SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

DNA தூதர்!

2018-06-13@ 14:45:12

நன்றி குங்குமம்

அரைக் குரங்காக காடுகளிலும் மேடுகளிலும் சுற்றித் திரிந்த மனித இனம் நாகரிக சமூகமாக மாற்றம் பெற்றதற்கு மனிதர்களுக்குச் சிறப்பாக அமைந்த டி.என்.ஏ கட்டுமானமே அடிப்படை. இன்று நாம் பெற்றுள்ள வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான ஆண்டுகள் தொடர் பரிணாமத்தின் விளைச்சல். அறிவியல் வளர்ச்சி வேகம் எடுக்காத காலங்களில் டி.என்.ஏ மற்றும் ஜீன்களில் ஏற்படும் குளறுபடிகள் புரியாத புதிராக குழப்பிக்கொண்டிருந்தன. ஆனால், இன்று மருத்துவத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி மனிதனின் தலைவிதியை நிர்மாணிக்கும் டி.என்.ஏ கோடிங்கை வாசிக்கும் அளவு முன்னேறியுள்ளது.

டி.என்.ஏ கோடிங்கை ரீரைட் செய்வது அல்லது டீகோட் செய்து எடிட் செய்வதுதான் இன்றைய ஜீன் தெரப்பி மருத்துவத்தின் அதிரடி ஆராய்ச்சி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யமுனா கிருஷ்ணன் இந்தத் துறையில், தான் செய்த ஆய்வுகளுக்காக உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியரான யமுனா, டி.என்.ஏ நானோபாட் மூலம் நோயுற்ற செல்களின் வளர்சிதை மாற்றத்தைக் கண்டறியும் இமேஜிங் டெக்னிக்கை ஆராய்ந்து வருகிறார்.

இதற்காகத்தான் அவருக்கு இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் வழங்கும் ‘பிசிக்கல் சயின்ஸ் 2017’ விருது, 22 கேரட் தங்க மெடலோடு, 65 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. நானோபாட் என்பது டி.என்.ஏ மூலம் உருவாக்கப்படுகிறது. செல்களையும் மருந்துகளையும் கையாள கைகளும் அதை ரத்தத்தில் கொண்டு சேர்க்கக் கால்களும் உள்ளன. செல்களின் அமைப்பில் சில மாறுதல்களைச் செய்யவும், ரத்த ஓட்டத்தில் சில மருந்துகளைக் கொண்டு சேர்க்கவும் இது இப்போது பயன்பட்டு வருகிறது. கண்களால் பார்க்க முடியாத சைஸில் உள்ள இவை உயிர்செல்களுக்குத் தீங்கிழைக்காதவை.

ஜீன்களை எடிட் செய்யும் CRISPR-Cas9 போன்ற ஹைஎண்ட் தொழில்நுட்பங்கள் மிகச்சிக்கலான பிறப்புக் குறைபாடுகளுக்கு உதவினாலும், குறிப்பிட்ட நோய்களின் தன்மையறிந்து அதற்கான சிகிச்சை பெறுவதே இன்றைய அவசரத் தேவை. யமுனா கிருஷ்ணன், நோயுற்ற செல்களின் தன்மையை ஆராய்ந்து அளவிட்டிருக்கிறார். இதன் மூலம் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சையை பிளான் செய்யலாம்.

‘‘இந்தக் கண்டுபிடிப்பின் முக்கிய அம்சம், நோயைக் கண்டறிவதோடு அதன் நிலை பற்றிய துல்லிய அளவீட்டையும் பெறமுடியும் என்பதே. இந்த ஆய்வில் செல்லின் தன்மை, நோயின் தீவிரம் ஆகியவற்றையும் அறியலாம்...’’ எனத் தன் நோயறியும் முறையை விளக்குகிறார் யமுனா. நோயுற்ற செல்களை அழிப்பது அல்லது ரீபுரோகிராம் செய்ய முடிவது இந்த முறையில் கூடுதல் பிளஸ் பாயண்ட்.

யமுனாவின் சோதனை முறைகளில் செல்களிலுள்ள வேதிப்பொருட்களுக்கு ஏற்ப நானோபாட்கள் நிறம் மாறும் இமேஜிங் டெக்னாலஜி இவருக்குப் பரிசு பெற்றுத்தந்த லேட்டரல் திங்கிங் ஐடியா. குழந்தைகள் மற்றும் சிறுவர்களைத் தாக்கும் பார்க்கின்சன், அல்ஸைமர் உள்ளிட்ட நியூரான் சிதைவு நோய்களைக் கண்டறியும் ஆய்வு நிறுவனத்தை விரைவில் இவர் தொடங்கவிருக்கிறார். இந்த முறை மூலம் 50 அரிய லைசோசோம் (LSD) குறைபாட்டு பிரச்னைகளைக் கண்டறிய முடியும்.

‘‘இன்போசிஸ் பவுண்டேஷனின் விருதுத் தொகையையும் இந்த ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த ஐடியா இருக்கிறது. நியூரான் தொடர்பான சிக்கல்களை முன்னரே கண்டறிந்தால் விலை மதிப்பற்ற குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற முடியுமே...’’ எனப் பேச்சில் நம்பிக்கை குளுக்கோஸ் ஏற்றுகிறார் இன்வென்ஷன் இளவரசி யமுனா. சென்னை பல்கலையில் பி.எஸ்சி., பெங்களூருவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் மையத்தில் எம்.எஸ்., பி.ஹெச்.டி. முடித்தவர் தேசிய உயிரியல் மையத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

செல்களிலுள்ள நியூக்ளிக் அமிலம் தொடர்பாக நானோ அமைப்புகளை உருவாக்கும் இவரது ஆய்வுச்சாதனைகளைப் பாராட்டி, சாந்தி ஸ்வரூப் (2013), போஸ்டன் யங் சயின்டிஸ்ட் (2012) ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. ‘‘எனது ஆராய்ச்சியின் பயன்கள் அமெரிக்க, ஐரோப்பிய மக்களைத் தாண்டி சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதி மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே என் ஆசை...’’ என்று விஞ்ஞானிகளுக்கே உரிய பெருந்தன்மையோடு புன்னகைக்கிறார் இந்த அழகிய டாக்டர்.

- ச.அன்பரசு

அறிவியலுக்குப் பரிசு!

முதன் முதலாக இன்ஃபோசிஸ் பரிசு 2008ம் ஆண்டு கணிதப் பிரிவில் வழங்கப்பட்டது. பின்னர் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘இன்ஃபோசிஸ் சயின்ஸ் பவுண்டேஷன்’ மூலம் ஆண்டுதோறும் கணிப்பொறி அறிவியல், கணிதம், இயற்பியல், வாழ்வறிவியல், சமூக அறிவியல், மனித நேயம் ஆகிய ஆறு பிரிவுகளில் தகுதியான ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.

தேர்வாகும் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 65 லட்ச ரூபாய் பரிசுத் தொகையோடு தங்க மெடலும் வழங்கப்படுகிறது. இங்கு பரிசு பெறும் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் தங்களுடைய ஆய்வு பற்றி உரையாற்றுவது இளம் மாணவர்களை ஊக்குவிக்கும் சயின்ஸ் டானிக். அறிவியல் ஆய்வுக் கலாசாரத்தைப் பிரசாரம் செய்வதே இன்ஃபோசிஸ் சயின்ஸ் அமைப்பின் லட்சியம்.

நானோபாட்ஸ்

அமெரிக்க இயற்பியலாளரான ரிச்சர்ட் ஃபெய்மன், 1959ம் ஆண்டு எழுதிய ‘There’s Plenty of Room at the Bottom’ என்ற கட்டுரையில் நானோபாட் பற்றிய ஐடியாவை முதன் முதலில் வெளியிட்டார். 10-9 meters அளவுள்ள மைக்ரோஸ்கோப்பில் காணும் அளவுள்ள ரோபோ, முதலில் ஆய்வு நோக்கில் உதவினாலும் இன்று சிகிச்சைக்குப் பயன்படத் தொடங்கிவிட்டன. உடலின் ரத்தத்தில் செலுத்தப்படும் நானோபாட்ஸை ஃப்ளூரோஸ்கோப், எக்ஸ்‌ரே, மைக்ரோவேவ்ஸ், வெப்பம் மூலம் கண்காணிக்க முடியும்.

இதிலுள்ள மைக்ரோ கேமரா படங்களை எடுக்கவும், உள்ளேயுள்ள மருந்து அல்லது செல்கள் சிகிச்சைக்கும், நானோபாட்டின் பின்னலில் உள்ள கம்பிகள் ரத்தத்தில் நீந்தி சரியான திசையில் செல்லவும் உதவுகிறது. கேன்சர் செல்களை அழிக்க, தகவல்கள் அறிய, சிகிச்சைக்கான புதிய எளிய பொருளாகப் பயன்படுகிறது இந்த நானோபாட். அமெரிக்கா, கனடா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் செய்த சர்வேயில் 2020ம் ஆண்டில் நானோடெக்னாலஜி துறையின் யூக வளர்ச்சி 75.8 பில்லியன் டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. (researchandmarkets.com தகவல்படி)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்