SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேராமல் போனால் வாழாமல் போவேன்...

2018-06-12@ 17:23:44

நன்றி குங்குமம் டாக்டர்

காதல் அழகான, அற்புதமான ஓர் உணர்வு. வாழ்க்கைக்கு அவசியமான உணர்வும் கூட. ஆனால், அது எந்த வயதில் வர வேண்டும், யார் மீது வர வேண்டும், எப்படி வர வேண்டும் என்பது பற்றிய தெளிவு இளைய தலைமுறையினரிடம் இருப்பதில்லை. அதிலும் ஒரு தலைக்காதலாக இருக்கும் பட்சத்தில் அதைக் கையாளும் பக்குவமும் இருப்பதில்லை.

இதன் காரணமாகவே தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வதும், காதலித்த நபரின் வாழ்க்கையை அழிப்பதுமான துயரச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த உளவியல் சிக்கலுக்கு என்ன தீர்வு, பிரச்னையை எதிர்கொள்ளும் வழிகள் என்னவென்று தமிழ்நாடு அரசின் 104 மருத்துவ உதவி சேவை மையத்தைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் ஹேமா கோதண்டராமனிடம் கேட்டோம்...

‘‘நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு இக்கால இளைஞர்கள் சிரமப்படாத கல்வி, சுலபமான வேலை, கைநிறைய சம்பளம், ஜாலியான வாழ்க்கை இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் ஓர் ஆண் தனக்கு பிடித்த பெண்ணை விரும்புகிறான், ஆனால் தன்னை அந்த பெண்ணுக்கு பிடித்துள்ளதா என்று அவன் அறிய விரும்புவதில்லை. இதனால் ஒருதலைக் காதல் ஏற்பட்டு அது வெளிப்படும்போது பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.

அந்தக்கால காதலில் உண்மையும், நம்பிக்கையும் அதிகமாக இருந்தது. இக்கால காதலில் இவை இரண்டும் அப்படி இருப்பதில்லை. தான் காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால் தாடியும், காதல் பாட்டும் பாடி, பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து பிறக்கும் குழந்தைக்கு காதலியின் பெயரை வைத்து அக்காலத்தில் ரசித்து வந்தனர்.

ஆனால், இக்காலத்திலோ காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால் அவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்றும் அவள் உயிருடன் இருக்கக்கூடாது என்றும், அவள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவது, முகத்தில் ஆசிட் வீசுவது என்பது மட்டுமல்லாமல் தன் உயிரையும் மாய்த்துக் கொள்ள துணிந்து விடுகின்றனர். இதற்கான காரணங்களாக பின்வருவனவற்றைச் சொல்லலாம்...

இது அந்தக்காலம்!

* அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தில் நிறைய குழந்தைகள் இருந்தனர். குடும்ப கஷ்டத்தைப் பற்றியும், மனதளவில் எதையும் ஏற்றுக்கொள்கிற பக்குவமும், ஏதாவது ஒன்று  கிடைக்கவில்லை என்றால் அதை பிறருக்கு விட்டுக் கொடுக்கக்கூடிய மனப்பான்மையும் இருந்தது.

* தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்ற கூட்டுக் குடும்ப சூழல் அப்போது இருந்தது. இதனால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசிப் பழகினர்.

* அப்போது சாப்பிடும்போது நிலா வெளிச்சத்தில் அனைவரும் ஒரே வட்டமாக அமர்ந்து பேசி சந்தோஷமாக சாப்பிட்டு  மகிழ்ந்தோம். அழகான வீட்டின் நடுவே முற்றத்தில், சுற்றத்துடன் சந்தோஷமாக சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

* அப்போது பள்ளிகளில் வகுப்பறையில் நீதி போதனை வகுப்புகள் இருந்தன. அங்கே அறநெறியானது கதைகள் வழியாக போதிக்கப்
பட்டன.

* அப்போது பெண் பிள்ளைகளைப் பற்றி மட்டும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களும் அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

* அப்போது குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு பார்ப்பதே சற்று கடினம். படிக்க வேண்டிய வயதில் படிக்கவில்லை என்றால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி சொல்லி கொடுத்தார்கள்.

இது இந்தக்காலம்!

* தற்போது உள்ள சூழலில் ஒரே குழந்தை, அக்குழந்தை எப்போதும் ஊடகங்கள் மற்றும் இணையதளம் போன்றவற்றிலிருந்து வெளி வருவதே இல்லை. சாப்பிடும்போது கூட என்ன சாப்பிட்டோம் என்பது தெரியாமல் அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்தவை எல்லாம் கிடைக்கிறது. ஆனால், இதுபோன்ற சூழலில் வளர்ந்த குழந்தைகளின் இளமைப் பருவத்தில் காதல் என்று வரும்போது அதில் ஏற்படுகிற சிறிய ஏமாற்றத்தைக்கூட அவர்களால் சரியாக எதிர்கொள்ள முடிவதில்லை.

* தற்போதைய காதல் பெரும்பாலும் நிலையற்றதாக இருப்பதோடு, முடிவுகள் உடனுக்குடன் எடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

* தற்போது கூட்டுக் குடும்பம் என்ற ஒன்றே இல்லை என்கிற அளவுக்கு அரிதாகி வருகிறது. தற்போதைய நவீன வீடுகளில் முற்றமும் இல்லை, சுற்றமும் இல்லை.

* தற்போது பள்ளிகளில் நீதி போதனை என்ற வகுப்புகள் இல்லை, ஆதலால் மாணவர்களுக்கு நீதி பற்றியும், அறநெறிகளைப் பற்றியும் தெரியவில்லை.

* இக்காலத்தில் குழந்தைகளுக்கு ஒரு செயலின் பின் விளைவுகள் பற்றி தெரியப்படுத்துவதில்லை. தற்போது குழந்தைகள் சினிமாவைப் பார்த்து அதேபோல் வாழ வேண்டும் என்று கற்பனையில் வாழ்ந்து வருகிறார்கள்.

* இந்தக் கால குழந்தைகள் அதிக அளவு சிந்தனைத் திறனுள்ளவர்களாக இருக்கிற அதே சமயத்தில் அதிக கோபம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.
தன்னுடைய குழந்தைப் பருவம், மாணவப் பருவம் மற்றும் வாலிபப் பருவத்தில் ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் விஷயங்களும், அக்குழந்தைக்கு இந்தப் பருவங்களில் கிடைக்கிற அனுபவங்களுமே எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

ஒரு குழந்தையின் எதிர்காலம் சரியான முறையில் அமைவதில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உளவியல் ஆலோசகர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இவர்கள் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை  மட்டுமல்லாமல், நாட்டின் நல்ல ஓர் குடிமகனை உருவாக்குவதிலும் முக்கியப் பொறுப்புடையவர்கள் என்பதை புரிந்துகொள்வது அவசியம்.
மாணவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும்?

* மாணவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, எதையும் எதிர்கொள்ளும் திறமை, தன்னம்பிக்கை போன்ற  நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எதுவும் முடிவு அல்ல. அனைத்திற்கும் ஓர் புதிய ஆரம்பம் உண்டு என்பதை புரிய வைப்பதோடு, மன தைரியத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

* இளைஞர்களுக்கு காலம் எவ்வளவு முக்கியம் என்பதையும், கடந்துபோன காலத்தை என்ன செய்தாலும் திரும்பிக் கொண்டுவர முடியாது என்பதையும், சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு பேரின்பத்தை கைவிடக் கூடாது புரிய வைக்க வேண்டும். எதையும் எளிதாக, விளையாட்டாக, சந்தோஷமாக எப்படி செய்வது என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

* நம் பிள்ளைகளுக்கு படிக்க வேண்டிய வயதில் படிக்கவில்லை என்றால் ஏற்படும் பின் விளைவுகளை கதைப்போல பொறுமையாக புரியும்படி சொல்ல வேண்டும். அவர்களுக்கு தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை, எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டும்.

* அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும். குழந்தைகளை அன்பாக, அரவணைப்புடன் நடத்த வேண்டும். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு என்பதை தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

* பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது அவர்களுடன் இருக்கும் நண்பர்களைப் பற்றி தெரிந்துகொள்வதோடு, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய முக்கியமான பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளதை புரிந்துகொள்வது
அவசியம்.

* பணம் தேடி பயணிக்கும் இக்காலத்தில் குழந்தையின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில், கண்டிப்பாக குழந்தைகளுக்கென்று ஒரு மணி நேரம் ஒதுக்கி அவர்களிடம் அவசியம் பேச வேண்டும். அவர்கள் கூறும் விஷயங்களை  கண்டிப்பாக கேட்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தன் கருத்தை பெற்றோர் கேட்கிறார்கள் என்று சந்தோஷமாக இருப்பார்கள். தனக்கு நேர்கிற பிரச்னைகள், தனது எதிர்பார்ப்புகள், ஆசைகள் என்று எல்லாவற்றையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வார்கள்.  

* பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளை திட்டியும் அடித்தும்தான் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்றாற்போல தட்டிக் கொடுத்து அன்பாக அவர்களது பொறுப்புகளை புரிய வையுங்கள்.

* இளைஞர்களுக்கு நல்ல நெறிமுறைகள், கல்லூரி பருவத்தில் கற்க வேண்டிய பாடங்கள் என்னென்ன என்பதையும் அவை எவ்வாறு தன் வாழ்க்கை முழுவதும் உதவும் என்பதையும், கல்வியின் மதிப்பு பற்றியும் புரிய வைக்க வேண்டும்.

* சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலை வளர்க்கிறார்கள். தற்போது பல குடும்பங்கள் பேசிக் கொள்வது இணையம் மற்றும் ஊடகங்களின் வழியாகவே உள்ளது. இளைஞர்கள் சிலர் தனது பருவ வயதில் காதல் என்ற வலையில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற நிலைகளை மாற்றியமைக்க அவர்களுக்கு சரியான மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்.   

* தற்போது மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் ஏற்படுகிற இனக்கவர்ச்சி குறித்த சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு ஒருதலைக் காதலால் பிரச்னைகள் ஏற்படுகிறபோது உரிய மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு திருமணத்துக்கு முன்பும், பின்பும் திருமண வாழ்வு, எதிர்காலம் குறித்த சரியான உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதன் மூலம் கொலை மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* உடல் மற்றும் மன ரீதியான குழப்பங்கள், காதல், மன அழுத்தம், படிப்பு, போதைப்பழக்கம், கொலை, தற்கொலை எண்ணங்கள் போன்ற பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதற்குரிய ஆலோசனைகளைப் பெறுவதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையிலிருக்கும் தமிழக அரசின் 104 மருத்துவ உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். அதை சிறப்பாக உருவாக்குவது உங்கள் தலையாய கடமை. இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை. உளவியல் நிபுணர்களால் ஆலோசனை மட்டுமே தர முடியும். அதை திறம்பட செயல்படுத்துவது உங்களால்தான் முடியும்!

- க.கதிரவன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்