SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்!

2018-06-13@ 14:02:37

நன்றி குங்குமம்

ஹோம் அக்ரி


பயிரிடுவது தவிர வெளிப்புறங்களில் கிடைக்கும் வேறு எந்த கீரைகளை நாம் உண்ணலாம்?

கரிசலாங்கண்ணி: வயல் வெளிகளில் கிடைக்கும். மஞ்சள் / வெள்ளை என்று இரண்டு வகைகள் உள்ளன. இரண்டுமே உண்ணக் கூடியவை. மற்ற  கீரைகளுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

வல்லாரை: நல்ல நீர்ப்புழக்கம் இருக்கக் கூடிய இடங்களிலும் அருவிப் பகுதிகளில் அதிகமாகவும் கிடைக்கும். வீட்டிலும் வளர்க்கலாம். மற்ற  கீரைகளைப் போல பயன்படுத்தலாம். சூப் / சட்னி செய்யலாம்.

குப்பைக் கீரை: பெயருக்கேற்றாற்போல் குப்பையிலும், அதிக சத்துள்ள மண்பகுதிகளிலும் கிடைக்கும். தண்டுக் கீரை போலவே இருக்கும். அதைப்  போலவே பயன்படுத்தலாம். நீண்ட நாட்களான குப்பைக் கீரையின் வேர்ப்பகுதியில் கிழங்கு ஒன்று இருக்கும். இதுவும் உண்ணக் கூடியதே. அதிகமான  உதிரப்போக்கை பெண்களுக்கு மட்டுப்படுத்தும்.

மூக்கரட்டை: வெட்டவெளிகளிலும், வேலி ஓரங்களிலும் கிடைக்கும். வறட்சி தாங்கி வாழும். இலைகளைக் காட்டிலும் தண்டே அதிகமாக இருக்கும்.  தண்டைத் தவிர்த்து இலையை மட்டும் ஆய்ந்து வேறு கீரைகளுடன் சேர்த்து சமைக்கலாம்.

புளியாரை: மழைக் காலங்களில் வீதியோரங்களிலும், வயற்காட்டிலும் மண்டிக் கிடக்கும். மற்ற கீரைகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
பருப்புக் கீரை: தோட்டங்களிலும், வீதிகளிலும் மண்டிக் கிடக்கும். சிலர் அழகுச்செடியாகவும் வளர்ப்பார்கள். பசலி போல சுவை இருக்கும்.  அதைப்போலவே பயன்படுத்தலாம்.

சாரணத்தி: வயல்வெளிகளிலும், வீட்டு வெளிப்புறங்களிலும் வருடம் முழுவதும் கிடைக்கும். மற்ற கீரைகளோடு சமைத்து உண்ணலாம்.

முடக்கத்தான்: இதுவும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். எளிதில் வளரக்கூடிய இதை வீட்டிலும் வளர்க்கலாம். ரசம் / சூப் செய்தும் சாப்பிடலாம்.  துவையலாகவும் உண்ணலாம்.

குறிஞ்சா: மலைப்பகுதிகளிலும், வீட்டு / தோட்ட வேலிகளிலும் கிடைக்கும். வெந்தயம் போன்ற கசப்பு சுவையுள்ள கீரை. புளிக் குழம்பில் ஓரிரு  இலைகளை சேர்த்துக் கொள்ளலாம். குறிஞ்சாவை பயன்படுத்தும்போது அரிசி களைந்த நீர் அல்லது வடிகஞ்சி சேர்த்துக் கொண்டால் கசப்பு குறையும்.

தோட்டம் திட்டமிடல்: எந்த காரணிகளைக் கொண்டு தோட்டம் திட்டமிட வேண்டும் என்று முன்னரே பார்த்தோம். தோட்டம் ஆரம்பிக்க எப்படித்  தயாராக வேண்டும் என்றும்; நிலம் தயாரித்தல், தொட்டி தயார் செய்தல் போன்றவற்றையும் அடுத்த வாரம் பார்ப்போம். ஆர்வம் இருப்பவர்கள்,  கீழ்க்கண்ட பொருட்களோடு தயாராக இருக்கவும்.

இடுபொருள்கள்: செம்மண் / கரம்பை மண்.
மக்கிய குப்பை / மண்புழுஉரம்.
கடலை / ஆமணக்கு புண்ணாக்கு.
ஓடை / ஆற்று மணல்.
கருவிகள்: மண் வெட்டி.
களைக் கொத்தி.
நீர் பாய்ச்ச / தெளிக்க தேவையான உபகரணங்கள்.

பலகீரை  சமைப்பது எப்படி?

சில வாரங்களுக்கு முன் வந்த  ஒரு வாசகரின் கேள்வி பதிலில், இந்த  கீரையை உண்ட அவரது கொள்ளுப் பாட்டி 95 வயது வரை கண்ணாடி  இல்லாமல் பார்க்க,  படிக்க முடிந்தது என்று சொல்லியிருந்தார். இந்த செய்முறையை மதுக்கூரிலிருந்து திருமதி சற்குணம் அவர்கள் எழுதி  அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கு தருகிறோம். கீழ்க்கண்ட கீரைகளில் என்னென்ன முடியுமோ அவைகளை கைப்பிடி அளவு சேகரித்துக்  கொள்ள வேண்டும். மூக்கரட்டை, சுரை இலை (ஒன்று மட்டும்), பறங்கி இலை (ஒன்று மட்டும்), குப்பைக் கீரை, சாரணத்தி, இம்பூரல் / இம்புறா கீரை,  மின்னல் கீரை, அம்மான் பச்சரிசிக் கீரை, நிலப்பசலி, பருப்புக் கீரை, நாய் வேளை, நல்ல வேளை, குப்பை மேனி, துத்தி மற்றும் முடக்கத்தான்.

செய்முறை: பட்ட மிளகாய், சோம்பு, அரிசி இவைகளை சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்றாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது  சின்ன வெங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்துக் கொண்டு, சிறிது  சிறிதாக நறுக்கிய மேற்கண்ட இலைகளை ஒரு  மட்பாண்டத்தில் போட்டு மிதமான  சூட்டில் சிறிதே நீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். தேவையான உப்பு சேர்த்து,  முழுதாக நிறம் மாறுவதற்குள்,  பொடி செய்த அரிசி மற்றும் மிளகாயைத் தூவிக் கலந்து  கீழே இறக்கி வைத்துக் கொள்ளவும்.  

குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைவரும்  உண்ணலாம். நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கும். கண் பார்வை மேம்படும். சுரை  மற்றும் பறங்கி இலையில் சுனை இருப்பதால், உண்ணும் போது  நாக்கில் விறு விறு என்று இருக்கும். இடித்த பொரியரிசியை சிறிது அதிகமாக   சேர்த்துக் கொண்டால் இது தெரியாது. பொடித்த தேங்காய் புண்ணாக்கு  வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். மாதம் ஒருமுறையோ, இரண்டு  மாதத்துக்கு ஒரு முறையோ இதை செய்து உண்ணலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்