SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபிகா படுகோனே இலியானா.. இருவரையும் பாதித்த அந்த இரண்டு பிரச்னைகள்...

2018-04-16@ 15:34:54

நன்றி குங்கும் தோழி

மன அழுத்தம் குறித்து பொது வெளியில் மனம் திறந்த தீபிகா படுகோனே, இலியானா... சோசியல் மீடியாக்கள் வழியாக ரசிகர்கள், நடிகர்களுக்கு இடையிலான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் திரைத்துறையில் கதாநாயகிகளாக வலம் வரும் ஒரு சிலர் சமூக மாற்றத்துக்கான பணிகளில் களம் இறங்கி கலக்கி வருகின்றனர். சமீபத்தில் அந்த வகையில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் இரண்டு நடிகைகள் தங்களை பாதித்த மன அழுத்தம் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகள் குறித்து மனம் திறந்திருப்பது வரவேற்கத்தக்கது.

தங்களது இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் விழிப்புணர்வுக்காக தங்களைப் பற்றிய உண்மைகளை பகிர்ந்து கொண்ட இருவருக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. இந்தி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் தீபிகாபடுகோனே திரைத்துறையில் பெண்கள் விமர்சனத்துக்குள்ளாக்கப்படும் போது பெண் தரப்பு நியாயங்களை முன் வைக்கத் தவறாதவர். வித்தியாசமான கதைக் களங்களில் தன் நடிப்புத் திறமையால் முத்திரை பதிப்பவர். இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பத்மாவதி’ திரைப்படத்தின் கதாநாயகியான தீபிகாபடுகோனே புகழின் உச்சத்தில் இருப்பவர்.

பத்மாவதிக்காக கடுமையான உழைப்பையும், தியாகங்களையும் செய்யத் தயங்காத தீபிகா சமீபத்தில் தான் அனுபவித்து வரும் மன அழுத்தம் குறித்து பொதுவெளியில் பேசி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். புகழின் உச்சத்தில் இருப்பவர்கள் உச்சரிக்கும் வார்த்தைக்கு வலிமை அதிகம். அதிலும் அவர்கள் வாழ்வின் அனுபவங்களில் இருந்து பகிர்ந்து கொள்ளும் எதுவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும். மனநலம் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே தீபிகா மனம் திறந்திருக்கிறார்.

புதுடெல்லியில் நடந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு அப்படி என்ன சொன்னார் தீபிகா? ‘‘நான் என்னுடைய கடந்த காலத்தில் மன அழுத்தத்துடன் போராடி வந்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் மோசமான அனுபவமாக இருந்துள்ளது. ஆனால் அதிலிருந்து நான் முழுமையாக குணமாகிவிட்டேன் என்று கூறிவிட முடியாது. நான் மீண்டும் மன அழுத்தத்துக்குள் சென்று விடுவேனோ என்ற பயம் என்னுள் எப்போதும் இருக்கின்றது. மேலும் மன அழுத்தம் குறித்து நான் வெளிப்படையாகத் தெரிவித்ததால், திரைப்படங்களில் நடிக்க சில தயாரிப்பாளர்கள் என்னை அணுகாமல் இருந்திருக்கலாம்.

நான் மன அழுத்தத்தில் இருப்பதால் என்னால் நடிக்க முடியாது என நினைத்திருக்கலாம். அதனால் எனக்கு சிலர் பட வாய்ப்புகள் அளிக்காமல் இருந்திருக்கலாம். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான் நடிக்க வேண்டிய படங்களை நானே தேர்ந்தெடுக்க முடிகிறது. ஆனால் எங்கு வேலை செய்ய வேண்டும். எப்போது வேலை செய்ய வேண்டும் என முடிவெடுக்க வேண்டிய வசதி பலருக்கு உள்ளதா எனத் தெரியவில்லை’’ என்றார் தீபிகா.

‘தி லிவ், லவ், லாப்’ என்ற அமைப்பை நிறுவி நடத்தியும் வருகிறார் தீபிகா. கொள்கையளவில் முடிவை எடுப்பவர்கள், பணிபுரிபவர்கள், மனநலம் சார்ந்த குறைபாடுகளுடன் இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் தங்களது வேலைகளை இழக்காமல் அதிலிருந்து வெளியேறி சகஜ நிலைக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். மனநலம் சார்ந்த குறைபாடுகளுடன் உள்ளவர்களைப் பற்றிய இந்தியாவின் பார்வையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் நடந்த 21வது வேர்ல்டு காங்கிரஸ் மென்டல் ஹெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட நடிகை இலியானா தான் துன்புற்று வரும் மனநலப் பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசினார். அவரவருக்குள்ளிருந்து துன்புறுத்தும் மன அழுத்தம் குறித்து வெளியில் சொல்ல வெட்கப்படத் தேவையில்லை. மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே மன அழுத்தத்துக்கு காரணம் என்பதால் அதிலிருந்து விடுபட சிகிச்சை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் இலியானா.

இலியானாவுக்கு அப்படி என்ன பிரச்னை? அவரே சொல்கிறார், ‘‘தங்கள் உடலமைப்பைப் பார்த்து தானே வெறுக்கும் ‘பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்’ என்ற நோயாலும் மன அழுத்தத்தாலும் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். என் உடலுக்கு ஏற்றவாறு எல்லா விஷயங்களையும் தேர்வு செய்வேன். நான் எப்போதும், எதுவும் செய்ய முடியாத சோகமான பெண்ணாக இருந்தேன். ஆனால் அப்போது எனக்குத் தெரியாது நான் மன அழுத்தத்தாலும், டிஸ்மார்பிப் பிரச்னையாலும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று.

நோயின் உச்சத்தில் தற்கொலை செய்து கொண்டு வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். மன அழுத்தத்தில் இருந்தால் முதலில் நம்மை நாம் புரிந்து கொண்டு அதனை எதிர்க்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார் இலியானா. மன நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இலியானாவுக்கு ‘தி விமன் ஆப் சப்ஸ்டென்ஸ்’ விருது வழங்கப்பட்டது. மன அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் இரண்டும் பொதுவான பிரச்னைகளாக உள்ளன. இந்திய அளவில் 60 மில்லியன் மக்கள் இது போன்ற மன நலப் பிரச்னைக்கு ஆளாகியுள்ளனர்.

தனக்கு மன அழுத்தம் உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதுதான் இங்கு மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது. ஒரு வித குற்ற உணர்வோடும், அமைதியாகவும் மக்கள் இந்த மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்கின்றனர். இதனால் அவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்வதே பெரிய சவாலாக இருக்கின்றது. மன அழுத்தத்துக்கு தீர்வு காணாவிட்டால் அதுவே அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது.

இலியானா மேலும் கூறுகையில், ‘‘மூளையில் ஏற்படும் ஒருவித ரசாயன மாற்றமே மன அழுத்தத்துக்குக் காரணமாகிறது. இது சிகிச்சையின் வழியாக சரி செய்யக் கூடியது. ஒரே நாளில் மாயம் செய்துவிட முடியாது. படிப்படியாக மன அழுத்தத்தின் தாக்கங்களைக் குறைக்க முடியும். நம் மீதே நம்பிக்கை வைப்பது. நம்மீது நம்பிக்கை வைத்து அதனை எதிர்த்துப் போராடும் மனநிலையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்கிறார் இலியானா.

செலிபிரட்டி பெண்களுக்கு மட்டும் தான் இந்தப் பிரச்னையா? நம்மில் எத்தனை பேர் ஓயாத மன உளைச்சலோடு ஓடிக் கொண்டிருக்கிறோம். அன்பின் சிறு நதி முழு மனநோயாளியாக மாறிவிடாமல் பலரையும் பாதுகாத்து வருகின்றது. அன்பின் நதி வற்றிப் போகும் இடத்தில் தேற்றவும், ஆற்றவும் ஆளின்றி ஆதரவு தேவைப்படும் குழந்தையாய் நம் மனம் தத்தளித்து, உழன்று பின் மன அழுத்தம் உருவாகிறது. மனதைத் தாக்கும் கவலைகள், உங்கள் மூளையில் சுரக்கும் ரசாயனங்களில் மாற்றம் ஆகியவை தீராத மன அழுத்தத்தில் பிடித்துத் தள்ளுகின்றது.

இப்படியான மனநலப் பிரச்னைகளை எப்படி அணுகலாம் என மனநல மருத்துவர் மீனாட்சியிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ‘‘மன அழுத்தம் தனக்கு உள்ளதைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வது ஒரு வகை. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு அதீத மனக்கவலை, பசியின்மை, உடல் எடை குறைதல், அதிகாலையில் விழிப்பது, உடல் சோர்ந்து போதல், தனித்து இருத்தல், கவனக்குறைபாடு, தினசரி வாழ்வில் விருப்பமின்றி இருப்பது.

தன்னம்பிக்கையின்மை, தான் யாருக்கும் பிரயோசனமில்லை என்று எண்ணுதல், நம்பிக்கை இழத்தல், தற்கொலை எண்ணங்கள், தற்கொலை முயற்சி, தாம்பத்திய உறவில் ஆர்வமின்மை ஆகிய அறிகுறிகள் இருக்கும். இது போன்ற தொந்தரவுகள் இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்வது மனக்கவலையின் அறிகுறிகள் ஆகும். இதனை டிப்ரசிவ் டிஸ்ஆர்டர் என்கிறோம்.

இவை ஏன் ஏற்படுகின்றன என்றால் செரட்டோனின் மற்றும் மூளையில் நியூரோ டிரான்ஸ்மீட்டர்களின் அளவு குறைவதால் என்டோஜீனியஸ் டிப்ரசன் உருவாகிறது. இவர்கள் உடனடியாக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இவர்களுக்கு ஆன்டி-டிப்ரசன் மாத்திரைகள் அளிக்கப்படுகின்றன. மனதில் உள்ள நெகட்டிவ் சிந்தனைகளை வெளியேற்றும் உளவியல் சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன.

இவர்களுக்கு குடும்பத்தினரின் அரவணைப்பும் தேவைப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் வரும் 2020ம் ஆண்டில் மூன்றாவது உயிர்க்கொல்லி நோயாக மன அழுத்தம் இருக்கும் என அறிவித்துள்ளது. எனவே மன அழுத்தத்துக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற தயங்க வேண்டியதில்லை’’ என்கிறார் மீனாட்சி. நீங்கள் வழக்கம் போல இல்லை என்று உணர்ந்தால் நம்பத்தகுந்த நபர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். யார் சொல்லும் சமாதானத்தையும் உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் நீங்கள் உடனடியாக மன நல மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும்!

- யாழ் ஸ்ரீதேவி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • VeronicaStorm

  ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

 • vehicletest

  பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

 • germanybuilding

  ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

 • siriyaa

  ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

 • londonprotest

  பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்