SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுதந்திரமான படம் என்றாலே சவால்தான்

2020-02-17@ 15:32:43

நன்றி குங்குமம் தோழி

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை பெண்களின் அறங்களாகவும். வீரம், போர், வெற்றி, ஈகை, புகழ், ஒழுக்கம் இவை ஆண்களின் அறங்களாகவும் அக்கால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய காலத்து பெண்கள், ஆண்களுக்கு இணையான வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார சுதந்திரம் போன்றவற்றை பெற்றிருக்கிறார்கள். குறும்படங்கள், ஆவண படங்கள், திரைப்படங்கள் மூலமாக பெண்களின் நிஜ வாழ்க்கை குறித்து சமூக பார்வையோடு, இங்கு வெளிகாட்ட முடியும் என்று, அத்துறையில் தொடர்ந்து இயங்கி வருகிறார் இயக்குநர் ஏர்லிதிங் கவுசல்யா.

“கடல் என்றால் ரொம்ப பிடிக்கும். அதன் மீதான ஈர்ப்பு எனக்கு ரொம்பவே இருக்கு. வீடு பக்கத்திலேயே கடல் இருப்பதால், தினந்தோறும் சென்று வரும் பழக்கம் உண்டு. ஒரு நாள் செல்லவில்லை என்றால், அந்த நாளே செட் ஆகாது. அது ஒரு தனி ரசனை. என்னுடைய முழு சந்தோஷமே கடல் தான்” இப்படி கடல் போல் பரந்துள்ள தனது வாழ்க்கையின் பயணத்தை பகிர்ந்து கொள்கிறார் ஏர்லிதிங் கவுசல்யா.“சொந்த ஊர் பாண்டிச்சேரி. கட்டிட கலை படிப்பிற்காக கேரளா சென்றேன். இது நமக்கு சரியான பாதையில்லையென்று பாதியிலேயே நிறுத்தி, மருத்துவ படிப்பில் சேர்ந்தேன். அதிலும் மனம் போகாமல் எழுத்து பக்கம் நகர்ந்தேன். சிறு வயதிலிருந்தே எழுத்து மீது இருந்த காதலை அப்போது உணர்ந்தேன். இன்று வரை நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் கடிதம் மட்டுமே எழுதி வரும் பழக்கம். இது என்னை ஒரு புத்தகம் எழுத உந்தியது. அதை 2008 ஆம் ஆண்டு வெளியிட்டேன்.  

நான் எழுதிய புத்தகத்தின் கதைகளை வைத்து படம் எடுக்கலாம் என்கிற யோசனை வந்தவுடன், நண்பர்களான தாஸ், ஸ்டான்சின் ரகு, ரமேஷ் ஆகியோருடன் பகிர்ந்து பட வேலைகளை தொடங்கினோம். நாங்கள் வெவ்வேறு வேலைகள் செய்து வந்தாலும், படப்பிடிப்பின் போது இதில் கவனம் செலுத்துவோம்” என்று கூறும் கவுசல்யாவிற்கு, தான் எடுக்கும் படங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றி பேசினார்.‘‘கலை மீது அதீத ஆர்வம். ஒரு படம் இயக்கும் போது நிறைய கற்றுக் கொண்டேன், கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய குறும்படங்கள் சமூகத்தை மையப்படுத்தி மட்டுமல்லாமல், பெண்ணை பற்றி பேசக் கூடியது. நாம் பார்த்த படங்களில் பொதுவாக பெண்கள் என்றால், சமைப்பது, வீட்டு வேலை செய்வது போன்றுதான் இருக்கும்.

தற்போது, நிஜ வாழ்வில் பெண்கள் பல சாதனைகள் செய்து வருகிறார்கள். இதையே மையமாக வைத்து கடந்த பத்து ஆண்டுகளில், பெண்களின் நிஜ வாழ்க்கை குறித்தும், அவர்களின் சுதந்திரம் பற்றியும் பேசியதோடு, சமூகம் குறித்தும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் என 12 படங்களை எடுத்துள்ளோம். 2011 ஆம் ஆண்டு  “Metro xical New York” என்ற ஆவணப் படம், பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் திரைப்பட விழாவில் சினிமா பாரடைசோ விருது பெற்றது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு, லட்சுமி பிரியா, ஹரீஸ் நடிப்பில் வெளியான “களவு” குறும்படம் 1.5 மில்லியன் லைக்குகள் பெற்று நல்ல வரவேற்பை கொடுத்தது. 2017 ஆம் ஆண்டு “அந்ததாதி” என்கிற மலையாள படம் கேரளாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது.  

இவ்வாறு நான் இயக்கி இருக்கும் படங்களுக்கான வெற்றி ரசிகர்களால் தான். சினிமா என்ற கலையை மக்களிடத்தில் எவ்வாறு தர வேண்டுமென்று யோசிப்பது அவசியம். தற்போது, இந்திய- தமிழ் சினிமா ரொம்பவே மாறி இருக்கிறது. நல்ல படங்களும், புதிய முயற்சிகளும் வெற்றி பெற்று வருகிறது. சொல்லப்போனால் சுதந்திரமாக எடுக்கப்படும் சினிமாக்களுக்குத்தான் எதிர்காலம் உண்டு. அதற்கு போராட்டங்களையும் சந்திக்க வேண்டும்” என்ற நம்பிக்கையுடன் பேசும் கவுசல்யா, தான் இயக்கிய படங்களில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்தார். ‘‘நான் 3 படங்கள் இயக்கி உள்ளேன். மற்றவை குழுவுடன் இணைந்து வேலை பார்த்து வருகிறேன். அனைத்து படங்களும் வெற்றி பெற இன்று வரை முயற்சி செய்து வருகிறோம். ஒரு படத்தை எடுப்பதைவிட அதை பிரபலப்படுத்துவது பெரும் பாடு. இத்துறையில் ஒரு பெண்ணாக நிறைய சவால்களை சந்தித்து வந்துள்ளேன். பொதுவாக ஒரு இண்டிபெண்டண்ட் படம் எடுப்பது  சாதாரண காரியம் அல்ல.

இதில், படம் தயாரிப்பதற்கான பணம்தான் பெரிய சவால். படத்திற்கான அனைத்து வேலைகளையும் நாங்களே செய்துகொள்வோம். இதற்காக நிறைய சிரமப்பட்டுள்ளோம். அதுமட்டுமல்ல, எனது படத்தில் நடிப்பவர்கள் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்போம். என்னுடைய பட வேலைகளில் பெரும்பங்கை நானே செய்துவிடுவதால் அனைத்தும் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். தற்போது, அப்பா மகளுக்கிடையே உள்ள உறவை வைத்து “அசுவமித்ர” என்ற குறும்படத்தை வெளியிட்டுள்ளோம். இதில், ஹரீஸ் உத்தமன் நடித்துள்ளார். பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஆரோவில் திரைப்பட விழாவில் இந்த படத்திற்கு சிறந்த படம் விருது கிடைச்சிருக்கு. தொடர்ந்து இயங்கி கொண்டே, மக்களுக்கு பிடித்தது போல் நிறைய படங்கள் எடுக்க வேண்டும்” என்றார் இயக்குநர் ஏர்லிதிங் கவுசல்யா.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்