SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழுகையும் அவசியம்தான்... மருத்துவம் சொல்லும் அடடே காரணங்கள்

2018-05-04@ 15:13:29

நன்றி குங்குமம் டாக்டர்

மாத்தி யோசி


அழுகை என்பது ஒருவரது பலவீனத்தின் அடையாளமாகவே புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. மன உறுதி குறைந்த மனிதர்களின் பழக்கமாகவும் நம்பப்பட்டு வருகிறது. ஆனால், அழுகை என்பதும், கண்ணீர் என்பதும் நிச்சயம் உடலில் நடக்கும் தேவையில்லாத ஒரு செயலல்ல என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

அழுவதால் வரும் நன்மைகள் எதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், 85% பெண்களும், 73% ஆண்களும் அழுத பிறகு நன்றாக உணர்வதாக ஆய்வறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது. இப்படி நிம்மதியாக உணர்வதற்கு அழுகை மட்டுமே ஒரு காரணமல்ல. நமது அழுகைக்கு பிறர் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம்.

அழுகை துக்கத்தின் வடிகாலாக இருக்கிறது. ஒருவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தால் அது அவருடைய உடல்நலத்தைப் பாதிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். உதாரணமாக, நாம் கண்ணீர் விடுவதைப் பார்த்து மற்றவர்கள் நம்மை ஆறுதல்படுத்தி, உதவும்போது நிம்மதியாக உணர்வோம். ஆனால், நம்மை யாரும் கண்டுகொள்ளாதபோது அதை அவமானமாக கருதுவதோடு, நம்மை உதாசீனப்படுத்திவிட்டதுபோல உணர்வோம்.

இப்படி மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் பல்வேறு நன்மைகளை உடையது கண்ணீர் என்கின்றனர் அழுகை குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள்.   கண்ணீருக்கு அப்படி என்ன நன்மைகள் இருக்கிறது?

* கண்களிலுள்ள நஞ்சை நீக்கும் சக்தி பெற்றது கண்ணீர். அது மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற உதவுகிறது. நமது உடலில் Cortisol என்கிற மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன் உள்ளது. இந்த ஹார்மோனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவுவதோடு, மன
அழுத்தத்தில் இருந்து விடுதலை அளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது கண்ணீர்.

* சிறுநீர், மூச்சு வெளியிடுதல், வியர்வை போன்ற அனைத்தும் உடலிலுள்ள தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவதற்கான வழிகளாக உள்ளது. இப்படி உடற்கழிவுகளை வெளியேற்றும் செயலைத் தூண்டும் சுரப்பிகளைச் சமன் செய்யும் வேலையைக் கண்ணீர்
செய்கிறது.   

*  நம் உடலிலுள்ள அதிகப்படியான மாங்கனீஸ் கண்ணீர் மூலம் வெளியேறிவிடும். ரத்தத்தில் உள்ள மாங்கனீஸ் அளவைவிட கண்ணீரில்தான் 30 சதவிகிதம் அதிகம் உள்ளது. ரத்தத்தில் மாங்கனீஸ் அளவு சமன்பட கண்ணீர் உதவுகிறது.  

*  கண்ணில் உள்ள தூசிகள், மெழுகு போன்ற வேண்டாத பொருட்களை வெளியேற்றும் திறனுடையது கண்ணீர். சாலையில் செல்லும்போது நம் கண்ணில் தூசி அல்லது மண் விழுந்துவிட்டால் உடனே கண்ணீர் உற்பத்தியாகி, சில நொடிகளில் அவற்றை கண்களிலிருந்து வெளியேற்றுகிறது.

*  கண்ணீர் நமது கண்ணுக்கான கிருமிநாசினி மருந்துபோல படுகிறது. அது நமது கண்ணில் வளரும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளின் 95% வளர்ச்சியை 5 முதல் 10 நிமிடங்களில் கட்டுப்படுத்தும் திறனுடையதாக உள்ளது.

* எந்திரங்களில் ஏற்படுகிற உராய்வுகளைக் குறைக்க மசகு எண்ணெய் பயன்படுவதைப் போல, நமது கண்ணுக்கும் இமைக்கும் உள்ள உராய்வைக் குறைக்க கண்ணீர் உதவுகிறது. மேலும் இது வறண்ட கண், அதனால் ஏற்படும் கண் எரிச்சல், பார்வை தெளிவின்மை போன்ற பிரச்னைகளைப் போக்க உதவுகிறது.

* அழுகை ஒருவிதத்தில் நமக்கான Anti-depressant-ஆக செயல்படுவதை நாமே உணர்ந்திருப்போம். உதாரணமாக, நாம் ஒரு மனக்கஷ்டத்தை அழுகையின் மூலம் வெளிப்படுத்திவிட்டால் ஒரு மலையையே இறக்கி வைத்தது போலவும் மனபாரம் குறைந்ததாகவும் உணர்வோம். அப்படி அழுவது சூழ்நிலையை மாற்றாவிட்டாலும், நாம் இறுக்கமான சூழலிலிருந்து விடுபட உதவியாக இருக்கும்.

* துன்பத்தை மனதில்போட்டு அடைக்காமல் வெளியே சொல்லி அழுவதால் நம் மனஅழுத்தம், தலைவலி போன்ற பிரச்னைகள் சற்று குறைகிறது. அது நம் மனம் பிரச்னைகளில் புதைந்து போகாமல் தூக்கி நிறுத்துவதற்கு உதவுகிறது.  

*  நாம் அதிகம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக நமது முகபாவனைகள் வழியே பேசுவது சிறப்பானதாக இருக்கும். கண்களில் வெளிப்படுகிற அழுகை நம் மனதின் ஆழத்திலுள்ள கஷ்டத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதோடு, நம்மிடையே உள்ள புரிந்துணர்வு மேம்படுவதற்கு உதவுகிறது.  

*  அழுபவர் எல்லாம் கோழையல்ல. ஒவ்வொரு உணர்வையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவதுதான் மனித இயல்பு. அந்த வகையில் பார்த்தால்
அழுகையும் அவசியமானதே. மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கலாம். மனஅழுத்தம் தரும் விஷயங்களுக்காக கண்ணீர் சிந்தி அதன் தாக்கத்தைக் குறைக்கலாம். அப்படி செய்வது நம் கண்ணின் நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது.

- க.கதிரவன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-01-2019

  12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்