SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எது உண்மையான பெண் சுதந்திரம்? குரல்கள்

2017-12-05@ 16:38:47

நன்றி குங்குமம் தோழி

‘‘மனசுக்குப் பிடிச்சவன் கூட மட்டும்தான் வாழணும்... அதுதான் உண்மையான சுதந்திரம்...’’ சமீபத்தில் வெளியான ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் நாயகி பேசும் வசனம் இது. ‘பெண் சுதந்திரம்’ குறித்த விவாதங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. பெண்ணுக்குச் சுதந்திரம் இல்லை. அதை இச்சமூகம் அளிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் உண்டு. பெண்ணுக்குச் சுதந்திரம் இல்லை என்று சொல்வதெல்லாம் ஒரு கற்பிதம் என்று சொல்பவர்களும் உண்டு.

இவ்விரு கருத்துகளுக்கும் நேரெதிராக பெண்ணுக்கு யாரும் சுதந்திரம் தர வேண்டிய அவசியமில்லை அதை அவர்களே எடுத்துக் கொள்வார்கள் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இது போன்ற மாறுபட்ட கருத்துகள் தொடர்ந்து முரண்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆக, பெண்ணுக்கு சுதந்திரம் இருக்கிறதா? பெண் சுதந்திரம் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்புவது காலத்தின் தேவையாகிறது.

வினோதினி, திரைக்கலைஞர்

பெண்ணுக்குச்  சுதந்திரம் இல்லை என்கிற உண்மையை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அப்போதுதான் சரியான தீர்வை நோக்கி நகர முடியும். பெண்ணுக்குச் சுதந்திரம்  இருக்கிறதா இல்லையா என்பதிலேயே முரண்பட்டுக் கொண்டிருந்தால் அங்கேயே தேங்கி  விட வேண்டியதுதான். பெண்ணுக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று  சொல்கிறவர்கள் எதனடிப்படையில் சொல்கிறார்கள் என விளக்க வேண்டும். நான்  அனுபவப்பூர்வமாக உணர்ந்த வகையில் பெண் சுதந்திரம் இங்கு இல்லை என்றுதான்  சொல்வேன்.

இது தமிழகத்திலோ, இந்தியாவிலோ என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.  ஒட்டுமொத்த உலகிலுமே பெண் சுதந்திரம் இல்லை என்றுதான் சொல்வேன்.  மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு பரிபூரண சுதந்திரம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை. சம தகுதியுடைய ஆண் வாங்குகிற ஊதியத்தை ஒரு பெண்ணால் வாங்க முடியாது என்பதுதான் இங்குள்ள யதார்த்தம். பெண் சுதந்திரம்  வேண்டும் என்றால் அவள் யாரையும் சார்ந்து வாழாமல் இருப்பதற்கான பொருளாதார  வலுவும் அவசியம்.

ஆண் - பெண் இரு பாலினங்களுக்குமான பொருளாதார சமன்பாட்டை  உருவாக்குவது மிகவும் அவசியமானது. எந்த சமரசமுமின்றி தான்  விரும்பியதைச் செய்ய முடிவதுதான் பெண் சுதந்திரம் என நான் நினைக்கிறேன்.  ஆனால் பெண் என்று வரும்போது முன் தீர்மானங்களுக்குள் வந்து விடுகின்றனர்,  பெண் என்பவள் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற ஒரு சட்டகத்துக்குள்  அடைக்கப் பார்க்கின்றனர். சிறிய உதாரணம் சொல்கிறேன். இன்றைக்கு டீக்கடையில் நின்று நான் டீ குடிக்க முடியுமா? அப்படி நான் குடித்தேன் என்றால் என்னை  ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள்.

ஏனென்றால் பெண் என்பவள் பால் வாங்கி  வீட்டில் டீ போட்டு குடிப்பவள் என்கிற முன் தீர்மானத்துக்குள் அவர்கள்  இருப்பதுதான் இங்கு பிரச்னை. இப்படியாக ஒவ்வொரு பெண்ணுடைய உடல், மனம்  ஆகியவற்றை அடுத்தவர்கள் நிர்ணயிக்கும் நிலைதான் இருக்கிறது. இச்சமூகம்  தீர்மானித்து வைத்திருக்கும் பெண் என்கிற சட்டகத்தை விட்டு வெளியே வந்து  சுதந்திரத்துடன் வாழும் பெண்களை தவறானவள் என்றுதான் பார்க்கின்றனர்.

அதே போல் பெண்ணை ஒரு பொருளாகப் பார்க்கும் பார்வையும் மாற வேண்டும். male gaze  என்று சொல்லக்கூடிய ஆணின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்களுக்கு விடுதலை வேண்டும். படித்த பெண், படிக்காத பெண். உயர் பொறுப்பிலிருக்கும் பெண்,  சாமானியப் பெண் என்கிற பேதமெல்லாம் இங்கு இல்லை. யாராக இருந்தாலும் அவள்  பெண். பெண்ணை இப்படித்தான் நடத்துவோம் என்கிற சமூக மனநிலைக்கு எதிரான  நிலைப்பாட்டை ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டும்.

வேலுநெடுங்கனி, இல்லத்தரசி.  

பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அனைவரும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால்  நடைமுறை அப்படியானதாக இல்லை. பெண் சுதந்திரம் குறித்து பல காலமாக  பேசுகிறார்கள். அது பேச்சளவிலும், எழுத்தளவிலும்தான் இருக்கிறதோ தவிர  நடைமுறையில் இல்லை. ஒவ்வொரு பெண்ணும் குடும்பச் சூழலை விட்டு வெளியே வருவதற்கு பல தடைகள் இருக்கின்றன.

அந்தத் தடைகளை மீறி அவர்கள் வெளி வந்தால்  பல பழிச்சொற்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண் தன் விருப்பம் போல் வாழ்வதை  ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் யாருக்கும் இல்லை. ஆண்கள் மட்டுமல்ல பெண்களே  கூட இப்படியான பெண்களை வசைபாட செய்கிறார்கள். எனவே பெண்களிடமிருந்தும்  மாற்றம் வர வேண்டும்.

சரோஜா, தனியார் நிறுவன ஊழியர்

பெண் சுதந்திரம் என்பது யாருக்கும் எதிரானது இல்லை. ஆண்கள் செய்யும்   எல்லாவற்றையும் பெண்ணும் செய்ய வேண்டிய அவசியமில்லை. தான் விருப்பப்பட்ட  வாழ்க்கையை எந்த தடைகளுமின்றி வாழ்ந்தாலே போதுமானது.  சமூகத்தில்  கிடைக்கும் நற்பெயருக்காக தன் சுதந்திரத்தையும் விருப்பு வெறுப்புகளையும்  துறந்து வாழ வேண்டிய அவசியமில்லை. இச்சமூகம் வகுத்து வைத்திருப்பது போல  வாழும் பெண்களே பல விதங்களில்
அவமதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

இச்சமூகம்  அவர்களுக்கு பல பட்டங்களைக் கொடுக்கின்றன. அப்படியிருக்கும்போது  அதிலிருந்து வெளி வருவதில் எந்தத் தவறும் இல்லை. பெண் சுதந்திரம் என்பது  பெண்களின் கைகளில்தான் இருக்கிறது. தான் விரும்பும் வாழ்க்கை கிடைக்காத  நிலையில் அதிலிருந்து அவர்கள் வெளி வந்து விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்  கொள்ள வேண்டும். அதற்கேற்றபடியான சமூக சூழ்நிலைகளும் மாற வேண்டும்.

கல்பனா அம்பேத்கர், மனிதவள மேம்பாட்டு அலுவலர்

அன்னை சாவித்ரிபாய் பூலேவும் மற்றும் ஜோதிராவ் பூலேவும் பத்தொன்பதாம் நுற்றாண்டில் முன்னெடுத்த பெண் சுதந்திரத்தை இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பேசிக்கொண்டிருப்பதிலிருந்து நாம் எவ்வளவு பிற்போக்குத்தனத்தில் இருக்கின்றோம் என்று அறிய முடிகிறது. இந்திய சமூக கட்டமைப்பில் பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு இணையாகவே வைக்கப்பட்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூக பெண்களின் மீது ஒட்டுமொத்த சமூகமும் ஆதிக்கம் செலுத்துகிறது.

எனவே ஒடுக்கப்பட்ட பெண்கள் இறுதி படிநிலையில் வைத்து அழுத்தப்படுகிறார்கள். பெண் விடுதலை என்பது பெண் கல்வியிலிருந்து தொடங்குகிறது என்று அறிந்த சாவித்ரிபாய் பூலே மற்றும் ஜோதிராவ் பூலே ஆகியோர் பெண்களுக்கு முதல் கல்விக்கூடத்தை நிறுவி இச்சமுகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினர். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அம்சம் என்னவெனில் ஒடுக்கப்பட்ட சேரி வாழ் பெண்களும் கல்வி பெற ஆவண செய்ததன் மூலம் சமூக நீதியில் முன்னோடியாய் திகழ்ந்தனர்.

இந்திய சமூகத்தை மறுகட்டமைப்பு செய்ய போராடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ‘‘சமூக வளர்ச்சியை பெண்களின் விடுதலை மற்றும் வளர்ச்சியில் இருந்துதான் கணக்கிடமுடியும்'' என்று உறுதிபட நம்பினார். அதன் விளைவுதான் மரியாதைக்குரிய நேரு அவர்களின் அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சராக இருந்தபோது ‘‘இந்து சட்ட மசோதாவை'' தாக்கல் செய்தார். அதன் அடிப்படை நோக்கம், பெண்களுக்கு சொத்து மற்றும் அதிகாரத்தை பரவலாக்குவதுதான். அரசியல், பொருளாதாரம், கல்வி, மதம், உரிமை, உணர்வு, உணர்ச்சி, ஆளுமை என எல்லாவற்றிலும் பெண்கள் முடக்கிவைக்கப் பட்டுள்ளனர் பெண் சுதந்திரம் என்பது இவை எல்லாமும்தான்.

ஆனால் இன்றைக்குப் பெண்ணியம் பேசுகிறவர்கள் பெரும்பாலும் உடை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, ஒழுக்கம், கற்பு ஆகியவற்றையே பிரதானப்படுத்தி சொத்து மற்றும் அதிகார பரவலாக்கலை கோட்டைவிட்டு விடுகின்றனர். இதன் அப்பட்டமான ஆணாதிக்க வெளிப்பாடுதான் பாலியல் ஒடுக்குமுறை, உழைப்பு சுரண்டல், அரச பயங்கரவாதம் என நீண்டுக்கொண்டே போகிறது. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பார்வையிலிருந்து அணுகுவதுதான் உண்மையான பெண் சுதந்திரத்திற்கு வழி வகுக்கும்.

பர்வீன் சுல்தானா, பேராசிரியர்

சுதந்திரம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவான சொல். ஆனால் பெண் சுதந்திரம் என்று குறிப்பிட்டுச் சொல்லக் காரணம் இச்சமூகம் பெண்களை பல கட்டுப்பாடுகளுக்குள் வைத்திருக்கிறது. எதையெல்லாம் செய்ய நினைக்கிறோமோ அதைச் செய்வது சுதந்திரமல்ல. எதைச் செய்யக் கூடாது என நினைக்கிறோமோ அதை செய்வதற்கு ஆட்படுத்தப்படாமல் இருப்பதுதான் சுதந்திரம்.

அகம் மற்றும் புறம் என இரண்டிலும் ஒரு வெளி தேவைப்படுகிறது. அந்த வெளியை ஆணுக்கு இச்சமூகம் இயல்பாகவே கொடுத்திருக்கிறது. பெண்ணுக்கு அப்படிப்பட்ட வெளி கிடைப்பதில்லை. அதற்கு தடையாக இருப்பது அவள் உடல். இச்சமூகம் அவளை உடல் சார்ந்த உயிராக மட்டுமே பார்க்கிறது. சிந்தனை சார்ந்தவளாக  பார்ப்பதில்லை. உடல் என்பது அவளது சுயம், அவளது மரியாதை. அதனை அடுத்தவர்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்புடையதல்ல.

அச்சூழலிலிருந்துதான் ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் தேவை. குடும்பம் என்கிற இயக்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மையிலும் அது ஒரு அற்புதமான கட்டமைப்பு. ஆனால் அது எந்த விதத்திலும் பெண்ணின் சுதந்திரத்துக்குத் தடையாக இருந்து விடக்கூடாது. பெண்ணும் ஆணுக்கு நிகரான உயிர்தான். பாலின சமத்துவத்தை அடையும் புள்ளிதான் உண்மையான பெண் சுதந்திரமாக இருக்க முடியும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்