SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சருமத்தை பத்திரமா பார்த்துக்கங்க

2017-06-14@ 15:22:41

நன்றி குங்குமம் தோழி

சம்மர் ஸ்பெஷல்

அந்தந்த பருவத்துக்கு ஏற்றாற்போல் நம் உடலையும் தகவமைத்துக் கொள்வது அவசியமானது. கோடைக் காலத்தில் இருக்கிறோம். அதி உக்கிரமாக வெயில் நம்மை தாக்கிக் கொண்டிருக்கிறது. உடலை எப்படி குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது? இக்காலத்தில் என்னென்ன சாப்பிடலாம்? என்னென்ன சாப்பிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவதை போல் சருமத்தை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். ஏனென்றால் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தாலும் வியர்வை தேங்குவதாலும் பல சரும நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது போன்ற நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை விளக்குகிறார் சரும நல நிபுணர் வானதி திருநாவுக்கரசு...

‘‘கோடைக் காலத்தில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அது நேரடியாக தாக்கும்போது தோல் கருத்துப் போகலாம். வெயிலின் ஒவ்வாமை காரணமாக நம் உடலில் எங்கெல்லாம் வெயில் படுகிறதோ அங்கு Polymorphic Light Eruption எனும் சரும பாதிப்பு ஏற்படலாம். வெயில் பட்ட இடங்களிலெல்லாம் புள்ளி புள்ளியாக சிவந்து போய்விடும். முகப்பகுதி வெயிலுக்குப் பழகியிருக்கும் என்பதால் அது தாங்கிக் கொள்ளும்.ஆனால் கழுத்து, கை, முதுகுப்புறம், கால் போன்ற பகுதிகள் இதனால் பாதிப்படையலாம். வெயிலில் நீண்ட நேரம் சுற்றித் திரிந்தால்தான் இது ஏற்படும் என்றல்ல. நில நொடிகள் பட்டாலுமே கூட இப்பிரச்னை ஏற்படலாம். வெயிலைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை இழப்பவர்களே இதனால் பாதிக்கப்படுவார்கள். வெயில் மற்றும் வியர்வை காரணமாக படர் தாமரை ஏற்படலாம்.

விரல்கள், தொடை, அக்குள் என எங்கெல்லாம் தோல்கள் உராய்கின்றனவோ அங்கு Inter trigo எனும் பாதிப்பு ஏற்படுகிறது. சரும பாதிப்புகள் பொதுவாக பாக்டீரியா தொற்று மற்றும் பூஞ்சைத் தொற்றுகளால் ஏற்படுகின்றன. பெரும்பாலும் பூஞ்சைத் தொற்று காரணமாகத்தான் சரும பாதிப்புகள் ஏற்படுகின்றன.நம் தோலில் உள்ள பூஞ்சைகள் அதிக வியர்வை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது தன் நிலையை மாற்றிக்கொண்டு நோயை ஏற்படுத்துகிறது. அழுக்குத் தேமல் அல்லது அழகுத் தேமல், Malassezia எனும் பூஞ்சைத் தொற்றால்தான் ஏற்படுகிறது. இது கோடைக் காலத்தில் அதிகமாக ஏற்படும்.

கோடைக்காலத்தில் ஏற்படும் முக்கியமான சருமப் பிரச்னை வியர்க்குரு. உடல் முழுவதுமே கூட வியர்க்குரு ஏற்படும். வியர்வை காய்ந்து வியர்வைத் துழைகளை அடைத்துக் கொள்வதன் காரணமாக வியர்க்குரு ஏற்படுகிறது. வியர்க்குருவால் அரிப்பும், எரிச்சலும் இருக்கும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குளிப்பதற்கு குளிர்ந்த நீரைத்தான் பயன்படுத்த வேண்டும்.குழந்தைகளைக்கூட சுடு நீரில் குளிப்பாட்டாமல் குளிர்ந்த நீரில்தான் குளிப்பாட்ட வேண்டும். எரிச்சலை மட்டுப்படுத்த லோஷன் பயன்படுத்தலாம். கேலமின் + லிக்குவிட் பேரஃபின் கலந்த லோஷனைத்தான் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அதுதான் எரிச்சலைக் குறைத்து தோலை மிருதுவாக வைத்துக்கொள்ளும். கேலமின் மட்டும் பயன்படுத்துவது வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். விட்டமின் சி உள்ள பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

எலாஸ்டிக் குறைவாக உள்ள/ காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். நாளொன்றுக்கு இரண்டு வேளை குளித்தல் அவசியம். வியர்வை தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படர்தாமரை சக மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் மண்ணிலிருந்தும் தொற்றும் நோய் ஆகும். அதற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால்தான் பெரிய விளைவுகளிலிருந்து தப்ப முடியும். சரும பிரச்னைகளைப் பொறுத்த வரை எதற்கும் மருத்துவரைத்தான் அணுக வேண்டுமே தவிர விளம்பரப்படுத்தப்படும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தக் கூடாது.

நாளொன்றுக்கு நான்கைந்து முறை முகம் கழுவுவது நல்லது. சன் ஸ்க்ரீன் பயன்படுத்தும்போது முகம் கருக்காமல் இருக்கும். ஆனால் எந்த சன் ஸ்க்ரீனும் 100 சதவிகிதம் பயனளிக்காது என்பதால் முடிந்த வரை குடை அல்லது தொப்பி அணிந்து கொள்வது நல்லது. கோடைக்காலம் முடியும் வரை டைட்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். Palazzo போன்ற தளர்வான ஆடைகளை அணியலாம்.கைகளுக்கு காட்டன் உறைகள் மற்றும் கால்களுக்கு காட்டன் சாக்ஸ் அணிவது நல்லது. கூலர் அணியலாம். ஆனால் அது புற ஊதாக்கதிர்களிலிருந்து காக்கும் கூலராக இருக்க வேண்டும். கூலர் அணிந்ததுமே விழித்திரை விரியும். பாதுகாப்பில்லாத கூலர் அணியும்போது விரியும் விழித்திரை புற ஊதாக்கதிரின் தாக்கத்துக்கு ஆட்படலாம்.இது ஆபத்தில்தான் முடியும். குளித்தவுடன் நன்றாக ஒழுங்காக உடலை  துடைக்க வேண்டும். உடலில் ஈரமில்லாமல் நன்கு காய்ந்த பிறகுதான் ஆடைகளே அணிய வேண்டும். சிலர் உடல் முழுவதும் பவுடர் போடுவார்கள். அது நல்லதல்ல. சரும நலம் மீதும் அக்கறை கொள்ள வேண்டும். அலட்சியம் காட்டும்போது சிறிய பிரச்னை கூட பெரிய பிரச்னையாக மாறிவிடும்’’ என்கிறார் வானதி.

-கி.ச.திலீபன்

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bihar_floods

    வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு : இதுவரை பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு

  • 10000EGGpmnklete

    10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட் - பெல்ஜியம் விழாவில் மக்கள் கொண்டாட்டம்

  • 17-08-2017

    17-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 300KILKLES600missing

    மேற்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300 பேர் பலி : 600 பேர் மாயம்

  • 2-YREAROLDgirlRESIUED

    ஆந்திராவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2-வயது குழந்தை: 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்