SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இருளை நீக்கிய ஒளி விளக்கு

2017-09-22@ 14:51:33

நன்றி குங்குமம் தோழி

-மகேஸ்வரி


வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டதா? பாம்பு தொடர்பான ஆராய்ச்சியா? மருத்துவ உபயோகத்திற்கு பாம்பின் விஷம் தேவைப்படுகிறதா? கூப்பிடுங்கள் இருளர்களை எனும் அளவுக்கு இருளர்கள் காடும் காடு சார்ந்த வாழ்க்கையுமாக பொதுச்சமூகத்தின் நினைவில் நிற்பவர்கள். ஒரு சில இருளர் இன மக்களின் வீடுகளுக்குள் பிறர் உள்ளே நுழைய வேண்டுமென்றால், தவழ்ந்து தான் உள்ளே நுழைய வேண்டும். அந்த அளவிற்கு கடைநிலை வாழ்க்கை அவர்களுடையது.

இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவராகிச் சாதித்துள்ளார். அவர் பெயர் துளசி. மேல்நிலை கல்விக்காக பல சவால்களை சந்தித்த துளசி, முயன்று மருத்துவராய் வெற்றிபெற்று இருளர் சமூகத்தின் இருளை நீக்கி இருக்கிறார். அடிப்படை மருத்துவ வசதி கூட கிடைக்காமல் அவதிப்படும் தன் இன மக்களுக்கு பணி செய்வதே தன் விருப்பம் என்கிறார் இந்த ஒளி விளக்கு.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு மிக அருகில், கோவை மாவட்டத்தின் தமிழக எல்லைப்பகுதியான ஆனைக்கட்டியை ஒட்டி அமைந்திருக்கும் அட்டப்பாடி பகுதிதான் துளசியின் பிறப்பிடம். இங்கு, தமிழ் பேசும் ஆதிவாசி இன மக்கள் அதிகம் உள்ளனர். இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (இருளர்) பிரிவைச் சேர்ந்த முத்துசாமி மற்றும் காளியம்மா தம்பதியின் ஒரே மகள் துளசி.

இவர் அட்டப்பாடி அகளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புவரை தமிழ் வழியிலும், பள்ளி இறுதி ஆண்டுகளை ஆங்கில வழியிலும் பயின்றிருக்கிறார். பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில், மருத்துவத்திற்குத் தேவையான அதிக மதிப்பெண்கள் துளசிக்கு கிடைக்கவே, மருத்துவ நுழைவுத் தேர்வையும் எதிர்கொண்டிருக்கிறார். முதல் முயற்சியில் அவருக்குத் தோல்வி கிடைத்தபோதும், ஒருசிலரின் வழிகாட்டுதலின்பேரில் முயன்று மருத்துவ நுழைவுத் தேர்விற்கான பயிற்சியினையும் மேற்கொண்டிருக்கிறார்.

இருளர் மக்களின் எட்டாக் கனியாய் இருந்த மருத்துவப் படிப்பில், நுழைவுத் தேர்வில் எஸ்.டி பிரிவில் 17-வது தரவரிசையில் வெற்றிபெற்ற துளசிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு மருத்துவக் கல்லூரியில், ஐந்தாண்டுகள் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிறகென்ன ஐந்தாண்டு மருத்துவ படிப்பை, தனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பாய் எண்ணி, சரியான முறையில் பயன்படுத்தி இருக்கிறார் இவர். எம்.பி.பி.எஸ்.

இறுதியாண்டு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில், அதில் முதலிடம் பிடித்த இவர், இருளர் இன மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். துளசி தேர்ச்சி பெற்ற செய்தி கேட்டு அவரது உறவினர்களும், அவரது ஊர் மக்களும் மகிழ்ச்சியடைந்ததுடன், தொடர்ந்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். `டாக்டர் ஆன இருளர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண்’ என்கிற பெருமை துளசிக்கு கிடைத்துள்ளது.

துளசியின் ஊரான அட்டப்பாடி பகுதியில் அளவுக்கு அதிகமாக குடித்துக் குடித்தே இறந்த மக்கள் ஏராளம். இங்கே மதுவுக்கு எதிராக பெண்கள் திரண்டு பெரும் போராட்டமும் நிகழ்த்தியுள்ளனர். இப்பகுதியில் மட்டும் கேரள அரசு மதுக்கடைகளுக்கு தடைவிதித்துள்ளது. இங்கு மருத்துவராகப் பணியாற்ற யாரும் முன்வராத நிலையில் பாம்புக் கடியால் இறப்போர் அதிகம். துளசிக்கு இரு கனவுகள்.

ஒன்று, அறுவை சிகிச்சை நிபுணர் ஆவது. மற்றொன்று, தன் ஊரான அட்டப்பாடியிலேயே மருத்துவச் சேவை புரிவது. வாழ்த்துகள் துளசி!! பள்ளிகளில் சேரும்போது விண்ணப்பங்களில், சாதி குறித்த காலம் எதுக்கு? இன்னும் இட ஒதுக்கீடு எதற்கு என்ற கேள்விகளை முன் வைப்பவர்களுக்கு…? இட ஒதுக்கீடு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்திருந்தால், மிகவும் பின்தங்கிய நிலையில், வாழ்வின் கடைக்கோடியில் வாய்ப்பற்று வாழும்,  இருளர் சமூகத்தைச் சேர்ந்த துளசி மருத்துவராகி இருக்க இயலுமா?

இருளர் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. உலகில் பழங்குடியினர் பேசும் மொழிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை. இவர்கள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு மொழிகளையே அதிகம் கலந்து பேசுகின்றனர். காடு, இனக்குழு சார்ந்த வாழ்வியலை மீறி நவீன பொது வாழ்வியலுடன் தங்கள் தனித்துவத்தையும் பேணி இணைவது இவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.

அடுத்த தலைமுறையினராவது படித்து முன்னேற வேண்டும் என்றால் தங்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்பது இருளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சமீபத்தில், தர்மபுரி மாவட்டத்தில் சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி பறை இசைத்தபடி ஆட்டம் பாட்டத்துடன் வந்த இருளர் இனமக்கள், 10ம் வகுப்பு வரை படிக்கும் தங்கள் குழந்தைகள் சாதிச் சான்றிதழ் இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். பலமுறை அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு கொடுத்தும் மேல் நடவடிக்கை ஏதுமில்லை என்கின்றனர் ஆதங்கத்துடன்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்