SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகை உலுக்கிய சீன திரைப்படம்

2020-02-19@ 16:54:49

நன்றி குங்குமம் தோழி

வாழ்வின் மீதான நேசத்தை அதிகரிக்கும் ஒரு படம் ‘டு லிவ்’. 1940-1970 வரையில் சீனாவில் நிலவிய சூழலை ஓர் அப்பாவிப் பெண்ணின் குடும்ப வாழ்க்கையினூடாக சித்தரிக்கிறது இப்படம். மாளிகையைப் போல வீடு, கணவன், மகள், வயிற்றில் ஒரு குழந்தை என்று அனைத்தும் இருந்தாலும் கொஞ்சம் கூட நிம்மதியோ சந்தோஷமோ இல்லாமல் வாழ்ந்து வருகிறாள் ஜியாசென். காரணம் அவளுடைய‌கணவன் பெரும் சூதாடி. 24 மணி நேரமும் சூதாட்ட விடுதியிலேயே இருப்பவன். ஜியாவும், அவனுடைய‌ பெற்றோரும் எவ்வளவு சொன்னாலும் கேட்க மறுக்கிறான். தூங்குவதற்கு மட்டும் வீட்டுக்கு வருகிறான். ஜியாவை தரக்குறைவாக நடத்துகிறான். அவனுடைய‌ நடத்தையும், பேச்சும் அவளை எரிச்சலடைய வைக்கிறது. பொறுமையை இழக்கின்ற ஜியா குழந்தையுடன் தனியாகச் சென்றுவிடுகிறாள்.

ஜியாவின் கணவன் சூதாட்டத்தில் வீடு முதல் எல்லா சொத்துகளையும் இழந்து தெருவுக்கு வந்துவிடுகிறான். மகனின் செயலால் மனமுடைகின்ற தந்தை இறந்துவிடுகிறார். வேறு வழியில்லாமல் அவன் வயிற்றுப் பிழைப்புக்காக பொம்மலாட்டத்தில் ஈடுபடுகிறான். அம்மாவுடன் தனியாக வசித்துவரும் அவன், வறுமையில் வாடும்போது மனைவியின் அருமையை, தன் தவறை உணர்கிறான். ஜியாவிற்கு மகன் பிறக்கிறான். குழந்தைகளை வளர்ப்பதற்காக வீடு வீடாகச் சென்று தண்ணீர் விநியோகம் செய்யும் வேலையைச் செய்கிறாள். அதில் போதுமான வருமானம் கிடைக்கிறது. கணவன் திருந்திவிட்டதை அறிகின்ற அவள் மறுபடியும் அவனுடன் இணைகிறாள். வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் வேளையில் உள்நாட்டுப் போர் வருகிறது. அவர்களின் குடும்பம் சிதைகிறது.

கணவன் போருக்குச் சென்றுவிடுகிறான். மனைவி தனியாக குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் பேச்சுத் திறன் பறிபோகிறது.போர் முடிந்து வீடு திரும்புகிறான் கணவன். அவனுடைய‌ மகளும், மகனும் சிறுவர்களாக வளர்ந்து நிற்கிறார்கள். மகளுக்குப் பேச்சுத் திறன் பறிபோனதை அறிந்து பதறுகிறான். நாளடைவில் அவர்களின் வாழ்க்கை இயல்புக்குத் திரும்புகிறது. அவ்வளவு வறுமைக்கு இடையிலும் வாழ்க்கையை மகிழ்ச்சியால் நிரப்புகிறார்கள்.

காலங்கள் செல்கின்றன. மாவோவின் முற்போக்கு பாய்ச்சல், கலாசார புரட்சி என்று அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வருகிறது. அது அவர்களின் குடும்ப வாழ்வை மிகவும் பாதிக்கிறது. வாழ்வதே பெரும் போராட்டமாக மாறுகிறது. மாவோவின் படையினர் வீடு, வீடாக வந்து இரும்புப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இரும்பு உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக சீனா உருவாக வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். இரும்பை உருக்கும் வேலைக்கு சிறுவர்கள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். ஜியாவின் மகன் இரும்பை உருக்கப் போகும்போது எதிர்பாராத விபத்தில் இறந்து விடுகிறான். மறுபடியும் அவர்களின் குடும்பம் துயரத்தில் மூழ்குகிறது.

மகனை இழந்த சோகத்திலிருந்து ஜியாவால் வெளியேற முடிய‌வில்லை.சில ஆண்டுகளில் மகள் திருமண வயதை எட்டுகிறாள். வாய் பேச முடியாத அவளுக்குச் சரியான மாப்பிள்ளையைத் தேடுகிறார்கள். ஜியாவின் மகளுக்கும் மாவோவின் படையைச் சேர்ந்த போராளிக்கும் திருமணம் நடக்கிறது. மகள் கர்ப்பமடைகிறாள். மருத்துவர்களை மாவோவின் படைகள் முதலாளிகள் என்று பிடித்துவைக்கிறார்கள். இதனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவம் பயிலும் மாணவ-மாணவிகளே மருத்துவம் பார்க்க வேண்டியிருக்கிறது.ஜியாவின் மகள் பிரசவத்துக்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அவளுக்கு ஒரு மகன் பிறக்கிறான். ஆனால், அனுபவமற்ற மருத்துவ மாணவிகளால் அவளுடைய ‌உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.வருடங்கள் ஓடுகின்றன. மகனையும், மகளையும் இழந்த ஜியாவும், அவளுடைய‌ கணவனும் தங்களுடைய பேரன், மருமகனுடன் புதிய வாழ்வை மகிழ்ச்சியாகத் தொடங்கு வதுடன் படம் நிறைவடைகிறது.

சீனாவில் கம்யூனிஸ்ட்களால் தடைசெய்யப்பட்ட இப்படத்தின் இயக்குனர் ஷாங் யுமு.நிலப்பிரபு, முதலாளி என்று பலரை மாவோவின் செம்படையினர் கைது செய்வார்கள். இதனால் அவமானம் அடையும் ஒரு நிலப்பிரபுவின் மனைவி தற்கொலை செய்துகொள்வாள். மருத்துவரை முதலாளி என்று பிடித்துவைக்காமல் இருந்திருந்தால் ஜியாவின் மகளைக் காப்பாற்றியிருக்கலாம். மகனை இரும்பு உருக்க அனுப்பாமல் இருந்திருந்தால் அவனின் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம். இப்படி மக்களின் நலனுக்காக முன்னெடுக்கும் பல விஷயங்கள் ஏதும் அறியாத, எதற்கும் சம்பந்தமில்லாத பெண்களின் வாழ்வை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை இப்படம் அழுத்தமாகச் சொல்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்