SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Water Fasting

2018-07-05@ 16:08:06

நன்றி குங்குமம் டாக்டர்

உலகின் பெரும்பாலான பகுதிகளும், உடலில் பெரும்பாலான பகுதிகளும் நீரினாலேயே ஆனது என்பதை அறிந்திருப்போம். அந்த அளவுக்கு உலக இயக்கத்துக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீர் இன்றியமையாததாக இருக்கிறது. தண்ணீரில் உள்ள மினரல்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடல் இயக்கத்துக்கு தேவையான ஆதாரமாக இருக்கிறது. தண்ணீர் உயிரை வளர்க்கிறது; உடல் என்ற வாகனத்துக்கு பெட்ரோல் போல் உடலை இயக்கச் செய்கிறது;

உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது என தண்ணீரின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம். இத்தகைய தண்ணீரை மட்டுமே உட்கொண்டு பின்பற்றப்படும் உணவுமுறை இயற்கை மருத்துவத்தில் Water Fasting என்ற பெயரில் வெளிநாடுகளில் பிரபலமாகி வருகிறது. வேறு எந்த உணவும் எடுக்காமல் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கும் முறையை கையாண்டால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கிறது என்கிறார்கள். யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரேமலதாவிடம் இதுபற்றி கேட்டோம்...

வாட்டர் ஃபாஸ்ட்டிங் என்பது என்ன?

‘‘வேறு எந்த உணவையும் உட்கொள்ளாமல் தண்ணீரை மட்டுமே குடித்து, ஒன்றிரண்டு நாட்கள் டயட்டில் இருப்பதற்குப் பெயர்தான் Water fasting. இயற்கை மருத்துவத்தில் இப்படி தண்ணீர் மட்டும் குடித்து உடலை ஆரோக்கியமாகவும் நோய்களிடமிருந்தும் பாதுகாத்தும் வைக்கக்கூடிய யுக்தியை நீண்ட காலமாகப் பின்பற்றி வருகிறார்கள். சமீப காலமாக இதனை மற்ற மருத்துவ முறைகளிலும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டனர்.

நம்முடைய கலாசாரத்திலேயே உணவு உண்ணாமல் தண்ணீர் மட்டும் அருந்தும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதனை நம்முடைய முன்னோர்கள் மத நம்பிக்கையின் பெயரால் குறிப்பிட்ட நாட்களில் விரதம் எனும் முறையில் உணவு உண்ணாமல் தண்ணீர் மட்டும் அருந்தி வந்திருக்கிறார்கள்.’’வாட்டர் ஃபாஸ்ட்டிங்கால் என்ன நன்மை கிடைக்கும்?

‘‘வாட்டர் ஃபாஸ்ட்டிங்கின் போது உடல் உறுப்புகள் ஓய்வெடுத்து, படிப்படியாக இயல்பான வேகத்தில் இயங்கத் தொடங்கும். உங்களுடைய ஜீரண மண்டலம் முழுவதும் ஓய்வெடுத்து புத்துணர்வுடன் செயல்படும். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இளமையோடு இயங்கும். வாட்டர் ஃபாஸ்ட்டிங் மேற்கொண்ட பிறகு முன்பைவிட நம் உடல் நன்றாக இருப்பதை நாம் உடனடியாக உணர முடியும்.

இது நம் உடல் எடையை விரைவில் குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் நம் உடலில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேறுவதற்கும் வழி செய்கிறது. உடலில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உற்பத்தி செய்கிறது. உடல் செரிமானப் பணிகள் சீரடையச் செய்கிறது. எந்த நோய்களும் வராமல் முன் கூட்டியே தடுக்கிறது.

வாட்டர்  ஃபாஸ்ட்டிங்கின் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், கல்லீரல் நோய்கள்,  புற்றுநோய்கள் போன்றவை வராமல் முன்கூட்டியே தடுக்க முடியும். தண்ணீர் மட்டும் குடிப்பதன் மூலமாக நம் உடலில் உள்ள எல்லா நச்சும் வெளியேறிவிடுகிறது குறிப்பாக, இதற்கு முன் தேங்கியிருந்த எல்லா  நச்சுக்களும் உடலில் இருந்து நீங்கிவிடுகிறது.’’

வாட்டர் ஃபாஸ்ட்டிங் தொடங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

‘‘வாட்டர் ஃபாஸ்ட்டிங் குறைந்தது ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வது மிகுந்த பயனை தரும். முடியாதவர்கள் ஒரு நாள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதனால் நீங்கள் எத்தனை நாட்கள் எடுக்கப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். வாட்டர் ஃபாஸ்ட்டிங் தொடங்குவதற்கு முதல் நாள் இரவில் எளிதில் செரிமானம் அடையும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாட்டர் ஃபாஸ்ட்டிங் எடுக்கும்போது முதல் நாளில் பால் உணவுப்பொருள், டீ, காபி மற்றும் எண்ணெயில் பொரித்த மற்றும் ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை உங்கள் செரிமான உறுப்புகளுக்கு அதிக வேலை கொடுக்காமல் இருக்கும்.

குறிப்பாக, வாட்டர் ஃபாஸ்ட்டிங் முடித்த அந்த ஒரு வாரம் முழுக்க இதுபோன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. விரதம் தொடங்கும் முதல் நாள் இரவு குறைவான உணவு அல்லது பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம். வாட்டர் ஃபாஸ்ட்டிங் எடுக்கும்போது பசிக்கும்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகபட்சம் 3 லிட்டர் வரை குடிக்கலாம்.

நீங்கள் முதன் முதலில் தண்ணீர் விரதம் எடுக்கும்போது வழக்கத்துக்கு மாறாக உணவு எதுவும் எடுக்காமல் இருப்பீர்கள். இதனால் உங்கள் மனம் இறுக்கமாக இருக்கும். ஆகவே, நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் முழு ஓய்வு எடுக்க வேண்டும்.

உங்களுடைய சிந்தனை பாசிடிவ்வாக இருக்க வேண்டும். விரதத்தின்போது உடல் சோர்வு ஏற்படும். வயிறு எரிச்சல் ஏற்படும், தலைவலிக்கும், அதிகமாக பசிக்கும். அதனால் இவைகளை கட்டுப்படுத்தி இந்த வாட்டர் ஃபாஸ்ட்டிங் முறையை எடுக்க வேண்டும்.’’

மருத்துவ ஆலோசனை தேவையா?

‘‘நிச்சயம் தேவை. மருத்துவரின் வழிகாட்டுதலுடன் வாட்டர் ஃபாஸ்ட்டிங் மேற்கொள்வதே சரியானது. உங்களின் உடல்நிலை பற்றிய முழுமையான புரிதலுடன் வாட்டர் ஃபாஸ்ட்டிங்கை பின்பற்றும்போது அது முழுமையான பலனைக் கொடுக்கும்.’’

டயட்டை எப்படி முடிப்பது?

‘‘வாட்டர் ஃபாஸ்ட்டிங் எடுத்த மறுநாள் காலையில் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் அல்லது மாதுளை ஜூஸ் குடித்து முடிக்க வேண்டும். அதன் பிறகு புழுங்கல் அரிசி கஞ்சி சாப்பிடலாம், அன்று இரவும் மிதமான உணவு உண்டு மறுநாளிலிருந்து வழக்கமான உணவுமுறைக்கு திரும்பலாம்.’’

- க. இளஞ்சேரன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்