SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்

2017-11-10@ 14:56:43

நன்றி குங்குமம் தோழி

மகேஸ்வரி - 4

கல்யாணம் என்றாலே கனவுகள்... கனவுகள்... கனவுகள்தான். வண்ண வண்ணக் கனவுகள்… எண்ணற்ற எதிர்பார்ப்புகள்… திருமணம் செய்துகொள்ளப் போகும் மணமக்களுக்கு மட்டுமில்லை இந்தக் கனவுகள்... பெற்றோருக்குள்ளும் தொற்றிக்கொள்ளும்.

‘என் பொண்ணு கல்யாணத்தை இப்படி செய்யணும், என் பையன் கல்யாணத்தை அந்த மாதிரி நடத்தணும்’ என விதவிதமாகக் கனவு காண்பவரா நீங்கள்? இதோ உங்கள் இல்லத் திருமணத்தை சிறப்பிக்க காத்திருக்கிறார்கள் சில திருமண நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் (Marriage Event Planners).

‘‘எந்த வேலையும் இல்லாமல் நீங்க ரிலாக்ஸ்டா இருங்க. ஐ வில் டேக் ஓவர் எவ்ரிதிங்” என நம்மை இருகரம் கூப்பி வரவேற்றார் சென்னை அசோக் நகரில் ஐந்தாண்டைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் ‘விருத்தி’ திருமண நிகழ்வு மேலாண்மையின் இயக்குநர் லெஷ்மி.  ‘‘சென்னை சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டுகள் சட்டம் படித்தேன்.

ஆனால் எனக்குப் பிடித்த இந்த வேலையினை மிகவும் ரசித்து செய்கிறேன். நம் வீட்டுக் கல்யாணம், வாழ்க்கை முழுவதும் நமது நினைவில் நிற்கப்போகும் ஒரு விசயம். நமது கொண்டாட்டம், நமது குடும்பத்தின் குதூகலம்.

அதை நல்லா எஞ்சாய் பண்ணி செய்ய வேண்டாமா?” என்ற கேள்வியுடன் நம்மிடம் பேசத் துவங்கினார். ‘‘பெண்கள் கிரியேட்டிவ் விசயங்களில் எப்பவும் ஸ்ட்ராங். கலர் சென்ஸ் அவர்களுக்கு எப்பவும் அதிகம் இருக்கும். எதையும் நேர்த்தியா அழகியல் உணர்வுடனே பார்ப்பார்கள்.

இந்த விசயங்கள்தான் எனக்கு இந்தத் தொழிலில் கை தருகிறது. இரண்டு லட்சத்தில் கல்யாணம் செய்தாலும் அந்த பட்ஜெட்டிற்கு ஏற்ற விற்பனையாளர்களை கொடுக்க முடியும். இரண்டு கோடி ரூபாய்க்கு கல்யாணம் செய்தாலும் அதற்கு ஏற்ற திட்டத்தை என்னால் வழங்க முடியும். இதுவரை  30 திருமணங்கள் வரை நிகழ்த்திக் கொடுத்திருக்கிறேன். எல்லாவித பழக்கவழக்கமுள்ள பாரம்பரிய முறைகளும் எனக்குத் தெரியும். என்னோட ஏரியா ஆஃப் இன்டிரஸ்ட் இது.

தங்கள் இல்லத் திருமணத்தை நிகழ்த்தித் தரச் சொல்லி நம்பிக்கையோட என்னை அணுகியதுமே முதல்ல கல்யாணம் நடக்கப்போகும் இடத்தை நேரில் பார்த்துவிடுவேன். பார்ப்பதற்கு நிறைய இருக்கைகளுடன் மிகப் பெரிய கல்யாண மண்டபமாக இருக்கும். ஆனால் பக்கச் சுவர்கள் எல்லாம் மிகவும் அசிங்கமாக அழுக்கேறி இருக்கும். காலம் முழுவதும் பார்த்து நினைவில் நிறுத்தி ரசிக்கும் விஷயம். நம் திருமணப் புகைப்படம் மற்றும் வீடியோ.

அது நேர்த்தியா அழகா இருக்க வேண்டாமா? எனவே குறைகள் புகைப்படம் மற்றும் வீடியோவில் பதிவாகாத வண்ணம் பக்கச் சுவர்களை ஏதாவது அழகான டெக்ரேஷன் செய்து மறைக்கப் பார்ப்பேன். திருமணத்தில் சாப்பாடு மட்டுமில்லை, டெக்ரேஷன், போட்டோகிராஃபி மற்றும் வீடியோகிராஃபி மிகமிக முக்கியம். எனவே இதில் மட்டும் எப்பவும் காம்ரமைஸ் ஆகக்கூடாது.

திருமணம் நிகழப்போகும் இடத்தின் அமைப்பை நானே முழுக்க முழுக்க என் கற்பனைக்கு ஏற்பட டிசைன் பண்ணி விடுவேன். அதை ஒரு ஆர்ட்டிஸ்டைக் கொண்டு அழகாக ஸ்கெட்ச் செய்து விடுவேன். ரொம்ப ரொம்ப திட்டமிட்டு மிகவும் நுணுக்கமாக சின்னச் சின்ன விசயத்தைக்கூட எழுதி எழுதி பிளான் செய்வேன். எல்லாவற்றையும் மிகவும் நுணுக்கமா கவனிப்பேன். லேசா எதாவது மிஸ் ஆகக்கூடாது.

வாடிக்கையாளருக்கு கொடுத்த வாக்கை மிகவும் கஷ்டப்பட்டாவது செய்து கொடுக்கணும். அலங்காரம் செய்யத் தேவையான வண்ண மலரிலிருந்து, மணமக்களுக்குத் தேவைப்படும் மாலை வரை ஃபிளாரிஸ்டோட உட்கார்ந்து டீப் டிஸ்கஸ் பண்ணுவேன். இரவு முழுவதும் திருமணம் நிகழும் அரங்கத்தில் வேலைகள் நடக்கும். ஒருவேளை நான் செய்ய நினைத்த டிசைன் பார்வையாக அமையவில்லையெனில் உடனே செட்டை மாற்றிவிடுவேன்.

திருமணத்தை சிறப்பா வித்தியாசமா நடத்த நினைக்கும் வாடிக்கையாளர் அமைந்தால் இன்னும் சிறப்புதான். செலவு கொஞ்சம் அதிகமானாலும் வாடிக்கையாளர்களிடம் அதைப்பற்றி எடுத்துச் சொல்லி சம்மதம் பெற்று செய்து விடுவேன். திருமண வீட்டாரின் பட்ஜெட்டை முதலில் கேட்போம்.

மணமக்களின் அம்மா, அப்பாவிடம் அமர்ந்து அவர்களின் திருமண உடைகள் பற்றிப் பேசுவோம். மணப்பெண்ணிற்கு வாங்கி இருக்கும் முகூர்த்த சேலை, ரிசப்ஷன் உடை, அவற்றின் கலர் போட்டோ இவற்றை எல்லாம் கேட்டு வாங்கி அதற்கு ஏற்ற மாதிரி மணமேடை மற்றும் வரவேற்பு அரங்குகளை தயார் செய்வோம்.

ஒரு இடத்தில் செய்த அலங்கார வடிவமைப்பை வேறு ஒரு திருமணத்தில் செய்வதில்லை. மணமக்கள் உடைக்கு ஏற்ற அதே வண்ணத்தில் மேடையின் பின் அமைப்பை வடிவமைக்க மாட்டேன். ஏனெனில், போட்டோ வீடியோவில் கலர் மெர்ஜ் ஆகிவிடும். மிகவும் வித்தியாசமான கலர் பின்னணி வேண்டும். அவங்க விரும்பிக் கேட்பதையும் செய்து தருவோம். தேவையான ஆலோசனைகளையும் வழங்குவோம்.

கல்யாணம் என்றால் நிறைய இருக்கு. ஒரு திருமணம் மிகப்பெரிய மைதானத்திலும் செய்யலாம். மிகவும் சாதாரண ஒரு மண்டபத்திலும் நடக்கலாம். சிறப்பாகச் செய்ய நினைப்பவர்களுக்கு அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்போம். திருமண நிகழ்வு இரண்டு வேளையா அல்லது மூன்று வேளையா எனக் கேட்டு நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதிரி அந்தந்த நிகழ்ச்சிக்கு ஏற்ப வித்தியாசமாக செட் வடிவமைத்துக்
கொடுப்போம்.

உதாரணத்திற்கு, மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சிக்கு நார்த் இன்டியன் ஃபீல் குடுக்கலாம். ராஜஸ்தானி தீம், பஞ்சாபி தீம் என அதற்கேற்ற அலங்காரம் செய்துதர முடியும். வட இந்திய குடும்பத்துக்குள் வந்த மாதிரி ஒரு உணர்வு கண்டிப்பாகக் கிடைக்கும். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மிகவும் ஆடம்பரமாக வடிவமைப்போம். இண்டோ-வெஸ்டர்ன் தன்மையில் இருக்கும். திருமணம் பாரம்பரியமாக மணமக்கள் வீட்டாரின் வழக்கப்படி வடிவமைக்கப்படும். மொத்த செட்டையும் அவர்களின் பாரம்பரிய செட்டப்பிலே கொண்டு வந்துவிடுவோம்.
 
மெஹந்தி சங்கீத் என்பது வட இந்திய  முறை. ஆனால் தற்போது நிறைய தமிழ் திருமணங்களில் இந்நிகழ்ச்சி இடம்பெறத்  துவங்கியுள்ளது. அது ஒரு ஜாலியான விஷயம். தாத்தா-பாட்டி உட்கார்ந்து பேரன்-  பேத்தி எஞ்சாய் பண்றதை ரசிப்பார்கள். இதில்தான் இரண்டு குடும்பங்களும்  இணைந்து அமர்வார்கள். மேலும் தாண்டியா நடனம், மணப்பெண்ணை டோலியில் அமர வைத்து அழைத்து வருவது, பையனைக் குதிரை வண்டியில் கூட்டி வருவது.

அவர்கள்  இருவரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்து அழைத்து வருவது என நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக நிகழும். பிறகு பெண்கள் மெஹந்தி இட்டுக் கொள்வார்கள்.  வண்ண வண்ண வளையல்கள், காதணிகள், விதவிதமான டிசைன்களில் நெற்றிப்பொட்டு  போன்றவை வந்திருக்கும் உறவினர், நண்பர்களுக்கு பரிசாகத் தரப்படும். இதற்குத் தனியாக செலவானாலும், இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.

இந்த மெஹந்தி சங்கீத் நிகழ்விற்காக இரு வீட்டு குடும்ப உறுப்பினர்களுக்கும், கோரியோ கிராஃபர்ஸ் வைத்து ஃபேமிலி  பெர்பார்மன்ஸ் கொடுக்க வைப்போம். ஸ்கைப்பில் கோரியோகிராஃபர்ஸ் வச்சு  வகுப்பு எடுப்போம். மெஹந்தி சங்கீத் அன்று ஃபேமிலி பெர்பாமன்ஸ் மற்றும் மணப்பெண் - மணமகன் கிராண்ட் என்ட்ரி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த மாதிரி நிகழ்ச்சிகளோட நிகழும் திருமணங்கள் ரொம்பவே நினைவில் நிற்கும்.

ஆண்களுக்கு கிளப்பிலும் பாரிலும் எப்படி லைட்டிங் செட் கொடுப்பாங்களோ அது மாதிரி  லைட்டிங் எல்லாம் செட் செய்து தருவோம். இந்த செட்டில் காக்டைல் பார்ட்டி மாதிரியான ஃபீல் கிடைக்கும். அதில் அவர்களுக்கு பிடித்த பிஸ்லியட்ஸ், கார்ட்ஸ், டைஸ் கேம்ஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை செட்டிற்குள்ளேயே அமைத்துத் தருவோம். ஐதீகப்படி நடக்கும் ஊஞ்சல் நிகழ்ச்சிகளுக்கு பாடகர்களையும் கொடுப்போம். குட்டி குட்டி பசங்களை அழகா உடை உடுத்தி நிகழ்ச்சியில் பாட வைப்போம்.

நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு சின்னச் சின்ன வித்தியாசமான கிஃப்டைக் கொடுத்து திணறடிப்போம். சமீபத்தில் நான் செய்து கொடுத்த டெஸ்டினேஷன் வெட்டிங்கில் ஐந்து ஈவென்ட்ஸ் இருந்தது. திருமணம் புனேயில் நடந்தது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தீம் செட் பண்ணிக் கொடுத்தேன். மெகந்தி சங்கீத்திற்கு பஞ்சாபி தீம். நிச்சயதார்த்தம் தென்னிந்திய ஸ்டைலில் நிகழ்ந்தது. மாப்பிள்ளையையும் பெண்ணையும் மாட்டுவண்டியில் அழைத்து வந்தோம். கூடவே மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், துடும்பு எல்லாம் அழைத்துச் சென்றிருந்தேன்.

மறுநாள் திருமணத்திற்கு திருப்பதி கோயில் மாதிரியே செட் போட்டுக் கொடுத்தேன். மிகப் பெரிய திறந்த வெளியில் கோயில் செட் போட்டோம். சைடு முழுவதும் கோயில் திருவிழாவில் சின்னச் சின்ன கடையிருக்கற மாதிரி செட் அமைத்திருந்தேன்.

அந்தக் கடைகளில் வந்திருக்கும் விருந்தினரை மகிழ்விக்க கிராமத்தில் கிடைக்கும் உணவுகளான ஓலைக் கொழுக்கட்டையிலிருந்து, பனங்கல்கண்டு பால், கும்பகோணம் டிகிரி காப்பி, பன்னிரெண்டு விதமான வாழைப்பழம், கோயில்பட்டி கடலை மிட்டாய், சேவு, திருநெல்வேலி அல்வா என நிறைய நிறைய கிராமத்து உணவுகள், வளையல் கடை, சின்னச் சின்ன பித்தளை கடவுள் சிலைகள், மீனாட்சி சிலை, காமாட்சி விளக்கு, ஸ்டிக்கர் கோலம், கோலங்களின் அச்சு, டோர் கேங்ஸ் என 50 முதல் 60 வித்தி யாசமான பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு செய்து குட்டிக் குட்டி ஸ்டால் மாதிரி செட் போட்டோம்.

அத்துடன் பாரம்பரிய விளையாட்டான உறியடி விளையாட்டும் ஏற்பாடு செய்திருந்தோம்.  இதற்காக 6 மாதம் உழைத்தேன். பாலாஜி கோயில் செட் போடுறாங்கன்னு செய்தி பரவி பக்கத்து ஊர்களிலிருந்து செட்டைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடிவிட்டது. இப்போது நிறைய மிக்ஸ்ட் மேரேஜ்தான் வருகிறது. செப்டம்பர் மாதம் திருச்சியில் ஒரு டெஸ்டினேஷன் வெட்டிங் செய்யப் போகிறேன்.

பையனோட அம்மா பிலிப்பினோ, அப்பா சிந்தி. பொண்ணு தமிழ் கிறிஸ்டியன். மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே பிளான் பண்ணத் துவங்கி
விட்டேன். கிளையண்ட்டோட உட்கார்ந்து ஸ்கைப் கால்ஸ் பேசுவோம். நான்கு அல்லது ஐந்து முறை பேசிப்பேசி அவர்களின்  தேவைகளை தெரிந்துகொள்வேன். அடுத்து அவற்றை பட்டியலிட்டு அனுப்பி விடுவேன். உங்கள் வீட்டுத் திருமணம் நிம்மதியா, சந்தோஷமா, மகிழ்ச்சியா நடக்கணுமா? நீங்கள் கனவு காணுங்கள் அதை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்” என்கிறார்.

(கனவுகள் தொடரும்…)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்