SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவகேடாவில் என்ன இருக்கு?!

2018-05-25@ 16:23:55

நன்றி குங்குமம் டாக்டர்

அறிவோம்


‘சத்துக்கள் நிறைந்தது, சுவை மிகுந்தது’ என்று இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிற பெயராக ஆகிவிட்டது அவகேடா. பெருநகரங்களின் பழக்கடைகளில் அவகேடாவைப் புதிதாகப் பார்க்கிற பலருக்கும் இது காயா அல்லது பழமா என்பதே குழப்பமாக இருக்கும்.
அவகேடாவில் அப்படி என்ன ஸ்பெஷல்? கொஞ்சம் விளக்குங்களேன் என்று உணவியல் நிபுணர் யசோதா பொன்னுசாமியிடம் கேட்டோம்...

‘‘அவகேடா பச்சை நிறத்தில் காட்சி அளித்தாலும் இது பழ வகையைச் சேர்ந்த கனிதான். இந்தப்பழம் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் அதிகம் விளைகிறது. மற்ற வெப்ப மண்டல பிரதேசங்களிலும் பரவலாக விளைகிறது.

20-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. முக்கியமான வணிக பயிராக இல்லாததால் குறைந்த அளவிலேயே தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஹிமாலயாவில் பயிரிடப்படுகிறது.

ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் (Butter fruit), முதலைப் பேரிக்காய் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்தப் பழம் மரத்தில் இருக்கும் பொழுதே முதிர்ச்சி நிலையை அடைந்தாலும் அறுவடைக்குப் பின்னரே பழுக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.’’

அவகேடாவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?

‘‘100 கிராம் அவகேடாவில் கலோரிகள் - 160 Kcal, கார்போஹைட்ரேட் - 8.5 கிராம், நார்ச்சத்து - 6.7 கிராம், ஒன்றை அபூரிதக் கொழுப்பு அமிலம் - 9.8 கிராம், பல அபூரிதக்கொழுப்பு அமிலம் 1.8 கிராம்,  பூரிதக் கொழுப்பு - 2.1 கிராம், புரதம் - 2 கிராம், ஒமேகா 3 - 110 மி.கிராம், ஒமேகா6 - 168 கிராம், வைட்டமின் சி - 10 மி.கிராம், வைட்டமின் ஈ - 2.1 மி.கிராம், ஃபோலேட் - 81 மி.கிராம்,  வைட்டமின் ஏ - 146 IU, வைட்டமின் கே - 21 mcg, பாஸ்பரஸ் - 52 mg, பொட்டாசியம் 485 mg, கால்சியம் -12 mg போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குறிப்பாக இந்தப் பழத்தில் 75 சதவீதம் நல்ல கொழுப்பு உள்ளது. 60 சதவீதம் பொட்டாசியம் இருப்பதால் வாழைப்பழம் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்களை விட கூடுதலாக நல்ல கொழுப்பு உள்ளது. அதிகமான நார்ச்சத்தும் உள்ளது. இதில் 75 சதவீதம் கரையாத நார்ச்சத்தும் (Insoluble fiber) மற்றும் 25 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்தும்(Soluble fiber) உள்ளது.

குறிப்பாக, அவகேடாவில் அதிகமாக ஒற்றை அபூரிதக் கொழுப்பு அமிலம்(Monounsaturated fatty acid) உள்ளதால் நல்ல கொழுப்பு அதிகமாவதற்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் உதவுகிறது.

இதில் குறைந்த அளவே பூரிதக் கொழுப்பு(Saturated fatty acid) உள்ளது. அவகேடாவில் நிறைய வைட்டமின்களும், தனிமங்களும் உள்ளன. நம்முடைய உயிரணுக்கள் மற்றும் திசுக்களுக்கும் அத்தியாவசியத் தேவையான ஃபோலேட் அதிகமாகவே உள்ளது. எலும்பு ஆரோக்கியத்துக்கும், ரத்தம் உறைவதற்கும் தேவையான வைட்டமின் கே உள்ளது.

உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதயத்தின் முறையான செயல்பாட்டுக்கும் உகந்த பொட்டாசியமும் உள்ளது. இதில் இரும்புச்சத்தின் தன்மையை அதிகரிக்கவும் உடல் ஊக்கத்தை அளிக்கிற தாமிரமும் அதிகம் உள்ளது.

அவகேடாவில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி போன்றவையும் உள்ளது. இவை மட்டுமல்லாமல் மெக்னீசியம் மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் பி குறைந்த அளவில் உள்ளது. முக்கியமாக, அவகேடாவில் பைட்டோ நியூட்ரியன்ட் உள்ளதால் எல்லா வகையான உடல் உபாதைகளையும் நீக்க சிறந்த கனி என்று சொல்லலாம்.’’

எதற்கெல்லாம் பயன்படுகிறது?

‘‘ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் சத்துக்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது. இதில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் வயிறு மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு நல்லது. இதில் கண்களைப் பாதுகாக்கும் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இதில் வைட்டமின் கே உள்ளதால் எலும்பு தேய்மானம் மற்றும் வலியை போக்குகிறது.

அவகேடாவில் மிகக் குறைந்த அளவிலேயே சர்க்கரை மற்றும் மாவுச்சத்து உள்ளதால் நீரிழிவு நோய்க்கும் மிகவும் சிறந்தது. மிகக் குறைந்த சர்க்கரை உணவு வகைகளில் அட்டவணையில் அவகேடா பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவு உள்ளவர்களின் உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாமல் காக்கிறது.’’

அவகேடாவை சாப்பிடும் முறை பற்றிச் சொல்லுங்கள்?

‘‘அவகேடா பழம் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை கிடைக்கும். பழம் வாங்கும்போது மிகவும் கடினமாகவும், மிகுந்த மென்மையாகவும் இல்லாமல் மிதமான அளவில் வாங்கி பயன்படுத்தும்போதுதான் முழு ஊட்டச்சத்தும் நமக்கு கிடைக்கும்.

அதேபோல், அவகேடாவில் உள்ள பெரிய விதையை அகற்றிவிட்டு மற்றும் தோலையும் நீக்கிவிட்டு ஒரு மேஜைக்கரண்டியால் அதில் உள்ள சதையை எடுத்து நேரடியாகவோ அல்லது  ஜூஸாகவோ தயார் செய்து சாப்பிடலாம். மிதமான சூட்டில் சுட்டும் சாப்பிடலாம். இப்பழத்தை சுடுவதால அதில் எண்ணெய் வழியும். அதை சமையலுக்கும், ஒப்பனைக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். சரும ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது.’’

- க.இளஞ்சேரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-07-2019

  19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்