SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாய்ப்பாட்டு, நட்டுவாங்கம்... பரதத்தில் அசத்தும் மூன்று தலைமுறை பெண்கள்

2019-12-04@ 14:25:07

நன்றி குங்குமம் தோழி

‘தாதை தை தத் தா கிட தக தாம் தித்தா, தை தத் தை...’என காலில் சலங்கை கட்டியபடி பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார் அந்த நாட்டியத் தாரகை. அவர் ஒன்றும் தற்போது பயிற்சியை தொடங்கவில்லை. மூன்று தலைமுறைகளாக ஆடிவருவது மட்டும் இல்லாமல் பயிற்சியும் அளித்து வருகின்றனர். சென்னை வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம் என 4 கிளைகளில் ஏராளமான சிறுமிகளுக்கு பரதநாட்டியம் கற்பித்து வருகிறார் ஸ்ரீசுதா சுவாமிநாதன்.

‘‘என்னுடைய அம்மா ஸ்ரீமதிகலா அனந்தராமன் வாய்ப்பாட்டு கலைஞர். 10 வயதில் இருந்தே கர்நாடக சங்கீதம் உள்ளிட்டவற்றை மேடைக் கச்சேரிகளில் பாடி உள்ளார். நான் சிறுமியாக இருந்தபோது அவரது பாட்டுக்கு தலையாட்டியபடி ஆடிக்கொண்டிருப்பேன்.

இதனால் எனக்கு நடனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதன் பிறகு பாடலின் அர்த்தங்களை புரிந்து கொண்டு பாடலின் உணர்வுகளுக்கு ஏற்ப நானாகவே அபிநயம் பிடித்தேன். நான் ஆடுவது பரதமா, மோகினி ஆட்டமா, குச்சுப்புடியா, கதகளியான்னு அந்த வயதில் எனக்குத் தெரியாது.

ஆட வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே எனக்குள் இருந்தது. தொலைக்காட்சியில், நாடக  நிகழ்ச்சிகளை பார்க்கும்போது அம்மாவிடம் பாடலுக்கான பொருள், கதை கேட்டு நானே அபிநயம் பிடித்தேன்.

அப்பொழுது என் நடன ஆர்வத்தைப் பார்த்து பரதநாட்டியம் கற்க என்னை தாட்சாயிணி மாஸ்டரிடம் அம்மா சேர்த்துவிட்டாங்க. ஏற்கனவே அம்மா பாட நான் நடனம் ஆடி பழகியதால், எளிதாக பரதம் கற்றுக்கொண்டு, அரங்கேற்றமும் செய்தேன்’’ என்றவர் எல்லா பெண்களை போல் குடும்பம் என்ற கூட்டுக்குள் விழுந்தார்.

‘‘படிப்பு முடித்ததும் 19 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் பிறந்தனர். குழந்தை வளர்ப்பு, குடும்ப வாழ்க்கை என காலம் கழிந்தது. நான் விரும்பி கற்றுக் கொண்ட நடனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் உணர்ந்தேன். சலங்கை சத்தம் கேட்டாலே என் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வரும். அந்த சமயம் என் அம்மா ‘‘கோயில் திருவிழா, பள்ளி விழா எதுவானாலும் உன்னுடைய பரதம்தானே முன்நிற்கும்.

சபையில் முதல் ஆளாக அபிநயம் பிடிப்பாயே... ஏன் அதை விட்டுவிட்டு முடங்கிக் கிடக்கிறாய்?’’ என்று கேட்க, நான் கற்ற வித்தை என்னை தட்டி எழுப்பியது. மகளையும் மகனையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு மீண்டும் காலில் சலங்கை கட்டினேன். மீண்டும் உமா சுப்பிரமணியத்திடம் பரதம் பயின்றேன். அத்துடன் பல்கலைக்கழகத்தில் நட்டுவாங்கம் மற்றும் பரதக்கலையில் டிப்ளமோ படித்தேன்’’ என்றவர் தன்னுடைய 32 வயதில் மீண்டும் நடனம் பயில ஆரம்பித்தார்.  

‘‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழி என் விஷயத்தில் மட்டுமல்ல என் மகள் விஷயத்திலும் பலித்தது. என் மகள் சுஹாசினியும் பரதம் கற்க விரும்பினாள். முதலில் அவள் என்னிடம் நடனம் கற்றாள். பிறகு என் குருநாதரான உமா சுப்பிரமணியம் மாஸ்டரிடம் நானும் என் மகளும் இணைந்து பரதம் கற்றோம். என் மகள் பரதம் மட்டுமல்லாமல் வாய்ப்பாட்டும் கற்றுக் கொண்டாள். என் அம்மாவும், மகளும் பாட நான் நட்டுவாங்கம் பண்ணுவேன். தற்போது என் மகள் சுஹாசினி `நாட்டிய சிங்காரமயூரி சக்தி’ என்ற பட்டமும் நாட்டியஸ்ரீ, கல்பஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார்.

மார்கழி உற்சவம், நாட்டியாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நானும் என் மகளும் சேர்ந்து அபிநயம் பிடிப்போம்’’ என்றவர் 2011ம் ஆண்டு நடனப்பள்ளி ஒன்றை துவங்கியுள்ளார். ‘‘ஒன்பது வருஷம் முன்பு ஸ்ரீசாய் நாட்டியாலயா பெயரில் நடனப் பள்ளியை தொடங்கினேன். இதில் வாய்ப்பாட்டு, பரதம் ஆகியவற்றை சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கற்றுத் தருகிறோம். பரதம் கற்க வருபவர்கள் முதலில் குரு வழிபாடு, இறை வணக்கம், பரதம் என படிப்படியாக கற்கவேண்டும்.

எங்க பள்ளியில் பரதத்தை பழமை மாறாமல், நேர்த்தியாக முறைப்படி ஒவ்வொரு மாணவிக்கும் தனித்தனியாக சிரத்தை எடுத்து கற்றுத் தருகிறோம். பரதம் கற்பதால் தலை முதல் கால் வரை அனைத்து உடல் உறுப்புகளுக்கும் பயிற்சி கிடைக்கும்.

ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்கு நல்ல பயிற்சி கொடுப்பதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற உடல் உபாதைகள் ஏற்படாது.வாழ்நாள் முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மனதளவிலும் வலிமையாக உணர்வோம். எங்களிடம் பயிற்சி பெறுபவர்கள் பரதம் மட்டும் கற்றுக் கொள்ளாமல், பரதத்தில் டிப்ளமோ படிக்க அவர்களை தயார்படுத்துகிறோம்’’ என்றவரின் மாணவிகள் தேசிய அளவு போட்டியில் பரிசுபெற்றுள்ளனர்.

‘‘கடந்த ஆண்டு என் மாணவிகள் தில்லியில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று பரிசுகளை வென்றனர். வாழ்க்கை பல்வேறு ரகசியங்களை உள்ளடக்கியது.

எதிர்காலத்தில் பெண்களுக்கு வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த பரதம் உதவவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். இதுவரை நான்கு பெண்களுக்கு இலவசமாக நாட்டிய பயிற்சி அளித்து வருகிறேன். மேலும் ஏழை, எளிய பெண்களுக்கு இலவசமாக நாட்டியம் கற்றுத் தரவேண்டும் என்பது என் லட்சியம்’’ என்றவர் நாட்டியக்கலா சூடாமணி, பரதஸ்ரீ, நாட்டியஸ்ரீ, கல்பஸ்ரீவாரி, நிரஞ்சம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

கோமதி பாஸ்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

 • rp23

  நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

 • thai_ammamam

  தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

 • mouni_amavaaa1

  வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்