SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓர் ஆணிடம் பெண் என்ன எதிர்பார்க்கிறாள்?!

2018-02-14@ 14:23:21

நன்றி குங்குமம் டாக்டர்

கட்டுரைக்கு முன்... இறுதித் தீர்ப்பு என்று எதுவும் இல்லை. எல்லாமே மறுவரையறைக்கும், மறுபரிசீலனைக்கும் உட்பட்டதுதான். விதிகள் உருவாகும்போதே விதிவிலக்குகளும் உருவாகிவிடுகின்றன.  அதனால், நிமிடத்துக்கொரு முறை நிலைமாறும் மனம் பற்றி ஒரு துல்லியமான வரைபடத்தை ஒருபோதும் நம்மால் தயாரிக்க முடியாது. தோராயமாக ஒரு முடிவுக்கு வரலாம்... அவ்வளவுதான்!

காலம்காலமாக பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே நிலவும் உறவுச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்ற முயற்சியாகவே இந்த கவர் ஸ்டோரியைத் தொகுத்திருக்கிறோம். தகுதிவாய்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளின்படியும், மிக முக்கியமான சில ஆய்வுகளின்படியும் கவனமாகவே இந்த கட்டுரைத் தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இது இறுதியான ஒன்றல்ல. பெண்களின் உளவியலை ஆண்களும், ஆண்களின் உளவியலைப் பெண்களும் இதன்மூலம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதன் பிரதான நோக்கம். அந்த நோக்கம் ஓரளவேனும் நிறைவேறினால் மகிழ்ச்சி!
-  ஆசிரியர்

காதலியின் மனதில் இடம் பிடிக்கத் தெரியாமல் பருவ வயதில் தவிக்கும் ஆண், வருடக்கணக்காக குடும்பம் நடத்தியும்  மனைவியின் மனதைப் படிக்க
முடியாமல் காலம் முழுவதும் குழம்பிக் கொண்டே இருக்கிறான். இதை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. தொடர்ச்சியாக பட்டிமன்றங்களில் பெண் கிண்டலடிக்கப்படுகிறாள். பெண்களைத் திட்டும் டாஸ்மாக் பாடல்கள் சினிமாவில் எப்போதும் ஹிட்டாகிறது. ஆங்கில ஊடகங்களில் பெண்களைப் பற்றிய ஜோக்குகள் எல்லாம் மிகவும் பிரசித்தம்.

ஆண்டாண்டு காலமாய் விடை தெரியாத கேள்விதான் இது... இந்தப் பெண்கள் ஆண்களிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?  உளவியல் ஆலோசகர் அருள் வடிவுக்கு இந்த கேள்வி.

‘‘அப்பா, அண்ணன், நண்பன், காதலன் என்று எந்த ஆணும் நம்பிக்கைக்கு உரியவனாக வேண்டும் என்றே பெண்கள் விரும்புகின்றனர். இது ஆண்களைப் பற்றிய பெண்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பு. ஆண் தன்னுடைய வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவே தனக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.

எதிர்காலம் பற்றிய பயம் கொண்டவர்கள் பெண்கள் என்பதால் பொருளாதாரம் என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியம். அதனால் எந்த கஷ்டமும் இல்லாத வசதியான வாழ்க்கையே பெரும்பான்மை பெண்களின் தேர்வாக உள்ளது. பெண்களின் சேமிப்பு பழக்கத்துக்குப் பின்னால் இருப்பது இந்த எதிர்கால பயம்தான். அதனால்தான் நல்ல வேலை, நல்ல வருமானம் கொண்ட ஆண்களைத் தங்கள் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

எதிர்காலத்தில் தானும், தன்னுடைய குழந்தைகளும் குறைந்தபட்ச பாதுகாப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது பெண்களின் மிக முக்கியமான உளவியல். முக்கியமாக, பெண்கள் சமூகம் சார்ந்தே தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும் குணம் கொண்டவர்கள். ஒரு செயலைச் செய்யும் முன் இதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துத்தான் பெண்கள் ஒரு செயலில் ஈடுபடுகிறார்கள். மணிக்கணக்காக ஒரு புடவையை ஜவுளிக்கடையில் தேர்ந்தெடுப்பதைக்கூட ஓர் எளிய உதாரணமாக இதற்கு சொல்லலாம்.

அதேபோல், வீட்டு வேலைகளில் தங்களுக்கு உதவியாக தங்கள் கணவன் இருக்க வேண்டும் என்றும் ஒரு பெண் விரும்புகிறாள். அதனால்தான், சமைக்கிற ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது/மாதவிலக்கு நாட்களின்போது ஓர் ஆண் தனக்கு சமைத்துக் கொடுப்பவனாக இருக்க வேண்டும் என்றும் பெண் விரும்புகிறாள்.

‘இன்னிக்கு ஒருநாள் சமைக்க வேண்டாம்... ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்ளலாம்’ என்று ஓர் ஆண் கூறினால், பெண் உச்சகட்ட சந்தோஷத்துக்குச் செல்கிறாள். ஞாயிற்றுக்கிழமையில் குடும்பத்தோடு வெளியில் பூங்காவுக்கோ, சினிமாவுக்கோ சென்றுவிட்டு வந்து இரவு நேரத்தில் சமைப்பதைப் பெண் பெரும்பாலும் அவஸ்தையாகத்தான் நினைக்கிறாள்.

அதேபோல், குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதில் துவங்கி கரண்ட் பில் கட்டுவது வரை தானே செய்வதும் அல்லது கணவருக்கு நினைவுபடுத்துவதும் பெண்களுக்கு சலிப்பைத் தருகிறது. வீடு சார்ந்த பொறுப்புக்களைப் பகிர்ந்துகொள்வதோடு அதை மறக்காமல் செய்து முடிக்கும் ஆண்களைப் பெண்களுக்குப் பிடிக்கிறது. ஆண் பெண் இருவரும் பணியாற்றும் இடங்களில் வேலைகள், பொறுப்புகள் எல்லாவற்றிலும் உறுதுணையாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது.’’

பெண்கள் ஆண்களைப் பார்க்காமல் பார்ப்பது என்ன?

‘‘பெண்கள் ஆண்களை பாதம்  முதல் கேசம் வரை அத்தனையும் கவனிக்கிறார்கள். அதனால், சுத்தமாக இருப்பது ஓர் ஆணுக்கு மிகவும் முக்கியமான தகுதி. முதலில் பெண்கள் பார்ப்பது ஆண்களின் பாதங்களை என்றால் நம்ப முடிகிறதா? ஓர் ஆண் அணியும் செருப்பு அல்லது ஷூ சுத்தமாக இருப்பதோடு அப்டேட்டாக இருப்பதும் அவசியம் என்பதைக் கூட பெண் கவனிக்கிறாள்.

டிரஸ்ஸிங் இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டியது முக்கியம். வெளியிடங்களில் ஆண்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் கவனிக்கின்றனர். ஹேர்ஸ்டைலில் இன்றைய டிரெண்டை பின்பற்றும் ஆண்களையும் பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது. பாடி லாங்வேஜ், மேனரிஸம், பேசும் ஸ்டைல் ஆகியவற்றைப் பார்த்தும் பெண்கள் மனதுக்குள் மார்க் போடத் தொடங்குகின்றனர். வியர்வை ஸ்மெல் அதிகமானாலும் மார்க் மைனஸில் போகும்.

 நறுமணம் மிக்க பெர்ஃப்யூம் பயன்படுத்தலாம். வாய் நாற்றம் இன்றிப் பார்த்துக் கொள்ளவும். பொது இடங்களில் கண்ட இடங்களில் சொறிவதும் ஆபத்தே. பெண்கள் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகம் நாடகத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் பார்த்த கணத்திலேயே வெறுக்கத் தொடங்குகின்றனர். அதை காமெடியாகவும் நினைக்கிறார்கள். இயல்பாகவும், அப்டேட்டாகவும் உள்ள ஆண்களுக்கு பெண்கள் மதிப்பெண்களை அள்ளி வழங்குகின்றனர்.’’

ஆண்களிடம் பெண்கள் வெறுப்பவை...


‘‘சாதாரணமாகப் பேசும்போதே கொச்சையான வார்த்தைப் பயன்பாடு. பொது இடங்களில் நாகரிகம் இன்றிப் பேசுவது. ஆண் என்ற கர்வத்துடன் இருப்பது, எதிலும் ஆர்வம் இன்றி இருப்பது, திறமைக் குறைவு, தனிமையை மட்டுமே விரும்புவது, நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பது, சைக்கோ குணத்துடன் செயல்படுவது.

பயமுறுத்துவதுபோல பேசுவது, சுயநலவாதியாக செயல்படுவது, காதலற்று இருப்பது, எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவது, வேலையில் மட்டும் கவனம் செலுத்தியபடி ரொமான்ஸ் இன்றி இருப்பது, கவனக்குறைவு, சோம்பேறித்தனம் இவை எல்லாம் ஆண்மீது பெண்ணுக்குவெறுப்பை ஏற்படுத்துகிறது.’’

ரொமான்ஸ் பற்றிய பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?


‘‘இயல்பாகவே பாராட்டை விரும்பும் குணம் கொண்டவன் மனிதன்.  இந்த குணம் பெண்ணிடம் மிகவும் அதிகம். தன்னுடைய சின்னச்சின்ன மாற்றங்களைக் கூட ஆண் கவனிக்கிறவனாக இருக்க வேண்டும், அதை புகழ வேண்டும் என்று பெண் எப்போதும் விரும்புகிறாள். அது சமையலாக இருந்தாலும் சரி... டிரஸ்ஸிங்காக இருந்தாலும் சரி...

அவ்வப்போது வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
காமத்தைப் பொறுத்தவரை  தனக்கு விருப்பமில்லாத நேரத்தில் கணவன் தொடுவதைப் பெண் விரும்புவதில்லை. அதேபோல் தனக்கு செக்ஸ் தேவைப்படும் போது அதை மறைமுகமாகவே பெரும்பாலான

பெண்கள் ஆணுக்குத் தெரிவிக்கின்றனர். அதை புரிந்துகொள்ளாதவனாக மக்காக இருக்கும்போது பெண்கள் கோபம் கொள்கிறார்கள்.இருவரும் மனம் ஒன்றியிருந்தாலும் தன்னுடைய தேவையை மட்டுமே முடித்துக் கொண்டு விலகுகிற ஆணையும் பெண் வெறுக்கிறாள். மற்ற நேரங்களில் அன்பாகவோ, அக்கறையாகவோ நடந்துகொள்ளாதவன் காமத்துக்காக மட்டுமே தன்னை நெருங்கும்போதும் பெண் ஓர் ஆணை அதிகம் வெறுக்கிறாள்.

காமத்துக்காக அணுகும் ஆண் குளிக்காமல்/பல் துலக்காமல் இருப்பதையோ, குடித்துவிட்டு வருவதையோ பெண்கள் சகித்துக் கொள்வதில்லை. ரொமான்ஸ் நேரத்தில் மற்ற விஷயங்களில் கவனத்தைச் சிதறவிடுவதும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்துகிறது. இந்தக் குறைகளை எல்லாம் சரிசெய்தால் ஒரு பெண்ணை தன் அன்பால் ஓர் ஆண் ஆளலாம்!’’

- கே.கீதா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்