SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலரும் முன் கருகும் மொட்டுகள்

2018-05-25@ 15:47:58

நன்றி குங்குமம் தோழி

திருமண உறவில் இருவர் இணைகையில் அதில் மூன்றாவது நபர்கள் நுழைந்து கட்டப்பஞ்சாயத்து செய்து அவர்களைப் பிரிப்பது குறித்து ‘சக்தி வாஹினி’ என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த மனுவில், ‘சட்டப்படியான அங்கீகாரம் பெற்ற திருமண உறவுகளில்கூட பிறர் தலையிட்டு பிரித்து வைக்கும் சூழல் உள்ளது. இதைத் தடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பதிவுசெய்யப்பட்ட திருமணங்கள், சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்றவை. அந்தத் திருமண உறவில் மூன்றாவது நபர்கள் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து மூலம் திருமணத்தைப் பிரித்து வைப்பது சட்ட விரோதம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகவே கௌரவக் கொலைகளும் அதிகமாக நடக்கின்றன’ என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சமூக ஆர்வல‌ருமான பாலபாரதி கூறுகையில்….

“திருமண உறவுகளில் கட்டப்பஞ்சாயத்து என்பது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சாதியின் பேரால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கட்டப்பஞ்சாயத்து கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற ஆணவக் கொலைகள் அனைத்தும் சாதியின் பேரால் நடந்தவையே. சாதி அமைப்புகள் ஒன்று சேர்ந்துதான் திருமண விவகாரத்தில் தலையீடு செய்து வன்முறையை தூண்டிவிடுகிறார்கள். சாதி அமைப்புகள் மூலம்தான் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார்கள். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணுடைய தாய், தந்தையை ‘சாதி மறுத்து திருமணம் செய்யும் அளவிற்கு என்ன பொண்ணு வளர்த்திருக்கே?’ என்று மிரட்டுகிறார்கள். அதன் நெருக்கடி காரணமாகவே பெரும்பாலான பெற்றோர்களின் தலையீடு அதிகரிக்கிறது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகள் வேறொரு சாதியைச் சேர்ந்த நபரை காதலிக்கிறார். இது தொடர்பாக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. திருமண நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண மண்ட பத்தில் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று நிராகரிக்கிறார் மண்டப உரிமையாளர். இது தொடர்பாக பெண்ணுடைய அப்பாவும் அம்மாவும் காவல் நிலையத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் எங்கள் சாதி சங்கத்தை சேர்ந்தவர்கள் போன் செய்து எங்களை மிரட்டு கிறார்கள் என்று புகார் கொடுக்கிறார்கள்.

காதலிக்கும் பெண்களின் தாய்-தந்தையரை கொடூரமாக மிரட்டும் அளவிற்கு சாதி அமைப்புகள் வளர்ந்திருக்கின்றன‌. அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட சாதி அமைப்புகள் இந்த வேலையை தீவிரமாக செய்து வருகின்றன. பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருக்கக்கூடிய ஆண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதில் அவர்களுக்கு சிக்கல் இல்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆண் பிற்படுத்தப்பட்ட சமூகத்து பெண்ணை திருமணம் செய்யும் போது அவர்கள் கொலை செய்யும் அளவிற்கு காட்டுமிராண்டி களாக மாறிவிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட ஒருவரின் வாரிசு தன்னுடைய பெண்ணின் வயிற்றில் வளரக் கூடாது என்கிற ஆணவம் அவர்களுக்கு கோலோச்சுகிறது.

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் அளித்த இரட்டை தூக்கு தண்டனை தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது உச்ச நீதிமன்றம் திருமண உறவுகளில் கட்டப்பஞ்சாயத்து குறித்து தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த விஷயத்தில்   நீதித்துறையும், அரசும் மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய அளவிற்கு சாதி அமைப்புகள் மிகக் குரூரமாக இருக்கின்றன. சாதிதான் இங்கு கட்டப்பஞ்சாயத்திற்கு காரணமாக உள்ளது. ஆகவே மத்திய அரசு இது குறித்து தனிச்சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவதுதான் பொருத்தமாக இருக்கும்” என்கிறார்.

வழக்குரைஞர் சுதா ராமலிங்கம் கூறுகையில், “திருமண உறவில் கட்டப்பஞ்சாயத்து குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது. திருமணமான தம்பதிகளுக்கு இடையில் பெற்றோர்கள் கூட தலையிடுவதற்கு உரிமை இல்லை என்பதை வலியுறுத்தி இந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஹாதியா வழக்கிற்கும் இந்தக் கருத்துக்கும் முரண்பாடு இருக்கிறது. ஹாதியா தன்னுடைய சொந்த விருப்பத்தில் திருமணம் செய்து கொண்டாலும், அவரால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. கல்லூரி நிர்வாகியின் கட்டுப்பாட்டில் அவர் படித்துக்கொண்டிருக்கிறார் என்பது வருத்தம் அளிக்கிறது.

இது எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தில் கெளரவக் கொலைகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை ஆணவக்கொலை என்றுதான் சொல்ல வேண்டும். கட்டப்பஞ்சாயத்து மூலம்தான் ஆணவக்கொலைகள் நடைபெறுகிறது என்பது உண்மைதானே? அதன் அடிப்படையில்தான் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திருமணம் என்பது சமூக கட்டுக்கோப்புக்குள்ளும், சாதி கட்டுக்கோப்புக்குள்ளும் இருக்க வேண்டும் என்கிற வெறித்தனத்தினாலே பெற்ற பிள்ளையையே கொல்ல நினைக்கிறார்கள். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டால் சுய சாதி மரியாதையும், மதிப்பும் போய் விடும் என்கிற தவறான புரிதலை சாதி அமைப்புகள் உருவாக்கியிருக்கின்றன‌. சாதிக் கட்டுப்பாடு என்பது இந்த சமூகத்தில் இழிவான கட்டுப்பாடாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதை உடைப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகையால் இந்தக் கருத்து நியாயமானது” என்றார்

- ஜெ.சதீஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

 • BombBlastLanka19

  இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்

 • 22-04-2019

  22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்