இதயத்தைக் காக்கும் சாக்லேட்!
மாற்றம் செய்த நேரம்:3/14/2013 2:58:33 PM
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாக்லேட்டை விரும் பாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், உடல் எடை கூடி விடுமோ என பயந்து, சாக்லேட்டைப் பார்த்து எச்சில் ஊறினாலும், அவற்றைத் தொட பலரும் அஞ்சி வந்தனர்.
இனி அதற்கு அவசியமே இல்லை. சாக்லேட்டை அளவாக எடுத்துக்கொண்டால், இதயத்துக்கு நல்லது, உடல் எடை அதிகரிக்காது என நாக்கில் இனிப்பை வார்த்திருக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். இதற்காக சாக்லேட் ஆய்வின் பலனை அனுபவரீதியில் உணர ஒரு தம்பதியைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தின மும் சாக்லேட்டும் சாக்லேட் பானங்களும் அளித்து சோதித்துள்ளனர். அவர்களின் உடல் நிலை மற்றும் செயல் பாடு இந்த ஆராய்ச்சியை மெய்ப் பித்திருக்கிறது!
அந்த ஆராய்ச்சி முடிவு இதுதான்...
‘‘மிகவும் தரமான ‘டார்க் பிரவுன்’ சாக்லேட்டில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் பிளவானோல்ஸ் என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இந்த பிளவானோல்ஸ் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையின்றி தாராளமாக ஓட உதவுகிறது. எனவே ரத்த அழுத்த நோய் 5 சதவிகிதம் குறைகிறது. டார்க் பிரவுன் சாக்லேட்டுகள் அதிகப்படியாக சேரும் கொழுப்புகளை விரைந்து கரைத்து விடுகின்றன. அத்துடன் விரைவாக பசியெடுப்பதையும் சற்று தள்ளிப்போடுகிறது.
சாக்லேட்டில் உள்ள கோகோவில், ஒபுரோமின் எனும் அல்கலாயிட் பொருள் தசைகளை ஊக்குவித்து உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. அத்துடன் உடலில் சேரும் கொழுப்புகளையும் குறைக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவது குறைகிறது.
எல்லா டார்க் பிரவுன் சாக்லேட்டுகளிலும் 75 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை கோகோ கலந்திருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியைவிட இரு மடங்கு சக்தி இந்த சாக்லெட்டுகளில் உள்ளது. கோகோவில் உள்ள இயற்கை மூலப்பொருள் மூளையை சுறுசுறுப்பாக்கும் ரசாயனம் சுரக்க உதவுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. பிரவுன் சாக்லேட்டில் கொஞ்சம் கசப்புச் சுவை இருந்தாலும் உடலுக்கு நல்லது.
அதேசமயம் பால் வகையைச் சேர்ந்த சாக்லேட்டுகள் இந்த அளவுக்கு பலனளிக்காது” என்கிறார்கள் விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லில்லி ஸ்டோ ஜன்ஸ்கோவா மற்றும் டாக்டர் ஜான் அஸ்தோன். சாக்லேட் நல்லது என்பதற்காக அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது என அட்வைசும் செய்திருக்கிறார்கள் இவர்கள்.






















