SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவனுக்கு சலித்து விட்டேனா

2020-02-26@ 17:19:24

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி

அன்புத் தோழி,


காதல்..... என்ற மூன்று எழுத்தின் மூச்சை நிறுத்த யார் துடிப்பார்கள்? காதலுக்கு யார் தடையாக இருப்பார்கள்? என்ற கேள்விகளுக்கு எல்லோரும் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவுகள்,  அரிதாக நண்பர்கள் என்றுதான் சொல்வார்கள். காரணம் சாதி, மொழி, பணம், அழகு, பொறாமை என பலவற்றை பட்டியல் போடலாம்....  ஆனால் எங்கள் காதலுக்கு இவர்கள் யாரும் தடையாக இல்லை. தடையாக இருப்பது என் காதலன்தான். ஆச்சர்யம் என்றாலும் அதுதான் கசப்பான உண்மை. கல்லூரியில், சக வகுப்புத் தோழனாகதான் பழக்கம். இரண்டாம் ஆண்டு படிக்கும் போது காதல் என்றான். நான் ஏற்கவில்லை. ஆனால் அவன் விடவில்லை. விதவிதமாக காதலை வெளிப்படுத்தினான். சக தோழிகள், ‘பாவம்டி அவன்’ என்றனர். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அவனுடைய காதலை மனதார ஏற்றேன். கல்லூரியின் ஜோடிப்புறாக்களாக மாறினோம். கல்லூரியின் மரத்தடி முதல் கேன்டீன் மட்டும் இல்லாமல் வெளியேயும் மணிப்புறாக்களாக பறந்து திரிந்தோம்.

இருவரும் விடுதியில் தங்கியிருந்ததால், வார இறுதியில் மட்டுமே வெளியே சுற்றுவோம். எங்கள் வகுப்புக்கு மட்டுமல்ல.... எங்கள் கல்லூரி முழுக்க நாங்கள் காதலர்கள் என்று தெரியும். வகுப்புகளை ‘கட்’டடித்து ஊர் சுற்றுவோம். எந்த சினிமா வந்தாலும் கட்டாயம் பார்த்து விடுவோம். ஊருக்கு செல்லும்போதும் ஒரே பஸ், ஒரே ரயில் என பயணிப்போம். இரவுப்பயணம் என்றால் தூங்காமல் ஊர் போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்போம். ஒருமுறை வகுப்புத் தோழனின் அக்கா திருமணத்துக்காக பக்கத்து நகரத்துக்கு போயிருந்தோம். எல்லோருக்கும் விடுதியில் அறை எடுத்து தந்தார்கள். தோழிகள் தனியாக, தோழர்கள் தனியாக தங்க ஏற்பாடு செய்திருந்தனர். ‘நாம் தனியாக தங்கலாம்’ என்று என் காதலன் சொன்னான். எனக்கு தயக்கமாக இருந்தது. அதற்கு அவன், ‘நாம்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறோமே’ என்று தொடர்ந்து வற்புறுத்த... ஒப்புக்கொண்டேன்.

அதனையடுத்து அவன் கல்யாண மண்டபத்திலேயே தங்குவதாக நண்பர்களிடம் சொல்லிவிட்டான். நான் ‘அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்குவதாக’ தோழிகளிடம் சொல்லிவிட்டேன். முதல்முறையாக நாங்க மட்டும் தனியாக தங்கினோம். அதன்பிறகு நீங்கள் நினைப்பது போன்று, அவன் விரும்பியபடி, நான் பயந்தபடி எல்லாமே நடந்தது. அதன்பிறகு தயக்கம், பயம் எல்லாம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அடிக்கடி தனியாக தங்க வாய்ப்புகள்  அமைந்தன. அவன் உருவாக்கினான் என்று கூட சொல்லலாம். ரயிலில் முதல்வகுப்பு, பஸ்சில் ஸ்லீப்பர் என்று வாய்ப்புகளை எங்கள் விருப்பத்திற்கு மாற்றினோம். ‘முன்னெச்சரிக்கை’யாக இருந்ததால் பிரச்னை ஏதும் வரவில்லை. செமஸ்டர் விடுமுறைகளின் போது ஊருக்குச் செல்லாமல் ‘பிராஜக்ட் வேலை இருக்கு’ என்று வெளியூர்களுக்கு ‘டூர்’ போவோம். இருவரும் ஜாலியாக சுற்றினாலும் இருவரும் முதல்வகுப்பில்...... அதுவும் ‘அரியரே’ இல்லாமல் ‘பாஸ்’ பண்ணினோம்.

நாங்கள் விரும்பியபடி ஒரே ஊரில் வேலை கிடைத்தது. வேறுவேறு நிறுவனம் என்றாலும், மாலை, விடுமுறை நாட்கள் நாங்கள் சந்திப்பது, ஊர் சுற்றுவது, வெளியூருக்கு போவது தொடர்ந்தன. வீட்டில் கல்யாணப் பேச்சு வந்தது. நான் விஷயத்தை சொன்னேன். பெற்றோர் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. இருவீட்டினரும் சம்மதம் தெரிவிக்க, ஓராண்டு கழித்து கல்யாணம் வைத்துக் கொள்வதாக முடிவானது. அந்த மகிழ்ச்சியை கொண்டாட வெளியூருக்கு ‘டூர்’ போனோம். ஆனால் அதுதான் எங்களுக்கு கடைசி ‘டூர்’ என்று எனக்கு தெரியவில்லை. ஆம் அதற்கு பிறகு அவன் சந்திப்பது, ஊர் சுற்றுவது, எங்கள் வீட்டுக்கு வருவது எல்லாம் படிப்படியாக குறைந்து விட்டது.

‘கேட்டதற்கு’ அவன் ‘கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் இடைவெளி இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்’ என்றான். எனக்கும் அது சரி என்றே தோன்றியது. அவனை அடிக்கடி பார்க்க முடியாத தவிப்பும், ஏக்கமும் புது அனுபவமாகத்தான் இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதை தெரிந்து கொள்ள ‘போன்’ செய்தபோது அவன் சரியாக பேசவில்லை. போன் பேசுவதும் குறைந்தது. வீட்டிலும் கல்யாண வேலைகள் ஆரம்பமானது. ஆனால் அவன் எதிலும் ஆர்வம் காட்டவில்லை. ‘மாப்பிள்ளை முறுக்கு’ என்று அவன் சகோதரிகள் கிண்டல் செய்தனர். திடீரென ஒருநாள் எனக்கு போன் செய்து, ‘கல்யாணம் இப்போது வேண்டாம் என்று என் வீட்டுக்கு போன் செய்து சொல்லு. உங்கள் வீட்டுக்கு நான்
சொல்கிறேன்’ என்றான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பேச வார்த்தைகள் வரவில்லை. அவனிடம் அழுது, ‘ஏன் இப்படி சொல்கிறாய்? என்ன பிரச்னை உனக்கு? ’ என்று கேட்டேன்.

அவன் போனை வைத்து விட்டான். பிறகு முயன்றும் ‘போன் ஸ்விட்ச் ஆப்’பாகவே இருந்தது. 2 நாட்கள் கழித்து நேரில் சந்திக்க அழைத்தான். ‘எங்கள் வீட்டில் உள்ளவர்கள் உலக நடைமுறை தெரியாதவர்கள். அதிகம் படிக்காதவர்கள். அதனால் அவர்களுக்கு எதுவும் புரியாது. ஆனால் நீ மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ளவர்கள் நன்றாக படித்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் எளிதில் புரியும்’ என்றான். மேலும், ‘உன்னுடன் கல்யாணத்துக்கு முன்பே முழு வாழ்க்கையும் வாழ்ந்து விட்டேன். உன்னை கல்யாணம் செய்து கொண்டால் எந்த எதிர்பார்ப்பும், திரிலும் இருக்காது என்று நினைக்கிறேன். கல்யாணத்துக்கு பிறகு என்ன புதிய விஷயத்தை நாம் அனுபவிக்கப் போகிறோம். அதனால் இந்த கல்யாணத்தை நிறுத்தி விடலாம்’ என்றான் சுருக்கமாக.

‘அப்படியானால் திருமணம்?’ என்று கேட்டதற்கு. ‘அது உன் விருப்பம். உனக்கு யாரை பிடிக்குதோ அவரை திருமணம் செய்து கொள். என்னை விட்டுவிடு. எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை’ என்றான். நான் அழுது அடம்பிடித்தேன். அதற்கு அவன் ‘இதுதான் உங்கிட்ட பிரச்னை. ரொம்ப போரடிக்காதே..... உன்னுடன் சேர்ந்து வாழ்ந்தால் ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. தயவு செய்து என்னை விட்டுவிடு’ என்றான். ‘வேறு யாரையாவது காதலிக்க ஆரம்பித்து விட்டாயா?’ என்று கேட்டதற்கு பதிலில்லை. எத்தனை முறை பேசியும், கெஞ்சியும் அவன் நிலையில் இருந்து இறங்கவில்லை. ‘நீதான் என் உலகம்’ என்றவன், ‘நீ இல்லாவிட்டால்தான் எனக்கு உலகம்’ என்கிறான். இந்த பிரச்னை இரு வீட்டிலும் தெரியாது. கல்யாண வேலைகள் தொடருகின்றன.

பிப்ரவரி மாதம் கல்யாண பத்திரிகை அச்சடிக்க உள்ளனர். ஏப்ரல் மாதம் கல்யாணம். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் அவனை கட்டாயப்படுத்தி செய்யும் திருமணம் இனிக்குமா புரியவில்லை. வீட்டில் என்னச்சொல்லி கல்யாணத்தை நிறுத்துவது. இனி என்னவாகுமோ என்று பயமாக இருக்கிறது. அவன் பெற்றோரிடம் விவரத்தை சொன்னால், அவர்கள் அவனை கட்டாயம் அடித்து உதைத்தாவது திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பார்கள். ஆனால் அது சரி வருமா? அவன் இழுப்புக்கு வளைந்ததால், நான் அவனுக்கு சலித்து விட்டேனா? வேறு ஒருவரை திருமணம் செய்தபிறகு, என் காதல் விவகாரங்கள் தெரிந்தால் என்னவாகும்? கல்யாணம் வரை வந்து நின்றதை யார் எளிதில் எடுத்துக் கொள்வார்கள்? என்ன செய்வது? என் வாழ்க்கை முடிந்து விட்டதா? எனக்கு நல்ல வழியை காட்டுங்கள் தோழி?
இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

திருமணம் என்பது இரண்டு நபர்கள் ஒன்றாக வாழ்வதைப் பற்றியது அல்ல. இரண்டு குடும்பங்கள் ஒன்றாக இணைவது, புதிய உறவுகள் ஏற்படுவதும்தான். அது காதல் மட்டுமல்ல நம்பிக்கை, சமரசங்களை அடிப்படையாக கொண்டது. விருப்பமில்லாத ஒருவரை கட்டாயப்படுத்துவது பிரச்னைகளுக்கு தீர்வாக அமையாது என்பதை உங்களை போலவே நானும் உணர்கிறேன். ஒரே நபர் மாறி, மாறி நடப்பது அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. ஆனால் உங்கள் பிரச்னைகளுக்கு போவதற்கு முன்பு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். காதல் தவறில்லை. அது கல்யாணத்தை நோக்கி பயணிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் கல்யாணத்துக்கு முன்பே எல்லாம் என்பதை சரியா, தவறா என்று ஆராய்ச்சி செய்யவில்லை. ஆனால் எதுவும் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதைத்தான் உங்கள் அனுபவம் உணர்த்துகிறது.

போகட்டும் இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். பிரச்னையை நம்பிக்கையுடன், தெளிவாகவும் அணுகுங்கள். உங்கள் பெற்றோரிடம் உண்மையைச் சொல்லுங்கள். அவர்களுக்கு உண்மை தெரியாமல் வைத்திருப்ப தால் பலனில்லை. இது அவமானத்திற்கும் குற்ற உணர்ச்சிக்கும் அப்பாற்பட்டது. நம்பிக்கையின் அடிப்படையில் செய்த காரியங்களுக்கு உங்களை மட்டும் குற்றம் சொல்வது நியாயமில்லை.இவரோடுதான் வாழப் போகிறோம் என்று நேசித்த ஒருவரை மறக்க நினைப்பதும் நிச்சயம் கடினமானதுதான். அதேபோல் வேறு ஒருவரைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பதும் கூட சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் அந்தச் சூழல் இப்போது வந்து விட்டது. உண்மையை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். உங்கள் காதலர் சொல்லும் காரணங்கள் சாதாரணமானவை.

நியாயமில்லா தவை. அல்பமானவை என்று சொன்னால் கூட தவறில்லை. எனவே நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசிப்பதும், அவரிடம் இன்னும் அன்பாக இருந்திருக்கலாமே என்று உங்களை நீங்களே குற்றம் சாட்டிக் கொள்வதும் தேவையில்லாதது. உங்களை வெறுக்கும் ஒருவரை ‘நான் அளவில்லாமல் நேசிக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருப்பதும் வீணாகும். சரியான முடிவு எடுக்கும் நிலையில் இருக்கிறீர்கள் . நிதானமாக யோசியுங்கள். தேவையில்லாத குற்றவுணர்வு உங்களை பாதிக்கும். அது இறுதியில் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். அந்த பாதையில் செல்ல வேண்டாம். எனவே உங்கள் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினருடன் உட்கார்ந்து பேசுங்கள். இந்த பிரச்னையில் என்ன செய்யலாம் என்று அவர்களின் ஆதரவுடன் முடிவெடுங்கள். வேண்டுமானால், இந்த சங்கடங்களை தவிர்க்க நீங்கள் விரும்பினால் காதலரின் பெற்றோரிடம் விவரங்களை சொல்லி பேசும்படி உங்கள் பெற்றோரிடம் கேட்கலாம். முயற்சி தவறில்லை.

இது உங்கள் வாழ்க்கை. அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் பிரச்னைகளை உணர்ச்சிபூர்வமாக அணுக வேண்டும். ஆனால் எதையும் யோசித்து அறிவுபூர்வமாக முடிவு காணுங்கள். உணர்வுபூர்வமாக எடுக்கும் முடிவுகள் பலன் தராது. இருதரப்பும் விரும்பி நடந்த பல திருமணங்கள் விவாகரத்தில் முடிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். நீங்கள் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினால் வெறுப்பு, மனக்கசப்பு, கோபம்தான் மிஞ்சும். வாழ்க்கை பரிதாபமாக மாறிவிடும். அதனால் பிரிவதோ, விவாகரத்து செய்வதோ நடக்கலாம்.அதற்கு இந்த திருமணத்தை நிறுத்துவதே சிறந்த வழி. இப்போது திருமண வேலைகளை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும். அது உங்களுக்கு தேவைப்படும் தெளிவையும் நம்பிக்கையையும் தரும். அன்பானவரை இழப்பது வருத்தம்தான். அவரை மறக்க நிச்சயமாக நேரம் எடுக்கும். காலம் எல்லாவற்றையும் மாற்றும். நம்பிக்கையுடன் இருங்கள். உங்களுக்கு கிடைக்கும் எந்த ஆதரவையும் பயன்படுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்