SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டுக்கு செல்லும் பாதை

2017-12-05@ 16:39:53

நன்றி குங்குமம் தோழி

எதுவுமே சரியாக போகவில்லை என்றால் பாட்டிக்கு அழைப்பு விடு.
- இத்தாலிய பழமொழி


வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் ருசித்து, மரணத்துக்காக காத்திருக்கும் எழுபத்தெட்டு வயதான பாட்டிக்கும், வாழ்க்கையை அனுபவிப்பதற்காக அதன் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஏழு வயதான பேரனுக்கும் இடையேயான பிணைப்பை அழகாகச் சித்தரிக்கிறது ‘தி வே ஹோம்’.

கொரியாவின் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைக்கிராமம். அங்கே ஒரு பாட்டி தன்னந்தனியாக குடிசையில் வசித்து வருகிறாள். அவளால் வாய் பேச முடியாது. காது மட்டும் கேட்கும். அவளுக்கு நகரத்தில் ஒரு மகளும், பேரனும் இருக்கிறார்கள். எதிர்பாராத ஒரு நாளில் பாட்டியின் குடிசைக்கு அம்மாவுடன் வருகிறான் ஏழு வயதான பேரன். நகரத்தில் அம்மாவின் பிசினஸ் சரியாகப் போகவில்லை. அதனால் அவர் வேறு வேலையைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். வேலை தேடுவதற்காக பல இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் மகன் தன்னுடன் இருப்பதைக் காட்டிலும் பாட்டியிடம் இருப்பதே நல்லது என்று அவர் நினைக்கிறார்.

பேரன் கைக்கு அடக்கமான வீடியோ கேம்ஸை எந்த நேரமும் விளையாடிக் கொண்டிருக்கிறான். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட துரித உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறான். அந்த மலைக்கிராமத்தில் வசிக்கின்ற மக்களை அவனுக்கு சுத்தமாகப் பிடிப்பதில்லை. அதனால் அவன் பாட்டியுடன் தங்க மறுக்கிறான். அம்மா அவனை அடித்து மிரட்டி பாட்டியுடன் தங்க வைக்கிறார். எந்தவிதமான வசதிகளும் அற்ற அந்த மலைக் கிராமத்தில் பாட்டியுடன் ஒரு மாத காலம் அவன் தங்குகிறான். அந்த ஒரு மாத காலத்தில் அவனுக்குள் நிகழ்கின்ற மாற்றங்கள்தான் படத்தின் கதை. பாட்டியின் குடிசை எந்த நேரத்திலும் உடைந்து விழுவதற்காக காத்திருக்கிறது.

குடிசைக்குள் ஆங்காங்கே சிலந்திகள் கூடு கட்டியிருக்கின்றன. சுவரில் அங்கும் இங்குமாக கரப்பான் பூச்சிகள் ஊர்கின்றன. இதையெல்லாம் பார்க்கும் பேரன் ஒருவித அருவெறுப்பை அடைகிறான். பாட்டியின் நொய்ந்து கிழிந்துபோன காலணிக்குள் சிறுநீர் கழித்து தனது வெறுப்பைக் காட்டுகிறான். பாட்டி வாஞ்சையுடன் அவனின் தலையை கோத வருகிறாள். அவளின் கைகளை உதறிவிட்டு அருகிலிருக்கும் கல்லை எடுத்து பாட்டியை தாக்க முயல்கிறான். செவிடு, ஊமை என்று பாட்டியை திட்டிச் சிரிக்கிறான். பாட்டி ஆசை ஆசையாக சமைத்துக் கொடுப்பதை உதாசீனப்படுத்துகிறான். ஊரிலிருந்து கொண்டுவந்த பர்க்கர், பீட்ஸாவை மட்டுமே சாப்பிடுகிறான்.

தூங்கும் நேரம்போக மற்ற நேரத்தில் எல்லாம் வீடியோ கேம்ஸிலேயே மூழ்கியிருக்கிறான். ஒரு கட்டத்தில் வீடியோ கேம்ஸும் அவனுக்கு சலிப்பைத் தருகிறது. அதனால் மலையைச் சுற்றிப் பார்க்க வெளியே கிளம்புகிறான். ஆனால், அவன் விரும்பிய எதுவும் அங்கே இல்லாமல் ஏமாற்றத்துடன் குடிசைக்குத் திரும்புகிறான். சில நாட்களிலேயே வீடியோ கேம்ஸின் பேட்டரி தீர்ந்து போகிறது. பேட்டரி வாங்க பணம் கேட்டு பாட்டியை நச்சரிக்கிறான். பாட்டியிடம் பணம் இல்லை என்பதை அறியாமல் சண்டையிடுகிறான். பாட்டியின் காலணிகளை ஒளித்து வைக்கிறான். ஆத்திரத்தில் பாட்டியின் பொருட்களை உடைத்து வீசுகிறான்.

இவ்வளவு செய்தும் பாட்டியின் மீதான கோபம் அவனுக்கு அடங்கவில்லை. பாட்டி  தூங்கிக் கொண்டிருக்கும்போது அவளின் கொண்டை ஊசியை திருடுகிறான். அதை விற்று பேட்டரி வாங்கலாம் என்று கடைக்குச் செல்கிறான். ஆனால், அங்கே அவனுடைய வீடியோ கேம்ஸுக்குப் பொருத்தமான பேட்டரி கிடைக்காமல் அழுகிறான். பேரனின் விசும்பல் பாட்டியை கலங்கடிக்கிறது. இரவில் சாப்பிட என்ன வேண்டும் என்று சைகை மொழியில் பேரனிடம் கேட்கிறாள். அவன் ‘கெண்டகி சிக்கன்’ வேண்டும் என்கிறான். தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைச் சந்தைக்குக் கொண்டு போய், அதை விற்று ஒரு கோழியை வாங்கி வருகிறாள். தனக்குத் தெரிந்த மாதிரி கோழியை வேக வைத்துக் கொடுக்கிறாள்.

‘இது நான் கேட்ட கெண்டகி சிக்கன்’ இல்லை என்று சாப்பிட மறுக்கிறான். ஆனால், பசி அவனை வாட்டியெடுக்கிறது. நள்ளிரவில் எழுந்து பாட்டி சமைத்த கோழியை ஆசையோடு சாப்பிடுகிறான். அடுத்த நாள் பாட்டியின் உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. குளிரால் பாட்டி நடுங்குகிறாள். பேரனின் மனம் கலங்குகிறது. பாட்டிக்குப் போர்வையை போர்த்தி விடுகிறான். கொண்டை ஊசியை எடுத்த இடத்திலேயே வைக்கிறான். பாட்டி சாப்பிட உணவைக் கொண்டு வந்து பரிமாறுகிறான். பேரனின் மனதில் பாட்டியின் மீதான வெறுப்பு மறைந்து அன்பு துளிர்விடுகிறது. பாட்டியும் பேரனும் காய்கறிகளை விற்பதற்காக நகரத்துச் சந்தைக்குச் செல்கிறார்கள்.

விற்பனை செய்த பணத்தில் பேரனுக்கு வேண்டிய காலணிகளையும், அவன் விரும்பிய கெண்டகி சிக்கனையும் வாங்கித் தருகிறாள். எல்லா பணத்தையும் பேரனுக்காக செலவழிக்கிறாள். அவனை பேருந்தில் ஏற்றிவிட்டு கால்நடையாக நடந்தே கிராமத்துக்கு வருகிறாள். மட்டுமல்ல, பேட்டரி வாங்குவதற்காக தனியாக பணம் தருகிறாள். பாட்டியின் அன்பால் நெகிழ்கின்ற பேரன் கண் கலங்குகிறான். ஒரு மாதம் நிறைவடைகிறது. அம்மாவுக்கு நகரத்தில் வேலை கிடைத்து விடுகிறது. அவனை நகரத்துக்கு அழைத்துப் போவதற்காக அம்மா வருகிற தகவல் கிடைக்கிறது. அது அவனை கவலையடைய வைக்கிறது.

பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால், பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது அனுப்புவதற்காகவும், பாட்டி தன்னை பார்க்க விரும்பும்போது அனுப்புவதற்காகவும் இரண்டுவிதமான தபால் அட்டைகளை தயார் செய்கிறான். பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே புறப்பட்டு வருவதாக வாக்குறுதியும் தருகிறான். இன்னும் சில மணி நேரங்களில் பாட்டியை விட்டு பிரிந்துபோய் விடுவோம் என்ற துயரத்தில் அவனால் தூங்க முடிவதில்லை. பாட்டி சிரமப்படக் கூடாது என்பதற்காக ஊசிகளில் நூலைக் கோர்த்து வைக்கிறான். அம்மா வருகிறாள். கனத்த மனதுடனும், அழுகையுடனும் பாட்டியை விட்டு பிரிந்து நகரத்துக்குச் செல்கிறான்.

பாட்டியிடம் கீழ்மையாக நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கேட்கிறான். பேரன் கொடுத்த தபால் அட்டைகளுடன் மலைப் பாதைகளில் தனியாக பாட்டி நடந்து செல்கிறாள். நம் கண்கள் கலங்க படம் முடிகிறது. மனதை நெகிழவைக்கும் இப்படத்தை ஜியாங் ஹியாங் லீ என்ற பெண் இயக்கிஇருக்கிறார். பாட்டியாகவும், பேரனாகவும் நடித்தவர்கள் யாரும் தொழில்முறை நடிகர்கள் இல்லை. இருந்தாலும் இருவருமே அருமையாக நடித்துள்ளனர். பாட்டி யாக நடித்தவர் தன் வாழ்க்கையில் ஒரு சினிமா கூட பார்த்ததில்லை என்பது ஆச்சர்யம்.

மலைக் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை, அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பை, அங்கே வாழ்கின்ற குழந்தைகளின் மன இயல்பையும், முதுமையின் வலியையும் இந்தப் படம் பல இடங்களில் அழுத்தமாக பதிவு செய்கிறது. பாட்டிக்கும் பேரனுக்குமிடையேயான உறவை, நெகிழ்வை சித்தரிக்கும் படமாக மட்டுமே இதைப் பார்க்க முடியாது. வீட்டிற்கு செல்லும் பாதையை மறந்துவிட்ட மனிதன் எந்தப் பள்ளியில், எந்தக் கல்லூரியில் போய் அன்பைக் கற்றுக்கொள்வான் ? எந்த மனிதனால் இன்னொரு மனிதனுக்கு அன்பைக் கற்றுக்கொடுக்க முடியும்? எந்த மனிதனால் இன்னொரு மனிதனை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் இந்தப் படத்தில் இருந்து நாம் பெற முடியும்.

இயற்கை எழிலின் தாளநயங்கள் ரீங்காரமிடும் பகுதியில் ஒரு மரத்தைப்போல் தனிமையில் வசித்து வருகிற அந்தப்பாட்டியின் நிபந்தனையற்ற பேரன்பும், பொறுமையும் நவீன காலத்தில் எந்த மனிதனிடமும் காணக்கிடைக்காதவை.  உயிர்கள் அனைத்தையும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிக்கக் கூடிய தன்மை இயற்கையை தவிர்த்து வேறு யாரிடம் இருக்கிறது? அவள் பாட்டியில்லை. இயற்கையின் இன்னொரு வடிவம். இயந்திரங்களின் பிடிக்குள் அகப்பட்டு வீட்டிற்குச் செல்லும் பாதையை மறந்த மனிதர்கள் இயற்கையிடம் எப்படி நடந்துகொள்வார்களோ அதே மாதிரிதான் அந்தப் பேரனும் பாட்டியிடம் ஆரம்பத்தில் நடந்து கொள்கிறான்.

இயற்கையிடம் நெருக்கம் கொண்டு அதன் பொறுமையையும், எந்தவித எதிர்பார்ப்புமில்லாத அன்பையும் உணரும் போது எந்த மனதிற்குள்ளும் நிகழ்கின்ற நெகிழ்வைத்தான் அந்தப் பேரனும் பாட்டியிடம் நெருக்கம் கொள்ள கொள்ள உணர ஆரம்பிக்கிறான். அன்பைக் கற்றுக்கொண்ட அவனால் பாட்டியைவிட்டு பிரிய முடிவதில்லை. பாட்டியிடம் தன் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கிறான். உனக்கு ஏதாவது என்றால் எனக்கு கடிதம் எழுது உடனே புறப்பட்டு வருகிறேன் என்கிறான். அன்றாட வாழ்க்கைச்சூழல் இயற்கையை நேசிக்கும் மனிதர்களைக் கூட இயற்கையிடமிருந்து பிரித்துவைத்திருப்பதைப்போல பள்ளிக்குச் சென்று எதை எதையோ கற்க வேண்டியிருப்பதால், அன்பை, வாழ்க்கையைப் பற்றிக் கற்றுக்கொடுத்த பாட்டியிடமிருந்து பிரிந்து செல்கிறான் அந்தப் பேரன், வீட்டிற்குச் செல்லும் பாதையை மறந்து...  
 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்