம் செய்து கொள்வதும் நல்லதல்ல. இதுபோன்ற தவறான பழக்கங்களைத் திருமணத்துக்குப் பின்பும் கடைபிடித்தால் தாம்பத்ய உறவில் நீடித்த  இன்பம் மற்றும் உச்ச நிலையை அடைவது தடைபடும்.
 
ஃபிட்னஸில் கவனம் தேவை

தாம்பத்யம் என்பது இரண்டு உடல்கள் இயங்குவது மட்டுமல்ல. அதற்கு மனமும் அன்பால் இணைந்து இன்புற வேண்டும். பரஸ்பரம் புரிதல் மற்றும் தன்னவளை/ தன்னவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற உந்துதல் இருவருக்குமே வேண்டும். இதற்கு உடல் மனம் இரண்டும் ஃபிட்டாக இருப்பது அவசியம். உடலளவில் ஆரோக்கியமாக இருப்பது நம்பிக்கை தரும்.

தாம்பத்ய நேரத்தில் உண்டாகும் பதற்றத்தைக் குறைக்கும். தாம்பத்ய உறவின்போது நீண்ட நேரம் விளையாட உடலால் உறவாடவும் மூச்சுப்பயிற்சி உதவும். இதனால் திருமணத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே எளிய யோகா பயிற்சிகள் செய்வது அவசியம்.

மடியில் மடிக்கணினி வேண்டாம்

இன்றைய பணிச் சூழலில் அதிக நேரம் கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை மடியில் வைத்துப் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும். மேலும் இவற்றைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.

இணை அருகில் இருக்கும்போது முடிந்தவரை செல்போனை விட்டுத் தள்ளியிருக்கலாம். செல்போனை இடுப்புப் பகுதி மற்றும் இதயத்துக்கு அருகில் வைப்பதைத் தவிர்க்கலாம். ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான உடைகளுக்கு பதிலாக காட்டன் உடைகள் அதிகம் பயன்படுத்தலாம். இரவு தூங்கச் செல்வதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பே செல்போன் பயன்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். தாம்பத்ய நேரத்தை உங்களுக்கானதாக மாற்றிக் கொள்ள இவைகளை நிச்சயம் பின்பற்றுங்கள்.

நிதிச்சிக்கல்கள்

குடும்பத்தில் நிலவும் நிதிச்சிக்கல் மற்றும் கடன் சுமைகளும் உங்களது ரொமான்ஸை பாதிக்கும். வருவாய்க்கு மீறிய செலவுகள் மற்றும் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகக் கூடாது. கணவன் மனைவிக்குள் முடிந்தளவு கருத்து வேறுபாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். தனது விருப்பத்துக்காக மற்றவரை வற்புறுத்த வேண்டாம். அவரவர் விருப்பங்களை அனுமதிப்பதும் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுப்பதும் காதலை பலப்படுத்தும்.

ஓய்வும் அவசியம்

காதலைக் கொண்டாட உடலுக்குப் போதிய ஓய்வு தேவைப்படுகிறது. தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம். இரவு நீண்ட நேரம் தூங்காமல் போனில் சாட் செய்வது காதலுக்கான, காமத்துக்கான ஏக்கத்தைக் குறைக்கும். மேலும் ஆழ்ந்த தூக்கம் இன்றி தூங்கவே சிரமப்படும் நிலைக்கும் தள்ளும். காலையில் 5 முதல் 6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும்.

அதிகாலை வேளையில் இருவருமாக சிறு உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் செய்வது அவர்களுக்குள்ளான புரிதலை மேம்படுத்தும். தாம்பத்யப் பொழுதுகளில் பேரின்பம் கொண்டாடுவதற்கான மனநிலையை உருவாக்கும். விடுமுறை நாட்களுக்கு வேலையை சேர்த்து வைக்காமல் ஓய்வாக வைத்துக் கொள்வதும் காமம் கொண்டாடுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.

பரிசுத்தம் பரவசம் தரும்

உங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது ஃப்ரெஷ்ஷாக உணர வைக்கும். குளித்த பிறகு பாடி க்ரீம் பயன்படுத்துவதும் தாம்பத்ய நேரத்தில் மகிழ்வை அதிகரிக்கச் செய்யும். பிறப்பு உறுப்புகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் முழுவதும் மஞ்சள் பூசிக் குளிப்பதும் கிருமி நாசினியாகப் பயன்படும். குளித்த பின் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்யலாம்.

மஞ்சள், ஊறவைத்து அரைத்த பாதாம், பால் மூன்றையும் பேஸ்ட் போலச் செய்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம். வாரம் ஒரு முறை இது போல செய்வது உடலுக்குப் பொலிவூட்டும். தன்னுடலை அழகாகப் பராமரிப்பதும் இருவருக்கும் இடையிலான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும். தாம்பத்ய நேரத்தை மேலும் அழகாக்கும்.

வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் உடல் வெப்பம் குறைக்கும். ஆண்கள் நல்லெண்ணெயும், பெண்கள் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம். இதனால் டென்ஷன் குறைந்து ஹார்மோன் செயல்பாடு அதிகரிக்கும். வாய் சுகாதாரத்தைப் பாதுகாக்க நல்லெண்ணெயால் வாய் கொப்பளிப்பதும் பலன் தரும். இதனால் பற்கள் ஆரோக்கியம் காக்கப்படுவதுடன் வாய் துர்நாற்றப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். இவற்றை உங்களது லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்வதன் மூலம் கலவியல் இன்பத்தின் உச்சம் தொடலாம்.

உணவும் ஆரோக்கியமானதாகட்டும்

இறைச்சி உணவுகள், மீன் எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட், ஜிங்க் ஆகியவை சரும மினுமினுப்பு மற்றும் தசைப்பகுதி வலிமையடையவும் உதவுகிறது. புரதம் அதிகம் உள்ள உணவுகள், பால், மசித்த வாழைப்பழம் கொண்ட ஹெல்த் ட்ரிங்க் ஒன்றைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

காய்கறி சூப், வெவ்வேறு பழங்களை பாலுடன் மிக்ஸ் செய்து ஜூஸாக எடுத்துக் கொள்வதும் நல்லது. ஆண்களுக்கு பீட்ரூட் ஜூஸ் அவ்வப்பொழுது அவசியம். இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. பூசணிக்காயில் ஜிங்க் அதிகம் உள்ளது. இதையும் ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம். தாம்பத்ய நேரத்தில் ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை மேம்படுத்த இந்த உணவுத்திட்டம் உதவும்.

ரொமான்டிக்காக யோசியுங்கள்

நமக்குத்தான் திருமணமாகிவிட்டதே என்பதை காதலுக்கான அணையாக உணர வேண்டாம். திகட்டத் திகட்டக் காதலிக்கத்தான் திருமணமே. இருவருக்கும் இடையிலான பிணைப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் அன்பை வெளிப்படுத்துங்கள்.

பாஸிட்டிவ் விஷயங்களைப் பாராட்டுங்கள். செல்லப் பெயர் வைத்து அழைப்பதும் நெருக்கத்தை அதிகரிக்கும். வேறு யாருக்காவும் உங்களது தனிமை நேரங்களைத் தியாகம் செய்யாதீர்கள். அன்பு மிகும் வேளைகளை உருவாக்குங்கள். உங்களது கடிகாரத்தில் காதலுக்கான, காமத்துக்கான நேரங்கள் மிச்சமிருக்கும். கொண்டாடுங்கள்...

( Keep in touch…! )

எழுத்து வடிவம் : கே.கீதா


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

 • iraqnewyear

  ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

 • iraqboatacc

  ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

 • 22-03-2019

  22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்