SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளூர் பிரச்னை முதல் உலக சிக்கல் வரை இணையத்தில் பெட்டிஷன் எழுதி தீர்வு காணலாம்!

2018-06-06@ 14:30:22

நன்றி குங்குமம்

ஒரு தமிழ்ப் பெண்ணின் மகத்தான சாதனை


பதினெட்டு வயது வரை கம்ப்யூட்டரைத் தொடாத, லைப்ரரி வாசல் மிதிக்காத ஒரு பெண் இன்று உலகம் தழுவிய தொண்டு நிறுவனத்தின்  இயக்குனராக இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் அந்தப் பெண் தமிழ்நாட்டின் கூடலூரைச் சேர்ந்தவர் என்றால் வியப்பு ஏற்படத்தானே  செய்யும்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘சேஞ்ச்.ஆர்க்’ (change.org) தன்னார்வ அமைப்பில் இணைந்த பிரீத்தி ஹெர்மனின் கடின உழைப்பு இன்று  அவ்வமைப்பின் நிர்வாக இயக்குனராக அவரை உயர்த்தியுள்ளது. ‘‘மக்களின் வாழ்வுக்கு தடையாக இருந்த பிரச்னைகளைத் தீர்க்க முயன்றபோது, சில  சிக்கல்களுக்கு மட்டுமே வழி கிடைத்தது. மக்களின் கரங்களை ஒன்றாகக் கோர்த்துத்தான் தினசரி வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகளைக்  காணமுடியும் என்ற முடிவுக்கு வந்தபோதுதான், எனது நண்பர்கள் சேஞ்ச்.ஆர்க் அமைப்பை பரிந்துரைத்தனர்...’’ என்கிறார் 34 வயதாகும் பிரீத்தி  ஹெர்மன்.

தன் பதினொரு வயதில் இவர் பார்த்த திரைப்படத்தில் வல்லுறவுக்குள்ளான பெண் தன் குடும்ப கவுரவத்துக்காக தற்கொலை செய்துகொள்வதைப்  பார்த்து பயந்து போனார். ‘‘வல்லுறவுக்கு ஆளானால் இறந்து போக வேண்டுமா?’’ என அப்போது கேட்டவரை கேலி செய்தது வேறு யாரோ அல்ல;  அவரது குடும்பமேதான். ‘‘அந்த நொடியில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்...’’  என்கிறார் பிரீத்தி ஹெர்மன். இதன்பின் பெங்களூரில் படிக்கச் சென்றவர் பழங்குடிகள் மற்றும் தலித்துகளுக்கு உதவும் தன்னார்வ செயல்களில்  ஈடுபட்டார்.

இதன் அடுத்தகட்டமே ‘சேஞ்ச்.ஆர்க்’ தொண்டு நிறுவனத்துடன் பிரீத்தி இணைந்தது. உலகிலுள்ள 196 நாடுகளில் இயங்கிவரும் இந்த ‘சேஞ்ச்.ஆர்க்’  இணையதளத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பென் ராட்ரே, தன் நண்பர் மார்க் திமாஸுடன் இணைந்து நிறுவினார். உலகின் எந்த மூலையில் யார்  பாதிக்கப்பட்டாலும் அல்லது பிரச்னை வெடித்தாலும் இத்தளத்துக்கு யார் வேண்டுமானாலும் பெட்டிஷன் எழுதலாம். பொது மக்கள் பார்வைக்கு இந்த  பெட்டிஷன் வைக்கப்படும். இதிலிருக்கும் நியாயத்தை உணர்பவர்கள் எந்த நாட்டிலிருந்தும் ஆதரவு தெரிவிக்கலாம்.

எந்தளவுக்கு ஆதரவு பெருகுகிறதோ அந்தளவுக்கு சம்பந்தப்பட்ட அரசுக்கு அழுத்தம் கொடுத்து அப்பிரச்னையைத் தீர்க்க முடியும். இதுதான்  ‘சேஞ்ச்.ஆர்க்’ கான்செப்டின் ஐடியா. இப்போது இத்தளத்தை ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள 4 கோடி மக்கள் பயன்படுத்தி  வருகின்றனர். இதில் இந்தியர்கள் மட்டும் 70 லட்சம் பேர். ‘‘பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுபவர்களுக்கு தொழில்நுட்பம் வழியே  மற்றவர்களுடன் சம்பந்தப்பட்டவரை இணைத்து தீர்வுகளை வழங்க முயற்சிக்கிறோம்...’’ என்று சொல்லும் பிரீத்தி, இப்போது  ஒபாமாஃபவுண்டேஷனுடன் இணைந்து சேஞ்ச்.ஆர்க் பணியாற்றுகிறது என்கிறார்.

உலகம் முழுக்க சமூகப்பணியில் ஈடுபடும் இருபது பேரில் ஒருவராக பிரீத்தி ஹெர்மன் தேர்வாகியுள்ளது நிச்சயம் பெரும் கவுரவம்தான். 2012ம்  ஆண்டு இந்திய இயக்குனராக இவர் நியமிக்கப்பட்டபோது இத்தளத்துக்கு மாதம்தோறும் ஐம்பது பெட்டிஷன்கள் வரையே வந்தன. இன்று 2 ஆயிரம்  பெட்டிஷன்கள் மாதம்தோறும் வருவதுடன் அவற்றுக்கான தீர்வுகளும் உடனுக்குடன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. தேவையற்ற சிசேரியன்  தொடர்பாக சுபர்ணா என்ற பெண்ணுடன் தொடங்கிய பிரசாரம் இந்தியாவில் பெண்களின் சுகாதாரம், குழந்தை பிறப்பு தொடர்பான சட்டத்  திருத்தத்தையே மாற்ற வைத்தது.

‘‘இன்று உலகெங்குமுள்ள மக்கள் எங்களது இணையதளத்தில் குழந்தை பிறப்பு, சூழல் பிரச்னைகள், விலங்குகள் பாதுகாப்பு, ஊழல் முதல் பாலிவுட்டின்  பாலியல் அத்துமீறல்கள் வரை புகார்களை அளிக்கிறார்கள். இதுதவிர உள்ளூர் பிரச்னைகளுக்கான புகார்களும் குவிகின்றன...’’ என்கிறார் பிரீத்தி.  ஜனநாயகத் தீர்வுகளை வழங்கியதற்கான The French Alsacienne Prizeக்காக இந்திய ஊடகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது பெண்களில்  பிரீத்தி ஹெர்மனும் ஒருவர். இதுதவிர நிதி ஆயோக், ஐ.நா சபை ஆகியோர் இந்தியாவை மாற்றிய 25 பெண்கள் என அறிவித்த பட்டியலிலும் பிரீத்தி  இடம்பெற்றுள்ளார்.

எப்படி இணையத்தில் பெட்டிஷன் எழுதுவது?

பிரச்னையின் தலைப்பை முதலில் எழுத வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது அமைச்சரின் பெயரைக் குறிப்பிடவேண்டும். அடுத்து  பிரச்னை பற்றிய சிறுகுறிப்பை எழுதவேண்டும். பின்னர் அதனை ஃபேஸ்புக் கணக்கு வழியாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பிரச்னையின்  விபரீதத்தை உலகுக்கு அறிவித்து, மற்றவர்களையும் இணையம் வழியே அதில் கையெழுத்திட வைக்க வேண்டும். எந்தளவுக்கு ஆதரவு கையெழுத்து  கிடைக்கிறதோ அந்தளவுக்கு சிக்கலுக்கு தீர்வு விரைந்து கிடைக்கும்.

மாற்றம் சாத்தியம்!

பதினெட்டு நாடுகளில் அலுவலகம் உள்ள சேஞ்ச்.ஆர்க் அமைப்பு (பிப்.8,2007), 196 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. தனது சமூக செயல்பாடு வழியாக  27 ஆயிரத்து 294 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதுவரை பங்கேற்றுள்ள மக்களின் எண்ணிக்கை 23 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 479.

ச.அன்பரசு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்