SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீரின்றி சிகிச்சையும் அமையாது!

2018-05-15@ 15:18:00

நன்றி குங்குமம் டாக்டர்

Hydrotherapy

‘‘தண்ணீரின் முக்கியத்துவத்தினை ஆழ்ந்து உணர்ந்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். தண்ணீரை பாதுகாக்க வேண்டும், சேமிக்க வேண்டும், நீராதாரங்களைப் பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த சொற்றொடரைப் போலவே, நீரின்றி சிகிச்சையும் அமையாது என்ற கட்டத்துக்கு இன்றைய மருத்துவ உலகம் வந்திருக்கிறது.

நீரினைப் பயன்படுத்தி பலவிதமான நோய்கள் இப்போது குணமாக்கப்படுகிறது. Hydrotherapy எனவும் Balneotherapy எனவும் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சிகிச்சை முறை வெளிநாடுகளில் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது’’ என்கிறார் இயற்கை மருத்துவரான ரோஸி.தண்ணீரை எப்படியெல்லாம் சிகிச்சைக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று அவரிடம் விளக்கமாகக் கேட்டோம்...

‘‘அனைவரும் அறிந்த பல் துலக்குவது முதல் கை, கால் அலம்புவது, குளிப்பது என உடல் சுத்தத்தில் தொடங்கி நீச்சல் அடிப்பது வரை அனைத்துமே சிறுசிறு சிகிச்சைகள்தான். இந்த நீர் சிகிச்சை முறைகள் வெளிப்புற சுத்தத்தைக் கொடுப்பது மட்டுமின்றி உடலின் உள் உறுப்புகளையும் சீராக இயங்க வைக்கிறது.

தினசரி போதுமான நீர் அருந்துவது முதற்கொண்டு மலக்குடல் சுத்தம் செய்வது என நீரின் பயன்கள் மிக அதிகம். இந்த நீர் சிகிச்சையில் முதலிடம் வகிப்பது எனிமா ஆகும். அதனைத் தொடர்ந்து இடுப்பு குளியல், முதுகுத்தண்டு குளியல், நீராவி குளியல், கைகள் மற்றும் பாதக் குளியல், நீச்சல் குளங்களில் உடற்பயிற்சி செய்தல் என பல நீர் சிகிச்சை வகைகள் உள்ளன. இயற்கை மருத்துவத்தைப் பொருத்தவரை நோய்க்கான முதல் காரணி மலச்சிக்கல்.

எனவே, மலச்சிக்கலுக்கு 500 மிலி முதல் 1000 மிலி வரையிலான நீரினை எனிமா கேன் கொண்டு மலக்குடல் வழியாக செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இடுப்பு குளியல் என்பது இடுப்பு குளியல் தொட்டியில் 15 முதல் 20  நிமிடங்கள் வரை வெறும் வயிற்றில் அமர்ந்திருப்பது ஆகும். மலச்சிக்கல், மாதவிடாய்க் கோளாறுகள், மூலம், நீர்க்கட்டிகள், சிறுநீரகக் கோளாறுகள், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பிரச்னைகள், உடல் சூடு தணிக்க என பல நோய்களுக்கு இந்த சிகிச்சை முறை உறுதுணையாக உள்ளது.

முதுகுத்தண்டு குளியல் என்பது முதுகுத்தண்டு குளியல் தொட்டியில் முதுகு பகுதி நீரில் படுமாறு 15 முதல் 20  நிமிடங்கள் வரை வெறும் வயிற்றில் படுத்திருப்பது ஆகும். இதனை தூக்கமின்மை, மன ரீதியான பிரச்னைகள், முதுகுத் தண்டுவட பிரச்னைகள், முதுகு வலி, மன அழுத்தம் என பல நோய்
களுக்கு தீர்வு தருகிறது.

நீராவி குளியல் என்பது 1 முதல் 2 டம்ளர் நீர் அருந்திவிட்டு நீராவி குளியல் பெட்டியில் அமர்ந்து 5 முதல் 10 நிமிடங்கள் உடல் முழுவதும் வியர்க்கும் வரை அமர்ந்திருப்பது ஆகும். இதனை உடல் பருமன் குறைக்கவும், ரத்த அழுத்த நோய்களில் இருந்து விடுபடவும், முடக்கு வாதம், தோல் நோய்கள் போன்ற பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெறவும் பயன்படுத்துகிறார்கள்.

நீர் சிகிச்சைகள் குளியல் முறையாக மட்டுமின்றி, பட்டி என்கிற வகையிலும் அளிக்கப்படுகிறது. பஞ்சு துணியை தண்ணீரில் நனைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்துவிடுவதுதான் பட்டி என்ற சிகிச்சை முறை. இதில் கண் பட்டி,  சிறுநீரக பட்டி, கல்லீரல் பட்டி, கை, கால்பட்டி, வயிற்று பட்டி என உறுப்புகளுக்குத் தகுந்தாற்போல் பல முறைகள் உண்டு.

இவைகள் ஒற்றைத் தலைவலி, கண் நோய்கள், சர்க்கரை நோய்கள், சிறுநீர்பை கற்கள், பித்தப்பைக் கற்கள், அஜீரணக் கோளாறுகள், வெரிக்கோஸ் வெய்ன் போன்ற பிரச்னைகளுக்கு நன்கு பயன் தருகிறது.’’

நீர் சிகிச்சை முறை எப்படி அளிக்கப்படும்?

‘‘நீர் சிகிச்சை முறைகள் அனைத்தும் வெவ்வேறு தட்ப வெப்பநிலையில் அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் டெல்லி, புனே ஆகிய நகரங்களில் நீர் சிகிச்சைக்கென தனி மருத்துவ நிலையங்களே செயல்பட்டு வருகின்றன. நீர் சிகிச்சை ஐரோப்பிய நாடுகளில் அலோபதி மருத்துவ சிகிச்சையுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.  இதனால் நோய் குணமாகும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

தமிழ்நாட்டில் அரசு இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையிலும் நீர் சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறனை வளர்த்து இந்த மருத்துவம் நோயை நீக்குகிறது. உடலின் ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி உடலுறுப்புக்களை சரியாக இயங்கச் செய்து இந்த மருத்துவம் நோய்களைப் போக்குகிறது. குறிப்பாக அன்றாடம் உங்களுடைய கை கால் முகத்தினை அடிக்கடி தூய நீரில் கழுவ வேண்டும்.’’

- க.இளஞ்சேரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்