SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூமி மேலே போனால் என்ன..?!

2020-06-03@ 11:43:22

நன்றி குங்குமம் தோழி

சென்னை பெசன்ட் நகர் ப்ரோக்கன் பிரிட்ஜ் அருகே பாராசூட் விண்ணில் எழும்பிப் பறக்க அதில் தொங்கியபடி கைகளையும், கால்களையும் ஆட்டி ஆர்ப்பரித்து காற்றில் மிதந்து பறவைப் பார்வையில் கடலின் அழகை ரசித்து கீழே இறங்கியவர்கள் அத்தனை பேரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்.. அதிலும் பெரும்பாலும் வீல்சேர் யூஸர்ஸ் என்றால் நம்ப முடிகிறதா..? அதுதான் உண்மை.

கோட்டூர்புரத்தில் இயங்கிவரும் வித்யாசாகர் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி தொடங்கி 35 ஆண்டுகள் நடைபெறுவதைக் கொண்டாடும் விதமாய் பாராசெயிலிங்(parasailing) அட்வென்சர் விளையாட்டை, பெசன்ட்நகர் கடற்கரை ஓரம் மூன்று நாட்கள் பள்ளி நிர்வாகம் நடத்தியது. இதில்தான் இந்த அட்வென்சர் விளையாட்டு நிகழ்த்தப்பட்டது. சிறப்புக் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாகவே நாம் வைத்திருப்போம். மற்ற குழந்தைகளைப்போல் அவர்களுக்கும் விளையாட்டுகளையும், அட்வென்சர்களையும் அனுபவிக்கும் ஆர்வம் உள்ளது என்பதை நாம் எப்போதும் உணர்வதில்லை.

உணர்ந்தாலும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில்லை. இதை உணர்ந்த பள்ளி நிர்வாகம், பாராசெயிலிங் அட்வென்சர் விளையாட்டை மாற்றுத் திறனாளி குழந்தைகளும் அனுபவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களாலும் இதைச் செய்ய முடியும் என நிரூபித்துள்ளனர். இது குறித்து பள்ளியின் இயக்குநர் ராதா ரமேஷ் அவர்களிடம் பேசியபோது… பள்ளி ஆண்டு விழா என்றாலே பாட்டு, நடனம் இவைகள்தான் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியாக இருக்கும். அதையும் இந்தக் குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து பார்ப்பதுதான் வழக்கம்.

இதை மாற்றி, அவர்களையும் முழு மகிழ்ச்சியோடு எப்படி செலிபிரேட் செய்ய  வைப்பது என யோசித்ததில் தோன்றியதுதான் இந்த பாராசெயிலிங் விளையாட்டு. ஏன் இதை நம் சிறப்புக் குழந்தைகளை செய்ய வைக்கக் கூடாது என முடிவு செய்ததில் எங்களோடு கை கோர்த்தார் ‘கேப்டன் மேஜர் ராய்’. இவர் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். சென்னை மதுராந்தகத்தில் ‘அட்வென்சர் ஜோன்’ எனும் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை இயக்கி வருகிறார். அந்த நிறுவனம் மூலமாக எங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களை அவர் ஏற்கனவே ராக் க்ளைம்பிங் (rock climbing), ராப்பிளிங் (rappelling) போன்ற அட்வென்சர் விளையாட்டுக்களை செய்ய வைத்திருக்கிறார்.  

மீண்டும் அவரின் உதவி மற்றும் ஊக்கத்தோடு, மருத்துவர்கள், பிஸியோதெரபிஸ்ட்களின் ஆலோசனையில் பூமியில் இருந்து மேலெழுந்து சென்று காற்றில் மிதக்கும் வித்தியாசமான ‘பாராசெயிலிங்’ விளையாட்டு அனுபவத்தை மாணவர்களுக்கு கொடுக்க முடிவெடுத்து களமிறங்கினோம். பாராசெயிலிங்கில் பாராசூட்டை போட்டில் இணைத்து கடல் மட்டத்திற்கு மேல் பறப்பார்கள். அந்த அளவு நாங்கள் மாணவர்களுக்கு ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதனால் கடற்கரை ஓரம் ஒரு ஜீப்பில் கயிறு கட்டி ஜீப்பை நகர்த்துவதன் மூலம் பாராசூட் கடலுக்கு மேலே பறக்க, அதன் முழுக் கட்டுப்பாடும் ஜீப்பை இயக்குபவரிடம் இருக்கும்.

பறக்க தேர்வு செய்யப்பட்ட பகுதி அமைதியான சூழலோடு, சிறப்புக் குழந்தைகள் கடல் அருகி செல்ல ஏற்ற நிலையில் இருந்ததால் மேஜர் ராய் மற்றும் அவரது குழுவினர் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். மொத்தம் ஐந்து நாள் நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்திருந்தோம். ஒவ்வொரு நாளும் மதியம் 2 முதல் மாலை 6 மணி வரை மாணவர்கள் பாராசூட்டில் பறந்தனர். மூன்று நாள் நிகழ்ச்சி முடிந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் போன்ற ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சியை தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் மாணவர்கள் மட்டுமல்ல எங்களது ஊழியர்களும் பறக்கத் தொடங்கினர். மாணவர்களில் 90 சதவிகிதமும் கடலின் மேல் காற்றில் மிதக்கும் அனுபவத்தை பெற்றுவிட்டார்கள். மேலும் தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பாராசூட்டில் பறக்க வைத்த பெருமையும் எங்கள் பள்ளியைச் சேரும் என மகிழ்ச்சி காட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய கேப்டன் மேஜர் ராய், எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் இதில் இடம் பெற்றிருந்தது. மாணவர்களின் இடுப்பும், கால்களும் பெல்ட்டால் இணைக்கப்பட்டு மறுமுனை கயிறின் வழியே ஜீப்பில் இணைக்கப்பட்டது. எங்கள் குழு மாணவர்களின் முழு பாதுகாப்பிற்காக அங்கேயே இருந்தனர். பலூனில் பறக்கும் மாணவரோடு பயிற்சியாளர் ஒருவர் உடன் செல்வார். குழந்தை மேலே செல்லும்போதே பயப்படுகிறார்களா என்பது எங்களுக்குத் தெரிந்துவிடும். பயத்தோடு தொடங்கும் குழந்தைகள் மேலே செல்லச் செல்ல காற்றில் மிதந்து வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சியோடு கீழே இறங்குவார்கள். எங்கள் பயிற்சியாளர்கள் உடன் இருந்தாலும் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்களின் சம்மதமும் இதில் மிகவும் முக்கியம் என முடித்தார்.

பாராசூட்டில் மேலே பறந்த அனுபவத்தை, வித்யாசகர் பள்ளியின் செயல்பாட்டாளர்களில் ஒருவரான மாற்றுத் திறனாளர் சதீஷ் பேசியபோது.. 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மெரினா பீச் அருகே லேடி வெலிங்டன் கல்லூரியில் நிகழ்ந்த பாராசூட் நிகழ்ச்சியில் பங்கேற்று குழு நடனம் ஒன்றை விண்ணில் நடத்திக் காட்டினோம். ஆனால் இது கொஞ்சம் வேறுமாதிரியான அனுபவத்தை எனக்குத் தந்தது. தலைக்கு ஹெல்மெட், கையுறை, ஷூ என் பாதுகாப்பு உபகரணங்களோடு, பாதுகாப்பிற்கு ஒருவரும் என்னோடு மேலே வந்தார். என் கைகளுக்குக் கீழ் அவர் என்னைப் பிடித்துக்கொண்டார்.

என் இடுப்பு மற்றும் கால்கள் இரண்டும் பெல்ட்டால் இணைக்கப்பட, கரையில் இருந்து கடலுக்கு மேலே பறந்தபோது நல்ல வியூ கிடைத்தது. அந்த அனுபவத்தை ரொம்பவே மகிழ்ச்சியாக ஜாலியாக உணர்ந்தேன். நான் பறந்த உயரம் 50 முதல் 60 அடிகளுக்குள் இருக்கும் என நினைக்கிறேன். தொடர்ந்து 2 நிமிடங்கள் மேலே பறந்தேன். கட்டுப்பாடுகள் கீழே உள்ள ஜீப்பில் இருப்பவர்களிடம் இருந்தது. ஜீப்பை நகர்த்த நகர்த்த காற்றின் வேகத்திற்கு ஏற்ப பலூன் மேலே சென்றது. இன்னும் சிலர் கொஞ்சம் லெங்த்தாக 200 மீட்டர் வரை சென்றார்கள். முழுக்க முழுக்க காற்றில் இயங்க, காற்றின் வேகம் நன்றாக இருந்தால் மட்டுமே பறக்க முடியும் என்பதும் புரிந்தது.

காவல்துறை அனுமதியோடு, பாதுகாப்புக்கு மருத்துவர் குழுவும் ஆம்புலன்ஸ் வாகனமும் நிறுத்தப்பட்டு இருந்தது. கடல் அருகே செல்ல தற்காலிக நடைபாதைகள் அமைக்கப்பட்டு, சென்னை கார்ப்பரேஷனிடம் இருந்து பீச் வீல்சேர்களை வாங்கி பயன்படுத்தினோம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்