SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமுத மழையில் நனைந்து...

2018-04-17@ 15:39:09

நன்றி குங்குமம் தோழி

அமுதா - வேலு

‘‘திருமணம் ஆன என் தங்கையைப் பார்க்க சென்னிமலையிலிருந்து தங்கையின் ஊரான கரூருக்கு அடிக்கடி செல்வேன். அங்கே கிடைத்தவள்தான் என் அமுதா. எனக்குத் தெரியாமல் அவர் என்னை கவனித்திருக்கிறார். நான் என் தங்கையை மட்டுமே பார்க்கச் செல்வேன். அதனால் நான் அவரை கவனித்ததில்லை. ஏனெனில் எனக்குத் திருமணத்தைப் பற்றிய எந்த சிந்தனையும் அப்போதில்லை’’ என நம்மிடம் பேசத் துவங்கினார் வேலு என்கிற வேலுச்சாமி.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் போர்வை தயாரிப்புக்கு பெயர்போன சென்னிமலையில். நான், என் தம்பி, தங்கை என அளவான குடும்பம் என்னுடையது. அப்பா டெக்ஸ்டைல் தொழிலில் இருந்தார். பிறந்தபோது நார்மலான குழந்தையாக இருந்த நான் பத்துமாதம் கடந்த பிறகு வந்த கடுமையான காய்ச்சலில் போலியோ தாக்குதலுக்கு ஆளாகி நடக்கும் சக்தியினை இழந்து தவழத் துவங்கினேன். இரண்டு வாரத்திற்கு ஒரு அரைக்கால் பேன்ட் கிழியும் அளவுக்கு தவழ்வேன். நான்காம் வகுப்புவரை தவழ்ந்தே எல்லா இடங்களையும் கடந்து கொண்டிருந்தேன்.

பள்ளிக்கூடத்திற்கு என்னை அம்மாதான் தூக்கிக் கொண்டு வந்து விட்டுவிட்டு மீண்டும் வந்து தூக்கிச் செல்வார். என்னை கவனித்த என் தாத்தா நடை வண்டி வாங்கித் தந்து அதைப் பிடித்துக்கொண்டே நடக்கும் பயிற்சியினை வழங்கினார். அதில் எடுத்த பயிற்சி கொஞ்சம் கை கொடுத்தது. கைகளால் ஊனி எழுந்து, சுவற்றைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நடக்கத் தொடங்கினேன். எனக்கும் என் தம்பிக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம் என்பதால் என்னை என் தம்பியுடன் ஒன்றாக படிக்க அனுப்பினார்கள். பள்ளி வரை அப்பா கொண்டு வந்து வண்டியில் விடுவார்.

பள்ளிக்குள் சென்றதும் என் தம்பியை பிடித்துக்கொண்டே வகுப்புவரை சென்று விடுவேன். எங்கு சென்றாலும் என் தம்பி கூடவே வருவான். அவனோடு பனிரெண்டாம் வகுப்புவரை, அவன் கைபிடித்தே தூரங்களைக் கடந்து, ஒன்றாகப் படித்தேன். கல்லூரி வந்த பிறகு கவுன்சிலிங்கில் வெவ்வேறு கல்லூரி இருவருக்கும் கிடைத்தது. நான் கொங்கு பொறியியல் கல்லூரியில் பொறியியலில் ஐ.டி எடுத்து படித்தேன். கல்லூரி செல்லும்போது டிரை சைக்கிள் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டேன். 20 கிலோ மீட்டர் தினமும் வண்டியிலே டிராவல் செய்து கடப்பேன். கல்லூரி நண்பர்கள் நிறைய உதவினர்.

படிப்பு முடிந்ததும் அப்பாவோடு டெக்ஸ்டைல் பிஸினஸில் இணைந்து பணியாற்றினேன். அப்போது நானே முயற்சி செய்து கார் இயக்கவும் கற்றுக் கொண்டேன். நடக்க முடியவில்லை என்றாலும், தூரங்களை சவாலாகக் கடக்கத் துவங்கினேன். தங்கைக்கு திருமணமாகி இருந்தது. அவர் கணவர் மூலமாக நிகழ்ந்த திருமணம்தான் என்னுடையதும். எனக்கு முதலில் திருமணம் செய்வதில் நிறைய தயக்கங்கள் இருந்தது. ஏனென்றால் வரப்போகும் பெண்ணின் கனவுகளை என்னால் நிறைவேற்ற முடியுமா என்ற தயக்கம் நிறைய இருந்தது.

நான் தனியாக இயங்குவதே கஷ்டம். அதில் இன்னொரு பெண்ணை கஷ்டப்படுத்த வேண்டுமா எனவும் நினைத்தேன். என் அம்மாவிற்கும், தங்கைக்கும் என்னை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரியும். ஆனால் வரப்போகிற பெண்ணிற்கு எனவும் யோசித்தேன். என்னைப்போல போலியோ
வில் பாதிக்கப்பட்ட என் நண்பனின் வாழ்க்கையில், சொந்த அத்தை பெண்ணே அவனை விரும்பி காதலித்துவிட்டு, நம்பிக்கையின்றி பிரிந்துவிட்டார். அவன் காதல் தோல்வியில் முடிந்தது. இதெல்லாம் என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது.

எனக்கு வரப்போகிற பொண்ணும் எப்படி யோசிப்பாளோ என நினைத்தேன். எனக்குப் பிறக்க போகும் குழந்தைக்கும் இந்தப் பிரச்சனை வருமோ போன்ற குழப்பம் வேறு இருந்தது. எவ்வளவு கவுன்சிலிங் கிடைத்தாலும், என் மனதில் உறுத்திய விசயம் என் குழந்தையும் என்னை மாதிரி பிறந்துவிடக்கூடாது என்றே தோன்றியது. எனவே தொடர்ந்து என் திருமணத்தை தவிர்த்தேன்.

அமுதாவிற்கு என்னை பார்த்ததுமே பிடித்துவிட்டது. மனதளவில் என்னை திருமணம் செய்ய அவள் தயாராகி இருந்தாள். என் உடல் குறையை அவள் பெரிதாக எடுக்கவில்லை. அப்போது அவளுக்கு இருபத்திரெண்டு வயதுதான் ஆகியிருந்தது, மிகவும் குழந்தைத் தனமாக இருந்தாள். இருந்தாலும் நான் என் நிலையை, என் வாழ்க்கையை அவளிடம் விரிவாகச் சொன்னேன். அவள் அதை பெரிதாகவே மனதில் கொள்ளவில்லை. எனக்கு பெரிய விசயமாகப் பட்டதைப் பற்றி அவள் கொஞ்சமும் யோசிக்கவே இல்லை.

திருமணம்வரை கூட எனக்கு சரியாக காதல் இல்லை. திருமணத்திற்கு பிறகுதான் எங்கள் உண்மையான காதல் துவங்கியது. அவளை நான் நன்றாக பார்த்துக்கொண்டேன். அவளும் என்னை பரிதாபப் பார்வையோடு எந்த நிலையிலும் பார்த்ததே இல்லை. ஒரு நார்மல் நபரைப் போலத்தான் என்னை டிரீட் பண்ணுவாள். ஒரு முறைகூட சிம்பந்தியான பார்வையை அவள் என் மீது வீசியதே இல்லை. அதுவே எனக்கு அவள் மீது அதிக காதலை வளர்த்தது. எங்களுக்குள் நெருக்கமும் காதலும் அதிகமானது. நான் கஷ்டப்பட்டு எதாவது ஒரு வேலையினை செய்தால் நார்மலான ஜோடி மாதிரிதான் கிண்டல் கேலிகளோடு என்னோடு விளையாடுவாள்.

என் நிலை அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன். அவள் என்னை முற்றிலும் ஒரு நார்மலான கணவனாகவே ஏற்றுக் கொண்டிருந்தாள். என்னோடு பழகி பழகி அவளுக்கு என்னையும் எனக்கு அவளையும் பிடித்தது. இருவரின் விரும்பு வெறுப்புகள் பேசிப்பேசி புரிந்தது. எனது உடல் ரீதியான பிரச்னைகளை அம்மா மூலம் தெரிந்து கொண்டாள். என் தேவைகளை என் செயல்பாடுகளை அம்மாவைத் தொடர்ந்து அம்மாவைப்போல செய்யத் தொடங்கினாள். என் அம்மாவின் இறப்பிற்குப் பிறகு அம்மாவின் இடத்தை அவள் பிடித்திருக்கிறாள்.

நார்மலான கணவன்-மனைவி மாதிரி ஷாப்பிங் போவது, சினிமாவிற்கு அழைத்துப் போவது, வெளியில் அழைத்துப் போவது இவற்றை எல்லாம் என்னால் அவளுக்குத் தர முடியாது. அவள் மனதுக்குள் இந்த ஏக்கமெல்லாம் இருந்திருக்கும். எந்த நிலையிலும் அவள் அவற்றை என்னிடத்தில் வெளிப்படுத்தியதே இல்லை. திருமணம் ஆன அடுத்த மாதத்தில் அவள் தாய்மை அடைந்தாள்.

அவள் தாய்மை அடைந்திருந்தபோது மட்டும், என் கை பிடித்து நடக்க ஆசைப்பட்டாள். அதை என்னால் அவளுக்கு செய்ய முடியாமல் போனது. என் அம்மா விடம் அவளின் விருப்பத்தைச் சொன்னேன். அம்மா அவளை அழைத்துக்கொண்டு அவள் கை பிடித்து தினமும் நடந்தார். சில விருப்பங்களை அவள் என்னிடம் சொல்லாமலே மறைத்து விடுவாள்.

திருமணமான பத்து மாதத்தில், என் மகள் ஹர்சினி பிறந்தாள். என் பொண்ணு முதலில் பள்ளிக்குப் போகும்போது நார்மல் பெற்றோரைப் பார்த்து என்னைப் பற்றி விசாரித்தாள். என் மனைவி அவளிடம் பேசி புரிய வைத்த பிறகு அந்தக் கேள்விகள் என் மகளிடமும் இல்லை. நான் இல்லாமல் என் மகள் இருக்க மாட்டாள் என முடித்தார்.’’வேலுவைத் தொடர்ந்து பேசத் துவங்கினார் அமுதா.

‘‘அவரைப் பார்த்ததுமே எனக்கு பிடித்தது. எனக்கு அப்போதே புரிந்திருந்தது, என்னால் அவரோடு எதைச் செய்ய முடியும் எதைச் செய்ய முடியாது என. எனவே நான் அவரிடம் எதையும் வற்புறுத்தி கேட்கவே மாட்டேன். அவர் ரொம்பவும் அன்பானவர். எல்லாத்தையும் எனக்கு புரிய வைப்பார். அவரைப் பற்றி பல விசயங்களை அவர் எனக்கு புரிய வைத்தார். அவருக்கு ஏன் அப்படி ஆனது என விளக்கினார்.

அவர் எப்போதும் யார் உதவியையும் எதிர்பார்க்கவே மாட்டார். தேவைப்பட்டால் மட்டும்தான் என்னை உதவிக்கு அழைப்பார். அவரை நான் எப்போதும் ஒரு நார்மலாகத்தான் யோசிக்கிறேன். என மகளுக்கும் அவரைப்பற்றி அப்படியே யோசிக்க கற்றுக் கொடுத்திருக்கிறேன். எங்கள் மகளும் என்னைப்போல்தான். அப்பாதான் எல்லாமே அவளுக்கு.

அவள் அப்பா இருந்தால் உலகத்தையே மறந்து விடுவாள். எங்களுக்குள் எந்தத் தாழ்வு மனப்பான்மையும் இல்லை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். எனக்கு அவரும் என் பெண்ணும்தான் உலகம். அவர் எல்லாவற்றையும் மிகவும் சரியாவே செய்வார். எனக்கு அதுவே மிகப் பெரும் சந்தோஷம். அவரால் எதுவும் முடியாதுன்னு யாரும் நினைக்கக் கூடாது’’ என முடித்து நம்மிடம் விடைகொடுத்தார் அமுதா.

- மகேஸ்வரி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • VeronicaStorm

  ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

 • vehicletest

  பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

 • germanybuilding

  ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

 • siriyaa

  ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

 • londonprotest

  பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்