SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிசேரியன் எப்போது அவசியம் ?!

2018-04-26@ 14:59:13

நன்றி குங்குமம் டாக்டர்

சுகப்பிரசவம் இனி ஈஸி

தற்போது இந்தியாவில் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரித்து இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, இப்போது மாறிவிட்ட உணவுமுறை, பாரம்பரியம் தவறிய வாழ்வியல்முறை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை, சோம்பல் மிகுந்த வாழ்க்கைமுறை, இளம் வயதிலேயே வந்து ஒட்டிக்கொள்ளும் உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, தொற்றுநோய்கள், மன அழுத்தம் இப்படி பலதரப்பட்ட வில்லன்கள் கர்ப்பிணியின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைப்பதால் இயற்கை பிரசவத்துக்குத் தடை உண்டாகிறது. சிசேரியன் அவசியப்படுகிறது.

சிசேரியன் என்பது என்ன?

கருப்பையில் உள்ள குழந்தை அம்மாவின் இடுப்பெலும்பு எனும் கோட்டையைக் கடந்து, கருப்பை வாய் எனும் சுரங்கப் பாதையையும் கடந்து, பிறப்புறுப்பு எனும் இயற்கை பாதை வழியாக, வெளி உலகுக்கு வரும் இயல்பான முயற்சியில் எங்காவது சிரமம் ஏற்பட்டு, அதன் பயணம் தடைபடுமானால், அந்த அம்மாவின் வயிற்றைக் கிழித்து, கருப்பையை அடைந்து, அதையும் கிழித்து, உள்ளே இருக்கும் குழந்தையைப் பாதுகாப்பாக வெளியில் எடுக்கும் செயற்கை பிரசவமுறைதான் சிசேரியன். இதன் மூலம் பல நேரங்களில் குழந்தையின் உயிரையும், அம்மாவின் உயிரையும் காப்பாற்ற முடிகிறது.

சிசேரியனில் இரண்டு வகைசிசேரியனில் திட்டமிட்ட வகை, அவசர வகை என இரண்டு வகை உண்டு. இந்தத் தொடரில் ஏற்கனவே பார்க்கப்பட்ட பல காரணங்களால், முன் பிரசவப் பரிசோதனைகளின்போதே, இயற்கை பிரசவத்துக்கு வழியில்லை என முன்கூட்டியே தெரிந்துகொண்டு, திட்டமிட்டு செய்யப்படும் சிசேரியனுக்குத் திட்டமிட்ட சிசேரியன்(Elective Cesarean) என்று பெயர்.

சில நேரங்களில், பிரசவ வலி எடுத்து, பிரசவம் ஆகத் தொடங்கிய பிறகு, எதிர்பாராத வகையில் பாதியில் சிரமம் ஏற்பட்டு, அதனால், அம்மாவுக்கோ, குழந்தைக்கோ சிக்கல்கள் ஏற்பட்டால், அந்த இருவரின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, அவசர கால நடவடிக்கையாக சிசேரியன் செய்யப்படும். இதற்கு அவசர கால சிசேரியன்(Emergency Cesarean) என்று பெயர்.

சிசேரியன் எப்போது அவசியம்?

தாமதம்

இயற்கையான முறையில் பிரசவம் நிகழும்போது, நேரம் அதிகமாக அதிகமாக, பிரசவ வலி அதிகரித்து, கருப்பை வாய் அகலமாக விரிந்து, குழந்தை வெளியில் வரும் அளவுக்குத் திறக்கும். இந்த மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்படாமல் போகும்போது, மருந்துகள் கொடுத்து இயற்கை பிரசவத்துக்கு முயற்சி செய்தபிறகும், பிரசவத்தில் சரியான முன்னேற்றங்கள் இல்லை எனும்போது, சிசேரியன் தேவைப்படும். மூன்றில் ஒரு பங்கு சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.

குழந்தைக்கு மூச்சுத்திணறல்குழந்தையின் கழுத்தைத் தொப்புள் கொடி சுற்றியிருந்தால், கருப்பையின் வாய்ப்பகுதி வழியாக முதலில் தொப்புள்கொடி வெளியில் வந்துவிட்டால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். கருவில் குழந்தையைச் சுற்றியுள்ள திரவம் மிகவும் குறைவாக இருந்தாலோ, மிகவும் அதிகமாக இருந்தாலோ, குழந்தை கருப்பையில் நெடுக்குவாட்டத்தில் படுத்திருந்தாலோ குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். அ்ப்போது இனியும் காத்திருப்பது ஆபத்து என அறியப்பட்டால், சிசேரியன் அவசியப்படலாம். பெரும்பாலான சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே செய்யப்படுகின்றன.

குழந்தையின் அளவும் நிலைமையும் உயரம் குறைவாக இருக்கும் பெண் களுக்கு இடுப்பெலும்பின் துவாரம் சற்றே குறுகலாக இருக்கும். குழந்தை அதன் வழியாகப் புகுந்து வெளியில் வர இயலாமல் போகும் அல்லது குழந்தையின் தலை பெரிதாக இருக்கும். சில நேரங்களில் குழந்தையின் தலை மேலேயும், கை, கால், பிட்டம் கீழேயும் இருக்கும் அல்லது வெளியில் வர முடியாதபடி தலை சற்றே சாய்ந்தபடி இருக்கும். இம்மாதிரியான நேரங்களில் இயற்கை பிரசவத்தில் சிக்கல்கள் தோன்றலாம் என்பதால், சிசேரியன் செய்யப்படும்.

நஞ்சுக்கொடி பிரச்னை

பிரசவ நேரத்தில் குழந்தையின் தலைக்கு முன்னால் நஞ்சுக்கொடி இருந்தால், குழந்தை வெளியில் வருவதைத் தடுத்துவிடலாம். குழந்தை வெளியில் வருவதற்கு முன்பே அது கருப்பையை விட்டுத் திடுதிப்பென்று துண்டிக்கப்படலாம். அப்போது அளவுக்கு மீறிய ரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த நிலைமைகளில் சிசேரியன்தான் கைகொடுக்கும்.

நோய்கள்

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கு சிசேரியன் தேவைப்படும். முன்பே சிசேரியன் செய்யப்பட்டிருந்தால், ஏற்கனவே முந்தைய பிரசவங்களில் சிசேரியன் செய்யப்பட்டிருந்தால், அடுத்த முறையும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பலருக்கும் இரண்டாவது பிரசவம் இயற்கையான முறையில் பிறக்கிறது. என்றாலும், முந்தைய சிசேரியனுக்கு என்ன காரணம் என்பதைப் பொறுத்து இது அமையும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக, முதன்முறை ஏற்பட்ட காரணம் இந்த முறை ஏற்படவில்லை என்றால், இயற்கை பிரசவத்துக்கு வழி கிடைக்கும். உதாரணமாக, முதல் குழந்தை பெரிதாக இருந்து, இந்தமுறை அப்படியில்லை என்றால், சிசேரியன் தேவைப்படாது. ஆனால், இடுப்பெலும்பு குறுகலாக இருக்கும் கர்ப்பிணிகளுக்கு எத்தனை முறை குழந்தைகள் பிறந்தாலும் சிசேரியன்தான் பண்ண வேண்டியது இருக்கும்.

முந்தைய சிசேரியனுக்கும் இப்போதைய பிரசவத்துக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்குக் குறைந்த இடைவெளி இருக்குமானால், இப்போது இயற்கை பிரசவத்துக்கு முயற்சிப்பது சரியான முடிவாக இருக்காது.

அப்போது சிசேரியன் தேவைப்படும்.ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்இரட்டைக் குழந்தைகள் இருந்தாலும் பலருக்கு இயற்கை பிரசவம் நிகழலாம். அதே நேரத்தில், குழந்தைகள் குறித்த காலத்துக்கு முன்பாகவே பிரசவத்துக்குத் தயாராகிவிட்டாலோ, குழந்தையின் தலைப்பகுதி கீழ்ப்புறமாக இல்லாவிட்டாலோ, சிசேரியன்தான் தேவைப்படும்.

பொதுவாக, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், சிசேரியன் செய்ய வேண்டியது இருக்கும்.தாமதமான கருத்தரிப்புதிருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு உண்டாகியிருக்கும் முதல் குழந்தை என்றாலும், அதிகமுறை கர்ப்பம் கலைந்து இப்போதுதான் குழந்தை தங்கியிருக்கிறது என்றாலும், பிரசவத் தேதி முடிந்தும் ஏதாவது ஒரு காரணத்தால் பிரசவம் ஆகாமல் இருந்தாலும் சிசேரியன் மேற்கொள்வதே மேல்!

நோய்த்தொற்று

ஹெச்ஐவி, ஹெர்பிஸ் போன்ற தொற்று நோய்கள் தாய்க்கு இருக்குமானால், சிசேரியன் தேவைப்படலாம். காரணம், அத்தகைய சூழலில் தாயின் பிறப்புறுப்புப் பாதை வழியாக குழந்தை வெளியில் வருமானால், குழந்தைக்கும் அத்தொற்றுகள் ஏற்படலாம்.

சிசேரியனுக்குத் தயாரா?

அநேகமாக சிசேரியன்தான் என்று முடிவு செய்துவிட்டால், சிகிச்சைக்கு 6-8 மணி நேரத்துக்கு முன்பாகவே திட உணவு சாப்பிடக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உடலின் வெப்பநிலை போன்ற கர்ப்பிணிக்குத் தேவையான முன் பரிசோதனைகள் செய்யப்படும்; எனிமா கொடுப்பது, சிறுநீர் வெளியேற கதீட்டர் சொருகுவது, உடலைச் சுத்தப்படுத்துவது, குளுக்கோஸ் சலைன் ஏற்றுவது போன்ற முன் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படும்.

குழந்தையின் இதயத் துடிப்பு கண்காணிக்கப்படும். கர்ப்பிணிக்குப் பொருத்தமான ரத்தம் தயாராக வைத்துக் கொள்ளப்படும். பொதுவாக, சிசேரியனுக்கு மூச்சு வழியாகத் தரப்படும் பொதுவான மயக்கம், முதுகில் ஊசி போட்டு பெறப்படும் முதுகுத் தண்டுவட மயக்கம் (ஸ்பைனல் அல்லது எபிடூரல்) ஆகியவை பயன்படுத்தப்படுவது நடைமுறை.

இவற்றில் பொதுவான மயக்கத்தில் கர்ப்பிணி உறங்கிவிடுவார். வலி தெரியாது. மற்ற மயக்கத்தில் கர்ப்பிணிக்கு நினைவு இருக்கும். குழந்தையை வெளியில் எடுப்பதைக் காண முடியும். என்றாலும் வலி தெரியாது.

சிசேரியனுக்குப் பின்…

சிசேரியன் செய்யப்பட்ட பிறகு 3 - 5 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியது இருக்கும். இரண்டாம் நாளில் சாப்பிடத் தொடங்கலாம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு மாடிப்படி ஏறலாம். ஒரு மாதம் கழிந்த பிறகு பல வேலைகளைச் செய்ய முடியும். அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதை மட்டும் சில மாதங்களுக்குத் தள்ளிப் போட வேண்டும்.

அடுத்த குழந்தைக்கு 2-லிருந்து 4 வருடங்கள் இடைவெளி தேவை. இரண்டாவது குழந்தைக்கான சிசேரியன் என்றால், குழந்தையை எடுத்த கையோடு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால், கருத்தடை அறுவை சிகிச்சைக்காக இன்னொரு முறை வயிற்றைக் கிழிக்க வேண்டியது வரும்.

(பயணம் தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2019

    21-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்