SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் ஆசிய பெண்களுக்கு இந்திய கலாச்சாரம் !

2020-03-18@ 14:56:53

நன்றி குங்குமம் தோழி

“பிறந்தது ஸ்ரீலங்கா. ஐந்து வயதில் சென்னைக்கு வந்தோம். இங்கு கர்நாடக இசை, பரதநாட்டியம் முறையாக கற்றேன். 1993ல் வணிகத்தில் பட்டம் பெற்றேன். படிக்கும் போதே இசை - நடனம் ஆகியவற்றிற்காக விருதுகள் பெற்றுள்ளேன். சன், விஜய் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தயாரித்து இயக்கி வந்தேன். கூடவே பல விளம்பரங்கள், கார்ப்பரேட் படங்களும் எடுத்தேன். சின்னத்திரை உலகில் என்னை ‘பாட்டுக்கு பாட்டு ராதிகா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. திருமணத்திற்கு பிறகு லண்டனில் குடிபெயர்ந்தோம். வீட்டில் சும்மாவும் இருக்க முடியல. அந்த சமயத்தில் ஒரு நிறுவனத்தில் பரதநாட்டிய ஆசிரியர் தேவையாக இருந்தது. அங்கு போய் பார்த்தபின் அவர்களுக்கு பரதம் சீக்கிரம் கற்றுத்தருவது கடினம் என்பதை உணர்ந்து, மற்ற நடனங்களை கற்றுக் கொடுத்து வந்தேன்.

அப்போது, அங்கு வந்திருந்த ஒருவர், தன்னுடைய 5 வயது மகளுக்கு பரதம் சொல்லித்தர கேட்டிருந்தார். பின் பலர் கற்க தொடங்கியதால் நானும், என் சகோதரியும் அகாடமி தொடங்க முடிவு செய்தோம். அப்படித்தான் ‘நிருத்தியா சங்கீத அகாடமி’ (NSP) உருவானது. 5 வயது முதல் 65 வயதுடையவர்கள் பரதம்-இசை, நாடகம் போன்ற கலைகளை பயின்று வருகின்றனர். இவர்கள் இங்கிலாந்தில் பல நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகின்றனர். தென் ஆசிய இளம் பெண்களுக்கு இந்திய கலாச்சாரம் கற்று கொடுக்கப்படுகிறது. அவர்களும் அதை பேணி காப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 2004ஆம் ஆண்டு சிறு துளியாக ஆரம்பித்தது, தற்போது  பல கிளைகளுடன் பெரு நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது” என்கிறார் ராதிகா. வாழ்க்கையின் பல்வேறு மனோபாவங்களை வெளிப்படுத்தும் சிறப்பு பரத நாட்டியத்திற்கு உண்டு. தத்துவ கோட்பாடுகளையும், சிந்தனை போக்குகளையும் பரதத்தின் வழியே உயிர்பூட்ட முடியும்.

ஆனால் இங்கு முக்கால்வாசி பெண்களுக்கு தமிழ் தெரியாது. இவர்களுக்கு ஒவ்வொரு நடனத்தின் பெயர் மற்றும் அதற்கான அர்த்தங்களை மிகவும் சிரமப்பட்டுத்தான் சொல்லித் தருகிறோம். நடனம் ஆடுவதற்கு முன்பு, இவர்களுக்கு பரதநாட்டியம் குறித்த வீடியோக்களை போட்டு காண்பிப்போம். நடனம் குறித்து அவர்களுக்கு ஓரளவு பரிச்சயம் ஆன பிறகுதான் பயிற்சி அளிப்போம். இங்கு பரதநாட்டியத்தை தேர்ச்சி முறையில் நடத்தி வருகிறோம். மொத்தம் எட்டு நிலைகள் உள்ளது. அதை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வருகிறோம். மாணவிகள் முதல் கல்யாணமானவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் இங்கு பரதம் பயின்று வருகின்றனர்’’ என்றவரின் நடனப் பள்ளியில் ஐந்து வயது முதல் 50 வயது உட்பட்டவர்கள் வரை நடனம் பயின்று வருகிறார்கள்.

“ஒரு முறை என் தோழி ஒருவர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் நாட்டியாஞ்சலி பற்றி கூறினார். என்னுடைய மாணவர்களுக்கும் அதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்று நினைத்தேன். அதில் கலந்து கொள்வதற்கு பதிவு செய்தோம். வாய்ப்பும் கிடைத்தது. அதில் நான் உட்பட 21 பேர் கலந்து கொண்டு நடனமாடினோம். ஆடல் அரசன் நடராஜர் முன்பு வெளிநாட்டில் இருந்து குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். தற்போது எங்கள் கலைக்கூட மாணவிகள் பலர் சிறப்பாக வெவ்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

நிருத்தியா சங்கீத அகாடமி மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் கடின உழைப்பும், ஒத்துழைப்பும் இன்றி இந்த படைப்புகள் சாத்தியமாகியிருக்காது. ஒவ்வொரு மாணவர்களின் நடனத்தில் நுணுக்கங்களை மேம்படுத்த காணொளி மூலம் வகுப்புகள் எடுக்கிறோம். தசாவதாரம் என்கிற தலைப்பில் சிதம்பரம் விழாவில் கலந்து கொண்டோம். ஒவ்வொரு அவதாரத்தின் விளக்கங்களும், காலத்திற்கு ஏற்றார் போல் சித்தரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாணவிகள் எதிர்காலத்தில் தாங்களும் ஓர் பரதநாட்டிய ஆசிரியராக வருவோம் என்று கூறியது, எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. சிதம்பரத்தில் ஆடியதை நாங்கள் ஓர் ஆசிர்வாதமாக பார்க்கிறோம்” என்றார் ராதிகா ராஜலோகநாதன்.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்