SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளிம்பு நிலையில் வாழ்க்கை

2017-08-21@ 14:23:54

நன்றி குங்குமம் தோழி

பிரபல மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவிலிருந்து மெல்லிய பாடல் ஒலி நம் செவிகளை தட்டுகிறது…“தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ… உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ…” என மெல்லிய குரலில் நோயாளிகளிடம் பாடிக்கொண்டே அவர்களுக்கு வேண்டியதைச் செய்கிறார் பானுமதி.

படுக்கையிலிருந்து எழமுடியாமல், நோயாள் அவதிப்படுபவர்களின் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியினை எந்த நேரத்தில் அழைத்தாலும் தட்டாமல் ஓடிவந்து செய்கிறார். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிற்கிறார். முகம் சுளிக்காமல் வலம் வருகிறார். தூக்கத்தில் உச்சத்தை தொடும் நடுநிசியா? கண்ணை விட்டு அகலாத தூக்கம் நம்மை இழுத்துப் பிடிக்கும் அதிகாலையா? எந்நேரம் அழைத்தாலும் நீ ஏம்மா கவலைப்படுற, நான் இருக்கேன் என வந்து அசராமல் நிற்கிறார் பானுமதி.

மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருத்துவம் சார்ந்து இயங்கும் மற்ற பணியாளர்களைத் தவிர்த்து, மருத்துவமனைக்குள் நோயாளிகளோடு தினம் தினம் பயணித்து, மருத்துவக் கழிவோடு, நோயாளிகளின் கழிவுகளையும் சேர்த்தே அப்புறப்படுத்தும், இந்த விளிம்புநிலை ஊழியர்களைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. கடைநிலையில் நின்று வேலைசெய்யும் இவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் இல்லையென்றால்..? பானுமதியிடம் பேசியபோது...

‘‘ஐந்தாவது வரைதான் படிச்சிருக்கிறேன். கடந்த 17 ஆண்டுகளா இந்த வேலையில இருக்கிறேன். மூன்று பெண் குழந்தை, ஒரு பையன். பெண்கள் மூவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் மற்றும் கணவருடன் வசிக்கிறேன். என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை. இதயம் தொடர்பான பிரச்சனை அவருக்கு. எந்த வேலையும் அவரால் செய்ய முடியாது.

நிறைய மூச்சு வாங்கும். எனவே கடந்த பதினைந்து ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டிலே இருக்கும் அவரையும் சேர்த்து, என் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை எனக்கு. நானும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்றானபோது, இந்த வேலைதான் படிக்காத எனக்குக் கை கொடுத்தது.

மருத்துவமனை வேலைக்கு வந்த மூன்றாவது நாள் அது. ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று சுத்தம் செய்யச் சொன்னார்கள். உள்ளே ஒரு சர்க்கரை நோயாளியின் காலை எடுத்து தனியாக வைத்திருந்தார்கள். அதைப்பார்த்ததும் நான் ரொம்பவும் பயந்துவிட்டேன். மனசெல்லாம் பதறுச்சு. பிறகு அங்கிருந்த மற்றவர்கள்தான் என்னைத் தேற்றினார்கள். இதெல்லாம் பழகிவிடும், பயப்படாத பானு எனச் சொன்னார்கள்.

தொடர்ந்து நோயாளிகள், அவர்கள் படும் அவதி, ஆபரேஷன் தியேட்டர், இறப்பு, இத்தியாதி இத்தியாதி... இதையெல்லாம் பார்த்து பார்த்து எனக்கு இந்த மருத்துவமனை வாசம் பழக்கமாகிவிட்டது. இதோ இப்பக் கூட மூன்று நாளுக்கு முன்னாடி குழந்தைகள் வார்டுல இருந்த ஒரு குழந்தை... சரியாகி விடும், வீட்டுக்குப் போயிடும்னு நினைச்சு தினம் தினம் அதைச் சுத்தி சுத்தி வந்து பார்ப்பேன். ஆயா தண்ணி வேணும், பழம் வேணும்னு எதையாவது கூப்புட்டுக் கூப்புட்டுக் கேட்கும். திடீர்னு இறந்து போச்சு. எனக்கு மனசே ஆறல.

அன்னைக்குப் பூரா அந்தக் குழந்தை ஞாபகமாகவே இருந்துச்சு. என்ன செய்யுறது. இருக்குற வரைக்கும் எல்லாருட்டயும் அன்பா, பாசமா இருப்போம். வேற எதைக்கொண்டு போகப் போறோம். என் குடும்ப சூழ்நிலையால்தான் இந்த வேலைக்கு வந்தேன். ஆனால் இங்க சின்னக் குழந்தைகள், நோயாளிகள் படும் அவஸ்தை, நோயாளி களோடு வரும் குடும்ப உறுப்பினர்களின் கஷ்டம் இதையெல்லாம் பார்க்கும்போது, நாம அவர்களுக்கு செய்யிறது ஒரு சேவைன்னு தான் என் மனசுக்குள்ள தோணும்.

ஏற்கனவே அவர்கள் நோயால் அவதிப்படும்போது, ஏன் அவுங்ககிட்ட நம்ம டென்ஷனையும், கோபத்தையும், வெறுப்பையும் காட்டணும்? முடிஞ்சவரை அவங்களை சிரிக்க வைப்போம். என்னால முடிந்த உதவியையும், நம்பிக்கையும் கொடுப்போம்ங்கிறதுதான் என் எண்ணம்” என முடித்தவர், தொடர்ந்து அடுத்த பாடலை பாடிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார். மனம் கனத்துப் போனது.

-மகேஸ்வரி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rahl_soniyaa

  டிசம்பர் 16ல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் : ஒருமனதாக தேர்வாகிறார் ராகுல்காந்தி

 • mnao_diretor11

  சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு டைரக்டர் மனோபாலா பரிசுகள் வழங்கினார்

 • WorldMissManishiChile

  உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மனுஷி சில்லர்: 118 நாடுகள் பங்கேற்பு

 • Okenakal

  ஓகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : படகு சவாரி செய்து உற்சாகம்

 • 20-11-2017

  20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்