SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இவரது பணி இடுகாட்டில்!

2017-11-13@ 15:09:38

பெரும்பாலான சமூகங்களில் பெண்கள், இடுகாட்டுக்கு செல்வதேகூட இன்னமும் தடை செய்யப்பட்டிருக்கிறது. உரியவர்களுக்கு அவர்கள் ஈமச்சடங்கு செய்யக்கூடிய உரிமைகூட இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தினமும் காலை எட்டு மணியில் தொடங்கி மாலை ஆறு மணி வரை இடுகாட்டில்தான் எஸ்தர் சாந்திக்கு பணி.இடுகாட்டுக்கு வரும் சடலங்களுக்கு உரிய மரியாதை செலுத்தி, புதைப்பதற்கான அல்லது எரிப்பதற்கான ஏற்பாடுகளை இவர்தான் செய்துத் தருகிறார்.“இது என்னுடைய பணியிடம். நான் என் வேலையைதான் செய்கிறேன்” என்கிறார் எஸ்தர் சாந்தி. இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபேர் ஆர்கனிசேஸன் என்கிற தொண்டு நிறுவனம் சார்பாக சென்னை ஓட்டேரியில் இருக்கும் சுடுகாட்டினை இவர்தான் பராமரித்து வருகிறார்.
அவருடைய பணியிடத்தில் சந்தித்தோம்.

“உங்களுடைய பின்னணி?”
“சொந்த ஊர் குமுளி. அப்பா, அங்கே அரசுத் துறையில் வேலை பார்த்து வந்தார். அம்மா பள்ளி ஆசிரியை. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு எல்லாம் அங்கு தான். கல்யாணம் ஆன பிறகுதான் சென்னைக்கு வந்ேதன். எங்க வீட்டின் அருகில் இருந்தவங்க தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாங்க. அவங்க அடிக்கடி மீட்டிங், சர்வீஸ்ன்னு கிளம்புவது வழக்கம். அப்படி என்னதான் வேலை செய்றாங்கன்னு கேட்ட போது தான் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்வதாக சொன்னாங்க. எனக்கும் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்கள் செல்லும் மீட்டிங்குகளில் நானும் தன்னார்வலராக கலந்து கொண்டேன். ஒருக்கட்டத்தில் நானும் என்னை அதில் இணைத்துக் கொண்டேன். சமூகத்துக்கு ஏதோ பணியாற்ற முடிகிறது. நமக்கும் வேலை பார்க்கக்கூடிய திருப்தி கிடைக்கிறது.

1996ல் ICWO என்கிற தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இங்கு சேர்ந்தவுடன் முதலில் நான் எடுத்துக் கொண்ட பிராஜக்ட்,
வசதியற்ற பள்ளி மாணவர்களுக்கு டியுஷன் எடுப்பது. மாலை நேரத்தில் அவர்களுக்கு இலவசமாக பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். இந்தப் பணியை மிகவும் கவனமாக, துல்லியமாக, ஈடுபாட்டோடு செய்தேன். என்னிடம் படிச்ச பசங்க எல்லாரும் இப்போது நல்ல நிலையில் இருப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாலைநேர டியூஷன் திட்டம் வெற்றி பெற்றதால், இதே போல் பல இடங்களில் செய்ய ஆரம்பித்தோம்.

குழந்தைகளுக்கு கல்வி தவிர்த்து திருநங்கைகள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளர்கள் என்று விளிம்புநிலை மனிதர்களுக்கு பரந்துபட்ட துறைகளில் வேலை பார்த்து இருக்கேன். அவர்களிடம் பேசி, அவர்களின் தேவை மற்றும் குறைகளை அறிந்து அதற்கு ஏற்ப அவர்களுக்கு உதவ வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் முரட்டுத்தனமாகதான் பேசுவார்கள். ஆனால், அவங்க நலனில் நாம அக்கறை செலுத்துகிறோம் என்கிற எண்ணம் வந்துவிட்டால், நமக்காக உயிரையும் கொடுக்குமளவுக்கு அன்பு செலுத்துவார்கள். ஒரு காலத்தில் இவர்களை நானும்கூட எதிர்மறையா பார்த்து இருக்கேன். ஆனால் அவர்களுடன் இணைந்து வேலை பார்க்கும் போது தான், அவர்கள் சந்திக்கும் பிரச்னை, அவர்களின் வலி என்ன என்று புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற சிந்தனை தான் மேலோங்கி இருந்தது.”
“இந்த இடுகாட்டு பணிக்கு எப்படி வந்தீர்கள்?”


“ஒரு முறை சுடுகாட்டினை பராமரிக்கும் பொறுப்பு எங்க தொண்டு நிறுவனத்திற்கு வந்தது. அதில் ஈடுபட நிறைய பேர் விரும்பவில்லை. சிலருக்கு பேய், பிசாசு பயம். சிலருக்கு மூடநம்பிக்கை. ஆண்கள், பெண்கள் என்று இரண்டாயிரம் பேரில் யாருமே இந்த வேலையை செய்ய முன்வராதபோது, நான்தான் தைரியமாக முன்வந்தேன். எல்லோருமே புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டார்கள். என்னுடைய உயர் அதிகாரி, ஆண்களே செய்ய யோசிக்கும் இந்த வேலையை உன்னால் செய்ய முடியுமா என்று ஆச்சரியமாக கேட்டார். நான் முடியும் என்று சொன்னதும், முதலில் புதிய ஆவடி சாலையில் உள்ள சுடுகாட்டில் இரண்டு மாத பயிற்சி கொடுத்தார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் இதில் இறங்கி திறம்பட வேலை செய்ய முடியும் என்று அந்த இரண்டு மாதத்தில் நிரூபித்தேன். அதன் பிறகுதான் எனக்கு ஓட்டேரி மயானத்தை பார்த்துக் கொள்ளும் முழுப் பொறுப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.”

“இந்த வேலை ரொம்ப திகிலா இருக்குமோ?”

“எனக்கு முதலில் ஓட்டேரி மயானத்தைப் பற்றி பெரிசா தெரியாது. அதற்கு முன்னால் பார்த்ததுகூட இல்லை. முதல் நாள் அங்கு சென்ற போது, ஒரு மயானம் இருப்பதற்கான அடையாளமே இல்லை. சுடுகாடு முழுக்க புதர்கள், முட்செடிகள் வளர்ந்து காடு மாதிரி இருந்தது. அங்கு சட்டத்துக்கு புறம்பான பல தகாத செயல்களும் இஷ்டத்துக்கும் அரங்கேறிக் கொண்டு இருந்தன. அந்த ஏரியா மக்கள் சமாதி மேல் அமர்ந்து மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தி வந்தனர். அவர்களை தட்டிக் கேட்கவே அத்தனை பேரும் பயந்தனர். அந்த நிலையை பார்த்த அடுத்த நிமிடமே, நாம் இவர்களை கவனமாகதான் கையாள வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதெல்லாம் நான் போகும்போதும், வரும்போதும் வழியெங்கும் நின்று தகாத வார்த்தைகளால் பேசுவார்கள். நான் எதையுமே கண்டுக் கொள்ள மாட்டேன். மயானத்தில் வேலைப் பார்க்கும் போது கூட அலுவலக அறையை பூட்டி விட்டு தான் வருவேன். அவர்கள் அங்கு இருக்கும் பொருட்களை கொளுத்தி விடுவார்களோ என்கிற பயம்தான் அதிகமாக இருந்தது.

என்னுடைய முதல் பிரச்சினையே இவர்களை சமாளிப்பதுதான் என்று புரிந்தது. ஒருமுறை மரியாதையாக அவர்களை அழைத்துப் பேசினேன். அவர்களுக்கு புரியும்படி விளக்கினேன். அவர்கள் நல்ல நிலையில் இருக்கும் போது சொல்வதை புரிந்து கொள்வார்கள். போதைக்கு ஆளானால், அடுத்த நிமிடமே வேறு மாதிரியாக ரியாக்ட் ெசய்வார்கள். சில சமயம் தகன நேரம் ஐந்து மணிக்கு சொல்லி இருந்தால், இவர்கள் ஏழு மணிக்கு தான் வருவார்கள். முடிந்தவரை பொறுமையாக அவர்களை கையாண்டேன். பொறுமை எல்லை மீறியபோது காவல் நிலையத்தின் உதவியை நாடினேன். காவல்துறையினர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். அவர்கள் மட்டும் இல்லை. என்னுடைய வேலையை புரிந்து கொண்ட அந்த ஏரியா மக்களும், மற்றவர்கள் தொல்லை கொடுக்கும் போது, எனக்கு ஆதரவாக வருகிறார்கள். அவர்களின் ஆதரவு தான் என்னை இந்த இரண்டரை வருட காலம் இங்கு திறமையாக வேலையில் ஈடுபட செய்துள்ளது. இங்கு எனக்கு உதவியாக நான்கு பேர் இருக்கிறார்கள். தகனம் செய்ய இரண்டு பேர். வாட்ச்மேன் ஒருவர். புதைக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர் ஒருவர். தினமும் சராசரியாக ஆறு பேர் முதல் ஏழு பேர் உடல்வரை தகனம் செய்ய வேண்டியிருக்கிறது.திகில் என்றால் பேய், பிசாசு கிளப்புவது அல்ல. நம்மை மாதிரி ரத்தமும் சதையுமான மனிதர்கள் கிளப்புவதுதான். தைரியம் இருந்தால் எதையுமே எதிர்கொள்ளலாம்.”

“உங்கள் வீட்டில் இந்தப் பணியை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?”

“எங்கள் வீட்டில் எனக்கு முழு ஆதரவு உண்டு. எல்லாருமே நல்லது கெட்டது தெரிந்தவர்கள்தான். முதலில் நான்தான் வீட்டில் இந்த வேலையைப் பற்றி சொல்ல ரொம்பவும் தயங்கினேன். மறைக்கலாம் என்றுகூட நினைத்தேன். முடியவில்லை. ஆனால், நான் சற்றும் எதிர்பாரா வண்ணம் என் கணவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். கொஞ்சம் நெருடல் அவர்களுக்கெல்லாம் இருக்குமோ என்னவோ, ஆனாலும் என் பணி இது என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள்.காலை எட்டு மணிக்கு மயானத்தை திறக்க வேண்டும். மூடுவதற்கு இரவு ஏழு மணி ஆகிவிடும். எத்தனை மணிக்கு நான் வீட்டுக்கு வந்தாலும் மஞ்சள் தண்ணீர் தெளித்துக் கொண்டு, குளிக்க வேண்டும் என்பது மட்டும்தான் எங்கள் வீட்டின் எதிர்ப்பார்ப்பு. வருடத்துக்கு ஒருமுறை நான் சில முக்கியமான தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்கிறேன்.”

“இத்தனை ஆண்டு இடுகாட்டு அனுபவம், உங்களுக்கு கற்றுக் கொடுத்திருப்பது என்ன?”
“பல்வேறு இன்னல்களை இந்தப் பணியில் சந்தித்திருந்தாலும், என்னுடைய தைரியம்தான் என்னை இவ்வளவு தூரம் பயணம் செய்யத் தூண்டியிருக்கிறது. இந்தப் பணியில் நான் பலரிடம் பேசி அவர்கள் மனதை மாற்ற முயற்சித்திருக்கிறேன். அவர்களில் பலர் நல்லவிதமாக மாறியிருக்கிறார்கள். என்னுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நல்ல பாதைக்கு திரும்பியிருப்பதை பார்க்கும்போது மனசுக்கு சந்தோஷமாக உள்ளது. சில சமயம் நான் எதிரே வரும் போது சிலர் ஒதுங்கி செல்வார்கள். அதை பார்க்கும் போது மட்டும்தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இருந்தாலும், என்னுடைய சேவைக்கு பலர் ஆதரவு கொடுப்பதை பார்க்கும் போது மனசுக்கு நிறைவாக உள்ளது. இங்கு இறந்தவர்களின் சமாதி இருந்தாலும், என்னை பொருத்தவரை அதை கோயிலாக தான் பாவிக்கிறேன். அந்த இடம் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க பாடுபடுவேன். எவ்வளவு தான் ஒருத்தர் வாழ்க்கையில் முன்னேறினாலும், அவர்கள் கடைசியில் ஒரு கைப்பிடி சாம்பல் தான். இது தான் வாழ்க்கை. இதை புரிந்து கொண்டால், கோபம், பொறாமை, வஞ்கசம் எதுவுமே நம் முன் தோன்றாது.’’
- ப்ரியா
படங்கள்: பால்துரை

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_gunmanr1

  பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

 • upnepalmarg

  நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

 • ebolaaa_viruss1

  காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

 • LuklaAirportNepal

  சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

 • ParliamentAttaCK17

  நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்