SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயானத்தை வென்றவள்

2018-02-12@ 14:51:55

நன்றி குங்குமம் தோழி

- மகேஸ்வரி

மயானம் என்றால் பொதுவாக ஓர் அச்சம் நிலவுகிறது.  அந்த அளவிற்கு பயம் கொள்ள ஒன்றுமே இல்லை என அசால்டாய் சிரிக்கிறார் ஆங்கில இலக்கியமும், ஆசிரியர் பயிற்சியும் முடித்து, கடந்த மூன்றரை ஆண்டுகளைக் கடந்து சென்னையில் வேலங்காடு மயானப் பொறுப்பாளராய் பணிபுரியும் பிரவீனா. இவருக்கு மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பாக மரபை உடைத்த பெண்களுக்கான விருது கிடைத்துள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் கையால் விருது பெறவிருக்கிறார்.

‘‘பேய், பிசாசு, பழிவாங்குதல், மறுஜென்மம் என்ற எந்த மாயையும் கிடையாது. கடந்த மூன்றரை ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட உடல்களை தினமும் பார்த்து, அவர்களின் இறப்பை பதிவு செய்து எரிக்கிறேன். இறந்த உடலின் மண்டை ஓட்டு பகுதியோடு, அஸ்தியினை சேகரித்து, உறவினர்களிடத்தில் கொடுக்கிறேன்” என்கிறார் பிரவீனா. ஐ.சி.டபிள்யூ.ஓ என்கிற தனியார் தொண்டு நிறுவனத்திடம் அரசு 7 மயானங்களை பராமரிப்புப் பணிக்காக தந்திருக்கிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் பணியாளராய் வேலங்காடு மயானத்தின் பொறுப்பாளராக  இருக்கிறார் பிரவீனா.

“என் குடும்பத்தினர் இந்த வேலைக்கு நான் போக எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. எனது மகன் ஆறாவதும் மகள் மூன்றாவது வகுப்பும் படிக்கிறார்கள். அம்மா சுடுகாட்டில் வேலை செய்கிறேன் என்பது என் குழந்தைகளுக்கு நன்றாகத் தெரியும். நான் மயானத்தில் நடக்கும் விசயங்களை குடும்பத்தினரிடம் பகிரும்போது குழந்தைகளும் அதை கவனித்திருக்கிறார்கள்.

வீட்டருகிலோ அல்லது பள்ளி செல்லும் வழிகளிலோ இருக்கும் அஞ்சலி சுவரொட்டியினைப் பார்த்துவிட்டால், அம்மா நான் பார்த்த இந்த பெயர் உள்ள அங்கிள் அங்கே வந்தாரா எனக் கேட்பார்கள். இல்லையெனில், அம்மா நிறைய டெக்ரேட் செய்து போன ஒரு பாடியப் பார்த்தோம். அது உன் சுடுகாட்டுக்கு வந்துச்சா எனக் கேட்பார்கள்” என்கிறார்.

‘‘இங்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பு வரை இறப்பு என்றால் பக்கத்து வீட்டில் இருக்கும் பாட்டி தாத்தா இறப்பு, உறவினர் ஒருவரின் இறப்பு இப்படித்தான் பார்த்திருக்கிறேன். உடல் எரிவதை அருகே பார்த்து, எரிந்த உடலின் அஸ்தியினை சேகரித்து உறவினர்களிடம் கொடுத்து வழியனுப்பும் கடைசி காரியங்களையும் இங்கு வந்த பிறகுதான் பார்க்கிறேன். மயானச் சூழல் வேண்டுமானால் வேறுமாதிரி இருக்கலாம். ஆனால் எல்லோரையும் போல நானும் காலையில் ஒன்பது மணிக்கு போய் மாலையில் ஆறு மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறேன். என்ன மயான அமைதிக்குள் வேலை செய்கிறேன் அவ்வளவுதான்.

நான் இந்த வேலைக்குச் சென்ற முதல் நாளே ஏழு உடல்கள் வந்தன. வேலைக்குப் போன புதிதில் உடல்கள் வந்தால் ஓடிஓடிப் பார்ப்பேன். தற்கொலை செய்தவர்கள், விபத்தில் இறந்தவர்களின் உடலாக இருந்தால் வேகமாக ஓடி ஆர்வமாய் பார்ப்பேன். உறவினர்கள் அழும்போது நானும் அழுவேன். ஒன்றரை மாதங்கள் வரை இந்த நிலை. போகப் போக பழகிவிட்டது. பிறப்பு மாதிரி இறப்பும் இயல்பான விசயம் என மனம் ஏற்றுக்கொள்ள பழகியிருந்தது.

குழந்தைகள் உடல் வரும்போது மட்டும் இப்போதும் மனம் கஷ்டப்படும். பல நேரங்களில் இறந்த குழந்தையின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவேன். 2015 சென்னை வெள்ளத்தில் ஒரு நாளைக்கு 15க்கு மேற்பட்ட உடல்கள் அடுத்தடுத்து வந்தன. அப்போது காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிவரை உடல்களை எரியூட்டிய அனுபவமும் உண்டு.

நிறைய மனிதர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது. நிறைய அனுபவங்கள். அவை வலி நிறைந்ததாகவும் இருக்கும். திருச்சியில் இருந்து 34 வயது உடலொன்று. இலவச புற்றுநோய் மருத்துவமனையில் மாத்தூரில் இறந்தவர். எங்கள் மயானத்திற்கு அமரர் ஊர்தியில் அனுப்பிவிட்டனர். அவருடைய மனைவி இளம் வயது. 8 மாதக் கைக் குழந்தை வேறு. உடன் யாரும் இல்லை. குழந்தைக்கு பால், பிஸ்கெட் வாங்கிக் கொடுத்து, அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி இறுதி மரியாதை செய்து, அஸ்தியை சேகரித்துக் கொடுத்து, சாப்பாடு கொடுத்து கைச் செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பி வைத்தோம்.

ஒரு  அம்மா வீட்டு வேலை செய்பவர். பத்து பன்னிரெண்டு வயதில் இரண்டு பையன்கள்.  உறவினர் யாரும் இல்லை. அவருக்கு 40 வயது. வியாதியில் இறந்துவிட்டார். ஆதரவின்றி நிர்கதியாக மயானத்துக்கு உடலோடு வந்தார். குழந்தைகள் பசியால்  இருக்க, டீ, பன், உணவு வாங்கிக் கொடுத்து, இறுதி நிகழ்வை முடித்து,  அஸ்தியைக் கொடுத்து கடற்கரைக்கு ஆட்டோவில், எங்கள் ஊழியர்களுடன் அனுப்பி அஸ்தியையும் கரைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.

எல்லாராலும் இதைப் பண்ண முடியாது என நினைக்கும்போது நான் செய்யும் இந்த வேலை எனக்கு திருப்தியாக இருக்கிறது. வாழ்க்கை முழுவதும் செய்யச் சொன்னாலும் செய்வேன். இறுதி மரியாதை செய்ய வரும் பல பெரியவர்கள் என்னை வாழ்த்தி தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கிறார்கள்.‘இந்த இடத்தில் நீ இருக்கிறாய். நீ செய்வது மிகப் பெரிய வேலை. பெரிய விசயம்.

என்ன உதவி வேண்டுமானாலும் கேளும்மா’ என்பார்கள். சில பெரியவர்கள் சற்று காமெடியாக, ‘நானும் ஒரு நாள் இங்கதான் வருவேன், அன்னைக்கு என்னை நல்லாப் பார்த்துக்கோம்மா’ என கிண்டலாகச் சொல்லிப் போவார்கள். சிலர் ‘எப்படி ஒரு பெண்ணா தைரியமாக இங்க வேலை செய்யுற?’ என கேள்வியும் கேட்பார்கள். ‘முன்னப்பின்ன செத்தால்தான் சுடுகாட்டுக்கு வழி தெரியும்’னு பழமொழி சொல்லுவாங்க.
முதல்நாள் உண்மையிலே வழி தெரியாம மயான அலுவலகத்துக்கு வழி கேட்டுக்கொண்டே போனேன். அங்கிருந்தவர்கள் நான் உள்ளே வருவதைப் பார்த்து கேலியும் கிண்டலும் செய்தார்கள். இறப்பில் இறுதி வேலை செய்யும் பண்டாரம் அல்லது தாசரி என அழைக்கப்படுபவர்களும், இறந்த உடலுடன் வரும் உறவினர்களும் என்னை ரொம்ப வித்தியாசமாகப் பார்த்தார்கள். சிலர் என் காதில் விழும்படி, ‘இந்த இடத்தைக் கூட விடமாட்டேங்குதுக’ எனக் கிண்டலும் அடித்தார்கள்.

மயானத்தில் வேலை செய்பவர்களோடு இணைந்து பணியாற்றுவது ஒரு பெண்ணாய் துவக்கத்தில் எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. முதலில் நுழைந்ததுமே கையிலெடுத்தது, கழிப்பறைகளைத்தான். கழிப்பறைகளை பெண்களுக்கு, ஆண்களுக்கு எனத் தனியாக மாற்றி, டைல்ஸ் பதித்து, சரியான தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து, அனைவரும் பயன்படுத்த, சுத்தமான இடமாக மாற்றினோம். ஆண்கள் முடியினை மழித்து, முகச் சவரம் செய்ய நிலைக் கண்ணாடி ஏற்பாடு செய்தோம்.

அவசரத்தில் இவற்றை எல்லாம் அவர்கள் எடுத்து வர முடியாது. வரும் கூட்டத்தில் முதியவர், குழந்தைகள் ஆங்காங்கே வெயிலில் நிற்பதைப் பார்த்து அவர்கள் அமர்வதற்கு இருக்கைகளை உருவாக்கினோம். அஸ்தியை பெற்றுச் செல்ல தூரத்திலிருந்து வருபவர்கள் ஒரு மணி நேரம் வரை வெயிலில் அங்கேயே காத்திருப்பர். காத்திருப்பவர்களுக்காக ஏர் கூலர், மின் விசிறி, ஃப்ரிட்ஜ் போன்ற வசதிகளை ஏற்பாடு செய்தோம். ஆங்காங்கே குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆறு மாதத்திற்கு ஒரு முறை முறையான தடுப்பூசி போடப்படுகிறது. நிறைய மரங்களை ஆங்காங்கே நட்டு வைத்தோம். அழகழகான பூந்தொட்டிகளை வாங்கி நுழைவு வாயில் முழுவதும் வைத்து, இடுகாட்டை நந்தவனமாக மாற்றினோம். சி.சி.டிவி. கேமராவை எல்லா இடங்களிலும் பொருத்தினோம்.

உடல் உள்ளே நுழைவதில் துவங்கி, எரித்துவிட்டு, உறவினர்கள் திரும்பிச் செல்லும்வரை அனைத்து நிகழ்வுகளும் கேமரா வழியாக பதிவாவதுடன், இருந்த இடத்தில் அவர்களின் நடவடிக்கை திரையில் கண்காணிக்கப்படும். சிமென்ட் நடைபாதைகள் போடப்பட்டன. நகராட்சி கட்டடத்திற்கான அடையாளமான மஞ்சள் வண்ணத்தை மாற்றி நல்ல ப்ரைட்டான வண்ணத்தை பூசினோம். ஷாமியானா, தண்ணீர் வசதி ஆங்காங்கே ஏற்பாடு செய்தோம். தினமும் டன் கணக்கில் மாலைகள், மலர்கள் வீணானது. அவை அழுகி வீணாகாமல் தடுக்க, உரமாக மாற்றி செடி கொடிகளுக்கு போடத் துவங்கினோம்.  ஒவ்வொரு உடலின் இறுதி நிகழ்வு முடிந்ததும் அந்த இடத்தை சுத்தம் செய்து கொண்டே இருப்போம்.

இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் பெறுவது தொடர்பான  தகவல் பலகைகள் ஆங்காங்கே இடம்பெறச் செய்து, நுழைவு வாயில் சீர்படுத்தப்பட்டது. அனைத்தும் இங்கு இலவசம். இறப்பு குறித்த முறையான மருத்துவச் சான்றிதழ் மட்டும் இருந்தால் போதும். யாருக்கும் எந்தப் பணமும் தர வேண்டியதில்லை. எனவே இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம், இடைத்தரகர்களையும் உள்ளே அனுமதிப்பதை தடை செய்தோம்.

சுடுகாடு என்றால் பெண்கள் வரத் தடை செய்யப்பட்ட இடம் என்கிற தயக்கம் எல்லாம் இருந்தது. படித்த பெண்கள் கூட உள்ளே வர பயம், வீட்டிற்குத் தெரிந்தால் திட்டுவார்கள் என்ற நிலை இருந்தது. பெண்ணாகிய நாங்கள் பணியாற்றும் இடமாக அது மாறி இருப்பதால், பெண்கள் இயல்பாய் வந்து செல்லும் இடமாக மாறத் துவங்கி இருக்கிறது.

துவக்கத்தில் வீட்டின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சில உறவுகள் என் வேலையை அறிந்து அவர்கள் வீட்டு நல்ல நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கத் தயங்கினார்கள். ஆனால் இப்பொழுது நிறைய மாற்றம் அவர்களிடமும் தெரிகிறது. நிறைய பெண்கள் இந்த வேலைக்கு என்னைப் பார்த்து தைரியமாக வரத் துவங்கிவிட்டார்கள். மயானத்தில் பெண்களும் பணியில் இருப்பதால் ஆண்கள் மட்டுமே இருக்கும் இடம் என்ற எண்ணம் போய் இறுதி நிகழ்விற்கு பெண்கள் நிறைய வரத்துவங்கிவிட்டார்கள்.

ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கு பையன் இல்லை. எனவே அவரின் மகளே வந்து அஸ்தியினை கேட்டு பெற்றுச் செல்கிறார். ஆண்கள்தான் இதுவரை கொள்ளி வைக்கும் சட்டியினை ஏந்தி வெள்ளை முண்டு கட்டி, வெள்ளை துண்டு போர்த்தி முன்னால் வருவார்கள். ஆனால் முதல்முறையாக ஒரு பெண் சேலையின் மேல் வெள்ளை முண்டை இடுப்பில் கட்டி, தோள்களில் ஒரு வெள்ளைத் துண்டை போர்த்தி, கையில் கொள்ளிச் சட்டியினை எடுத்து சவ ஊர்வலத்திற்கு முன்னால் தைரியமாக நடந்து வந்தார்.

வாரிசு இல்லை என தன் கணவருக்கு அந்தப் பெண்ணே பானை உடைத்து, தீ மூட்டி இறுதி காரியத்தை செய்தார். இதெல்லாம் மயானத்துக்குள் பெண்களும் வருவதற்கான பெரிய மாற்றம்தானே? இறந்தவரின் வயது, என்ன மாதிரியான இறப்பு, வீட்டு முகவரி, இறந்த நேரம் இவற்றை தெளிவாக துல்லியமாக பதிவு  செய்ய வேண்டும். ஒவ்வொரு உடலை எரிப்பதற்கான நேரத்தை சரியாக ஒதுக்கித் தரவேண்டும். அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல் முன்னறிவிப்பின்றி திடீர் என வரும். அதையும் சமாளிக்க வேண்டும்.

ஓர் உடல் உள்ளே வந்ததில் இருந்து உறவினர்களிடம் அஸ்தியை வழங்குவதுவரை அனைத்து வேலைகளையும் முன்னால் இருந்து செய்து கொடுப்பதுடன், அவர்களின் சான்றிதழை சரிபார்த்து, பதிவு ஏடுகளில் எழுதி, நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து இறப்புச்சான்றிதழை அவர்களுக்கு வழங்குவதுவரை என் வேலை.

பத்தாண்டுகளுக்கு முன் இறந்தவர்களுடைய இறப்புச் சான்றைக் கேட்டால்கூட பதிவுகளைப் புரட்டி தேடி எடுத்துத்தர வேண்டும். கவிஞரும் பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் உடல், நான் பணியாற்றிய வேலங்காடு மயானத்திற்கு வந்தபோது இரவு 9 மணியைத் தாண்டியது. அப்படியான சமயங்களில் இறுதிவரை இருக்கவேண்டும். மறக்க முடியாத நாள் அது” என்கிறார் இவர்.

ஹரிஹரன், செகரட்டரி, ICWO
எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் நலிந்த மக்கள், பெண்களுக்காக கடந்த 14 வருடமாக வேலை செய்யும் Indian Community Welfare Organization (ICWO) சென்னை அண்ணா நகரில் இயங்குகிறது. சென்னை மாநகராட்சி, மயானத்தை பராமரிக்கும் பணியை எங்கள் அமைப்பிடம் வழங்கினர். எது செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை. பராமரிப்பு என்பதையே அறியாத சுடுகாட்டை, நாம் எப்படி சீர் செய்யப் போகிறோம் என முதலில் தயக்கமாக இருந்தாலும், பெண்கள் நிர்வாகம் செய்தால் சிறப்பாக இருக்கும் என முடிவு செய்தேன்.

நான் நினைத்தது போலவே அத்தனை மாற்றங்களும் சாத்தியப்பட்டது. மயானம் நந்தவனமாய் மாறியது. பெண்கள் பாதுகாப்பாய் பயமின்றி வந்துபோகிறார்கள். எங்கள் பராமரிப்பில் உள்ள மயானங்கள் பயோ கேஸ் வழியாக இயங்குவது. கருவேல மரத்தை சின்னத் துண்டுகளாக வெட்டி பாய்லரில் போட்டு எரித்து, அதிலிருந்து வரும் வாயு பயன் படுத்தப்படுகிறது. உடல் வைக்கப்படும் ட்ராலியின் இடதுபுறம் மூன்றும், வலது புறம் மூன்றும், தலை பகுதியில் ஒன்றும் என ஏழு துளைகள் இருக்கும்.

ட்ராலியில் நெருப்புடன் உடலை உள்ளே தள்ளுவோம். அந்தத் துளை வழியாக கேஸ் உள் நுழைந்து உடலை எரிக்கத் துவங்கும். ஒரு உடல் எரிய 1 மணி நேரம் எடுக்கும். அதன் பிறகு அஸ்தியை எடுத்து உறவினர்களிடம் வழங்குவோம். ஒரு நாளைக்கு பத்து உடல்கள் வரை எரியூட்டும் வசதி சில மயானங்களில் உள்ளது. ஓட்டேரி, பாலகிருஷ்ணாபுரம், கண்ணன் காலனி, புழுதிவாக்கம், வளசரவாக்கம், காசிமேடு, பிருந்தாவனம் காலனி என இதுவரை ஏழு சுடுகாட்டை நாங்கள் எடுத்து பராமரிப்பு செய்து வருகிறோம்.

ஓட்டேரி, பாலகிருஷ்ணாபுரம், காசிமேடு, புழுதிவாக்கத்தில் பெண்கள் மயானப் பொறுப்பாளராக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இந்த வேலையைச் செய்ய நிறைய பெண்கள் முன்வரத் துவங்கியுள்ளனர். வரத் தயாராக உள்ள பெண்களுக்கு நாங்கள் முறையான பயிற்சி கொடுத்து பணியில் அமர்த்துகிறோம். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏழு மயானத்தில் பணியில் உள்ளவர்களின் மாத ஊதியம் மற்றும் பாதுகாப்பு அனைத்தும் எங்கள் அமைப்பின் மூலம் தரப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்