SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்திருக்கும் 107 வயது மூதாட்டி

2017-11-10@ 15:17:42

நன்றி குங்குமம் தோழி

- ஸ்ரீதேவி மோகன்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த சங்கேந்தி பகுதியைச் சேர்ந்தவர், மறைந்த வெங்கடாச்சலத்தின் மனைவி சமுத்திரம்மாள். முதல் சட்டமன்ற தேர்தல் துவங்கி கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 15 வது சட்டமன்ற தேர்தல் வரை அனைத்திலும் வாக்களித்திருக்கிறார் 107 வயதான இந்த கலக்கல் பாட்டி...

அரசியல் ஆர்வம் எல்லாம் பெரிய அளவில் இல்லாதபோதும் தன் ஜனநாயக உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று 15 சட்டமன்ற தேர்தல்களிலும் மட்டுமில்லாமல் 16 மக்களவை தேர்தலிலும் தவறாமல் வாக்களித்திருக்கிறார் சமுத்திரம்மாள்.

ஆனால் இத்தனை தேர்தல்களிலும் ஓட்டு போட்டிருக்கும் சமுத்திரம்மாள் முதல் முதல் ஓட்டுப் போடப் போகும்போது என்னமோ எப்படியோ என பயந்திருக்கிறார். அவரின் கணவர்தான் அவருக்கு தைரியமூட்டி ஓட்டுப் போட அழைத்துச் சென்றிருக்கிறார்.

“அன்று முதல் இன்று வரை எல்லா தேர்தல்களையும் பார்த்துவிட்டேன். எந்த முறையும் நான் ஓட்டுப்போடாமல் இருந்ததில்லை. இன்று வரை நான் எந்த கட்சியிலும் இல்லை. ஆனால் நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறவங்களுக்குத்தான் நான் ஓட்டுப் போட விரும்புகிறேன்.

எங்க ஊர்க்காரங்க யாரை அதிகமாக சொல்றாங்களோ அவர்களுக்குத் தான் எனது ஓட்டை போடுவேன். இனிமேலும் எங்க ஊர்க்காரங்க யாரை காட்றாங்களோ அவர்களுக்குத்தான் நான் ஓட்டுப்போட இருக்கிறேன்” என ஓட்டு போடுகையில் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்திருக்கிறார் சமுத்திரம்மாள்.

இது வரை ஒவ்வொரு தேர்தலிலும் இவர் ஓட்டு போட்டவர்தான் வெற்றியும் பெற்றுள்ளனர் என்பது மேலும் ஒரு சிறப்பு. இவர் மட்டுமல்ல தொண்ணூறைத் தொட்டிருக்கும் இவரது சகோதரிகளும் இந்த வயதிலும் தவறாமல் ஓட்டளித்திருக்கிறார்கள்.

சமுத்திரம்மாளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தன் சகோதரி தேனம்மாளையே தன் கணவருக்கு இரண்டாம் தாரமாக மணமுடித்தவர். எல்லோரும் ஒன்றாகவே வாழ்வதோடு அவரது பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே கருதி உற்சாகமாக தன் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.

தேனம்மாளுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். அவரது பிள்ளைகளும் தன் சொந்தத் தாய்க்கு மேலே சமுத்திரம்மாளை மதித்து அவரை பாதுகாக்கின்றனர். எம் ஏ படித்து விட்டு விவசாயம் பார்த்து வருபவர் தேனம்மாளின் இரண்டாவது மகன் ரவிச்சந்திரன்.  இவரது வீட்டில் தான் சமுத்திரம்மாள் இருக்கிறார். அவரிடம் பேசியபோது...

“சமுத்திரம்மா தான் குடும்பத்தில் மூத்தவர். இவருக்கு அடுத்து இரண்டு சகோதரிகளுக்கு அடுத்தவர் எனது தாயார் தேனம்மாள். அந்த காலத்தில் மக்கள் பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாங்க. அதனால் சுதந்திரம் கிடைத்தவுடன் ஓட்டுப் போடுவதன் அவசியம் அவர்களுக்குப் புரிந்திருந்தது. அப்பா ஒரு அரசியல் கட்சியில் இருந்தார். அம்மாவை ஓட்டுப் போட அழைத்துச் செல்லும் போது முதலில் கொஞ்சம் பயந்திருக்கிறார்.

அப்புறம் அந்த பயம் எல்லாம் போய் விட்டது. எல்லா தேர்தல்களிலும் தவறாமல் அம்மா ஓட்டுப் போட்டிருக்கிறார். அவரது மற்ற சகோதரிகள் மற்றும் எங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாருமே பொதுவாக பெரும்பாலும் தவறாமல் ஓட்டுப் போட்டுவிடுவார்கள். சென்ற தேர்தலில் கூட சமுத்திரம்மா, தேனம்மாள், எனது பெரியம்மா ஏலம்மாள் என எல்லாரும் சென்று ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இப்போது ஏலம்மாள் உயிருடன் இல்லை.

சமுத்திரம்மா ரொம்ப அன்பானவர். எல்லார் மீதும் அவ்வளவு அன்பாக இருப்பார். நாங்களும் அவரை எங்கள் சொந்த தாயாருக்கும் மேலாக நேசிக்கிறோம். சமுத்திரம்மா இப்போது எங்களுடன் தான் இருக்கிறார்.

தேனம்மாளும் நாங்களும் அவரைப் பார்த்துக் கொள்கிறோம். அம்மாவிற்கு முன்பு போல் இல்லை. இப்போது கொஞ்சம் ஞாபக மறதி வந்து விட்டது. ஆனால் பழைய நினைவுகள் பற்றி எப்போதாவது பேசுவார். தோசை, பால், பிஸ்கெட் போன்ற எளிதான உணவுகளை எடுத்துக்கொள்கிறார். கண் பார்வை ஓரளவிற்கு இருக்கிறது” என்று  சமுத்திரம்மாள் குறித்து பெருமையாகப் பேசுகிறார் ரவிச்சந்திரன்.
 
படங்கள்: மு.முகைதீன் பிச்சை

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2018

  21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • DryingClothingfestival

  சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

 • unmanedbookshopchina

  சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

 • newyork_steam_explosion

  நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

 • Apollo11NeilArmstrong

  நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்