SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டும் டிரெண்டாகுது சைக்ளிங்!

2018-06-12@ 17:20:17

நன்றி குங்குமம் டாக்டர்

போக்குவரத்து வசதிக்காக கண்டுபிடிக்கப்பட்ட வாகனம் என்று நாம் அறிந்துவைத்திருந்த சைக்கிள், மோட்டார் பைக்குகளின் வருகைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல்போனது. ஆனால், தற்போது மீண்டும் சைக்கிளுக்கு மவுசு ஏற்பட்டு வருகிறது.

ஃபிட்னஸ் பற்றிய விழிப்புணர்வு பரவி வரும் நிலையில் அதற்கேற்ற சரியான, ஜாலியான வழி சைக்ளிங்தான் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள். இதனால் சில ஆயிரங்களில் இருந்த சைக்கிளின் விலை தற்போது லட்சங்களில் கூட பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் அடையாளமாக பல்வேறு நிகழ்வுகளையும் பார்க்க முடிகிறது. கோலிவுட் சினிமாவில் இதற்கென தனி சைக்ளிங் கிளப்பே இருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். அதிகாலையிலேயே ஆர்யா, உதயநிதி, விவேக் போன்றவர்கள் சைக்கிள் எடுத்துக் கொண்டு கிலோ மீட்டர் கணக்கில் சேர்ந்து சுற்றி வருவதாக அவ்வப்போது யாரேனும் பேட்டி தருகிறார்கள்.

உடற்பயிற்சி செய்ய முடியாத நேரத்தில் படப்பிடிப்புகளுக்கு சைக்கிளிலேயே கிளம்பிவிடுவதாக விஷால், அதர்வா போன்ற நடிகர்களைப் பற்றிச் சொல்கிறார்கள். பாலிவுட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. சல்மான்கான், ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், அஜய்தேவ், ரன்பீர்கபூர் போன்ற இந்திய சினிமா முன்னணி நட்சத்திரங்கள் விளம்பரங்களுக்காக மட்டும் அல்லாமல் தங்களுடைய நிஜ வாழ்க்கையிலும் சைக்கிளை சமீபகாலமாக அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

சைக்ளிங் பயிற்சி சுற்றுச்சூழலுக்கும் ஆதரவானது என்பதால் தமிழக அரசும் இதற்கு ஊக்கமளிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் இதற்கென தனித்திட்டமே வகுக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலும், சைக்கிள் போக்குவரத்தை ஊக்கப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த முயற்சியின் முதற்கட்டமாக சைக்கிளில் செல்கிறவர்களுக்கு தனி பாதை அமைக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ரூ.36 லட்சம் மதிப்பில் தீவுத்திடல் சுற்றியுள்ள பகுதி, வேளச்சேரி சர்தார் படேல் சாலை, டி.ஜி.எஸ். தினகரன் சாலை உள்ளிட்ட 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சைக்கிள் பகிர்ந்து அளித்தல் திட்டமும் மாநகராட்சியின் மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாடகைக்கு சைக்கிள் எடுத்து இந்த பாதைகளில் சென்று வரலாம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.சைக்கிளோடு வளர்ந்து, வாழ்ந்த தலைமுறைக்கு அது மீண்டும் டிரெண்டாவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடற்பயிற்சி நிபுணர் தேவி மீனாவிடம் இதுபற்றிப் பேசினோம்...‘‘சைக்ளிங் என்பது பயணத்துக்கானது மட்டுமே அல்ல. அதில் மூன்று முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.

உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது(Excercise), சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது( Eco-friendy), செலவும் இல்லாத சிம்பிளானது(Economy). இதனால் Three in One என்றும் சொல்லலாம். இப்போது மேலை நாடுகளில் உள்ளதுபோல் சாலைகளில் சைக்கிள் பாதை தனியாக அமைக்க நமது அரசு முயற்சித்து வருவது பாராட்டுக்குரியது. சைக்கிளில் செல்பவர்களுக்கு சாலையில் பாதுகாப்பு அளிப்பது,

சைக்கிள் செல்லும் பாதையில் மற்ற வாகனங்கள் செல்லாமல் தடுப்பது, சைக்கிள் பாதையில் ஆக்கிரமிப்பு இல்லாமல் செய்வது, பாதசாரிகளால் சைக்கிள் ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசித்து அரசு சைக்கிள் பாதையை அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்’’ என்கிற தேவி மீனா சைக்ளிங் பயிற்சியால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதையும் அதற்கான சரியான முறைபற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘உடற்பயிற்சியில் நிறைய வகைகள் உள்ளன. இவற்றில் Cycling என்கிற சைக்கிள் மிதிப்பது Cardio flexibility strength வகையைச் சார்ந்தது. சைக்கிள் மிதிப்பதன் மூலம் இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகள் வலுவடையும். மேலும் உடலில் உள்ள தசைகளுக்கு வலு தரும் சிறந்த பயிற்சியாகவும் இருக்கிறது. இதயம் நன்கு பலப்படும். அதனால் இதயத்துக்கு இதமான பயிற்சி, உகந்த பயிற்சி என்று சைக்ளிங்கை சொல்லலாம்.

நுரையீரல் நன்றாக விரிந்து கொடுக்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும் நுரையீரலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது. சைக்கிள் மிதிப்பது ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரின் உடல்நலத்துக்கும் மிகுந்த பயனளிக்கிறது. முக்கியமாக, சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சைக்கிள் மிதிப்பது என்பது ஒருவருக்குக் கிடைக்கும் அடிப்படையான உடல் உழைப்பைப் போல் ஆகும்.

இன்று Sedentary life style என்கிற உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறை ஏற்பட்டிருக்கும் சூழலில் ஒட்டுமொத்த உடலுக்கும் பயிற்சியாக இருக்கும் சைக்ளிங்கை அனைவரும் பின்பற்றலாம். எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கு சைக்ளிங் பயிற்சி நல்ல பலனைக் கொடுக்கும். சைக்ளிங் பயிற்சியில் ஒட்டு மொத்த உடலுக்கும் வேலை கொடுப்பதால் உடலின் கெட்ட கொழுப்புகள் எரிக்கப்படுகிறது.’’

முதன்முதலில் சைக்ளிங் பயிற்சியைத் தொடங்குகிறவர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன?

‘‘ஒருவர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கும்போது அவர் சைக்கிள் மிதிக்கத் தொடங்கினால் கால்வலி ஏற்படலாம். சிலருக்கு உடம்பு, கால், மூட்டு வலியும் இருக்கும். ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை இந்த பிரச்னை இருக்கும். தொடர்ந்து சைக்கிள் மிதிக்கும்போது மீண்டும் இயல்பான நிலைக்கு உடல் வந்துவிடும். இந்த சிரமத்தைத் தவிர்க்க முதன்முதலாக சைக்ளிங் பயிற்சியைத் தொடங்கு பவர்கள் 2 கி.மீட்டர் தொலைவில் தொடங்கலாம். அதன்பிறகு மெல்ல மெல்ல நாளடைவில் தூரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

அதேபோல் சைக்கிள் மிதிப்பதை உடற்பயிற்சியாக தொடர நினைப்பவர்கள் அதிகாலையில் சைக்ளிங் பயிற்சியாக செய்யலாம். உடல்நலத்துக்கு பயனளிப்பதோடு, தூய்மையான காற்றும் கிடைக்கும். முறையாக சைக்கிள் மிதித்து பழக விருப்பப்படுவர்கள் உடற்பயிற்சி நிபுணர் ஆலோசனை பெற்று மிதிக்கத் தொடங்கலாம். உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை என கருதுபவர்கள் தினமும் சைக்கிள் மட்டும் மிதித்தால்கூட போதும்.  

சைக்ளிங்குக்கு ஏற்ற நேரம் அதிகாலை என்று சொல்லலாம். காலைநேரத்தில் போக்குவரத்து இடையூறுகள் இருக்காது. வளிமண்டலத்தில் சுத்தமான காற்று கிடைக்கும். அதனால், அதிகாலை நேரத்தில் சைக்ளிங் பயிற்சியை மேற்கொள்வது சிறப்பானது.’’
சைக்ளிங் பயிற்சிக்கென வழிமுறைகள் இருக்கிறதா?

‘‘சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற முடிவெடுத்த பிறகு உடற்பயிற்சிக்கூடத்தில் சைக்ளிங் பயிற்சியை மேற்கொள்வதைவிட வெட்ட வெளியில் சைக்கிளை மிதித்துகொண்டு சென்று வருவதுதான் நல்லது. இயற்கை அழகு சூழ சைக்ளிங் பயிற்சியை மேற்கொள்ளும்போது ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகர்கிறோம்.

இதனால் மனதளவும் அமைதி கிடைக்கும். உளவியல்ரீதியிலும் ஆரோக்கியத்தைப் பெறலாம். ஓடும்போதோ அல்லது வேறு உடற்பயிற்சியின்போதோ உங்களுக்கு மூச்சு வாங்கும் சிரமம் ஏற்படும். ஆனால், சைக்கிள் மிதிக்கும்போது மிதமான வேகத்தில் செல்வதால் சுவாசமும் சீராக இருக்கும். வெட்டவெளியில் சைக்கிள் மிதிக்க சூழல் இல்லாதவர்கள் உடற்பயிற்சி கூடத்தில் இருக்கிற Static cycle மிதிக்கலாம்.’’

சைக்கிள் மிதிப்பதை தவிர்க்க வேண்டியவர்கள் யார்?

‘‘மூட்டுவலி உள்ளவர்கள், இரண்டு எலும்புகள் சேரும் இடத்தில் லிகமெண்ட் பிரச்னை இருப்பவர்கள் அவற்றை முழுவதுமாக குணப்படுத்திய பிறகுதான் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.’’

சிறந்த சைக்கிளைத் தேர்வு செய்வது எப்படி? சைக்கிள் மிதிக்கும் கால அளவு என்ன?

‘‘எந்த வகை சைக்கிளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதற்கென பெரிதாக வரைமுறை ஒன்றும் இல்லை. சைக்கிள் சீட்டினுடைய உயரம் மிதிப்பவருடைய இடுப்பளவு சரியா இருக்க வேண்டும். இந்த ஒருவிஷயத்தை முக்கியமாக கவனித்தால் போதும்.வாரத்துக்கு 150 நிமிடங்கள் சைக்கிள் மிதிக்கலாம். அதாவது தினமும் 30  நிமிடம் சைக்கிள் மிதிப்பது நல்லது.’’சைக்ளிங் விழிப்புணர்வுக்காக செய்ய வேண்டியது என்ன?

‘‘இளைஞர்கள், மாணவர்களுக்கு பெண்களுக்கு சைக்கிள் மிதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் உடற்பயிற்சி வகுப்புகளில் சைக்கிள் மிதிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதை கடைபிடிக்க வேண்டும்.

சைக்கிள் மிதிப்பவர்களுக்கான ஒழுங்கான பாதை, பாதுகாப்பு போன்றவற்றை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். அரசு விழாக்களில் சைக்கிள் மிதிப்பது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற வேண்டும். நாம் அனைவரும் வீட்டுக்கு ஒரு சைக்கிள் வாங்க வேண்டும், பைக் காரை தவிர மிக முக்கியமான  ஒன்று சைக்கிள்!’’.

- க.இளஞ்சேரன்

படங்கள்: ஆர்.கோபால், யுவராஜ்
மாடல்: ஹம்ஸா பாலகுருநாதன், பிரசாந்த்
Courtesy: Luz Fitness

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்