வெறி நாய்க்கடி நோய் மருந்துகள்
2015-07-24@ 17:06:15

டாக்டர் மு.அருணாச்சலம்
நாய்கள் நன்றிக்குப் பெயர் போனவை. வெறி நாய்க்கடி நோயும் அதே அளவு பிரபலமானது. நாய்க்கடி விஷமாகும் ரேபிஸ் வைரஸ் கிருமிகளையும் அதற்கான மருந்துகளையும் பற்றிப் பார்க்கலாம்.
ரேபிஸ் வைரஸ் என்பது மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். Lyssavirus எனப்படும் ரேபிஸ் வைரஸ், பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சிலில் இருக்கும். அவை வாய், மூக்கு, கண்களிலோ, காயங்களிலோ, காயங்கள் மூலமாக ரத்தத்தில் படும்போது மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும். காயங்களிலிருந்து நரம்புகள் மூலமாக ஒரு நாளைக்கு 0.3 மில்லிமீட்டர் நகர்ந்து மூளையை நோக்கிப் பயணம் செய்யும். அதனால், முகத்தில், தலையில் கடித்தால் வேகமாக மூளையை வந்தடையும். கால், கைகளில் கடித்தால் மூளையை வந்தடைய மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம்.
முதலில் தசை செல்களில் பல்கிப் பெருகும் கிருமிகள், பிறகு நரம்பு செல்களை வேகமாகத் தொற்றிக் கொள்ளும். நரம்பு செல்களில் மிக வேகமாக நகரும். 2 முதல் 12 வாரங்களுக்குள் நோயினால் தாக்கப்பட்ட விலங்குகள் கடித்தவுடன் நோய் வெளிப்படலாம். காயத்தின் ஆழம், கடித்த இடம், நோய்க் கிருமியின் அளவு போன்ற பல காரணங்களினால் சிலருக்கு 6 வருடங்கள் தாமதமாக கூட நோய் வரலாம்.நோயின் அறிகுறி ஆரம்பித்த 2 முதல் 10 நாட்களுக்குள் மரணம் நிச்சயம். மற்றபடி எலி, பூனை, வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற விலங்குகள் கடித்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுவதன் மூலம் 100% நோய் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும்.
எனினும் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் 55 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் இறந்து போவதாக மருத்துவ பதிவுகள் கூறுகின்றன. இந்தியாவிலோ 20 ஆயிரம் பேர் இறந்து போகிறார்கள். அதில் 50 சதவிகிதத்தினர் 15 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்... குறிப்பாக 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம்.
ஏன் குழந்தைகள்?
1. முன்னெச்சரிக்கை இல்லாமல் குழந்தைகள் விளையாடுவதால்...
2. மூளைக்கு மிக அருகில் முகத்திலோ, கழுத்திலோ, தலையிலோ காயம்படுவதால்...
3. கவனிக்காத பட்சத்தில், அறியாமையால் காயத்தை உதாசீனப்படுத்தி நாய்க்கடி தடுப்பூசி போடாமல் விடுவதால்...
4. தினமும் சென்னையிலேயே அரசு மருத்துவமனைகளில் 60-70 நாய்க்கடி நோயாளிகளுக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல், வெளிநாட்டுத் தடுப்பூசிகள் போட்டு வருகிறார்கள். இது அவசர சிகிச்சை நோய்களுக்கு வாங்கும் மருந்துகளின் பட்ஜெட்டில் விழும் ஓட்டை என்பதை, தடுப்பூசி போடப்படாத தெருநாய்களை வளர்ப்பதில் முனைப்பு காட்டுவோரும், விலை உயர்ந்த நாய் வளர்ப்போரும் மனதில் கொள்ள வேண்டும்.
நாய் கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
வெறி நாயோ, தெரு நாயோ, வீட்டில் வளர்க்கிற நாயோ... அதற்கு நோய் இருக்குமானால், அந்த நாய் மாறுபட்ட பழக்க வழக்கம் கொண்டிருக்கும். எல்லோரின் மீதும் பாய்வதும், கடிக்க முனைவதும், மற்ற விலங்குகளையும் கடிக்க முனைவதோடு, அந்த நாயும் எச்சிலை முழுங்க முடியாமல் கோழையுடன் எச்சிலை வடித்தபடி இருக்கும். நாய்க்கு வலிப்பு, ஜுரம், வாதம், முழுங்க முடியாமை, கீழ்த்தாடை மூடாமலேயே இருந்தால், குரைக்கும் சத்தம் மாறினால், அதிக எச்சில் சுரந்தால், காரணமின்றி எரிச்சலுடன் பாய்ந்தால், கடித்தால் - அது நாயாக இருந்தாலும், பூனையாக இருந்தாலும் - ‘அதற்கு நோய் வந்து இருக்கிறதா’ என விலங்கு நல மருத்துவரிடம் சந்தேகத்தை போக்கிக் கொள்ள வேண்டும்.
வெறி நாயோ, தெரு நாயோ, வளர்ப்பவர் நாயோ, பூனையோ, எலியோ கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் 10 முறை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். விலங்குகளை தாக்கும் ரேபிஸ் கிருமி, அதன் எச்சில் மூலமாகத்தான் பரவும். உடலில் தோல் கிழியாத பட்சத்தில் எந்த காயத்திலும் நோய்க் கிருமி பரவாது. பயப்படத் தேவையில்லை. ஆனால், இந்த விலங்குகள் காலை நக்கிக் கொண்டேயிருக்கும். அதனால் நகக்கீறலோ, பல் கடியோ, தோல் கிழிந்தால் ரத்தத்தில் எச்சில் பட்டாலே அதன் மூலம் கிருமி பரவ வாய்ப்பு இருக்கிறது. காயத்தை நன்றாகக் கழுவிய பிறகு ரத்தம் அதிகமாக வந்து காயம் ஆழமாக இருந்தால் மருத்துவரை அணுகும் வரை கட்டு போடலாம். இல்லையெனில் திறந்த புண்ணே மேலானது.
காயத்தின் தன்மை, அதன் இடம், ஆழம் பொறுத்து, நாய்க்கடியை 3 வகையாக பிரிக்கலாம். நாய் நக்குவதால், தோல் கிழிந்து இருக்காவிட்டால், நாய்க்கு உணவு அளிப்பதால், தொடுவதால் பிரச்னை கிடையாது. தடுப்பூசி தேவையில்லை. தோல் முழுமையாக இருந்தால் பிரச்னை இல்லை. தோல் கிழிந்து இருந்தால் தடுப்பூசி வேண்டும். தோல் கிழிந்து முகத்துக்கு அருகில் ஆழமான காயம் என்றால் தடுப்பூசி மற்றும் R.I.G. வேண்டும்.
ARV (Anti Rabies Vaccine) தடுப்பூசிகள்...
நாய் கடித்து காயம் படுவதற்கு முன்பாக, நாய் வளர்க்க ஆசைப்படுபவர்கள், விலங்கியல் மருத்துவர்கள், உதவியாளர்கள், தற்காப்பாக போட்டுக் கொள்ளும் ஊசிகள். இது 3 மட்டும் போதுமானது. விலங்குகள் கடித்த பின் 5 ஊசிகள் கண்டிப்பாக போட வேண்டும் (1,3,7,14,28 நாட்கள்). வெறும் ேதால் மட்டும் கிழிந்து இருந்தால் தடுப்பூசி மட்டும் போதுமானது. இந்த தடுப்பூசி (ARV) நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி, வைரஸ் கிருமிகளை அழித்து நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும். ஆழமாக, முகத்துக்கு அருகில் என்றால் Rabies Immunoglobulin (RIG) காயத்தைச் சுற்றிலும் போடுவது அவசியம். இதன் மூலம் காயத்தைச் சுற்றி தசைகளில் உடனடியாக கிருமிகள் பெருகுவதை முழுமையாக தடுக்க முடியும்.
உங்கள் கவனத்துக்கு...
1. பொதுவாக நாய்க்கு தடுப்பூசி போட்டு இருந்தால், கடி பட்டவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என்பது தவறு. அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
2. 10 நாள், 20 நாள் நாயைப் பார்த்துக் கொண்டால் போதும் என்பதும் தவறானது. கடித்தால் தடுப்பூசி 5ம் அவசியம். நாய்க்கு நோய் வராமலே நாயின் உடலில் கிருமிகள் (Carrier stage) இருக்கலாம். அவை மனித உடலில் உடனே நோயாக மாறும்.
3. கீறினால் தடுப்பூசி தேவையில்லை என்பது தவறு. கீறினாலும் அவசியம். நகத்தை நக்கிச் சுத்தம் செய்வதால் எச்சிலில் நகத்தில் பரவும் கிருமி காயத்தில் பட்டால் நோய் பரவும்.
4. தோல் கிழிந்த விலங்கு கடித்த காயத்துக்கு 5 தடுப்பூசிகள் அவசியம். 3 போட்டால் போதாது. இவ்வாறு எடுத்துக் கொண்ட 5 தடுப்பூசி 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும்.
5 ஆண்டுக்குள், ஊசி போட்ட ஓராண்டு கழிந்து மீண்டும் கடி பட்டால், ஒரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். 5வது ஆண்டுக்குப் பிறகு, மீண்டும் கடி பட்டால் 5 ஊசிகளும் அவசியம். எந்த உணவுக் கட்டுப்பாடும் நாய்க்கடி நோய்க்கு தேவையில்லை. முழுமையான தடுப்பூசி ஒன்றே 100% பாதுகாப்பான நோய் தடுப்பு முறை. நோய் வந்த பிறகு இந்தியாவில் உயிர் காப்பாற்றப்பட்டது இல்லை. நாய்க்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் உடலிலிருந்து கூட நோய்க் கிருமி மற்றவர்களுக்கு தொற்றக்கூடும் என்பதால் உடலைக் கூட அரசாங்கமே தகனம் செய்து விடும்.
உறவினர்கள் கூட பார்க்க முடியாது. நாய்கள் மற்றும் வீட்டு விலங்கினங்களை தெரு நாய்களை, ரேபிஸ் கிருமிகளிலிருந்து பாதுகாக்க அரசாங்கத்துக்கு உதவி செய்வோம். தெரு நாய்களை பிடித்துச் செல்லும் வாகனங்கள், அந்நாய்களுக்கு தடுப்பூசி போட்டு கர்ப்பத்தடை அறுவைசிகிச்சை செய்து மீண்டும் அதே இடத்தில்தான் விட்டுச் செல்வார்கள். அவர்களோடு சண்டையிடாதீர்கள். வருடாவருடம் தெரு நாய்களுக்கு, வீட்டு நாய்களுக்கு, கால்நடை மருத்துவரிடம் காண்பித்து தடுப்பூசி போடுங்கள். இலவசமாக அரசு மருத்துவமனைகளில் போடப்படும் தடுப்பூசியை போட அறிவுறுத்துங்கள். உயிர் இழப்புகளைத் தடுத்து நிறுத்துங்கள்!
Tags:
Even relatives can see. Dogs and household fauna street dogs rabies and help the government to protect from germsமேலும் செய்திகள்
வலி நீக்கும் சிகிச்சை
புரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்
முதலுதவி செய்ய கற்றுக்கொள்!
அறை குளிரும்... கண் உலரும்...
முதல் உதவி அறிவோம்
பாம்பு கடித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறேன்!
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!