SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாவம் அம்மா... ஆனால், படுத்தும் பாடு...

2020-02-11@ 14:25:03

நன்றி குங்குமம் தோழி

‘‘அம்மா’’.... உலகில் எல்லோரையும் அரவணைக்கும் அன்புச் சொல். என் அம்மாவும் அப்படித்தான். வறுமையிலும் உறவுகளையும் நட்புகளையும் அரவணைத்தவர். பகிர்ந்து உண்டவர். பல நாட்கள் அவர் சாப்பிட்டு இருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அதை காட்டிக்கொள்ள மாட்டார்.
அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். கிண்டல்களுக்கு, நகைச்சுவைகளுக்கு பஞ்சமிருக்காது. எங்கள் குடும்பம் எளிய குடும்பம் தான். ஆனால் எந்த கவலையும் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்தது. அப்பாவின் குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்தினார் அம்மா.
நானும் தம்பியும் மட்டும்தான். அம்மா உறுதி மிக்கவர் அப்படித்தான் அவர் எங்களையும் வளர்த்தார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் அப்பாவின் உறவினரை  திருமணம் செய்தேன். அவருக்கு அரசு பணி,  என்றாலும் பெரிய வருமானம் கிடையாது.

எனக்கு 3 பெண்கள். பிள்ளைகள் படிக்க ஆரம்பித்ததும் நொறுக்கு தீனி வகைகளை செய்து கடைகளுக்கு விநியோகம் செய்துதான் செலவை சமாளித்தோம். பக்கத்து ஊர் என்பதால் நான் அடிக்கடி சென்று அப்பாவையும் அம்மா, தம்பியையும் போய் பார்த்து வருவேன். என் தம்பி பணியில் இருக்கும்போது அகால மரணம் அடைந்தார். பிள்ளையின் மீது அதிக பாசம் வைத்திருந்த என் அம்மா அந்த நேரத்தில் என்ன ஆவாரோ என்று பயந்தோம். ஆனால் அந்த சூழ்நிலையில் அம்மா கலங்கினார், துடித்தார். ஆனால் மன உறுதியோடு தான் இருந்தார். அதே நேரத்தில் பிள்ளையை இழந்த வருத்தத்தில் என் அப்பா நோய்வாய்ப்பட்டு சில மாதங்களில் காலமானார்.

அப்போதும் அம்மாவுக்கு உறுதி குறையவில்லை. அதன்பிறகு தனியாக இருந்த அம்மா எங்களுடன் வந்துவிட்டார். எனது பெண்களை அவர் தான் வளர்த்தார். நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம். பேரன், பேத்திகள் என்று கவலைகள் மறந்து கொஞ்சம் இயல்பு வாழ்க்கைக்கு மாறி இருந்தோம். அந்த நேரத்தில் என் கணவர் விபத்தில் காலமானார். மூளைச்சாவு என்றதால் டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் என் கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்தோம். அந்த சமயத்திலும் அம்மாதான் எங்களுக்கு ஆதரவாக இருந்தார். நானும் அம்மாவும் மட்டும் ஊரில் இருந்தோம். சொந்த வீடும் வாங்கினோம். உனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அடிக்கடி அம்மா புலம்ப ஆரம்பித்தார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக என் அம்மா திடீர் திடீர் என ‘யார் வீடு இது?  இந்த வீட்டில் நாம் இருக்க வேண்டாம்.

எனக்கு பயமாக இருக்கிறது.  நம்ம வீட்டுக்கு போகலாம் வா...’ என்று கூப்பிடுகிறார். சண்டை போடுகிறார். யாராவது வீட்டுக்கு வந்தால் ‘யார் இவர்கள் ஏன் இங்கு வருகிறார்கள்’ என்று கேட்கிறார். சில நேரங்களில் அவர்களிடமே, ‘ இங்கு ஏன் வந்தீர்கள்’  என்று கேட்டு சங்கடப்படுத்துகிறார். அவர் நிலைமையை சிலர் புரிந்துகொள்கின்றனர். பலர் கோபித்துக் கொள்கின்றனர். தான் சாப்பிட்டது கூட நினைவு இல்லாமல், சாப்பாடு போடாமல் என்னை கஷ்டப்படுத்துகிறாய் என்று சண்டை போடுகிறார். திடீர் திடீரென்று எங்காவது கிளம்பி போய்விடுவார். தேடிப்பிடித்து வீட்டுக்கு அழைத்து வருவோம். அதனால் எப்போதும் அவரை கண்காணிக்க வேண்டி உள்ளது.

இரவிலும் சரியாக தூங்குவதில்லை. தூக்கத்திலிருந்து எழுந்து ‘வா நம்ம வீட்டுக்கு போகலாம்’ என்று அடம் பிடிப்பார். இதனால் ஒரு கட்டத்தில் மன நல மருத்துவரை அணுகினோம். ஆனால் அவர்களிடம் செல்லும்போது, இயல்பாகவும் தெளிவாகவும் பேசுகிறார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக்கென்று பதில் சொல்கிறார். பிரச்சனையும் இல்லை, நன்றாக ஓய்வு எடுக்கட்டும் என்று மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டனர். மாத்திரைகள் சாப்பிட்டால் தொடர்ந்து தூங்குகிறார். அப்படி நீண்ட நேரம்  தூங்குவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. வெளியே சென்றால் கொஞ்சம் மாற்றம் ஏற்படும் என்று, என் பெண்களின் வீட்டிற்கு அழைத்து சென்றேன். அங்கும் அவர் பிரச்னைக்கு அளவில்லாமல் போனது. என் பெண்கள் வசிப்பது அடுக்குமாடி குடியிருப்பு. பூங்கா,  நீச்சல் குளம் இருக்கும் குடியிருப்பு.

அங்கு தெருக்களில், பூங்காக்களில் சிறுநீர் கழித்து விடுகிறார். பேரப்பிள்ளை சாப்பிடும் பிஸ்கட், சாக்லெட்களை பிடுங்கி சாப்பிட்டு விடுகிறார். அதனால் பேரப்பிள்ளைகள் அவரிடம் சண்டை போடுகிறார்கள். அதை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நானும் சில நேரங்களில் அவரை திட்டிவிட்டு அழுகிறேன். என்ன செய்வதென்று புரியவில்லை. என் மகளுக்கு உடல் நிலை சரியில்லை. அவளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். அம்மாவையும் தனியாக விட முடியாது. ஆனால் அவர் செய்யும் செயல்களால் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்ன செய்வது என்று புரியவில்லை. எல்லோரையும் அரவணைத்து வாழ்ந்தவர் என் அம்மா.

ஆனால் இன்று எல்லோரும் வெறுக்கும் அளவுக்கு ஆளாகி நிற்கிறார். என்ன செய்வதென்றே புரியவில்லை. இதற்கு ஏதாவது சிகிச்சை இருக்கிறதா? ஒவ்வொரு நாளும் அவரைப்போலவே நானும் புலம்ப ஆரம்பித்து இருக்கிறேன். எங்காவது வெளியில் சென்று விடுவாரோ என்று நானும் கண் விழித்தபடி அவரை கண்காணிக்க வேண்டியுள்ளது. என்ன செய்வது? எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுங்கள் தோழி.

இப்படிக்கு,

பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

தங்களின் கடிதம் பார்த்தேன் தோழி.. அம்மா மேல் பாசம் வைத்துள்ளீர்கள். அவர்கள் கஷ்டப்படும் போது உங்களுக்கும் அது கஷ்டமாக இருக்கிறது. இந்த வயதான காலத்தில் இவர்களுக்கு ஏன் இப்படியெல்லாம் வருகிறது என்று நினைப்பீர்கள். மன உறுதியோடு இருந்தவர் ஏன் இப்பொழுது இப்படி ஆனார் என்று குழம்பி உள்ளீர்கள். இது முதுமையின் காரணமாக மூளையில் ஏற்படும் சுருக்கத்தினாலும், நரம்பு செல்களின் எண்ணிக்கை குறைவதாலும் ஏற்படக்கூடிய ஞாபகமறதி நோய்.

இது வேறு சில காரணங்களாலும் ஏற்படலாம். மூளைக்குச் செல்கின்ற ரத்த ஓட்டத்தில் அடைப்பு, மரபுவழியாக ஏற்படுகின்ற ஞாபக மறதி, ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய ஞாபகமறதி என்று பல காரணங்கள் உண்டு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில நேரங்களில் இயல்பாக இருப்பார்கள். ஆனால் அவர்களால் அறிவு சார்ந்த மிக நுட்பமான வேலைகளைச் செய்ய முடியாது. உதாரணமாக நாள் கிழமை தெரியாது. இடம் தெரியாது. எங்கு உள்ளோம் என்று தெரியாது. நாம் இருக்கும் வீட்டில் சமையலறை எங்கு உள்ளது... குளியலறை எங்கு உள்ளது என்று தெரியாது. ஒரு விஷயத்தை கேட்பார்கள். ஆனால் திரும்ப சொல்லமுடியாது. மறந்துவிடுவார்கள்.

பண பரிவர்த்தனை செய்ய இயலாது. உறவினர்கள்  வீட்டிற்கு வந்தால் அடையாளம் தெரியாது. சிலசமயங்களில் குடும்ப உறுப்பினர்களே கூட தெரியாத நிலைமை ஏற்படும். கடந்த காலங்களில் நடந்த ஒரு சில விஷயங்கள் மட்டும் ஞாபகத்தில் இருக்கும். புதிதாக எதையும் கற்றுக்கொள்ள இயலாது. பேசுவதற்கு கூட சில வார்த்தைகளை மறந்துவிடுவார்கள். பொருள்களின் பெயர் மறந்து விடும். தீவிரமான நிலை செல்லும்போது பல் தேய்த்தல், குளித்தல், உடை மாற்றுதல் போன்ற அடிப்படை தேவைகளுக்கு கூட அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டிய திருக்கும்.
அது மட்டுமல்லாமல் குணாதிசயங்களில் மாற்றம் ஏற்படும்.

அளவுக்கு மீறி கோபம், எரிச்சல், அழுகை, தானாக பேசுதல், தானாக சிரித்தல், சரியாக உடை அணியாமல் இருத்தல், கண்ட இடங்களில் சிறுநீர், மலம் கழித்தல், திரும்பத் திரும்ப ஒன்றையே செய்தல், ஒன்றையே பேசுதல், தூக்கமின்மை,அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் என பல பிரச்சனைகளும் ஏற்படும். எது சரி... எது தவறு... சமூகத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். அடுத்தவர்கள் முன்னால் செய்யக்கூடாத விஷயங்களை கூட செய்வார்கள். வீட்டை விட்டு வெளியே சென்றால் தானாக திரும்பி வர தெரியாது. உறவுகளின் அன்பை பாசத்தை புரிந்து கொள்ள இயலாது.

இவற்றை அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை. சில நேரங்களில் பொருளை எங்கு வைத்தோம் என்று மறந்துவிட்டு அடுத்தவர்கள் அதை  எடுத்துக் கொண்டார்களோ என்று சந்தேகப்படுவார்கள், யாரோ அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைப் போல் உணர்வார்கள். இதையெல்லாம் பார்த்து பேரக்குழந்தைகள் பயப்படுவார்கள் உறவினர்கள் பயப்படுவார்கள் நமக்கும் ஒன்றும் புரியாது. ஆனால் அவர்கள் தனக்கு ஏற்படும் ஞாபக மறதி காரணமாக அளவுக்கு அதிகமான கோபம் பயம் எரிச்சல் போன்ற உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள். இதை நாம் புரிந்துகொண்டு அவர்களை அன்போடு அரவணைத்து அவர்களிடம்  இன்றைய தேதி இது இன்றைய கிழமை இது என்று அடிக்கடி சொல்ல வேண்டும். முடிந்தால் சுவரில் கடிகாரம் மாட்டி நேரத்தையும் சொல்ல வேண்டும். என்னென்ன வேலை செய்கிறார்கள் என்று எழுதி வைக்க சொல்ல வேண்டும்.

உறவினர்களின் புகைப்படங்களை,  குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை அடிக்கடி காண்பித்து நினைவூட்ட வேண்டும். அவர்களை வெளியில் போகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இருக்கும் அறையிலேயே குளியலறை வசதி ஏற்படுத்த வேண்டும்.  முடியவில்லை எனில் டயப்பர் கட்டிவிடலாம். அவர்கள் தாங்கள் உண்ணும் உணவை மறந்து விட்டு மீண்டும் மீண்டும் கேட்பார்கள். முடிந்தால் அதை ஒரு புகைப்படம் செல்போனில் எடுத்துக் காட்டலாம். யாரேனும் ஒருவர் அவரைக் கேள்விக் கேட்கும் போது அவரால் ஞாபகப்படுத்த இயலவில்லை எனில் இயலாமையை எண்ணி அதிகப்படியான கோபம் ஆக்ரோஷம் வெளிப்படும்.

அதுபோன்ற சூழல்களை தவிர்க்க வேண்டும். அவர்களை ஒரு குழந்தைபோல் கருதி பார்த்துக்கொள்ள வேண்டும்.  நம்மை தாங்கி தாங்கி வளர்த்தவர்கள் தன்னம்பிக்கையோடு இருந்தவர்கள் இப்படி ஆகிவிட்டார்கள் என்று எண்ணும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கும். நம்மாலும் அவர்களை பார்த்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும். இருந்தாலும் நம்மால் முடிந்த வரை அவர்களை கவனித்துக் கொள்ளவேண்டும். அவர்களை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் மனநல மருத்துவரை அணுகியது சரிதான். அவர் பார்க்கும் போது உங்கள் அம்மா எளிதான கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கலாம்.

கொஞ்சம் கடினமான கேள்விகளுக்கும் அறிவுபூர்வமான கேள்விகளுக்கும் அவர்களால் பதில் கொடுத்து இருக்க இயலாது. அவர்களுக்கு மூளையை ஸ்கேன் பரிசோதனை செய்யவேண்டும். இது ஞாபக மறதி நோயா இல்லை வேறு ஏதாவது மனக்குழப்பமா என்று கண்டறிய வேண்டும். நீங்கள் அவருக்கு  மனநல மருத்துவர் தூக்க மாத்திரை கொடுத்தார் என்று சொன்னீர்கள். அதனாலும் ஒன்றும் தவறில்லை. அவர்கள் இரவு பகல் எதுவென்று தெரியாமல் இரவு முழுதும் விழித்துக் கொண்டிருப்பார்கள். அதுவே அவர்கள் மனக் குழப்பத்தை அதிகப்படுத்தும். நன்றாக தூங்கினால் குழப்பம் குறையும்.

அதற்காக மருத்துவர் தரும் மாத்திரைகளை உட்கொள்வதில் எந்த தவறும் இல்லை நீங்கள் திரும்பவும் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். மருத்துவரிடம் தெளிவாக அவர் செய்வதை கூறுங்கள். அவர் சிலநேரங்களில் இயல்பாக பதில் அளித்தாலும் அவர் மற்ற நேரங்களில் செய்யக் கூடிய விஷயங்களை விரிவாக மருத்துவரிடம் சொல்லுங்கள். முதுமையில் ஏற்படக்கூடிய ஞாபகமறதியை முழுவதும் சரி செய்ய இயலாது. இருந்தாலும் அவருக்கு ஏற்படக் கூடிய குழப்பங்களையும் மற்ற பிரச்சனைகளையும் மருத்துவரை அணுகி தீர்த்துக் கொள்ளலாம். மருந்து மாத்திரைகளோடு அவரை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் கூறிய அறிவுரைகளை பின்பற்றுங்கள். உங்களின் கஷ்டம் நீங்கும்.               

தொகுப்பு : ஜெயா பிள்ளை

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்