SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரம்பரியததை மீட்டெடுகக சத்தமின்றி சாதனை

2020-02-10@ 12:56:38

நன்றி குங்குமம் தோழி

சத்தமின்றி சாதிக்கும் ‘வாய் பேச இயலாத காதுகேளாத’ (deaf and dumb)  மாற்றுத் திறனாளிகள், பெண்கள், மாணவர்கள் இவர்களை முன்னெடுத்து, நமது பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கவும், உணவுத் துறை சார்ந்து சிறு தொழில்களை உருவாக்கிக் கொடுத்து வழிகாட்டவும், பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யும் ‘தெருக்கடை’ யும் ‘செயல்விதை’ அமைப்பும், சென்னை காதுகேளாதோர் சங்கத்துடன்(Madras Association of the Deaf) இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் சைகை மொழியினைப் பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கும் மாணவர்களுக்கும் மாப்பிள்ளை சம்பா லட்டு, தினை லட்டு, கொடம்புளி பானகம் போன்றவை தயாரித்து காண்பிக்கப்பட்டதோடு, அவற்றின் மருத்துவ குணங்களும் விளக்கப்பட்டது. மேலும் பாரம்பரிய உணவை சந்தைப்படுத்துதல், அதன் வழியே வருமானம் ஈட்டுதல், சிறுதொழில் முதலாளிகளாய் அவர்களை மாற்றுதல் போன்றவற்றுக்கு வழிகாட்டுதல்களும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது

செயல்விதை அமைப்பின் செயலாளர் ராஜாவிடம் பேசியபோது…

“மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடித்த”என நம் தமிழ் இலக்கியம் பேசுகிறது. அந்த அளவிற்கு நம் விவசாயமும், விவசாயிகளும் செழித்து வளர்ந்த பூமி இது. இன்று நம் பாரம்பரியம் மிக்க நெல் விதைகளையும், உணவு தானியங்களையும் மீட்டெடுக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். பாரம்பரியம் என்பது உணவு சார்ந்தது மட்டுமல்ல ஆரோக்கியம் சார்ந்ததும். நோயில்லாத வாழ்க்கைக்கு மக்கள் மாறவேண்டும்.

அதற்கு நாம் உண்ணும் உணவே மருந்தென முதலில் நினைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியும், நார்ச்சத்தும் அதிகம் நிறைந்த பயன்பாட்டில் இல்லாத நம்முடைய பாரம்பரிய அரிசி மற்றும் தானியங்களை மீட்டெடுத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மாற்றுத் திறனாளிகள் யாரையும் நம்பி வாழாமல், சுயமாகத் தொழில் செய்வதற்கான முன்னெடுப்புகளை செயல்விதை அமைப்பின் வழியே நாங்கள் விதைத்துக் கொண்டே இருப்போம். வளர்ந்தால் மரம்… இல்லையேல் மண்ணுக்கு உரம் என்றார்.

தெருக்கடை உணவகத்தின் பாரம்பரிய உணவு தயாரிப்பாளர்களில் ஒருவரான அமுதாவிடம் பேசியபோது…

இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே எப்போதும் நல்லது. பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களின் பயன்பாட்டை நாம் அனைவரும் அறிந்து பயன்படுத்த வேண்டும். தினை லட்டு, மாப்பிள்ளைசம்பா லட்டு. பாரம்பரிய பட்டை தீட்டாத அரிசி போன்றவை மருத்துவ குணம் கொண்ட நம்முடைய பாரம்பரிய உணவுகள். அந்தக் காலத்தில் மணமாகப் போகும் மாப்பிள்ளை கல்லைத் தூக்கினால்தான் பெண் தருவார்கள். ஆண்களின் பலத்தை பரிசோதிக்க முக்கியம் தரப்பட்டது. அதனால்தான் முன்னோர்கள் மாப்பிள்ளை சம்பா அரிசி என அழைத்தார்கள். இந்த அரிசி சாதத்தில் மீதியானதை தண்ணீர் ஊற்றி நீராகாரமாக மறுநாள் அருந்துவார்கள்.  

தொடர்ந்து இதனை அருந்தும்போது உடலுக்குத் தேவையான சக்தி இயல்பாக உணவின் வழியே  நமக்கு கிடைத்து விடுகிறது. அதேபோல் காட்டுயானம் அரிசி சர்க்கரை நோயிற்கு மருந்தாவதோடு, கேன்சர் வராமல் தடுக்கிறது. நம் பாரம்பரிய அரிசி ஒவ்வொன்றுக்கும் ஒரு மகிமை உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள் அந்த வகை  அரிசிகளை உணவாக எடுத்தார்கள். பானகத்தை கேரளாவில் இருந்து வரும் கொடம்புளி பழத்தில் தயாரிக்கிறோம். இந்தப் புளி உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இந்தப் பழத்தில் புளிப்பு சுவை தூக்கலாக இருப்பதால் சிறிது பயன்படுத்தினாலே போதும்.

இத்துடன் இனிப்பு சுவைக்கு கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம் இவற்றில் எதை வேண்டுமானாலும் இணைக்கலாம். அத்துடன் புதினா, எலுமிச்சை சேர்த்து, தேவைப்படும் பழத்தில் ஒன்றைச் சுவைக்காக இணைக்கலாம். பானகத்தை மண் பானையில் வைத்து அருந்தினால் உடலுக்கு மிகவும் நல்லது. தேவைப்பட்டால் குளிர்ச்சித் தன்மைக்கு ஐஸ் சேர்க்கலாம். பூச்சிக் கொல்லி மருந்து இணைக்கப்பட்ட கோக், பெப்சி போன்ற பானங்களை அருந்துவதைவிட இயற்கையோடு இணைந்த இந்த பானம் உடலுக்கு மிகமிக நல்லது.

மாற்றங்கள் நிறைந்த நுகர்வுக் கலாச்சாரத்தில் பாரம்பரியம் சார்ந்தவற்றை நாம் வாங்குவது குறைந்ததால்தான் விளைச்சலும் குறைந்துவிட்டது. எனவே விலையும் அதிகரித்து உள்ளது. வாங்குவதை நாம் அதிகரித்தால் விலை கண்டிப்பாகக் குறையும். இல்லையென்றால் நோயிற்கான மருத்துவச் செலவுகள்தான் அதிகரிக்கும். நமக்குத் தேவையான நல்லவற்றைத் தேடி நாம்தான் போகவேண்டும். அது உணவாகவே இருந்தாலும் என்றார்.

சித்ரா, சைகை மொழிப் பெயர்ப்பாளர்

சென்னை காதுகேளாதோர் சங்கம் 75 வருடமாக உள்ளது. இதில் நான் சைகை மொழிப்பெயர்ப்பாளராகவும், மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் இருக்கிறேன். காது கேட்காதவர்கள் நலன் சார்ந்து இயங்கும் அமைப்பு இது. இந்தப் பெண்கள் அனைவரும் இதில் உறுப்பினர்களாக
உள்ளனர். கல்வி உதவி, மருத்துவ உதவி, சட்ட உதவி, அரசு நலன் சார்ந்த உதவிகள், பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என தொடர்ந்து நடத்தி வருகிறோம். இவர்களுக்கு சைகை மொழி வழியாக பேசினால் மட்டுமே புரியும் என்றவர், இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு இவர்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

பானுரேகா மற்றும் லெட்சுமி

தொழில் பயிற்சி மாணவர்கள்கேட்டரிங் எங்களுக்கு பிடித்தமான விசயம். ஆரோக்கிய உணவு தயாரிப்பை தெரிந்துகொள்ளவே வந்தோம். வெள்ளைச் சர்க்கரையும், மைதாவும், பட்டை தீட்டப்பட்ட அரிசியும்(polished rice)  உடலுக்கு கெடுதி என்பதை இன்று உணர்ந்துகொண்டோம். மேலும் நாட்டுச் சர்க்கரையின் மகிமையையும் உணர்ந்தோம்.

ஜான்ஸி ராணி

அஞ்சல் துறை ஊழியர்பச்சரிசி, புழுங்கல் அரிசி மட்டும்தான் எனக்கு இதுவரை தெரியும். அரிசியில் இத்தனை ரகம் இருப்பதும் அவற்றின் மருத்துவப் பயன்பாடும் இன்றுதான் எனக்குத் தெரிந்தது. கூடவே சிறுதானியங்களின் பயன்பாட்டையும் தெரிந்து கொண்டேன். வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு கெடுதி என்பதையும் உணர்ந்து கொண்டேன். வாழ்வதற்காக உண்! உண்பதற்காக வாழாதே! என்ற அடிப்படையில், பாரம்பரிய உணவுமுறை குறித்த விழிபுணர்வினை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி, மருத்துவ குணங்களை அவர்களை அறியச் செய்து, அதனையே வாழ்வா
தாரமாக மாற்றிக்கொள்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.

தொகுப்பு: மகேஸ்வரி

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்