SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீடிக்கும் அவலம்

2017-06-14@ 15:29:20

நன்றி குங்குமம் தோழி

நம் சமூகத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டிய பிரச்னை குழந்தைத் திருமணம். ‘‘இந்த டிஜிட்டல் காலத்திலுமா குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன?’’ என்று நீங்கள் கேட்டீர்களேயானால் அக்கேள்வி ‘‘இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்? என்கிற கேள்விக்கு ஒப்பானது. திருமண உறவுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் தயாராகாத வயதில் மேற்கொள்ளப்படும் திருமணம் என்பது நிச்சயமாக வன்முறைதான்.குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கென சட்டமே இயற்றப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் வெறும் சட்டத்தினாலும், தண்டனையினாலும் மட்டுமே இதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. இதற்கான சமூகக் காரணங்களை ஆராய்வதன் மூலம்தான் நாம் உண்மையான தீர்வை கண்டறிய முடியும். குழந்தைத் திருமணம் என்பது உடல், மனம் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல ஒரு குழந்தையின் உரிமைக்கான பிரச்னை என்பதால் இதில் மேலதிக கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சத்தியமங்கலம் காடுகளில் வாழும் ஊராளி, சோளகர் சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் குழந்தைத் திருமணம் நடைமுறையில் இருக்கிறது. 15 வயதில் இடுப்பில் ஒரு குழந்தையோடும் வயிற்றில் ஒரு கருவை சுமந்து கொண்டும் உள்ள பெண் குழந்தைகளை அங்கு பார்ப்பது சர்வ சாதாரணம். இப்படி ஒரு காட்சியை ஏதோ சத்தியமங்கலம் காட்டில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில் பார்த்திருக்கலாம்.அதற்காக இந்திய அளவிலான பிரச்னை என குழந்தைத் திருமணத்தைக் கூற முடியுமா? மூன்றாண்டுகளுக்கு முன் யுனிசெஃப் வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலகில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குழந்தைத் திருமணத்துக்கு எதிரான உரையாடலை நிகழ்த்துவதென்பது காலத்தின் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஈரோடு மாவட்டம் கொங்காடையைச் சேர்ந்த 15 வயதுப் பெண் சங்கீதாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசினேன். கைக்குழந்தையை தாங்கியபடி சிறு தயக்கத்துடனே என்னிடம் பேசினார். ‘‘அஞ்சாவது வரைக்கும் கொங்காடை ஸ்கூல்ல படிச்சேன். அப்புறம் வீட்டுல கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. இப்ப என் வீட்டுக்காரரோட வீட்டு வேலைகளை பண்ணிக்கிட்டு, குழந்தையைப் பார்த்துட்டு இருக்கேன். இது ஒண்ணும் புதுசில்ல.இங்க இது காலங்காலமா நடக்கிறதுதான்’’ என்றார். பழங்குடிகள் மத்தியில் நடைபெறும் குழந்தைத் திருமணத்துக்கு அவர்களின் கலாசாரமும் அறியாமையும் காரணம் என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆனால் அச்சமூகத்தைச் சேர்ந்த பெரியவர் ஜவரையன் சொல்லும் காரணமோ வேறொரு கோணத்தில் இருக்கிறது.

‘‘கொங்காடையில 8ம் வகுப்பு வரைக்கும்தான் பள்ளிக்கூடம் இருக்கு. அதுக்கு மேல படிக்கணும்னா 45 கிலோ மீட்டர் தாண்டி அந்தியூருக்குதான் போகணும். இந்த ஊருக்கு பஸ் வசதி பெருசா கிடையாது. இப்படியிருக்கிறப்போ தினமும் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கவும் முடியாது. ஹாஸ்டல்ல தங்க வெச்சு படிக்க வைக்க நாங்க விரும்பல.8வது படிக்குறதுக்குள்ளயே பொண்ணுங்க வயசுக்கு வந்துடுது. படிச்சு முடிச்சப்புறம் வயசுப் பொண்ணை வீட்டுல வெச்சிருக்க முடியாது. ஏன்னா பொண்ணைத் தனியா உட்டுட்டு அம்மா, அப்பா ரெண்டு பேரும் வெளிய வேலைக்கு போக வேண்டி வரும். இதனாலதான் சட்டுனு கல்யாணம் பண்ணி வெச்சிடுறோம். அதுதான் அந்தப் பொண்ணுக்கு பாதுகாப்பு.

இதுவே 12வது வரைக்கும் இங்கயே பள்ளிக்கூடம் இருந்துச்சுன்னா 17 வயசு வரைக்கும் படிக்க வெச்சுட்டு 18 வயசுல கல்யாணம் பண்ணிக் கொடுப்போம். கவர்மென்ட் அதுக்கு ஏற்பாடு பண்ணட்டும். இந்த மலைல கொங்காடை மாதிரி நிறைய கிராமங்க இருக்குது. இதுக்கெல்லாம் சேர்த்து ஒரு மேல்நிலைப்பள்ளி தொடங்கணும்’’ என்கிறார்.குழந்தைத் திருமணத்துக்கு அரசின் பொறுப்புணர்வுக்குமான தொடர்பை கீறிக்காட்டினார் ஜவரையன். எல்லா சமூகப் பிரச்னைக்குமான தீர்வு அரசிடம்தான் இருக்கிறது என்பதையே ஜவரையன் கூற வருகிறார். சத்தியமங்கலம் மலைப்பகுதி கிராமங்களில் வாழும் பழங்குடி குழந்தைகளின் கல்விக்காக செயல்பட்டு வரும் சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் நடராஜிடம் பேசினேன்.

‘‘கவின் என்கிற பழங்குடி மாணவன் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் குழந்தைத் திருமணம் குறித்த ஆய்வு ஒன்றை சமர்ப்பித்து அதற்காக பரிசும் பெற்றிருக்கிறான். அந்த ஆய்வில் பழங்குடி மக்கள் திருமணங்களில் 80 சதவிகிதம் குழந்தைத் திருமணங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறான். குழந்தைத் திருமணம் சட்டப்படி குற்றம் என்றாலும் இம்மக்கள் மத்தியில் அது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

இம்மக்கள் மத்தியில் குழந்தைத் திருமணத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை. குழந்தைத் திருமணம் கூடாது எனும்போது குழந்தையின் கல்விக்கான உத்தரவாதத்தை அளிப்பதும் அரசின் கடமையாகும். தமிழக அரசு தாலிக்குத் தங்கம் எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன்படி 18 வயது பூர்த்தியடைந்த, படித்த பெண்ணின் திருமணச் செலவுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணமும், கால் பவுன் தங்கமும் தரும் திட்டம் அது.அத்திட்டம் குறித்த எந்த விழிப்புணர்வும் மலைப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை. அத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது திருமணச் செலவுக்கான பணத்தின் மீதான உத்தரவாதத்தோடு அவர்கள் குழந்தைகளை படிக்க வைத்து 18 வயதுக்கு மேல் திருமணம் செய்து வைப்பதை ஊக்குவிப்பதாக அமையும்.

பழங்குடி மக்களைப் பொறுத்தவரை அவர்களிடம் அனைத்து ஆவணங்களும் இருக்காது. ஆவணங்கள் இல்லாததாலேயே அவர்களுக்கு பல சலுகைகள் கிடைப்பதில்லை. எனவே இது போன்ற திட்டங்கள் அவர்களுக்கு எளிதில் சென்று சேரும்படியான நடவடிக்கைகள் தேவை. திருமண அழைப்பிதழில் மணமகன் மற்றும் மணப்பெண்ணின் வயதும் குறிப்பிட்டிருக்க வேண்டும் என ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006ன் கீழ் தண்டனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், மக்கள் அமைப்புகள் எல்லாம் இதை ஒரு சமூகப் பிரச்னையாக எடுத்து அதைக் களைவதற்காக செயல்படும்போது மட்டுமே இதனைத் தடுத்து நிறுத்த முடியும்’’ என்கிறார்.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கூர் நோக்ககத்தின் மாநில அமைப்பாளர் ஆண்ட்ரூ சேசுராஜிடம் பேசினேன். ‘‘பழங்குடி கிராமங்களுக்கேயான பொதுவான பிரச்னை என்னவென்றால் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வசிப்பார்கள். அவர்களில் மிகக்குறைந்த எண்ணிக்கை கொண்ட குழந்தைகளுக்காக மேல்நிலைப்பள்ளி தொடங்குவதென்பது நடைமுறையில் சாத்தியமற்றது.பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல பழங்குடி கிராமங்களில் உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான பெற்றோர் அங்கே குழந்தைகளை அனுப்புவதில்லை. காரணம் என்னவென்றால் பழங்குடிகளின் கலாசாரம், வாழ்வு முறைக்குத் தகுந்தாற்போல் அது உருவாக்கப்பட்டிருக்காது.

அரசு மற்றும் பெற்றோர் என இரு தரப்பினரிடமிருந்தும் மாற்றம் ஏற்பட வேண்டும். அரசு, பழங்குடிகளின் வாழ்வுமுறை மற்றும் கலாசாரத்துக்குப் பொருந்திப் போகும்படியான உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைக்க வேண்டும். கால மாற்றத்துக்கு இசைவாக பெற்றோர்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.தங்களது கலாசாரத்தை விட்டுக்கொடுக்காமல் அதே சமயம் குழந்தைகளின் உரிமையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான கல்வியை வழங்குவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குழந்தைத் திருமணங்கள் முன்பு மரபின் நீட்சியாக நடந்து வந்தன. ஆனால் இன்றைக்கு குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்துதான் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.

தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் வேலைக்காக ஒசூர், பெங்களூருக்குச் செல்கிறார்கள். பெண்களை வீட்டிலும் வைத்திருக்க முடியாது, வேலைக்குச் செல்லும் இடத்துக்கும் கூட்டிச் செல்ல முடியாது என்கிற சூழல் இருப்பதால் உடனே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். சென்னை புறநகரான செம்மஞ்சேரி, கண்ணகி நகர் ஆகிய பகுதிகளில் கூட இப்படித்தான் நடக்கின்றன.குழந்தைகளுக்கான கல்வியோடு, பாதுகாப்பையும் உறுதி செய்வதன் மூலமே இதனை தடுக்க முடியும். 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் கல்வி அளிக்க வேண்டும் என கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. அதனை 18 வயதாக நீட்டிக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.இதன் மூலம் குழந்தைத் திருமணத்தைத் தடுக்கலாம். 12ம் வகுப்பு படித்து முடித்ததுமே தன்னிச்சையாக அவர்கள் மேற்படிப்பு படிக்க முன் வருவார்கள். இளநிலைப் பட்டம் முடித்து விட்டு திருமணம் செய்தார்கள் என்றால் பெண்ணின் திருமண வயதான 21 வயதை எட்டியிருப்பார்கள். 2015 - 16ல் எடுத்த தேசிய குடும்ப நல வாழ்வு கணக்கெடுப்பின்படி நூற்றில் 15 திருமணங்கள் குழந்தை திருமணங்கள் என்று தெரிய வந்துள்ளது. குழந்தையைப் பிரசவித்த தாய்மார்களின் வயதை வைத்து மட்டுமே இது கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படியெனில் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாத, வெளிப்பார்வைக்கு வராத குழந்தைகளின் எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கும். குழந்தைத் திருமணத்தைப் பொறுத்தவரை நமது சட்டங்களிலேயே மிகப்பெரும் முரண்பாடுகள் இருக்கின்றன. இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணத்துக்கு பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி இருக்க வேண்டும், மன வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பது போன்ற ஐந்து விதிமுறைகள் இருக்கின்றன.ஆனால் ஒரு திருமணம் செல்லாது என்று சொல்வதற்கு வயது தவிர மற்ற நான்கு விதிமுறைகளையும் காரணமாகக் கொள்ள முடியும். அப்படியானால் குழந்தைத் திருமணம் நடக்கும் முன் தடுக்கலாமே தவிர நடந்த பிறகு அதை செல்லாததாக அறிவிக்க முடியாது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடைச்சட்டம், 18 வயது பூர்த்தியடையாத ஆணோ, பெண்ணோ பாலியல் உறவுக்கு இசைவு தெரிவிக்க முடியாது. அவர்களின் சம்மதத்தின் பேரில் உறவு கொண்டாலும் அது பாலியல் வன்முறை என்றே கொள்ளப்படும்.

ஆனால் திருமண உறவுக்குள்ளான பாலியல் வன்முறை (Marital rape), பாலியல் வன்முறையாகக் கருதப்படுவதில்லை. இந்த இடத்தில் ஒரு சட்டத்தை இன்னொரு சட்டமே மறுதலிக்கிறது. திருமண உறவுக்குள்ளான பாலியல் வன்முறையையும் பாலியல் வன்கொடுமையாக பதிவு செய்ய வேண்டும் என வர்மா கமிஷன் கூறியிருக்கிறது. சட்டங்களுக்குள் இருக்கும் இது போன்ற முரண்களை களைய வேண்டும்’’ என்கிறார்.பழங்குடி மக்கள் மத்தியில் மட்டுமல்ல தலித் சமூகம் மற்றும் இஸ்லாமிய சமூகத்தவர்களிடமும் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமிய மக்களிடம் குழந்தைத் திருமணங்கள் எந்தளவில் இருக்கின்றன? அவர்கள் குழந்தைத் திருமணங்களை எப்படியாகப் பார்க்கிறார்கள்? கவிஞர் சல்மாவிடம் கேட்டேன்.

‘‘இஸ்லாமிய சமூகத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன எனக் குறிப்பிட்டுச் சொல்வது மாதிரியெல்லாம் இல்லை. எல்லா சமூகங்களை போலவும்தான் இஸ்லாமிய சமூகத்திலும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களில்தான் இவை நடக்கின்றன. போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே இதற்கான காரணம். வேற்று மதத்தவரை காதலித்து திருமணம் செய்து விடக்கூடாது என்கிற பயம் முக்கியக் காரணமாக இருக்கிறது. பருவமெய்திய பெண்ணை படிக்க அனுப்பினாலும் அது போன்ற சிக்கல் இருக்கிறது.

வீட்டிலும் வைத்திருக்க முடியாது எனும்போது திருமணம் செய்து வைக்கும் முடிவுக்குள் வந்து விடுகின்றனர். ஒரு பெண் வயதுக்கு வந்ததும் திருமணம் செய்து வைத்து தங்களது கடமையை முடித்து விடுவோம் என்கிற எண்ணம்தான் பலருக்கும் இருக்கிறது. பெரும்பாலும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதற்கு சாதி, மதத்தை காப்பாற்றுவதற்கான நெருக்கடி அதிகமாக இருப்பதே காரணம்.இப்போது அது பயமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு தொலைத் தொடர்பு வசதிகள் பெருகியுள்ள காலம் என்பதால் சமூகத்தை அது அச்சங்கொள்ள வைத்திருக்கிறது. பெண்கள் மீது நடைபெறும் வன்முறைகளும் கூட பெற்றோரின் பயத்துக்குக் காரணமாக இருக்கலாம். என்னதான் அரசு சட்டம் போட்டாலும் குழந்தைத் திருமணத்தை யாரும் காட்டிக் கொடுப்பதில்லை.

பஞ்சாயத்து தலைவர்களுக்குத் தெரியாமல் ஒரு திருமணம் நடைபெறாது. ஆனால் அவர்தான் முன்னின்று அத்திருமணத்தை நடத்தி வைப்பார். சமூகப் பொது மனநிலையில் ஏற்படும் மாற்றம்தான் முக்கியம்’’ என்கிறார். குழந்தைத் திருமண தடைச்சட்டம் என்ன கூறுகிறது? வழக்கறிஞர் லூசியிடம் கேட்டேன்.”இச்சட்டம் 2006ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டு 2007ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. 2001ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் 1.5 மில்லியன் குழந்தைகள் திருமணம் செய்திருக்கின்றனர் எனத் தெரிய வந்தது. அதன் பிறகே இது நாட்டுடைய பிரச்னை என்பதைக் கருதி சட்டமாகக் கொண்டு வந்தார்கள். குழந்தைத் திருமணம் பல மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடியது.குழந்தைத் திருமணத்தை ஊக்குவித்தவர்கள்/ நடத்தி வைத்தவர்களுக்கும், பெற்றோர் மற்றும் திருமணம் புரிகிற ஆணுக்கு 2 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் என இச்சட்டம் கூறுகிறது. பிணையில் வெளிவர முடியாத குற்றமாக சட்டம் இதனை கருதுகிறது.

குழந்தைத் திருமணத் தடுப்பு பாதுகாப்பு அலுவலர் குழந்தைகளை பாதுகாப்பதற்காக மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களிடம் குழந்தைத் திருமணத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குழந்தைத் திருமணம் நடைபெறுவதை கண்டறிந்து சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளுதல்தான் அவர்களுக்கான பணி. இதற்கு மாவட்ட ஆட்சியர்தான் பொறுப்பு.

இது பலர் ஒன்றிணைந்து நிகழ்த்த வேண்டிய மாற்றம். அரசு, சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்களுடன் இணைந்து இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்த வேண்டும்’’ என்கிறார். குழந்தைத் திருமணத்தால் நேரும் கருத்தரிப்பால் ஏற்படும் உடலியல் சார்ந்த பிரச்னைகள் பற்றி விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் கெளரி மீனா.‘‘பருவமெய்துதல் என்பது வளர்ச்சியின் ஆரம்பம்தானே தவிர கருத்தரிப்பதற்கான முழுத்தகுதியை எட்டியதாக ஆகிவிடாது. ஒரு பெண் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு 21 வயது வரை காலம் தேவை. அப்போதுதான் கர்ப்பப்பை உறுதியடைந்து இடுப்பு எலும்பு வலுவாகும். குழந்தையை தாங்கும் திறன் அப்போதுதான் கிடைக்கும். கர்ப்ப காலத்தில் நடந்து கொள்ள வேண்டியது குறித்தான விழிப்புணர்வு ஏற்படும்.

மருத்துவர்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியும். அதற்கு முன் கர்ப்பம் தரிக்க முடியும். ஆனால் அந்த கர்ப்பம் ஆரோக்கியமானதாக இருக்காது. 21 வயது வரை அவர்களுக்குத் தேவையான சத்தை அவர்கள் வெளியிலிருந்து எடுத்துக் கொண்டிருப்பார்கள். இப்படியிருக்கையில் அவர்களால் எப்படி குழந்தைக்கு சத்து கொடுக்க முடியும். இதனால் கருக்கலைதல், எடை குறைவாகக் குழந்தை பிறத்தல், சவலைப்பிள்ளை பிறத்தல் ஆகியவை ஏற்படலாம்.சுகப்பிரசவம் ஆவதில் சிக்கல் மற்றும் பிரசவக்காலத்தில் அதிக உதிரப் போக்கு நடைபெறலாம். குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரப்பில் பிரச்னை இருக்கும். பெண்ணுக்கு தாம்பத்திய உறவின் காரணமாக கர்ப்பப்பை வாயில் புண் வரலாம். கர்ப்பப்பை புற்றுநோய் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம். குழந்தைத் திருமணம் என்பது அறவே கூடாது. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் காரணமாக பதின் வயதிலேயே தாம்பத்தியத்தில் ஈடுபடும் நிலையும் இருக்கிறது.

அது குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பதின்பருவத்தில் கொள்ளும் உறவால் கர்ப்பம் அடையும்போது, கருக்கலைவு செய்வது பல விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் குழந்தையே பிறக்க வாய்ப்பில்லாமல் கூட போகலாம். மேம்பட்ட சமூகத்தில் குழந்தைத் திருமணம் என்கிற பேச்சே இருக்கக் கூடாது. விவாதங்களுக்கே உட்படுத்தாமல் ஒரே முடிவாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’’ என்கிறார்.குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் உளவியல் பிரச்னைகள் குறித்து விளக்குகிறார் உளவியல் மருத்துவர் ராமன். ‘‘குழந்தை திருமணம் செய்துகொண்டோர் பெற்றோர் மற்றும் நண்பர்களிடமிருந்து பிரிய வேண்டிய சூழல் ஏற்படுவதால் சமூகத்தில் தனித்தே வாழும் மன நிலைக்கு ஆட்படுவார்கள். குடும்ப நிர்வாகம் குறித்த அறிதல் இல்லாமல் போவதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பீடு குறைகிறது.

கல்வி கிடைக்கப் பெறாததால் எல்லாவற்றுக்கும் கணவரையோ, அவரது குடும்பத்தையோ சார்ந்தே வாழ வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவார்கள். வயது முதிர்ந்த ஆணுக்குத் திருமணம் செய்து வைக்கும்போது கணவன் இறந்து விட்டால் இளம் விதவையாக வேண்டி வரும். அது பல உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும். குடும்ப வன்முறை மற்றும் திருமண உறவுக்குள்ளான பாலியல் வன்முறைகளை சந்திக்க நேரிடும்போது தற்கொலை எண்ணத்துக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது.வளர்ச்சியின் ஒரு பகுதியான தனித்துவம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. பிரச்னையைக் கையாளும் விதம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து மீண்டு வருவதில் சிக்கல் ஏற்படும். ஆளுமைத்திறன் வளராமல் போகும். அதிகப்படியான மன அழுத்தம், மிகக்குறைந்த சுய மதிப்பீடு மற்றும் தன்னம்பிக்கை, கோபம், தாழ்வு மனப்பான்மை, கையறு நிலை ஆகியவற்றுக்கு ஆளாவார்கள்’’ என்கிறார்.

-கி.ச.திலீபன்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • swati_hunger_strike

  போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

 • volvo_boat_comp

  பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

 • wildanimals_docto11

  காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

 • teachers_protest11

  டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

 • road_safetyr

  சாலை பாதுகாப்பு வார விழா : போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்