SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுநீரக தானம்!

2017-05-17@ 12:46:55

டாக்டர் கு.கணேசன்

சிறுநீரகம் நிரந்தரமாக செயல் இழந்தவர்களுக்கு டயாலிசிஸ் ஒரு வரப்பிரசாதம் என்று முன்பு பார்த்தோம். வயிற்றுக்குள்  சொருகப்பட்ட கெதீட்டரில் நோய்த்தொற்று, பெரிட்டோனியத்தில் அழற்சி போன்ற பல காரணங்களால், இவர்களில் நூறில் பத்து  பேருக்கு நாளாக நாளாக டயாலிசிஸ் சிகிச்சையும் பலன் தராது. அப்போது அவர்களுக்கு ‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை’  மட்டுமே கைகொடுக்கும்.ஆரோக்கியமான சிறுநீரகம் நிமிடத்துக்கு 100 மில்லி லிட்டர் ஆரம்பநிலை சிறுநீரைப் பிரித்தெடுக்கிறது. இந்த வேகம் நிமிடத்துக்கு 5 மில்லி லிட்டர் என்ற அளவுக்குக் குறைந்துவிட்டால், சிறுநீரக செயலிழப்பு கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். இதை ‘இ.எஸ்.ஆர்.டி’ (End stage renal disease) என்று கூறுகிறோம். நீந்தும் மீனுக்குத் தண்ணீர் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை இவர்களுக்கு அவசியம்.

ஒருவருக்கு சிறுநீரகம் முழுவதும் பழுதாகிவிட்டால், அதற்குப் பதிலாக ஆரோக்கியமாக உள்ள வேறொருவரின் சிறுநீரகத்தைப்  பெற்று, வயிற்றில் பொருத்துவதை ‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை’ (Kidney transplantation) என்கிறோம். சமயங்களில்  மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் சிறுநீரகத்தையும் பொருத்துவது உண்டு. இப்படி அடுத்தவரின் சிறுநீரகத்தைத் தானமாகப் பெறுவதை  ‘சிறுநீரக தானம்’ என்கிறோம்.ஆனால், ரத்ததானம், கண் தானம் செய்வது போல் ஒருவர் சிறுநீரக தானத்தை நினைத்தவுடன் செய்துவிட முடியாது. ஏனென்றால், இதற்கான சட்ட விதிகள் ஏராளம். ‘கிட்னி திருட்டு’ என்ற தலைப்பில் பத்திரிகைகளில் வரும் பரபரப்பான செய்திகளைப் படித்துவிட்டு ‘மருத்துவர் நினைத்தால் அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்யும்போதுகூட ஒருவரின் சிறுநீரகத்தை எடுத்துவிடலாம்’ என்றுதான் மக்களின் பொது புத்தியில்பதிந்திருக்கிறது.
 
செடியிலுள்ள பூவைப் பறிக்கிற மாதிரி நோயாளியின் சிறுநீரகத்தை அவ்வளவு எளிதாகப் ‘பறித்து’விட முடியாது. அது ஒரு பெரிய  சர்ஜரி. குறைந்தது மூன்று மணி நேரமாகும். மேலும், தானமாகப் பெற்ற ரத்தத்தை வேண்டுமானால் ஃபிரிட்ஜில் வைத்து 21  நாட்களுக்குப் பாதுகாக்கலாம். ஆனால், சிறுநீரகத்தை எடுத்து இரண்டு நாட்களுக்கு மேல் பாதுகாக்க முடியாது. எனவே, ‘கிட்னி  திருட்டு’ என்பது தேவையற்ற பயம்.ஒருமுறை என்னைப் பார்க்க வந்த முதியவர் தயங்கித் தயங்கிப் பேசினார். ‘டாக்டர், எனக்கு கல்யாண வயதில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களின் கல்யாணச் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது. என்னிடம் ஒரு வசதியும் இல்லை. நான் என் சிறுநீரகத்தைத் தானமாகத் தரத் தயாராக இருக்கிறேன். யாருக்காவது சிறுநீரகம் தேவைப்பட்டால் சொல்லுங்கள்’ என்று கெஞ்சினார்.

சிறுநீரக தானம் செய்வதற்குரிய விதிமுறைகளை அவருக்குப் புரியவைத்து அனுப்புவதற்குள் எனக்குப் போதும்  போதுமென்றாகிவிட்டது. இப்படி வறுமை காரணமாக சிறுநீரகத்தைத் தானமாகத் தருவதற்கு தயாராக இருப்பவர்களை பணத்தாசை  காண்பித்து, இடைத்தரகர்கள் அழைத்து வந்து, நோயாளிக்கு நெருக்கமானவர்கள் என்று பொய் சொல்லி, சிறுநீரக மாற்று  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்போதுதான் டாக்டர்களுக்கு ‘திருட்டுப் பட்டம்’ கிடைக்கிறது.சரி, யார் யாரெல்லாம் சிறுநீரக தானம் செய்யலாம்?இதற்கு வயது வித்தியாசமில்லை. இளைய வயதினர் வயதானவர்களுக்குத் தரலாம். வயதானவர் குழந்தைக்குத் தரலாம். நோயாளிக்குச் சிறுநீரகம் சரியாகப் பொருந்த வேண்டும் என்பதும், அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதும்தான்  முக்கியமான விதிகள். அத்தோடு தானம் தருபவரின் உடலும் முழு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

நோயாளிக்கு மிகச் சரியாகப் பொருந்தும்படியான சிறுநீரகத்தை ரத்தம் தொடர்புடைய உறவினர்களால் மட்டுமே தரமுடியும். தாய்,  தந்தை, சகோதரர், சகோதரி, பேரன், பேத்தி இவர்கள்தான் சிறுநீரக தானம் கொடுக்க முன்வர வேண்டும். மிக அரிதாக வேறு  நபர்களின் சிறுநீரகம் பொருந்துவது உண்டு. ஆனால், அவர்களிடமிருந்து சிறுநீரகம் பெறுவதற்குப் பல விசாரணைக் கூண்டுகளில்  ஏறி இறங்க வேண்டும். இதற்கு பயந்துகொண்டே தன்னார்வ உறவினர்கள்கூட சிறுநீரக தானம் செய்வதற்குப் பின்வாங்குவதுண்டு.
சரி, உறவினர் முன்வந்தால் போதும், உடனே சிறுநீரகத்தை எடுத்துப் பொருத்திவிட முடியுமா? முடியாது. கல்யாணத்துக்கு  முன்னால் பொருத்தம் பார்ப்பதுபோல் ஒருவருக்கு சிறுநீரகம் மாற்ற வேண்டுமென்றாலும் பல பொருத்தங்கள் பார்க்க வேண்டும்.  முதலில் ரத்தப் பொருத்தம் பார்க்கப்படும். வாட்ஸ்-அப்பில் வரும் மாப்பிள்ளையின் புகைப்படத்தைப் பார்த்து பெண்ணுக்குப்  பிடிக்கிறதா என்று கேட்கிற மாதிரிதான் இதுவும்.

சிறுநீரகம் கொடுப்பவர், பெறுபவர் இருவரின் ரத்த வகையும் பொருந்த வேண்டும். அடுத்த கட்டத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும்  எப்படிப்பட்டவர்கள் என்று அக்கம்பக்கங்களில் விசாரிப்போமல்லவா? அதுபோல, தானம் கொடுப்பவரை நேரில் வரவழைத்து  மருத்துவர் பரிசோதிப்பார். சிறுநீரக தானம் செய்வதற்கான எல்லா கண்டிஷன்களும் அவருக்கு ஒத்துப்போகிறதா என்பது அந்தப்  பரிசோதனையில் தெரிந்துவிடும்.இதைத் தொடர்ந்து தம்பதிகளுக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதுபோல், இருவரின் திசுக்களும் பொருந்துகின்றனவா என்பது பார்க்கப்படும். முக்கியமாக ஹெச்.எல்.ஏ-டி.ஆர். (HLA-DR) ஆன்டிஜன் பொருத்தம் வேண்டும். இந்தப் பொருத்தம் சரியாக இருந்தால், அடுத்ததாக மாப்பிள்ளையும் பெண்ணும் நேரில் சந்தித்துப் பேசுகிற மாதிரி, இருவரின் ரத்த நிணஅணுக்கள் (Lymphocytes) ஒத்துப்போகிறதா எனப் பார்க்கப்படும். இதுவும் பொருந்திவிட்டால், கல்யாணத்துக்கு இருவீட்டாரும் சம்மதிக்கிற மாதிரி சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஓகே சொல்லிவிடுவார்கள். இவர்கள் இதற்கென உள்ள ஆய்வுக் கமிட்டியிடம் சம்மதம் பெற்று சர்ஜரிக்குத்  தயாராக வேண்டும்.

இந்த சர்ஜரி எவ்வாறு செய்யப்படுகிறது?
சிறுநீரகம் கொடுப்பவர், பெறுபவர் இருவரையும் அடுத்தடுத்த அறைகளில் படுக்க வைக்கிறார்கள். இருபக்கமும் அறுவை சிகிச்சை  நிபுணர் குழு இருக்கும். முதலில் கொடுப்பவரின் சிறுநீரகத்தை அகற்றுகிறார்கள். வெதுவெதுப்பாக இருக்கிற சிறுநீரகத்தின்  வெப்பத்தைக் குறைத்து, குளிரூட்டி, பக்குவம் செய்து, பெறுபவரின் உடலில் பொருத்துகிறார்கள்.இவருடைய உடலில் உள்ள சுத்த ரத்தக்குழாய், அசுத்த ரத்தக்குழாய் இரண்டையும் புதிய சிறுநீரகத்துடன் இணைத்ததும், சிறுநீர் துள்ளிக் கிளம்பும். இதைப் பார்த்ததும் திருப்தியடைந்து, சிறுநீரகத்தின் வடிகுழாயை சிறுநீர்ப் பையுடன் இணைக்கிறார்கள். இதன் மூலம் இயல்பான சிறுநீரகம் எப்படி வேலை செய்கிறதோ அவ்வாறே புதிய சிறுநீரகமும் வேலை செய்யத் தொடங்குகிறது.

உயிருடன் இருக்கிற உறவினரின் சிறுநீரகம் என்றால், இப்படி உடனடியாக வேலை செய்யும். மூளைச்சாவு ஏற்பட்டவரின் சிறுநீரகம்  என்றால், அது வேலை செய்ய சில நாட்கள் ஆகும். அதுவரை அவர்கள் டயாலிசிஸ் சிகிச்சையில்தான் தொடர்ந்து இருக்க  வேண்டும். சிறுநீரக மாற்று சிகிச்சை முடிந்ததும் முதல் 48 மணி நேரம் ஐசியூவில் இருக்க வேண்டும். அதன் பிறகு தனி வார்டில் 5  நாட்களுக்குத் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும், புதிய சிறுநீரகம் உடலுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் அதைச் சமாளிக்கவும் இந்த ஏற்பாடு. ‘என்ன டாக்டர், பழுதான சிறுநீரகத்தை வெளியில் எடுக்கவே இல்லையே?’ என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. பழுதான சிறுநீரகங்கள் அந்தந்த இடங்களில் அப்படியேதான் இருக்கும். சில அரிதான நேரங்களில் மட்டுமே அவற்றை அகற்ற  வேண்டியது வரும்.

முக்கியமாக, சிறுநீரகத்தில் புற்றுநோய், பாலிசிஸ்டிக் கிட்னி, செப்சிஸ் ஆகிய நோய்கள் இருக்குமானால் அந்தச் சிறுநீரகத்தை  அகற்றுவார்கள். புதிய சிறுநீரகத்தை வயிற்றின் வலது பக்கத்தில் தனியாகவே பொருத்துகிறார்கள். இதுவும் பழுதாகிவிட்டால்  அல்லது ஒவ்வாமை காரணமாக வேலை செய்யாவிட்டால், நான்காவதாகவும் ஒரு சிறுநீரகம் பொருத்தப்படுவதுண்டு.அதை வயிற்றின் இடது பக்கத்தில் பொருத்துவார்கள். புதிய சிறுநீரகம் சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால்,  ‘இமுனோசப்ரசென்ட்’ (Immunosuppressant) மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் இவர்கள் சாப்பிட வேண்டும். பலரும்  ஆரம்பத்தில் ஒழுங்காக மாத்திரை சாப்பிடுவார்கள். போகப்போக இதில் சுணக்கம் காட்டுவார்கள். காரணம், இவற்றின் விலை  அதிகம்.சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றி அடைய வேண்டுமானால் இவர்கள் இந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டியது கட்டாயம். ‘புகை பிடிக்கக்கூடாது’, ‘வலி மாத்திரைகளைச் சுயமாகச் சாப்பிடக்கூடாது...’ டாக்டர்கள் சொல்லும் இம்மாதிரியான எச்சரிக்கை  விதிகளைச் சரியாகக் கடைப்பிடித்து, நல்ல உணவுக் கட்டுப்பாட்டுடன் தேவையான மருந்துகளையும் சாப்பிட்டு வந்தால்,  சிறுநீரகத்தைத் தானமாகப் பெற்றவர் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் உயிர் வாழ முடியும்; குடும்ப வாழ்க்கையில் ஈடுபட  முடியும்; குழந்தையையும் பெற்றுக்கொள்ள முடியும். புதிய சிறுநீரகத்துடன் இனிதே வாழமுடியும்!

(முற்றும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்