SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி தமிழகத்திலிருந்து மருத்துவர்கள் உருவாவது சாத்தியமா?

2018-05-30@ 14:58:03

நன்றி குங்குமம் தோழி

நீட் அவலம்


தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று கடந்த ஆண்டு மாபெரும் மக்கள் போராட்டமே நடந்தது. அதற்கு முக்கிய காரணம் நீட் தேர்வு ஏழை  எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கிறது என்று சட்டப் போராட்டத்தை நடத்திய அரியலூர் மாணவி அனிதா என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

இந்த சூழலில் நீட் வேண்டாம் என வலுவாக குரல் கொடுத்த தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாட்டில் ஏன் நீட் தேர்வு மையத்தை அமைக்கவில்லை என்ற  கேள்வியை நோக்கி நகர்த்தியிருக்கிறது மத்திய அரசு. இந்த நிலையில் இந்த வருடம் நடந்த நீட் தேர்வு குறித்து கூறுகிறார் கல்வியாளர் பிரின்ஸ்  கஜேந்திர பாபு. “நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கையில் இருந்து மக்கள் பின்வாங்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பதில்  உறுதியாக இருக்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசு இரண்டு சட்ட  மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியுள்ளது.அந்த இரண்டு சட்ட மசோதாக்களை இது வரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல்  நிலுவையில் வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் அவர்களுக்கான மாணவர் சேர்க்கையை தன்னாட்சி கொண்டு அவர்களே  நடத்திக்கொள்கிறார்கள். இதன் மூலம் ஒரு தன்னாட்சி அதிகாரம் படைத்த நிறுவனத்தை விட மாநில அரசு சிறுமைப்படுத்தப்படுகிறது.  இந்திய  மெடிக்கல் கவுன்சலிங் திருத்தச் சட்டம் 2016 - பிரிவு 10 என்ன சொல்கிறது என்றால், அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு வேண்டும்  என்று சொல்கிறது. ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையும் இந்த விதியின் கீழ் அடங்கும்.ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கான  மருத்துவச் சேர்க்கையை தாங்களே செய்துகொள்ள அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?எந்த சட்டத்தின்அடிப்படையில் மருத்துவ சேர்க்கை  நடத்தினார்கள் என்று இந்த அரசு ஏன் வாய் திறக்க மறுக்கிறது? கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் செய்த மாணவர் சேர்க்கை சட்டவிரோதமானது.

தமிழ்நாடு அரசு, சட்டம் கொடுத்திருக்கின்ற அதிகாரத்தின் அடிப் படையில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு  நீங்கள் அனுப்பவில்லை என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவையை நீங்கள் சிறுமைபடுத்துகிறீர்கள் என்பதுதான் உண்மை. ஒரு  வாரம் ஆளுநர் உரையின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நடந்தது, அந்த தீர்மானத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஏன் நீட் குறித்து  தன்னுடைய உரையில் பேசவில்லை என்று யாரேனும் கேள்வி எழுப்பினார்களா? பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்ததே அதில் இந்த  பிரச்சனை விவாதிக்கப்பட்டதா? எந்த முயற்சியும் எடுக்காமல் மத்திய அரசிற்கு எப்படி அழுத்தம் கொடுக்க முடியும்? சட்டப்படி ஆட்சி நடந்தால்  இரண்டு சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசு விலக்கு கொடுக்க வேண்டும்.

இதுதான் நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு. சமூக நீதியின் அடிப்படையில் எல்லோருக்கும் தரமான மருத்துவம் வேண்டும் என்றால் நல்ல மருத்துவர்கள்  வேண்டும். தரமான மருத்துவர்கள் வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு பின்பற்றக்கூடிய நடைமுறையின் மூலமாகதான் மருத்துவர்களை  உத்தரவாதப்படுத்த முடியும். இப்போது நடந்து முடிந்த நீட் தேர்வு என்பது, மாநில அரசை சி.பி.எஸ்.இ  ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதன்  வெளிப்பாடு. அகில இந்திய தேர்வு நடைபெறும் போது அனைத்து மாநிலங்களுக்கும் அது குறித்த தகவலை சொல்ல வேண்டாமா? 32 வருவாய்  மாவட்டங்கள் இருக்கும் போது 10 வருவாய் மாவட்டங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்க போகிறோம் என்று எதன் அடிப்படையில்  முடிவெடுக்கப்பட்டது.

அதற்கு தர்க்கரீதியாக என்ன காரணம் இருக்கிறது. 32 மாவட்டங்களிலும் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு 10 மாவட்டங்களில் தேர்வை  நடத்தியதில் எந்த வித நியாயமும் இல்லை. நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான விண்ணப்பங்கள் வந்தவுடன் நீங்கள் மாநில அரசுடன்  கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஒரு மையத்தில் 100 பேர் கூடும்போது மாணவர்களின் பெற்றோர்கள் அங்கு திரளாக கூடுவார்கள். சட்டம் ஒழுங்கு  பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கும்போது மாநில அரசிடம் சொன்னால்தானே முன் ஏற்பாடுகளை செய்ய முடியும். குறிப்பிட்ட மாநிலத்தில்  இருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாணவர்களை தேர்வு எழுத அனுப்புகிறார்கள் என்றால் எந்த மாநிலத்தில் இருந்து மாணவர்கள் செல்கிறார்களோ  அந்த மாநில அரசிற்கு அறிவித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 1ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடை  போன்றவை விலையில்லாமல் கொடுக்கப்படுகிறது. அதனால்தான் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வரை படிக்கிறார்கள். இப்படிப்பட்ட மாணவர்கள் வேறு  மாநிலங்களுக்கு போகிறார்கள் என்றால் அவர்களுக்கான போக்குவரத்துச் செலவை செய்வதற்கு அரசிற்கு இந்த தகவல் முன்கூட்டியே தெரிந்திருக்க  வேண்டும். அதை மத்திய அரசு தெரிவித்திருக்க வேண்டும். மாநிலத்தில் ஒரு அரசு இயங்குகிறது என்பது குறித்த எந்தபுரிதலும் இல்லாமல் மத்திய  இடைநிலை கல்வி வாரியம் நடந்துகொள்ள முடியும் என்பதை காட்டுகிறது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக கிராம நிர்வாக அலுவலர்  தேர்வு நடந்தது. அதில் எதிர்பார்த்ததை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.

அந்தத் தேர்வை எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்தி முடித்தது தேர்வாணையம். அப்படிப்பட்ட அனுபவம்  தமிழக தேர்வாணையத்திற்கு உண்டு.  அதே போல் தமிழ்நாடு அரசு கல்வித் துறை தேர்வு இயக்ககம் ஆண்டிற்கு 10 லட்சம் மாணவர்களுக்கு மேல் பங்குகொள்ளும் 10 மற்றும் 12 ஆம்  வகுப்பு தேர்வை நடத்துகிறது. இது வரை எந்த பிரச்சனையும் வந்தது இல்லை. இப்படி இருக்கும் மாநில அரசின் நிர்வாகத் திறனை மத்திய கல்வி  இடைநிலை வாரியம் ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை?  மத்திய இடைநிலை கல்வி வாரியம், மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கீழ் இயங்குகிறது.  அதன் அடிப்படையிலாவது, உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?.ஒரு கூட்டாட்சி தத்துவத்தின்  அடிப்படையில் மாநிலஅரசிற்கு முன்கூட்டியே இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்கின்ற கடமையை உணராமல் சி.பி.எஸ்.இ  நடந்துகொண்டிருக்கிறது.

மாநில மக்களின் தேவையை உணர்வுகளை உரிமைகளை சி.பி.எஸ்.இ மதிக்க வில்லை என்பதன் வெளிப்பாடாகத்தான் நடந்து முடிந்த தேர்வு  இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் மாணவர்களுக்கு ஓர் உத்தரவு கொடுத்தது. அதில் உங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் இருக்கக்கூடிய  தேர்வு மையங்களுக்கு சென்று உங்கள் ஹால் டிக்கெட்டை காட்டினால் உங்களுக்கான தேர்வு மையத்தை அவர்கள் குறித்து கொடுப்பார்கள். அங்கு  நீங்கள் தேர்வு எழுதலாம் என்று கூறியது. அதே வேளை சி.பி.எஸ்.இ க்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்கள்  வாழும் பகுதியின் அருகிலே தேர்வு மையங்களை கொடுங்கள் என்றது. இது குறித்து சி.பி.எஸ்.இ உயர் அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் பேசும்  போது “எங்களுக்கு ஆர்டர் காபி இன்னும் கைக்கு வரவில்லை’’ என்று வெற்று பதிலை கூறினார்கள்.

சி.பி.எஸ்.இ வழக்குரைஞர் தீர்ப்பு வழங்கும் போது இருந்திருப்பார் தானே? அப்படி இருக்க,  நாட்கள் குறைவாக இருக்கும் போது எப்படி இந்த  பதிலைசொல்ல முடியும் என்று தெரியவில்லை. அல்லதுஅந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் அப்படி மாணவர்கள் குடியிருக்கும் பகுதியில் தேர்வு மையம்  அமைக்க முடியாது என்று மேல்முறையீடு செய்திருக்கலாம். அதை செய்யாமல் மாணவர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றி இருக்கிறார்கள்.  முழுக்க முழுக்க மாணவர்களின் உணர்வுகள், சமூக பொருளாதாரச் சூழல் எதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் தன்னிச்சையாக தேர்வு ஆணையம்  செயல்படுகிறது என்பதை நடந்து முடிந்த தேர்வு நடவடிக்கைகள் காட்டுகிறது. பல்வேறு நிலப்பரப்பு, பல்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட,  பொருளாதார வளர்ச்சியில் சமத்துவம் இல்லாத வேறுபாடுகளைக் கொண்ட இந்திய நாட்டில் ஒரே தேர்வு என்பது எப்பொழுதும் சாத்தியம் கிடையாது.

தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதிய கொடுமை ஒருபுறம் இருக்க தமிழகத்திலே தேர்வு எழுதிய மாணவர்கள்  அலைக்கழிக்கப்பட்டது அதைவிடக் கொடுமையாக இருந்தது” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு . மதுரை மாவட்டம்கொட்டாம்பட்டி கிராமத்தில் இருந்து  நீட் தேர்வு எழுதிய மாணவி மணிமேகலையிடம் பேசினேன்.“நான் இருக்கும் மாவட்டம் மதுரை. ஆனால் நான் தேர்வு எழுதியது சென்னை. ஹால்  டிக்கெட் கிடைக்கும் வரை எனக்கு எங்கு தேர்வு எழுதவேண்டும் என்பது தெரியவில்லை. ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட நாளில் இருந்து தேர்வு  நாளுக்கு 10 நாட்கள் இடைவெளி இருந்தது. தேர்வு மையம் நாங்கள் இருக்கும் பகுதியில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

என்னுடைய தம்பியும் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தான். அவனுக்கு கோயம்புத்தூரில் தேர்வு மையம்கொடுக்கப்பட்டது. அங்கு சென்றுதான்  தேர்வு எழுதினான். இருவரும் வெவ்வேறு திசைக்கு அனுப்பப்பட்டேன். எங்களுக்கு போக்குவரத்து செலவு, நீண்ட தூரப்பயணம் இவை கடினமாக  இருந்தன. ஒரு வழியாக முன்கூட்டியே சென்னைக்கு வந்து தேர்வு மையத்தை கண்டுபிடித்தோம். கம்மல், செயின், மூக்குத்தி அணியக்கூடாது என்று  சில விதிமுறைகள் இருந்தன. அதன்படி நான் சென்றேன். அங்கு சென்ற பிறகு துப்பட்டா அணிய கூடாது என்று சொன்னார்கள்.இரண்டு பிரிவாக  சோதனை நடைபெற்றது. மெட்டல் டிடெக்டர் மூலம் ஒரு சோதனை நடைபெற்றது.

சிறிய இடைவெளிவிட்டு இன்னொரு இடத்தில் மூன்று பேர் கொண்ட குழுவின் சோதனைக்கு பிறகுதான் தேர்வு அறைக்கு நாங்கள்  அனுமதிக்கப்பட்டோம். இந்த விதிமுறைகளைப் பற்றி அறியாத பல மாணவிகள் அங்கு வந்துதான், தங்களுடைய நகைகளை கழட்டினர். சிலர்  பதட்டமாகவே இருந்தனர். தேர்வு அறையில் வினாத் தாளை படிப்பதற்கு என்று தனியாக நேரம் எதுவும் ஒதுக்கப்படவில்லை, அது  ஏமாற்றமாகவேஇருந்தது. விடைத்தாளில் எங்களுடைய விவரங்களை எழுதுவதற்கே அரை மணிநேரம் ஆனது. நான் படித்த பாடத்திட்டத்திலிருந்து  ஒரு சில கேள்விகள்தான் வந்திருந்தன. நீட் தேர்வுக்கு என்று சில புத்தகங்கள் வாங்கி படித்தேன். அதிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால்  நம்முடைய பொதுத்தேர்வு எழுதுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.

விடைதெரிந்த கேள்விகள்கூட குழப்பும் விதமாக இருந்தன. மூன்று மணிநேர தேர்வில் வினாக்கள் குழப்பமாக இருந்ததால் எழுதுவதற்கு கொஞ்சம்  கடினமாக இருந்தது. மாநில பாடத்திட்டத்திலே தேர்வு நடைபெற்றால் நன்றாக இருக்கும். ஆனால் அது நடக்கும் என்கிற நம்பிக்கை எனக்குக்  கிடையாது. நீட் தேர்வு கூடாது என்று ஏற்கனவே நாம் அனிதாவை இழந்து நிற்கிறோம். அதன் பிறகும் கூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத்  தெரியவில்லை. வேறு வழி இல்லாமல் நாங்கள் நீட் தேர்வுக்கு எங்களால் முடிந்தவரை தயார்படுத்திக் கொண்டோம்.நீட் தேர்வுக்கு தயார்  படுத்தும்படியாக பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. எங்கள் ஊரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில்  நீட் தேர்வு பயிற்சி வகுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

அவ்வளவு தூரம் சென்று எப்படி படிக்க முடியும்? நுழைவுத் தேர்வு  மாநில பாடத்திட்டத்தில் வைத்தால் நன்றாக இருக்கும்.  எப்படியாவது மருத்துவர்  ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு”என்றார் மணிமேகலை. பல்வேறு சூழ்நிலையை கடந்து வெவ்வேறு மாவட்டம், மாநிலம் சென்று  தேர்வு எழுதும் மாணவர்களிடம், இது போன்ற கெடுபிடி சோதனைகளால் என்னவிதமான பாதிப்புகளை மாணவர்கள் சந்திப்பார்கள் என்று சொல்கிறார்  மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த். “இந்தத் தேர்வுக்கு இது போன்ற சோதனைகள் இருக்கும் என்று மாணவர்கள் முன்கூட்டியே தயார் நிலையில்  இருந்தார்கள் என்றால் பெரிய அளவில் அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்காது. மாறாக இப்படிதான் சோதனைகள் இருக்கும் என்று நம் மாணவர்கள்  அறிந்திருக்க வாய்ப்பில்லாதபோது இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

தேர்வு நாட்களில் இயல்பாகவே மாணவர்களுக்கு பதட்ட நிலை இருக்கும். இது மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும். படித்தவற்றை நன்றாக எழுத  முடியாத சூழலையும் ஏற்படுத்திவிடும். ஏனெனில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 15லிருந்து 16 வயது இருக்கும். அந்த இளம் பருவத்தில்  அவர்களுக்கு வெட்க உணர்வு இருக்கலாம். இந்த நேரத்தில் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.  பக்குவம் உள்ளவர்களுக்கு இது போன்ற விஷயங்கள் பெரிதாக தெரிவதற்கு வாய்ப்பில்லை. மாணவர்கள் பிட் வைத்திருக் கிறார்கள் என்று பார்ப்பதற்கு  இதுதான் வழியா என்று தேர்வு நடத்துகிறவர்களும் யோசிக்க வேண்டும். வேறு எந்த தேர்வு முறையிலும் இல்லாத கெடுபிடி இந்த தேர்வுக்கு  இருக்கிறது என்றால் சரியான முறையில் மாணவர் சேர்க்கையை இவர்கள் நடத்துவார்களா என்கிற சந்தேகமும் எழுகிறது.

குறிப்பாக வெளி மாநிலத்திலோ அல்லது வெளி மாவட்டங்களிலோ சென்று தேர்வு எழுதுவது என்பது சிரமமான காரியம். எந்த தேர்வு எழுதும்போதும்  கடைசி நேரத்தில் படிக்கக்கூடாது, பதட்டம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லுவோம். அப்படி இருக்கும்போது புதிதாக ஓர் ஊருக்குச்  செல்வது என்பதே ஒரு வித பயத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தி விடும். மேலும் இது போன்ற சோதனைகள் அவர்களுக்கு மன உளைச்சலை  ஏற்படுத்திவிடும். மன உளைச்சல் ஏற்பட்டால் ஞாபகசக்தி,கவனிப்புத் திறன், சிந்திக்கும் தன்மையை மாணவர்கள் இழக்க நேரிடும். இதனால்  அவர்களால் அந்தத் தேர்வை வெற்றிகரமாக எழுதவே முடியாது.

இவை மனரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள். உடல் ரீதியாக தலை சுற்றல், தலைவலி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுவதற்கு  வாய்ப்புகள் உண்டு. தேர்வுக்காக தங்களை நன்றாக தயார்படுத்திக்கொண்டு வந்த மாணவர் இந்த பிரச்சனையால் தேர்வை சரியாக எழுத முடியாமல்  போகும்போது மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட வாய்ப்புண்டு.  மருத்துவர் ஆவதுதான் என்னுடைய கனவு என்றிருக்கும்  மாணவர்களுக்கு இந்த பிரச்சனைகள் அவர்களை தவறான முடிவை நோக்கி நகர்த்திவிடும்.  சமூகத்தின் மீது வெறுப்புணர்வை உண்டாக்கும்"  என்கிறார். மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த்.

ஜெ.சதீஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்