SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!

2020-02-12@ 14:32:49

நன்றி குங்குமம் தோழி

வேலைக்கு போகும் அத்தனை பேருக்குமே பணியிடத்தில் ‘தலைவலி’யாக நிச்சயமாக யாராவது ஒருவர் இருப்பார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சிக்கல் இல்லாத, நகைச்சுவையான விஷயமாக தெரியலாம். ஆனால், தொடர்ந்து இப்படி ஒரு நபரோடு ஒரே இடத்தில் இருக்க நேரும் போது ஏற்படும் மன உளைச்சல், வேலையையே வெறுக்க காரணமாக இருந்து விடும். பணியிடத் தகராறுகள் காரணமாக வேலையை ராஜிநாமா செய்த பல பேர் இருக்கிறார்கள். ராஜிநாமா செய்தவரை பார்த்து ‘என்னது ஆஃபீஸ் சண்டைக்கு போய் வேலைய விட்டுட்டியா’ என்று கேட்பவர்கள் உண்மையில் நிறுவன நடத்தை வகைகளை தெரிந்து கொண்டால், அலுவலகங்களின் உண்மை முகங்களை பார்க்க முடியும்.

இந்த படிப்பினை மட்டும்தான், ஒரு தொழில்முனைவோராக உங்கள் வளர்ச்சிக்கும் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும். ஏனென்றால், நிறுவனர் - வாடிக்கையாளர் உறவை விட மிக மிக முக்கியமானது நிறுவனர்- ஊழியர் உறவு. ஊழியர்கள் தான் உங்கள் நிறுவனத்தை கட்டியெழுப்புவார்கள். தொடர்ந்து ஊழியர்கள் ராஜிநாமா செய்து கொண்டே இருக்கிறார்கள் என்றால், அதற்கு முழு முதற்காரணமும் நிறுவனரான உங்கள் நடவடிக்கைகள் தான்.

ஒரு ஊழியர், உங்கள் பயணத்தில் தொடர்ந்து பத்தாண்டுகளாக இருக்கிறார் என்றால், அதற்கு பாராட்டுக்களும் உங்களுக்குத்தான். இதை வெறும் நிறுவனர்- ஊழியர் என மேம்போக்காக கடந்து விட முடியாது. ஏனென்றால், பல சமயம் ‘இந்த இடத்தில் நான் ஒரு முதலாளியை போல கடிந்து கொள்ள வேண்டுமா? அல்லது ஒரு நண்பனை போல தட்டிக் கொடுக்க வேண்டுமா?’ என்பன போன்ற கேள்விகள் எழும்.

இந்தக் கேள்விகளை தவிர்க்க, உங்கள் நிறுவனத்தின், உங்களின் இயல்பை, நடவடிக்கைகளை கொஞ்சம் அசைத்துப் பார்ப்போம் இப்போது. கீழே, நான்கு வகையான நிறுவன நடத்தை வகைகளையும், அவற்றின் விளக்கங்களையும் பார்ப்போம். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை குறித்துக் கொள்ளுங்கள். இறுதியில், உங்கள் நிர்வாகம் எந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

ஏதேச்சதிகாரம் (Autocratic)

இந்த நிறுவன நடத்தை முறையின் அடிப்படையில் இருப்பது அதிகாரம். நிறுவனத்தில் ஏகப்பட்ட அதிகார படிநிலைகள் இருக்கும் - ஒவ்வொரு படிநிலையிலும் இருக்கும் நபர்கள், கீழே இருப்பவரை ஒரு வித கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள். தனக்கு கீழே வேலை செய்பவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நுணுக்கமாக கண்காணித்து தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டும், எச்சரிக்கை செய்து கொண்டும் இருப்பார்கள். இந்த வகை நிறுவனங்களில், ‘வேலையை விட்டு தூக்கி விடுவேன்’ என்பது தான் அதிகாரிகள் ஊழியர்களிடம் வேலை வாங்க பயன்படுத்தும் ‘உத்வேக’(?!) மொழியாக இருக்கும். வேலை போய் விடுமோ என்ற பயத்தில் ஊழியர்கள் கீழ் படிதலோடு நடக்க முயற்சிப்பார்கள். ஆனால், நிறுவனத்தில் இருக்கும்  கெடுபிடிகள் காரணமாக அந்த நிறுவனத்தின் தேவை பூர்த்தி செய்யப்படாமலேயே இருக்கும். ஊழியர்களும் மன வருத்தத்தோடு இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

பாதுகாவல் (Custodial)

இது மேற்சொன்ன ஏதேச்சதிகார முறையை விட ஒரு படி மேலே என்று சொல்லலாம். இந்த நிறுவன நடத்தை முறைக்கு அடிப்படையாக இருப்பது நிறுவனம் அளிக்கும் பொருளாதார ஊக்குவிப்பாக இருக்கும். உதாரணமாக, இ.எஸ்.ஐ, பி.எஃப் போன்ற சலுகைகள் இருக்கும். இடையிடையே இன்செண்டிவ்கள் கிடைக்கும். இதன் காரணமாக ஊழியர்கள் கொஞ்சம் ஊக்குவிக்கப்படுவார்கள். ஆனாலும், சில ஏதேச்சதிகார நடத்தைகள் இங்கும் காணப்படலாம். ஒரு நிரந்தர பணியிடத்தை இழக்க வேண்டாமே என்றும் எண்ணத்தோடு ஆட்கள் வேலை செய்வார்களே ஒழிய, இந்த நிறுவனம் வளரவேண்டும், இந்த நிறுவனத்தோடு நானும் வளர வேண்டும் என்ற அந்த பிரத்யேக  உந்துதல் இருக்காது. அதன் முழு பொறுப்பும் நிர்வாகம்தான்.

ஆதரவு (Supportive)

ஏதேச்சதிகாரம் மற்றும் பாதுகாவல் - இம்முறைகளில் இயங்கும் நிறுவனங்களை விட இது மேம்பட்ட முறைதான். ஒரு நல்ல  தலைவர், பெரும் ஆதரவை தன் ஊழியர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார். ஊழியர்களின் ஒவ்வொரு தோல்வியிலும் தலைவர் உடனிருந்து வழிநடத்துவார். ஊழியர்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரமும் மதிப்பும் கிடைக்கும். ஊழியர்கள் தானாகவே முன் வந்து ஈடுபாட்டோடு நிர்வாக இயக்கத்தில் கலந்து கொள்வார்கள். தங்களையும் வளர்த்துக் கொள்வார்கள். அலுவலகம் ஒரு துடிப்போடு இருக்கும்.

கல்லூரி (Collegial)


இருப்பதிலேயே இது தான் சிறந்த நிறுவன நடவடிக்கை முறை. இங்கு எந்த படிநிலைகளும் இருப்பதில்லை. எவர் வேண்டுமானாலும் எவரோடு வேண்டுமானாலும், எந்த விதமான தொழிலாளர் பாவனைகள் இல்லாமல் பேச முடியும். இந்த நிறுவனம் ஒரு கூட்டு உழைப்பு என்பதை ஒவ்வொருத்தரும் உணர்வர். நிறுவனம் வளர வளர அவர்களும் வளர்வார்கள், அவர்களுக்கான மதிப்பும் வளரும். தலைமை என்று ஒன்று இல்லாமல், குழு என்ற ஒரு அமைப்பு  மட்டுமே இங்கு இருக்கும். இதன் காரணமாக யாரும் யாரையும் மேற்பார்வை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், சரியான நேரத்திற்கு வேலை நடந்து முடிந்திருக்கும்.

ஊழியர்களுக்கு தங்கள் பொறுப்பு விளங்கியிருக்கும். இதுவே நிறுவன வளர்ச்சிக்கு உந்துகோலாக இருக்கும், அந்த நிறுவனத்தை தனித்துவம் மிக்கதாக உயர்த்திக் காட்டும். வளரும் நாடுகள் பலவற்றிலுமேயே, முதல் இரண்டு வகை நிறுவன நடத்தை மட்டுமே பிரதானமாக இருக்கிறது. ஆனால், முன்னேறிய நாடுகளில் நிறைய நிறுவனங்கள் ஒரு ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு அலுவலகங்களில் கிளைகளில் எல்லாம் மசாஜ் சேர் வரை ஏற்பாடு செய்து ஊழியருக்கு கொடுக்கிறார்கள். இப்படியான வேலைச் சூழலே தொழில்முனைவோருக்கு சாதகமானது. வேலைக்கு ஆள் எடுப்பதில் தொடங்குகிறது உங்களுடைய நிறுவன நடத்தை. உங்கள் பேச்சு, உங்கள் அணுகுமுறை எல்லாமே ஒரு முற்போக்கான வேலைச் சூழலை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

அலுவலகத்தின் அத்தனை பேரின் தோள்களிலும் கை போட்டு நடக்க வேண்டும். அதற்கான ஒரு வேலைச் சூழலை உருவாக்குவது எளிதல்ல. ஆனால், இப்படியான வேலை இடத்தை உருவாக்கிவிட்டால், வெற்றியும் மன நிறைவும் நிச்சயமாக கூடும். நம்பவில்லை என்றால், பிரம்மாண்ட நிறுவனங்களாக வளர்ந்து நிற்கும் நெட்ஃப்லிக்ஸ், கூகுள் போன்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் கதைகளை படித்துப் பாருங்கள். அகத்தில் இருந்து தொடங்கினோம். அடுத்து வருவது புறம் - அதாவது, நடை உடை பாவனை - இவற்றை கையாள்வது எப்படி? தொடர்ந்து, தொழில்முனைவோரின் டிரெஸ்ஸிங் தேவைகளை பற்றிப்பேசலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்