SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2018-05-29@ 14:08:50

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா

சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி உலகம் முழுதும் அதிரிபுதிரி ஹிட் அடித்திருக்கும் டயட் என்றால் ஜி.எம் டயட்தான். ஜெனரல் மோட்டார் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களில் பலருக்கு ஒபிஸிட்டி இருப்பதைக் கண்டு இந்த டயட்டை உருவாக்கியது. அதனால் இது ஜி.எம் டயட். தடாலடியாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஜி.எம்.டயட் பெஸ்ட் சாய்ஸ். திருமணம் ஆகப்போகும் இளம் பெண்களும் ஆண்களும் இதைப் பயன்படுத்தி உடனடி பலன் பெறலாம். இந்த டயட்டை ஒரு கோர்ஸில் ஏழு நாட்கள் பின்பற்ற வேண்டும். மிகவும் கடுமையான டயட் விதிகள் கொண்ட உணவுமுறை என்பதால் எல்லோருக்கும் ஏற்றது அல்ல.

மேலும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரத்துக்கு இந்த டயட்டை மேற்கொள்வது நல்லது. அதற்கும் குறைவான கால இடைவெளியில் இந்த டயட்டைப் பின்பற்றுவது ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. இந்த டயட் மூலமாக அதிகபட்சமாக 10 கிலோ வரை எடை குறையும். தோற்றத்தை அதிரடியாக ஸ்லிம் ஆக்கிக்கொள்ள இயலும். சருமம் பொலிவு பெறும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள், கொழுப்புகள் நீங்கும். சற்று கடினமான டயட் என்பதால் இதைப் பின்பற்றும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுவிடுங்கள். சரி இதற்கான டயட் சார்ட் இதோ…

முதல் நாள் : பழங்கள் மட்டுமே முதல் நாள் டயட். இதைத் தவிர காய்கறிகள், அரிசி, கோதுமை, முட்டை, அசைவம் அனைத்துக்கும் நோ. பழங்களிலும் வாழை, லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சையைச் சேர்க்கக் கூடாது.

இரண்டாம் நாள்
: வேகவைத்த ஓர் உருளைக்கிழங்கை ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் காலை உணவாகச் சாப்பிடலாம். காய்கறிகளைப் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ மதியமும் இரவும் சாப்பிடலாம். காய்கறி சாலட்டும் எடுத்துக்கொள்ளலாம். பழங்கள் வேண்டாம். அரிசிக்கும் கோதுமைக்கும் தடா.

மூன்றாம் நாள்:
உருளைக் கிழங்கைத் தவிர மற்ற காய்கறிகளையும், கீரைகளையும், வாழைப் பழம் தவிர மற்ற பழங்களையும் சாப்பிடலாம். இன்றும் அரிசி, கோதுமைக்கு நோ.

நான்காம் நாள்:
ஒரு டம்ளர் பால் (ஸ்கிம்டு மில்க்) மற்றும் இரண்டு வாழைப்பழங்களை மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். இத்துடன் தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, சூப்செய்து குடிக்கலாம். அரிசி, கோதுமைக்கு நோ.

ஐந்தாம் நாள் :
முளைகட்டிய பயறை வேகவைத்துச் சாப்பிடலாம். சிவப்பு அரிசி சாதத்துடன் தயிரும் தக்காளியும் சேர்த்துச் சாப்பிடலாம். வேகவைத்த சிக்கன்  அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸையும் சேர்த்துக்கொள்ளலாம். பவுல் சூப்பும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆறாம் நாள்:
ஐந்தாம் நாள் டயட்டுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடலாம். ஆனால், தக்காளி மட்டும் சேர்க்கக் கூடாது.

ஏழாம் நாள்: அரிசி சாதத்துடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் என அனைத்தையும் மூன்று வேளையும் சாப்பிடலாம். அரிசியை முடிந்தவரை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக 10-12 டம்ளர் நீர் அருந்த வேண்டியது அவசியம். ஏழாம் நாளைத் தவிர மற்ற நாட்களில் ஜூஸ், டீ, காபி குடிக்கக் கூடாது. ஜி.எம் டயட்டில் உடற்பயிற்சியும் ஓர் அங்கம். எனவே தினசரி அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முடியாவிடில் தினசரி 10,000 அடிகள் நடக்க வேண்டும்.

தோசையின் கதை

இட்லியும் தோசையும் சகோதரிகள் அல்லவா? இட்லியின் வரலாற்றைப் பற்றி எழுதிவிட்டு தோசையைப் பற்றி எழுதாவிட்டால் எப்படி? தோசைக்கு தோசை என்ற பெயர் எப்படி வந்தது என்பதைப் பற்றிய நகைச்சுவைத் துணுக்கைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தோசை முழுக்க முழுக்க தென் இந்தியத் தயாரிப்பு என்பதால் அந்தக் கதை ஒரு நகைச்சுவை மட்டுமே. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கிய நூல்களிலேயே தோசை பற்றிய குறிப்புகள் உள்ளன.

‘தோய்த்து செய்’ என்பதுதான் ‘தோய்+செய்’ எனச் சுருங்கி தோசை ஆயிற்று என்கிறது எட்டாம் நூற்றாண்டின் திவாகர நிகண்டு. உணவு வரலாற்று நிபுணர் அசயா கூறும்போது, ‘தமிழகத்து தோசை அந்தக் காலத்தில் வெறும் அரிசி மாவால் மட்டுமே செய்யப்பட்டது. உளுந்து கலக்கவில்லை’ என்கிறார். பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘மனசொல்லசா’ என்ற கன்னட நூலில் ‘தோசகா’ என்ற உணவு குறிப்பிடப்படுகிறது.

இது முழுக்க முழுக்க உளுந்தில் செய்யப்படுவது. அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து அம்மாக்கள் சுடும் தோசையின் பூர்வீகம் கர்நாடகம்தானாம். குறிப்பாக, உடுப்பி பகுதியில்தான் இன்றைய தோசை உருவானது என்கிறார்கள். உடுப்பி ஹோட்டல்களில் இன்றும் விதவிதமான தோசைகள் பரிமாறப்படுகின்றன என்பதையும் கவனியுங்கள். அரிசி மாவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் உளுந்தில் உள்ள புரதச்சத்தும் தோசையில் இணைந்திருக்கின்றன. மேலும், மாவு புளிக்கவைக்கப்படுவதால் வைட்டமின் பி மற்றும் சி சிறப்பாக உருவாகிறது.

குறுமிளகா? பப்பாளி விதையா?


குறுமிளகு அஞ்சறைப்பெட்டியின் காஸ்ட்லி நாயகி. பப்பாளி விதையை உலரவைத்தால் பார்ப்பதற்கு மிளகைப் போலவே இருக்கும். இதை மிளகுடன் கலந்து கல்லா கட்டுகிறார்கள் கலப்பட மன்னர்கள். மிளகைத் தண்ணீரில் போட்டால் மூழ்கும். பப்பாளி விதை என்றால் மிதக்கும். இதை வைத்து எது மிளகு என்று கண்டறியலாம். மேலும், பழைய ஸ்டாக் மிளகைப் பளபளப்பாக்க மினரல் ஆயில் எனப்படும் பெட்ரோலிய பொரு ளில் முக்கி எடுக்கும் தில்லாலங்
கடித்தனமும் நடக்கிறது. மிளகில் கெரசின் வாடை அடித்தாலோ டிஸ்யூ பேப்பரில் எண்ணெய் ஒட்டினாலோ அது பாலிஷ்டு மிளகு என்று அறியலாம்.

உணவு விதி

முன்னோர் உணவுக்கு முன்னுரிமை கொடுங்க. நம் செரிமான மண்டலத்தில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அவை காலங்காலமாய் நம் முன்னோர் உடலில் இருந்து நம்மிடம் கடத்தப்படுபவை. நாம் உண்ணும்போது அதற்கும் சேர்த்துதான் உணவிடுகிறோம். அந்த நுண்ணுயிர்கள் நம் முன்னோர்களின் உணவுகளுக்குப் பழக்கமானவை. அதே உணவை நாமும் தரும்போது அவை குதூகலமாகின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

எக்ஸ்பர்ட் விசிட்

இஷி கோஸ்லா இந்தியாவின் புகழ்பெற்ற டயட்டீஷியன்களில் ஒருவர். டெல்லி டயட்டரி கவுன்சலிங் மையத்துடன் இணைந்து இயங்கி வருபவர். டயட், எடை குறைப்பு தொடர்பாக உலகம் முழுதும் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றி வரும் இந்த டயட் குருவின் ஃபுட் அட்வைஸ் இது… ‘இன்று ஒபிஸிட்டி என்பது எங்கெங்கும் தலையாய பிரச்சனையாகி வருகிறது. உலகிலேயே அதிகமான ஒபிஸிட்டி கொண்டவர்கள் வசிக்கும் நாடுகள் பட்டியலில் நாம் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம். லோ கார்போ டயட், குட் கார்போ டயட், பேலியோ டயட், லோ கலோரி டயட், லோ ஃபேட் டயட் என்று பலவிதமான டயட்கள். ஆனால், பலன்தான் பெரிதாக இல்லை.

உண்மையில், மனித உடல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியானது. அந்த வகையில் மிகவும் தனித்துவமானது. நாம் ஒவ்வொருவருமே இனம், மரபியல், குடும்ப வரலாறு, பால் வயது, உடல் நிலை, மனநிலை, வாழ்வியல் பழக்க வழக்கங்கள் எனப் பல்வேறு காரணங்களால் தனித்திருக்கிறோம். எனவே, அனைவருக்குமான ஒரு பொதுவான டயட் முறை என்பது சற்று கடினமான காரியம். ஆனால், சோர்ந்துவிட வேண்டாம். உங்கள் உடலை நுட்பமாகக் கவனிப்பதன் மூலம் ஒவ்வொருவருக்கும் தேவையான டயட் முறை என்ன, வாழ்க்கைமுறை என்ன என்பதைக் கண்டறியலாம். தேவை கொஞ்சம் மெனக்கெடலும் தேடலும் மட்டுமே’ என்கிறார்.

- இளங்கோ கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்