SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கற்றாழை

2017-09-21@ 14:59:00

நன்றி குங்குமம் டாக்டர்

இறைவன் மனிதனுக்காக கொடுத்த கொடைகள் ஏராளம்... ஏராளம்! அப்படி மனிதனுக்காக வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற கொடைகளில் ஒன்றுதான் சோற்றுக்கற்றாழை. இன்றைய உலகில் தங்கத்துக்கு இணையான மதிப்பைப் பெற்று விளங்குகிறது சோற்றுக்கற்றாழை. ஆரோக்கியத்துக்காக பருகப்படும் சாதாரண ஜூஸ் முதல் அழகுக்காக பயன்படுத்தப்படும் நவநாகரீக க்ரீம்கள் வரையிலும் கற்றாழை என்ற பெயர் தினசரி வாழ்வில் பலராலும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி கற்றாழைக்கு என்ன பெருமைகள் இருக்கிறது?

கற்றாழை பொதுவாக சோற்றுக் கற்றாழை, சிறுகற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, ரயில் கற்றாழை (அ) இராகாசி மடல் என்னும் பல பிரிவுகளிலும் அழைக்கப்படுகிறது. அவற்றுள் சோற்றுக்கற்றாழையே நமக்குப் பெரிதும் பயன்படுவதாக உள்ளது. சோற்றுக் கற்றாழைக்குத் தமிழும் சரி வடமொழியும் சரி ‘குமரி’  என்றோ ‘குமாரி’ என்றோ பெயர் தந்து சிறப்பிக்கிறது. பெயரிலேயே அதன் குணத்தை அமைப்பது என்பது தமிழர் தம் சிறப்பாகும் எனப் பார்த்திருக்கிறோம். அவ்வகையில் ‘சோற்றுக்கற்றாழை’ என்னும்போது சோறு + கற்றாழை எனப் பிரிவுபடுகிறது.

வயிற்றை நிரப்பி உயிரைப் பேணும் உணவான சோற்றுக்கு இணையானது இந்த கற்றாழை என்பதால் இப்படி சிறப்பிக்கப்பட்டது. வெயிலிலும் மழையிலும் தன்னை அழியாது பாதுகாத்துக் கொள்வதோடு ஆரோக்கியத்துக்குத் தேவையான அத்துணை சத்துக்களையும் தன்னுள் அடக்கி வைத்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தது சோற்றுக் கற்றாழை. இதன் இளமை கருதியும் இதை உபயோகிப்போர் பெறும்நலன் கருதியும் இதற்கு ‘குமரி’ எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சோற்றுக்குப் பஞ்சம் ஏற்பட்டபோது பட்டினி போக்கி உயிர் பிழைத்திருக்க இதன் கூழ்ப்பகுதியை உண்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. உள்ளுக்கு மட்டுமின்றி இதன் மருத்துவ குணம் கருதி மேலுக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. Aloe Barbadensis என்பது இதன் தாவரப்பெயர் ஆகும். Aloe vera என்பது இதன் ஆங்கிலப் பெயர் கன்யா சாரா, குமாரி, கன்யா என்பன வடமொழிப் பெயர்களாகும். தமிழில் குமரி என்பர். இதன் காய்ந்த சாற்றை  மூசாம்பாம் (அல்) கரியபோளம் என்பர்.

இன்றைய நாகரீக உலகில் சோப்பு, ஷாம்பு, தலைக்குத் தேய்க்கும் எண்ணெய், வலி நிவாரணி சரும ஆரோக்கியம் தரும் மேற்பூச்சு எனப்பல வகைகளில் கற்றாழை பயன்படுகிறது. கற்றாழையின் மருத்துவ குணங்கள் சோற்றுக்கற்றாழையில் அத்தியாவசியமான வைட்டமின்களான A, C, E, ஃபோலிக் அமிலம், கோலின், B1, B2, B3, (நியாசின்), B6 மற்றும் B12 ஆகியன அடங்கியுள்ளன. மேலும் அமினோ அமிலங்களும், ஃபேட்டி அமிலங்களும் சோற்றுக்கற்றாழையில் நிறைந்துள்ளன.

உடல்நலனுக்குத் தேவையானது என கண்டறியப்பட்ட 22 அமினோ அமிலங்களில் 8 முக்கியமானவை உட்பட 20 வகைகளும் சோற்றுக்கற்றாழையில் அடங்கியுள்ளன. அத்தோடு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், குரோமியம், செலினியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம், செம்பு, மாங்கனீசு போன்ற தாதுப் பொருட்களும் செரிந்துள்ளன. சோற்றுக் கற்றாழை புறநிலை மாறுதல்களுக்கு ஏற்ப உடலைப் பக்குவப்படுத்தி நோய் எதிர்ப்புசக்தியைத் தருகிறது. உடல் உள்ளுறுப்புகளைத் தூண்டி நோயை எதிர்க்கச் செய்கிறது. அஜீரணமே பல நோய்களுக்கு வித்தாகிறது என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒழுங்காக வேலை செய்யும் ஜீரண உறுப்புகளே ஆரோக்கிய வாழ்வுக்கான அடித்தளமாகும். சோற்றுக்கற்றாழையை உள்ளுக்குச் சாப்பிடுவதால் குடல் பகுதி சுத்தமாவதோடு மென்மையும் குளிர்ச்சியும் பெறுகிறது. இது ஒரு ஆரோக்கிய சமனியாக செயல்பட்டு வயிற்றுப் போக்காகிலும் சரி மலச்சிக்கலாகிலும் சரி அதை ஒழுங்குபடுத்துகிறது. நவநாகரீக உலகில் வயிற்று எரிவு (Irritable bowel syndrome) என்னும் நோய் மற்றும் அமிலச்சத்து எதிர்ப்பாடு (Acid reflux) என்னும் நோய் ஆகியவற்றால் பெரும்பாலோர் பெரும்பாடு படுகின்றனர். ஆங்கில மருத்துவம் அவர்களை அலைக்கழிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

ஆனால், சோற்றுக்கற்றாழை மேற்கூறிய நோய்களுக்கு மாபெரும் நிவாரணம் தருவதாக அமைகிறது. வயிற்றிலுள்ள நச்சுக்களையும் தேவையற்ற கிருமிகளையும் அது போக்குவதாக உள்ளது. வயிற்றுப் புழுக்களை வெளித்தள்ள உதவுகிறது. குடலில் படிந்துள்ள நச்சுக்களைத் துடைத்து மலத்தோடு வெளித்தள்ள உதவுகிறது. சோற்றுக்கற்றாழையில் 80% ஆல்கலைன் சத்துக்கள் இருப்பதால் உடலில் அமிலச்சத்து தேங்குவதை குறைக்க உதவுகிறது. சோற்றுக்கற்றாழை இதயத்துக்கு பாதுகாப்பானது. இதிலுள்ள Beta-sitosterol கொழுப்புச்சத்தை குறைக்கவல்லது. ரத்த அழுத்தத்தை சமப்படுத்தி, ரத்த ஓட்டத்தை பலப்படுத்தி, ரத்தத்துக்கு போதிய பிராண வாயுவை ஏற்படுத்தி ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தைக் கரைத்து, ரத்தத்தின் பிசுபிசுப்புத் தன்மையை குறைத்து இதய நோய்கள் வரா வண்ணம் பயன் தருகிறது.

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. சோற்றுக்கற்றாழை காய்ச்சலைத் தணிக்கும் அல்லது போக்கும் வல்லமை வாய்ந்தது. சோற்றுக்கற்றாழை மேற்பூச்சாக உபயோகப்படும்போது கிருமி நாசினியாக, நோய்த் தணிப்பானாக, நுண்கிருமிக் கொல்லியாக புழுக்கொல்லியாக, பூஞ்சைக் காளான் போக்கியாக தொற்றுநோய்ப் போக்கியாக என பலவகைகளில் பயன்படுகிறது. வீக்கத்தைக் குறைக்கக் கூடியதாக இது பயன்தருகிறது. வலி நிவாரணியாகவும் இது உபயோகப்படுகிறது.

சோற்றுக்கற்றாழையில் சில மருத்துவம்

* சோற்றுக்கற்றாழையை நறுக்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சூரியக்கதிர் பட்டதால், வெயிலில் அலைந்ததால் வந்த முகத்தில் உள்ள தோலின் கருமை நிறம் கண்ட பகுதியின் மேல் லேசாக தேய்த்து வர கருமை நிறம் மாறும். சூரியக் கதிர்களால் உண்டான கொப்புளங்களும் உடன் ஆறும்.

* சோற்றுக்கற்றாழைச் சாற்றை அடிபட்ட காயங்களின் மேல் பூசுவதால் வீக்கம் தணிந்து விரைவில் காயம் குணமாகும்.

* சோற்றுக்கற்றாழைச் சாற்றைப் பொதுவாக ஆணாயினும் அல்லது பெண்ணாயினும் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பரவலாகப் படும்படி தேய்த்து வைத்திருந்து 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிட சருமம் ஆரோக்கியம் பெறும். சோற்றுக்கற்றாழை சருமத்துக்கு சுருங்கி விரியும் தன்மையைத் தருவதோடு, மென்மையையும் பளபளப்பையும் தருகிறது.

* தோலின் செல்களுக்கு போதிய பிராணவாயுவைத் தந்து தோலின் ரத்த நாளங்களை நன்கு இயங்கச் செய்கிறது. இதனால் வயதான தோற்றம் தடுக்கப்பட்டு குமரனாகவோ குமரியாகவோ ஒருவரைத் தோன்றச்செய்கிறது.

* இன்றைய தலைமுறையினரிடம் இன்று மாபெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பது ஆண், பெண் இருபாலருக்கும் முடி உதிர்தல் என்பதாகும். சிலருக்கு இதனால் திருமண வாழ்க்கையேகூட அமையாமல் தள்ளிப்போகிறது. உருவ அழகை அதிகப்படுத்துவதில் கூந்தலுக்குப் பெரும் பங்குண்டு.

* அதிக நேரம் கண் விழித்தல், இரவுப்பணி செய்தல், நீண்ட நேரம் கணினி முன் அல்லது தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்திருத்தல், வெயிலில் அதிக பிரயாணம் செய்தல் போன்ற காரணங்களால் உடல் உஷ்ணம் அதிகரித்து தலையில் வியர்வை உண்டாகிறது. வியர்வையோடு காற்றில் பறந்து வரும் தூசிகளும் தலையில் படிந்து உடலுக்கு ஊரு செய்யும் கிருமிகளின் விளைநிலைமாக தலை மாறி விடுகிறது.

* இதனால் பேன், பொடுகு போன்ற உயிரினங்கள் உருவாகின்றன. இவை தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதித்து முடி உதிரச் செய்கின்றன. மேலும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் மறைந்து போனதும் இதற்கு ஆதரவாகி விட்டது.

தலைமுடிக்கான தைலம் செய்யும் முறை

நன்கு முற்றிய சோற்றுக்கற்றாழை மடல்கள் சிலவற்றைத் துண்டித்து எடுத்து பக்கங்களில் உள்ள முட்களை சீவி நீக்கிவிட்டு, குறுக்கே அரிந்து உள்ளே இருக்கும்(ஜெல்) கூழ் போன்ற பகுதியை சுரண்டி எடுத்து, அதில் சிறிது படிகாரத்தூள் (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக் கூடியது) தூவி இரவு முழுவதும் விட்டு வைக்க சோற்றுக்கற்றாழையில் இருந்து நீர் தனித்து பிரிந்துவிடும். கற்றாழை நீரைப் பிரித்து எடுத்து அதற்கு சம அளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயும் கலந்து கொள்ளுங்கள்.

இத்துடன் ஓரிரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்து விழுதாக அரைத்து முன்கூட்டிய கலவையில் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயில் காய்ச்சுங்கள். பாத்திரத்தில் இட்ட எண்ணெயின் அளவு மட்டும் மிச்சம் இருக்கிற அளவு காய்ச்ச வேண்டும். மேலும் எண்ணெயிலிட்ட கறிவேப்பிலைத் துகள்கள் கையில் எடுத்து நசுக்கிப் பார்க்கும்போது குழகுழப்புத்தன்மை இல்லாமல் மணல் பாங்காக சொர சொரப்பு தன்மை பெற்றிருக்க வேண்டும். இதுதான் எண்ணெய் சரியாகக் காய்ச்சியதற்கான அடையாளம் ஆகும். பின்னர் எண்ணெயை இறக்கி ஆற வைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவிவர முடி கொட்டுவது குறையும்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாகிலும் குமரிச்சாற்றால் செய்த எண்ணெயை தலையில் இட்டு நன்றாக மண்டை ஓட்டின் மேல் பகுதியில் படும்படி இட்டு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையிலுள்ள பொடுகு குணமாகும். தலைமுடிக்கு பலம் கிடைக்கும். இதனால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் பார்வையும் தெளிவு பெறும். இளநரை மாறும். தலைமுடி பளபளப்பும், மென்மையும் பெறும். இந்த எண்ணெயை வாசகர்கள் வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம். சந்தையில் பல ஆயிரம் ரூபாய் விலையில் விற்கும் எண்ணெய்களைவிட இது எந்த வகையிலும் குறைந்ததாக இருக்காது. குழந்தைகள் முதல் ஆண், பெண் அனைவரும் இதைப் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.

* கண்களில் ஏதேனும் அடிபட்டதாலோ, கிருமிகளாலோ கண்கள் சிவந்து வீக்கம் கண்டிருந்தால் கற்றாழையை மேல் தோல் சீவி எடுத்து கழுவியபின் ஒரு வில்லை இடது கண் மீதும் இன்னொரு வில்லை வலதுகண் மீதும் வைத்து ஒரு துணியால் கட்டிக்கொண்டு இரவு படுத்துவிட காலையில் கண் சிவப்பு மாறி வெண்மை பெற்றிருக்கும். வீக்கமும் தணிந்து இருக்கும். இரண்டொரு நாட்கள் இப்படி தொடர்ந்து செய்வதால் கண் சம்பந்தமான பிரச்னைகள் அகலும்.

* சாதாரணமாக காலில் அல்லது உடலில் ஏதேனும் கூர்மையான ஆயுதம் குத்திக்கொண்டால் உடனே ஊசி போட்டுக்கொள் என்று அறிவுறுத்துவார்கள். ஆனால், நம் தமிழகத்தில் திருவிழாக் காலங்களில் அலகு குத்திக் கொள்ளுதல் உடலில் 108 எலுமிச்சைப் பழங்களை ஊசி கொண்டு குத்திக்கொள்ளுதல் போன்ற நேர்த்திக்கடன் செய்யும்போது சோற்றுக்கற்றாழைச் சாற்றையோ, எலுமிச்சம்பழச் சாற்றையோ அவர்கள் உடல் முழுவதும் பூசிக்கொண்டுதான் எலுமிச்சம்பழங்களை உடலில் குத்திக் கொள்வார்கள். வேறு எந்த மாற்று மருத்துவமும் செய்து
கொள்ளுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

* உடலில் தீக்காயமோ, கீழே விழுந்ததால் ஏற்பட்ட சிராய்ப்புக் காயமோ வீக்கமோ கண்டபோது உடன் சோற்றுக்கற்றாழைச் சாற்றை மேல் பூச்சாக பூசி வைக்க காயங்கள் சீழ்பிடிக்காமல் விரையில் ஆறிவிடும். சோற்றுக்கற்றாழையின் பெருமையை யும் மருத்துவ குணங்களையும் சொல்வதற்கு இன்னும் ஓர் அத்தியாயம் தேவை என்பதால் வாசகர்கள் அடுத்த இதழ் வரை காத்திருக்கவும்.

Tags:

Aloe vera
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்