SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதலிரவு குழப்பங்கள்

2018-03-14@ 14:45:15

நன்றி குங்குமம் டாக்டர்

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...


முதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல கேள்விகளுக்கு பதிலின்றித் திணறி, நண்பர்களின் எக்குத்தப்பான கேள்விகளுக்கு பதில் தரத் தோற்று... தன்னழகை மெருகேற்றி... முதலிரவுக்கென்று மூடு ஏற்றும் பெர்ஃப்யூம் வாங்கி தன்னவளுக்கான ஸ்பெஷல் கிஃப்ட் உடன் இதயம் எகிறித் துடிப்பதை உணர்வான் அவன்.

அதுவரை வெட்கத்தாலும், அச்சத்தாலும் போற்றிப் பாதுகாத்த உடலை தனக்கான இணையிடம் தரப்போகிறேனே எனத் தவிப்புறுவாள் அவள். அதுவரை பாசத்தின் ஈரத்தில் வளர்ந்த தன் வேர்களை இனி காதல் நிலத்தில் பதியமிட்டு எப்படி வளரப் போகிறேன் என்று பயமும் கொள்ளுவாள்.

கணவனின் மனம் வலிக்காமல் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்று யாராவது அவளுக்கு அறிவுறுத்திக் கொண்டிருப்பார்கள். அதுவரை தேக்கி வைத்த தன் நாணச்சுவர்களை உடைத்து ஒருவன் காமக் கடலைக் கரைபுரளச் செய்யும்போது அந்த அன்பின் வெப்பத்தை... காமத்தின் பேரலைகளை எப்படித் தாண்டப் போகிறேன் என்ற இன்ப பயங்கள் அவளுக்கு.

இரு உள்ளத்தின் பயங்களும் உடையும் அந்த முதல் முத்தம் காத்திருக்கும் இதயத்தின் டெசிபல் எகிறக் கரம் பிடிக்கிறக் காதல் தருணம் எத்தனை மாயா
ஜாலங்கள் கொண்டது. ‘கனவுகளையும், கற்பனைகளையும் தாண்டி அதிகபட்ச பயங்களும் குழப்பங்களும் முதலிரவை மறக்க முடியாத ரணமாகவும் மாற்றிவிடலாம்’ என்கிறார் உளவியல் மருத்துவர் பாபு.

ஓர் ஆணும் பெண்ணும் முதலில் இணைந்து காமம் கொள்ளும் அந்த அன்பின் வெட்கம் கலந்த தருணம் குறித்து பேசித் தெளிவோம். தாம்பத்ய வாழ்வில் குழப்பங்களும், இயற்கைக்கு முரணான காமம் கொள்தலும், மனம் மறந்து உடலே பிரதானமாகக் கொள்வதும் அந்த உறவை பலவீனம் அடையச் செய்யும்.

இனி மனநல மருத்துவர் பாபு முதல் இரவு தொடர்பாக வரும் குழப்பங்கள் பற்றிப் பேசுகிறார்.‘‘மனிதர்களின் சமூக வளர்ச்சி இனப்பெருக்கத்தின் வழியாக நடக்கிறது. காமம் மனித உயிருக்கு அத்தியாவசியம். பசி, தாகம்போல காமமும் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. இது உடலோடு சம்பந்தப்பட்டதல்ல. மனமும் சேர்ந்தே இயங்கி காமத்தின் சுவையை கூட்டுகிறது.

தாம்பத்ய உறவு சரியான பந்தத்தில், சரியான நபருடன், சரியான சூழலில் நடக்க வேண்டும். ஆணுடலின் தன்மைகளையும், ஆணின் எதிர்பார்ப்புகள், காமத்தருணத்தில் ஆணின் மனநிலை, ஆணின் புணர்ச்சி நிலைகள் குறித்தும் Premarital counselling-ல் பெண்கள் தெரிந்துகொள்வது காமத் தருணத்திலும் அவளை தன்னம்பிக்கையுடன் செயல்பட செய்யும்.

காமம் பற்றி முதலிரவுக்குத் தயாராகும் பெண் தெரிந்துகொள்வது பாவச்செயல் கிடையாது. அது அடிப்படைத் தேவையும் கூட. ஆணுக்கும் இதுவே பொது விதி. பெண்ணுடலின் தன்மைகள், புணர்ச்சி நிலைகள், முதன்முதலாய்த் தனிமையில் சந்திக்கும் பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், காமத்தில் பெண் எப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறாள் என்பதில் தெளிவாக வேண்டும். அப்போதுதான் தன் இணையை எவ்விதம் அணுகுவது என்ற பயங்கள் அகன்றிருக்கும்.

காமம் என்பது மூளையில் உதித்து உடலில் முடியும் ஒரு செயல். ஆணுக்கு தாம்பத்யத்தில் 4 நிலைகள் உள்ளன. மூளையில் காம வேட்கை ஏற்படுதல், ஆணுறுப்பு உடலுறவுக்குத் தயாராதல், உடலுறவு இன்பம் உச்ச நிலை அடைதல், விந்து வெளியேறுதல். இந்த 4 நிலைகளும் ஆணுக்கு வேகமாக நடக்கும். இது தாம்பத்யத்தின் போது ஆணின் உணர்வு நிலைகள் ஆகும்.

காம உணர்வு குறைவாக இருத்தல், உடலுறவின்போது ஆணுறுப்பு எழுச்சி அடையாமல் போதல், உடலுறவின் போது இருவரும் உச்ச இன்பம் காணும் முன்பாக விந்து வெளியேற்றமடைவதும் தாம்பத்யப் பிரச்னைகள். இவற்றுக்கெல்லாம் மருத்துவத்தில் தீர்வுகள் உள்ளன. ஆணிடம் இதுபோன்ற தாம்பத்ய சிக்கல்கள் இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. தன் குறைகளை மருத்துவரிடம் தெரிவித்து சரி செய்யலாம்.

பெண்ணைப் பொறுத்தவரையில் காம உணர்வு ஏற்படுதல், பிறப்புறுப்பு உடலுறவுக்கு தயாராதல், கிளிட்டோரிஸ் எழுச்சி அடைதல், பெண்ணுறுப்பில்
உடலுறவுக்கான திரவம் வெளியாவது மற்றும் உச்ச நிலையை அடைவது என்ற படிநிலைகள் உள்ளன. ஆணைப்போல பெண்ணுக்கு இது வேகமாக நடப்பதில்லை.

பெண் அதிகம் எதிர்பார்ப்பது அன்பு. அன்பால் கணவன் அவளை இன்புறச் செய்து, பெண்ணின் உணர்வுகள் தூண்டப் பட்ட பின்பே அவள் உடலால் உறவு கொள்வதற்குத் தயாராகிறாள். பெண்ணுக்கு முதல் உறவின்போது பயம் இருக்கும், காம உணர்வு குறைவாக இருக்கலாம்,
பெண்ணுறுப்பு உடலுறவுக்கு உடன்படாமல் போகலாம். முதலிரவில் மனதால் நெருங்கி. உடலால் இணைய இரு உடலும் இன்னொன்றை ஏற்றுக் கொள்ள தன்னைத் தயார்படுத்திக் கொள்ள அவகாசம் கேட்கலாம்.

இதுவரை அன்பால் உள்ளங்களைக் கொள்ளையிடுங்கள். இது நீண்ட நெடிய பயணம். முதலிரவொன்றும் பொதுத்தேர்வு அல்ல. மதிப்பெண் குறைந்தாலும், தோற்றே போனாலும் குற்ற உணர்வுக்கு ஆளாகத் தேவை இல்லை. இந்த அன்பின் பயணத்தில் தப்பு செய்து தப்பு செய்து கற்றுக் கொள்ளலாம். ஆர்வத்தோடும், வேட்கையோடும் அணுகுங்கள்.

தாம்பத்யம் என்பது நீண்ட நெடிய பயணம்தாம்பத்யத்தின் துவக்கத்தில் உண்டாகும் சிரமங்களுக்காக வருந்தத் தேவையில்லை. தனது குறைகளை மனசுக்குள் போட்டுக் கொண்டு அது பற்றியே சிந்திப்பது மன அழுத்தத்தையே தரும்.இருவருக்கும் எது பிடிக்குமென்று மனம் விட்டுப் பேசுங்கள். விருப்பங்களை அன்பு சேர்த்துக் கொண்டாடுங்கள். பாலுறவு சார்ந்த வீடியோக்களில் பார்ப்பவை ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கிற தாம்பத்ய பந்தம் கிடையாது. நடிகர்களை வைத்து வணிகரீதியாக எடுக்கப்படுகிற படங்கள் அவை. அவர்கள் செய்வதை எல்லாம் தனது இணையையும் செய்யச் சொல்லி வற்புறுத்துவதும் தாம்பத்யத்தைக் கசக்கவே செய்யும். ஒருவருக்குப் பிடிக்காததைச் செய்யச் சொல்லி வற்புறுத்த வேண்டாம்.

உடலுறவுக்கு முன்னும் பின்னும் உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பது குறித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். திருமணத்துக்கு முன்பாக ஆணுக்கு கைப்பழக்கம், பெண்ணுக்கு சுய இன்பம் காணும் பழக்கம் இருந்திருக்கலாம். இதெல்லாம் தாம்பத்யத்தை பாதிப்பதில்லை. எந்த வித குற்ற உணர்வும் இன்றி தாம்பத்யத்தைத் தொடங்குங்கள். பெண்ணின் பிறப்புறுப்பு முதலில் விட்டுக் கொடுக்காமல் போகலாம், ஆணுறுப்பு தேவையான அளவு விறைப்புத் தன்மை ஏற்படுவதில் சிக்கல் ஏற்படலாம்.

பெண்ணுறுப்பு உடலுறவுக்கு உடன்படாமல் போவதற்கு Vaginismus என்கிறோம். காம உணர்வு ஏற்படாமல் இருக்கலாம், பயம், பாலியல் தொந்தரவுகள், கருப்பையில் நீர்க்கட்டிகள், ஆண் மீதான வெறுப்பு எனப் பல காரணங்கள் இருக்கலாம். மனநல ஆலோசனை மூலமே இது போன்ற பிரச்னைகளைச் சரி செய்ய முடியும். தாம்பத்யம் வாழ்வு முழுமைக்குமான பயணம் என்பதால். பயம், தயக்கம் இன்றி தாம்பத்யத்தில் உண்டாகும் குறைகளை மனமுவந்து இருவரும் சரி செய்து கொள்ளலாம்.

இயற்கைக்கு முரணான பாலுறவுத் தன்மைகள்திருமணத்துக்குப் பின் கைப்பழக்கம் உள்ள ஆண்களில் ஒரு சிலர் பல ஆண்டுகள் வரை தன்னை ஆண்மையற்றவன் என்று கருதிக் கொண்டு பெண்ணைத் தொடாமல் இருப்பதையும் பார்க்கிறோம். மனைவியின் உள்ளாடையை வைத்துக் கொண்டு பாலின்பம் அனுபவிப்பது. மனைவியின் நைட்டியைப் போட்டுக் கொள்வது, ஓரல் செக்ஸ் என ஏற்றுக் கொள்ள முடியாத சில பாலின்ப பழக்கங்களால் அவர்கள் பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் இது போன்ற விஷயங்களில் திருப்தி அடைவதும் உண்டு. இவை இயற்கைக்கு முரணானவை. இதனை ‘சோடோமி’ என்கிறோம்.

பாலுறவின்போது பெண்ணுக்கு அதிக வலியை ஏற்படுத்தி அதன் மூலம் ஆண் திருப்தி அடைவதை ‘சேடிசம்’ என்கிறோம். இது போன்ற பழக்கம்
உள்ளவர்கள் மனநல மருத்துவரை அணுகி இதற்கான காரணங்களை சரி செய்வதன் வழியாக முழுமையான தாம்பத்ய இன்பத்தைத் தன் இணைக்கும் அளித்து மகிழ்வாக வாழ்வைத் தொடர முடியும்.

தாம்பத்யத்தில் பெண்ணுக்கான இடம் அதிகம் தர வேண்டும்பெண்ணின் பிறப்புறுப்பில் உள்ள கன்னித்திரை அவர்கள் பயணத்தில், ஓடும்போதோ வேறு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலோ கிழிந்திட வாய்ப்புள்ளது. முதலிரவில் கன்னித்திரை கிழிந்து ரத்தம் வரவில்லை என்பதற்காக பெண்ணை சந்தேகப்படுவது சரியல்ல. இதுபோன்ற நம்பிக்கைகளைத் தவிர்ப்பது அவசியம். இன்றைய சூழலில் பெண்களும் உடலுறவு தொடர்பான விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர்.

தாம்பத்யத்தில் ஈடுபடும்போது பெண் தன் விருப்பங்களைத் தெரிவிக்க ஆண் சுதந்திரம் அளிக்க வேண்டும். தாம்பத்யத்தில் பெண் தன் விருப்பங்களைக் கேட்பதற்காக அவர்கள் நடத்தையை கேள்விக்குள்ளாக்குவதும் அர்த்தமற்றது. பெண் தன் உணர்வுகளையும், விருப்பங்களையும் மனம் விட்டுப் பேசி, அதை ஆண் நிறைவேற்றித் தரும் பொழுது அவள் அடையும் மகிழ்வின் நீட்சியாகத் தான் அவள் காம உணர்வுகளால் பொங்கிப் பெருகுகிறாள்.

பெண்ணையும், பெண்மையையும் கொண்டாடுவதன் வழியாகத் தான் ஆண் தாம்பத்ய இன்பத்தின் கரைகளைத் தொட முடியும்.
முதலிரவில் கேட்க வேண்டிய கேள்விகள்அறைக்குள் நுழைந்த உடன் தன் இணைக்கு அந்த சூழல் பிடித்திருக்கிறதா. மகிழ்வாக இருக்கிறார்களா என்பதைக் கேட்டுப் புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே திருமணத்துக்காகப் பல நாட்கள் தூங்காமல் அலைந்திருப்பார்கள்.

அன்றைய இரவு படுத்த உடன் தூங்கிடும் அளவுக்கான அயற்சி இருக்கலாம். நீ என்ன நினைக்கிறாய் எனப் பேசுங்கள். முதலிரவில் நன்றாக ஓய்வெடுத்துப் பின் பிடித்தமான சூழலில், பொருத்தமான மனநிலையுடன் தாம்பத்யத்தைத் துவங்கலாம். நெருக்கமான வார்த்தைகளால் தயக்கங்களை உடைக்கலாம்.

உடலுறவு சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடலாமா என்பதைக் கூடக் கேட்டுத் துவங்கலாம். முதலிரவில் உடலுறவின் போது பெண்ணுக்கு வலி ஏற்படலாம். வலிக்கிறதா என்று கேட்டு பெண் போதும் என்று சொல்லும் போது நிறுத்திக் கொள்ளலாம். தேடித் தேடி உடலெங்கும் முத்தமிட்டுக் கொண்டாடலாம்.

பரஸ்பரம் தாம்பத்யத்தில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் மனம் அறிந்து, அன்பு மிகுந்து, காதல் கடந்து... காம அணை உடைக்கும் வரை காத்திருந்து வெள்ளத்தில் மூழ்குங்கள். ஆஹா! அத்தனை இரவுகளும் முதலிரவாக்கிடும் மாயம் காதல் மிகுந்த காமத்தால் சாத்தியம். அது உங்களுக்குக் கைவரட்டும். வாழ்த்துக்கள்.

( Keep in touch…)
எழுத்து வடிவம்: கே.கீதா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-11-2018

  18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்